Monday, May 31, 2004

தெரிவதில்லை 1

கொட்டும் மழை.
சூடாய் காபி.
இன்னும் வராத நியுஸ் பேப்பர் பையனை
சபிக்கும் மனம்.
பலருக்கு தெரிவதில்லை...
மகனை பேப்பர் போட அனுப்பிவிட்டு
மழை நீரில்
தத்தளிக்கும் தாயின் மனது.

Thursday, May 27, 2004

சந்தேகம்

பிசாசின் நாவாய்
நீள்கிறது.
தான் படுத்திருக்கும்
ஆஸ்பத்திரி படுக்கையில்
தனக்கு முன்
யாராவது மரித்திருக்கிறானா? என்ற
நோயாளியின் சந்தேகம்

Tuesday, May 25, 2004

கலைந்த மெளனம்

என்னுடைய அமெரிக்க பூனைக்கு யார் மணியைக் கட்டுவது என்ற கட்டுரைக்கு வந்த பதில் பதிவுகள் என் கவலையை மேலும் அதிகரித்து விட்டது. விட்டேனா பார் என்று வார்த்தை சாட்டைகளை சுழற்றுவது தமிழர்களுக்கு கை வந்த கலை.வாழ்க! வளர்க!

இந்தியாவிற்கு வந்திருந்த போது தொலை பேசியில் கூட தொல்லை தராமல் சமர்த்தாய் இருந்து விட்டு வலைப் பதிவில் வரிந்து கட்டியிருக்கிறார் வந்தியத் தேவன். "பின்"னூட்டமாய் குத்தியிருக்கிறார் மூக்கு சுந்தர். முகம் தெரியாத சோடா பாட்டிலிடமிருந்து தெளிவான அலசல் அவரது வலைப் பதிவில் விரிந்திருக்கிறது ( அலசலுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்).

"NRI's may not like such articles" என்று கூறுகிறார் சுந்தர். தமிழ்நாட்டைப் பற்றி எழுதுவதையே அவர்கள் விரும்புவார்கள்என்றும் மொழிந்திருக்கிறார்.நான் இந்திய வாழ் இந்தியன். நீங்கள் எனக்காக எழுதவில்லையா? நான் உங்கள் வலைப்பதிவை படிக்கக் கூடாதா. பல நண்பர்களுக்கு உங்கள் தளத்தை பரிந்துரைத்திருக்கிறேன். அவர்களும் படிக்கக் கூடாதா? திருப்பி திருப்பி ரஜினியையும், ராம்தாசையும் திட்டி , அதனை என் ஆர் ஐ மக்கள் மட்டும் படித்து என்ன மாற்றம் நிகழப் போகிறது?

திரை கடலோடி திரவியம் தேடி, அந்நிய தேசத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் கலை செல்வங்களாய் எங்களுக்கு தாருங்கள். அரசியல் வாதிகளால் நிகழக்கூடிய ஆபத்தை காட்டிலும் பல மடங்கு ஆபத்து வளர்ந்த நாடுகளால் நிகழப் போகிறது. எப்படி எதிர்கொள்வது? சொல்லுங்கள். அரசியல் வாதிகளையாவது அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வைக்கும் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது.வளர்ந்த நாடுகளின் வியாபார தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பது?உங்கள்
உலகளாவிய சிந்தனைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவுடன் ஒப்பிட்டு, படித்த இந்தியர்கள் தங்கள் நெஞ்சில் வளர்த்துக் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை இந்தியாவின் முதலாவது சாபக்கேடு.இரண்டாவது சாபக்கேடு இந்த நாட்டில் சாதித்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கையின்மை.இந்த சாபக்கேட்டினை நீக்கும் சமூகப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் ஏற்றால் மகிழ்ச்சி அடைவேன். அதை விடுத்து அரசியல்வாதிகளை கிண்டலடிக்க, ஆயிரம் குப்பை பத்திரிக்கைகள் தமிழ்நாட்டில் உள்ளது.புதிதாக நீங்கள் வேண்டாம்.

அமெரிக்க பயமா? என்ற கேள்விக்கு, பயம் ஒன்றுமில்லை, பிறர் படிக்க மாட்டார்கள் என்கிறீர்கள். படிக்க நாங்கள் ரெடி சார். எழுதுங்கள்.இந்தியர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க அது உதவும். சோடா பாட்டில் பாலா சொன்ன "வச்சா குடுமி, அடிச்சா மொட்டை" மனோபாவத்தை போக்க உதவும். அமெரிக்காவை பற்றிய நிஜங்களை எழுதுங்கள். அதே வேளையில் இந்தியாவை பற்றிய நிஜங்களை அறிந்து / புரிந்து எழுதுங்கள். மீடியாவின் மூலம் இந்தியாவை பார்த்து உங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்த முயலாதீர்கள். அது முழுமையாய் இராது.

இந்தியா பசித்திருக்கும் கண்ணீர் தேசம். பசித்த வயிற்றுக்கு தவறுகளை இனம் பார்க்க இயலாது. உண்டு ஏப்பம் விடும் அமெரிக்க தேசத்தில் மக்கள் தவறுகளை திருத்திக் கொள்கிறார்கள் என்று பெருமை கொள்வதில் பயன் ஒன்றுமில்லை பாலா. தவறுகள் தவிர்க்கப் பட வேண்டும். அதில்தான் பெருமை. ரஜினிகாந்தின் எளிமை வேக்ஷம் என்று சொல்லும் மூக்கு சுந்தர் அமெரிக்கர்களின் வேக்ஷத்தை பற்றி கவலைப்படாததேன்? நாட்டுப்பற்றை வலைப்பதிவு செய்ய வேண்டுமா? என்று குரலெழுப்பும் நண்பரே, இந்தியாவிற்கு பதிவுகள் தேவைப்படுகிறது. எழுதுங்கள். யார் பக்கம்? என்று கேட்டதற்கே ஏன் இந்த விக்ஷமத்தனம்? என்று சிலிர்த்து விட்டீர்கள். என் மேல் பாயாதீர்கள். நான் இந்தியா பக்கம் என்று சொல்லிவிட்டுப் போங்கள். நான் சந்தோசப் படுகிறேன். இந்தியா இன்னும் ஒரு குழந்தையாய்தான் இருக்கிறது நண்பர்களே. குழந்தைகள் ஒடி ஆட ஆக்கமும் ஊக்கமும் வேண்டும். அதனைத்தான் எதிர்பார்க்கிறேன்.

அமெரிக்கர்களின் செயல்க¨ள் விளக்க, வரலாற்றினை சுட்டிக் காட்டிருக்கிறார் சோடா பாட்டில். பிரிட்டிக்ஷ், ஜெர்மனி போன்ற வல்லரசுகள் செய்த ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்கர்கள் செய்வது மிகவும் கொஞ்சமாம்.இது
தவறான உதாரணம்.கஜினி முகமது படையெடுத்த போதும், மொகலாயச் சக்கரவர்த்திகள் காலத்திலும் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் குறைவுதான் என்று வாதாட
முடியுமா?குஜராத்தை பார்த்து நாம் கொதித்து எழவில்லையா? பிரிட்டிக்ஷ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்திய அரசுகள் தங்கள்ஆற்றலை பிற்காலத்தில் பறி கொடுத்தன. இதன்அடிப்படையில்தான் "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று எழுதினேன். அந்த "வல்லவனை நீங்களும் தேடுகிறீர்களா" என்பது எனது கேள்வி.பச்சை அட்டை வாங்கி அமெரிக்காவில்
தங்க விரும்புவர்களுக்கு அமெரிக்காவை வெல்லும் வல்லவன் உருப் பெருவதில் ஒப்புதல் இருக்காது என்பதுதான் என்கருத்து.

முதலாளித்துவத்தின் அடிப்படையே சுயநலம்தான். அமெரிக்காவை பழித்து பயனில்லை என்று விழைந்திருக்கிறார் சோடாபாட்டில். உலகமயமாக்கலை தவிர வேறு வழியில்லை என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார். உலகமயமாக்கலின்விரோதி அல்ல நான். என் சந்தைக்குள் வராதீர்கள். வந்தால் கூலி வேலைக்கு வாருங்கள். உங்கள் சந்தையில் நான் விற்க வருகிறேன். நீங்கள் தற்போது விற்பதை நிறுத்துங்கள். உங்கள் சந்தையிலே என்னிடம் கூலி வேலை பாருங்கள் என்ற அமெரிக்காவின் மனோபாவத்தைதான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.சுயநலத்தை பரப்பும் சித்தாந்தத்தை
செயல்படுத்தினால் இந்தியா அளிந்துவிடும் பாலா.இந்தியா என்பது தமிழ்நாடும் ஆந்திராவும் மட்டுமல்ல. வடகிழக்கு இந்தியாவின் நிலைமை தெரியுமா உங்களுக்கு? ரெயில்வே கலாசி உத்தியோகத்திற்காக பிகாரிகளும்,அஸ்ஸாமிசுகளும்
ஒருவரை ஒருவர் கொன்று குவித்த கொடுமை இந்திய மீடியாவிலேயே அதிகம் அலசப் படவில்லை. வடகிழக்கு மாநில பிரச்சனைகளை வெளிப்படுத்த முயன்ற " உயிரே" படம் படுதோல்வி அடைந்தது. சிறுபான்மையாக இருக்கும் வடகிழக்கு இந்தியமக்களின் சிரமங்கள் மற்ற இந்தியர்களுக்கு புரியாததும் இப்படத் தோல்விக்கு ஒரு காரணம்.

தமிழ்நாட்டை பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும் என நம்புகிறீர்களா? ஊட்டியில் வாழும் தேயிலை தொழிலாளர்களின் இன்றைய நிலைமை தெரியுமா? முரசொலி மாறன் காலத்தில் தேயிலையின் இறக்குமதி வரியை குறைத்தார்கள்.இறக்குமதிப் பொருளின் விலையுடன் போட்டி போட இயலாமல் நசித்து விட்டது தேயிலை தொழில். எங்கு செல்வார்கள் அந்த தொழிலாளர்கள்? இந்தியாவின் இந்த ரணம் பட்ட முகங்கள் உங்களுக்கு தெரியுமா?இந்த பிரச்சனைகளை எல்லாம்
வைத்துக் கொண்டு இந்தியா ஒளிர்கிறது என்றால் எப்படி ஜெயிக்க முடியும்? இந்த மாயச் சுழலின் மறுபக்கம், இறக்குமதிவரி ஏற்றப்பட்டால் வீழும் பங்குச்சந்தை. அலறும் மீடியா.

சிக்கலில் இருக்கிறது இத்தேசம்.நண்பர்களே, உங்கள் அயல்நாட்டு அனுபவங்களால் இதனை விடுவிக்கப் பாருங்கள்.கல்வி வசதிகளும், அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகளும் இல்லாமல் சிரமப் படுகிறது இத்தேசம். இந்தியப் பற்றிருந்தால் இந்தியாவிலிருந்தே வேலை செய்யலாமே? என்று மாலன் தனமாக நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ஒரு நாராயண மூர்த்தியால் இந்தியாவில் சாதிக்க முடிந்திருக்கிறது. அப்போலோ மருத்துவ மனையில் "Sr oncologist " ஆக உள்ளார் ரமேஷ். அமெரிக்க அனுபவத்தை வைத்து இந்தியாவில் பல உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அயல் நாட்டில் பல கோடிகளை அவர் சம்பாதித்திருக்க முடியும்.

சித்தாந்தக் கண்ணாடியை கழற்றி வைத்து அமெரிக்காவை பார்க்க நான் ரெடி பாலா. நீங்கள் நெருங்கி வந்து இந்தியாவை பார்க்க வேண்டும்.நீங்கள் இத் தேசத்திற்கு உதவுகிறீர்கள் என நம்புகிறேன். ஆனால் தேவைப்படும் உதவிகளின் பரிமாணங்கள் மாறிவிட்டது.உணர வேண்டுகிறேன்.

இந்திய தேசத்திற்கு ( எலிகளுக்கு) அமெரிக்க பூனைகளால் ஆபத்து வரும்போது மணி கட்டத்தான் வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.

உதவுவீர்களா? -கேள்வி. உதவி செய்வீர்கள்- நம்பிக்கை.

Saturday, May 22, 2004

ஏன் மெளனம்?

பெரும்பான்மையான வலைப்பதிவு நண்பர்கள் அமெரிக்காவிலும், அயல்நாட்டிலும்இருப்பதாக தெரிகிறது. அயல் நாட்டிலிருந்து தமிழ் வளர்ப்பது செயற்கரிய செயல் என்றாலும், சம்பளம் கொடுக்கும் நாட்டிற்கு உங்கள் விசுவாசம் அதிகம் என்றுதோன்றுகிறது.இந்திய அரசியலை அலசும் அளவிற்கு, அமெரிக்க அரசியல்அலசப்படாததிற்கு என்ன காரணம்? இந்தியாவின் மீதான நாட்டுப் பற்றா? அல்லது அமெரிக்க பயமா?

மேற்கண்ட சந்தேகத்திற்கான காரணம், ஈராக் சிறையில் அமெரிக்க ராணுவம் நடத்தும் மிருகக் கூத்துக்களைப் பற்றிய அலசல்கள் வலைப்பதிவுகளில் அதிகமில்லாததுதான்.மனித உரிமைகளின் பாதுகாவலனாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, போர் மரபுகளை புறந்தள்ளி, மிருகங்களை வெட்கங் கொள்ளச் செய்யும் வெறிச் செயலில் ஈடுபடுவது கண்டணத்திற்குரியதாய் ஏன் படவில்லை? இத்தகைய தேசத்திற்கு காஷ்மிர் மனித உரிமை மீறல்களை பற்றி பேச என்ன தகுதி உள்ளது.

இதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த இயலாத கையாலாகத்தனத்தால் கட்டுண்டு கிடக்கின்றன அனைத்து நாடுகளும். இந்த அரக்கத்தனத்திற்கு உலக சமாதானம்கொடுக்கும் விலை கொஞ்சநஞ்சமில்லை.இந்த அரக்கத்தனத்திற்கு, அமெரிக்க குடிமக்களின் மெளன ஒப்புதல் உள்ளதா? ஒப்புதல் இருந்தால் அது கவலைக்குரிய விஷயம். புஷ் மீண்டும் வெற்றி பெற்றால் ராணுவத்தின் வெறிச் செயல்களை அமெரிக்கர்கள்அங்கிகரித்தது போலாகி விடும். வலைப்பூ நண்பர்களே, இந்திய தேர்தல் முடிந்து விட்டது. அமெரிக்க தேர்தலைப் பற்றியும் கொஞ்சம் தைரியமாக எழுதுங்கள்

ஒரு கல்யாண வீட்டையே, சாவு வீடாக சுலபமாக மாற்றி விட்டார்கள்.முதிர்ச்சி அடைந்த ஜனநாயக நாட்டின் செயலாக இதனை எடுத்துக் கொள்ள முடியாது. செய்திகளை இருட்டடிப்பு செய்யாமல் வெளியிடுகிறார்களே? இது பெரிய விக்ஷயமல்லவா? என்று பலர்கேட்கிறார்கள். இது பாசாங்கு. இதன் மூலம் செய்த செயல்களை நியாயப் படுத்த முடியாது.

உலகில் பிற நாடுகளுக்கு பயப்படவோ, பதில் சொல்லவோ அவசியமில்லை என்ற மனோபாவம்தான் அமெரிக்காவிற்கு கர்வத்தை தந்திருக்கிறது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை உலகம் ஒப்புக் கொண்டு விடும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கில்லை. வர்த்தக ரீதியாக பிற நாடுகள் அமெரிக்காவை சார்ந்திருப்பதும், பிற நாடுகளால் கூச்சல் போட முடியுமே தவிர, ராணுவ ரீதியாக எதிர்க்க முடியாது என்ற உண்மையும் அமெரிக்காவை ஒரு அசுரனாக மாற்றி விட்டது.

அமெரிக்காவுடனான வர்த்தக ரீதியான சார்பு, நாடுகளை அடிமைப் படுத்தும் மாயச் சங்கிலி. அன்னியர் பிரதமராவதா என எதிர்க்கும் இந்தியர்கள் , பங்கு சந்தையிலிருந்து முதலீட்டை உருவுவதன் மூலம், ஒரு நாட்டின் பிரதமரையே நிர்ணயிக்கும் சக்தியை அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே அளித்து விட்டதை உணர மறுக்கிறார்கள்.இந்த முதலீட்டாளர்கள் இந்தியர்களின் வியாபாரத் திறமையை மதித்தோ,தொழில் திறமையை மதித்தோ முதலீடு செய்யவில்லை. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைந்த்தால் இந்தியாவிற்கு வந்து சூதாட்டம் நிகழ்த்துகிறார்கள்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பார்கள்.

அமெரிக்க பூனைக்கு யார் மணி கட்டுவது?

"Green card" க்காக காத்திருக்கும் இந்தியர்களே, நீங்கள் யார் பக்கம்?

Friday, May 21, 2004

நிஜம் 1
சுலப சமையல் முப்பது நாட்களில்
அறுசுவை அரசின் " ஆனந்த சமையல்"
ரேவதி சண்முகத்தின் " சமையல் டிப்ஸ்"
வட இந்திய சமையல் குறித்து
பஞ்சாபி பெண்மணி எழுதிய புத்தகம்.

வகைவகையாய் சமைத்துப் போட்ட
அம்மா
படித்ததில்லை மேற்கண்ட புத்தகங்களையெல்லாம்.

அலமாரிகளில் புத்தகங்கள் உறங்க,
மனையாளும் அலுவலகம் செல்ல
"பிட்சா" தின்று
சுழல்கிறது வாழ்க்கை.

Saturday, May 15, 2004

அம்மா பக்தனின் சோகக் கதை

ஏன்டா இந்த புத்தகத்தை வாங்கறே ? என்று என் அம்மா அலுத்துக்கொண்டாலும் குமுதம் ரிப்போர்ட்டர் வாங்குவதை நிறுத்த முடியவில்லை என்னால். கடந்த சில ஆண்டுகளாக அதிமுக தலைமையை கவர்வதற்காக, தொண்டர்கள் செய்யும் கூத்துக்கள்அள்விட முடியாதிருந்தது.

சமீபத்தில் போலிஸ்ஏட்டு ஒருவர் விரல்களை வெட்டிக் கொண்டு அம்மாவின் அருள் பெற்றார். காவல் துறை கொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்டு அவரை சஸ்பெண்ட் செய்தது.ரிப்போர்டரின் கடந்த வார இதழிலும் இது போன்ற கதையை வெளியிட்டிருந்தார்கள்.

அய்யப்பன் என்ற இளைஞர், வள்ளியூரை சேர்ந்தவர்.இவரது அப்பா ஒரு விளம்பர ஓவியர்.அய்யப்பனும் ஒரு ஓவியர்.அம்மா பக்தர். அம்மாவின் அனுக்கிரகம் வேண்டி பச்சை நிறத்தில் அம்மா படம் வரைந்து சென்னைக்கு அனுப்பி இருக்கிறார். படம் எங்கு போனது என்று தெரியவில்லை. மனம் தளராத இந்த விக்கிரமாதித்தனுக்கு புதிய யோசனை வந்திருக்கிறது. ரத்தத்தில் அம்மா படம் .
வரைந்தாலென்னெ? என்று தோன்றியிருக்கிறது.

லேப் லேபாக அலைந்திருக்கிறார். டாக்டர்களிடம் கெஞ்சியிருக்கிறார். அனைவரும் ம்றுத்திருக்கிறார்கள். கடைசியில் ஒருவர் மனமிரங்கி ஒரு சிரிஞ் அள்வு ரத்தம் எடுத்துக் கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சியுடன் பேனாவில் ரத்தத்தை நிரப்பி அம்மாவை வரைந்தார் அய்யப்பன்."amma the king maker" என்று outline ல் வரைந்திருந்தார். அழகான ஓவியம் அது .ரிப்போர்டரில் பிரசுரித்திருந்தார்கள். இன்னும் எத்தனை பேர் கிளம்பப் போறாங்களோ? என்று கட்டுரையை முடித்திருந்தார்கள்.

இந்த கிறுக்குத்தனத்தை எப்படி தவிர்ப்பது? "மூக்கு சுந்தரை போல் எத்தனை பேருக்கு ஞானோதயம் வரும்.அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக இவர்களை ஊக்குவிப்பதால்தான், இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. விரலை வெட்டிக்கொண்ட போலிஸ் ஏட்டை உள்ளே போட்டுருந்தால்நியாயமான விசயம். அப்போலோவில் வைத்தியம் பார்த்ததால்விரலை வெட்டவும், ரத்தத்தில் ஓவியம் வரையவும் பலர் முன் ்வந்திருக்கிறார்கள்.

இத்துடன் முடியவில்லை பிரச்சனை. இன்றைய ஹிந்து விலொரு கட்ட செய்தி.அதிமுகவின் தோல்வியை தாங்க இயலாது ஒருவர் தற்கொலை செய்து விட்டார்.சகஜம்தான் என்கிறீர்களா? சற்று பொறுங்கள்.

இறந்தவரின் ஊர் வள்ளியூர்

இறந்தவர் அய்யப்பன்.

Friday, May 14, 2004

தேர்தல் முடிவும் புதிய தொடக்கமும்

கருத்துக்கணிப்புக்களில் சுட்டிக்காட்டப்பட்ட காங்கிரஸின் ஏறுமுகம், கிட்டத்தட்ட ஆட்சியை பிடிக்கும் அளவு வந்து விட்டது. இந்தியா போன்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசத்தில் மக்கள் அதிருப்தியை சம்பாதிக்காமல் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெல்வது இனிமேல் இயலாத காரியம் என்றுதான் தோன்றுகிறது.

பாஜகாவின் தோல்விக்கான காரணம் விரிவாக வல்லுனர்களால் அலசப்படும் முன், இந்த சாமான்யனின் கருத்துக்கள் சில.

மாநில தேர்தல்களில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாஜ்பேய் அலை வீசுகிறது என்று நம்பிய பாஜாகாவின் நம்பிக்கையில் மக்கள் போட்டது "மண்". வெங்கடேச பெருமாளின் அருளில் உயிர் தப்பியதை நினைத்து சந்தோசப்படுவதோடு நில்லாமல். அதை ஓட்டாக மாற்ற முயன்ற நாயுடுவின் தலையில் மக்கள் போட்டது 'இடி'.

ஆதரவு ஓட்டுக்களின் மூலமாக ஒரு ஆட்சி தேர்ந்தெடுக்கப்படாமல், ஒரு கட்சிக்கான எதிப்பு ஓட்டுக்கள் மூலமாக ஆட்சி அமையும் சூழல் ஆரோக்யமானதல்ல.இதன் மூலமாக,ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பல முறையோ ஆட்சி மாறுமே தவிர நாடு முன்னேறாது.

பாராளுமன்ற தேர்தலிலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி, இன்னும் எத்தனை வருடங்கள் வறுமை, உணவு, சாலை போன்ற விசயங்கள் பிரச்சனையாய் இருக்கப் போகிறது.இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை மக்கள் மாறி மாறி ஓட்டளித்து களைக்கப் போகிறார்கள்.

இந்த தேர்தலிலிருந்து ஒவ்வொரு கட்சியும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. கட்சிகள் கற்றுக் கொண்டனவா இல்லையா என்பது அடுத்த தேர்தலில் தெரிந்து விடும். தமிழக அளவில் இதனை அலசுகிறேன்.

அதிமுக:
அடக்குமுறை சட்டங்களால் மட்டும் ஆட்சியை நடத்தமுடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம்

இது. போலீசார்களால் போராட்ங்களை அடக்க முடியுமே தவிர தேர்தலில் வெற்றி பெறச்செய்ய முடியாது.ஜாதகங்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், அட்சயத் தீர்த்தியின் போது வேட்புமனு தாக்கல் செய்வது மட்டுமே வெற்றியை தந்து விடாது. இது பாராளுமன்ற தேர்தல்தான், சட்டமன்றத்தில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதெல்லாம் நொண்டிச் சமாதானம். நிதி நிலைமையை காரணம் காட்டி மக்கள் நலனை கிடப்பில் போடுவது சரியல்ல.நிதி நிலைமை சரியில்லாத போது செகரட்டேரியட் கட்ட பல கோடி ரூபாய் கடன் வாங்கியது என்ன நியாயம். இனி வரும் நாட்களில் ஜெயா என்ன செய்யப் போகிறார் என்பது சுவையான விசயம். மந்திரி சபை மாற்றம், IAS அதிகாரிகள் மாற்றம் என பல யூகங்கள். தனிப்பட்ட முறையில், குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை முதல்வரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

திமுக: சட்டமன்றத் தேர்தல் வரை மெகா கூட்டணீயை த்க்க வைப்பது கலைஞரின் அடுத்த சவால். இது சுலபமான பணி அல்ல.தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை எழுப்ப போகிறார் ராமதாஸ்.1980 ல் கிடைத்த பாராளுமன்ற வெற்றிக்குப் பின் திமுக-காங் கூட்டணியில் இது போன்ற ஒப்பந்தம் ஏற்பட்டு எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது.அதன்பின் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை தழுவியது திமுக. வரலாறுகளை மறக்க வேண்டாம் கலைஞர்.பாராளுமன்ற தேர்தல் தோல்வியே அம்மாவிற்கு அளித்த தண்டணை என மனம் மாறிவிடக்கூடும் மக்கள். ஜாக்கிரதை. மத்திய அரசின்உறவினை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.மாநில அரசை தொடர்ந்து குறை சொல்லாதீர்கள்.

காங்கிரஸ்: தலைவர்களின் எண்ணிக்கையை குறைத்து தொண்ட்ர்களின் எண்ணிக்கையை பெருக்குங்கள். நடக்காது என்றாலும் நப்ப்பாசை ருகிறது.மீண்டும் அம்மாவிடம் அடைக்கலம் காண காரணம் தேடாதீர்கள். அமைச்சர் பதவிக்கு அடித்துகொள்ள் தயாராகி விட்டதாக கேள்விப் பட்டேன். மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாத்துங்க சாமிகளா.

பாஜாக : காங்கிரஸ் தமிழகத்தில் இருந்து பின்பு பலம் குன்றிய கட்சி. உங்கள் கட்சியால் தொடப்படாத பல பகுதிகள் இன்னும் தமிழ் நாட்டில் உள்ளது. அம்மா பாசம் இந்த உண்மையை மறைத்தது. தேர்தல் முடிவுகள் உங்கள் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டது. அதிமுக கூட்டில் சுயமரியாதை இழந்ததுதான் மிச்சம். திருநாவுக்கரசருக்கு ரொம்ப சந்தோசம். எல்லா சானலுக்கும் ஓடிப்போய் தோற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.கட்சியின் அடிப்படை பலத்தை
பெருக்க வேண்டிய கட்டாயம் இக்கட்சிக்கு உள்ளது. மக்கள் பிரச்சனைகளுக்காக பாடுபடுங்கள்.அரசு ஊழியர்பிரச்சனையில் அம்மாவிற்குஅடித்த ஜால்ரா- ஸாரி கொஞ்சம் ஓவர். தமிழக அளவிலான தனிப்பட்ட அடையாளம்பாஜாகாவிற்கு வேண்டும்.ராமர் பிரச்சனையை வைத்து மட்டும் தமிழ்நாட்டில் வளர முடியாது.

தமிழக அளவில் மீதமுள்ள கட்சிகள் தேவையில்லை என்பது என் கருத்து. மதிமுக விரைவில் திமுகவின் அங்காமாகிவிடும். எப்படி என்று என்னைக் கேட்காதீர்கள்.பாமாக தேவையில்லாத கட்சி. இரண்டு திராவிடக்கட்சிகளும் கழட்டி விட்டால்டெபாசிட் தேறாது. ஆனால் மீண்டும் மீண்டும் அதிமுகவும், திமுகவும் பூனையை மடியில் கட்டுகின்றன. பேர சக்தியை வைத்துக் கொண்டு ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக நடத்தி வருகிறார் ராமதாஸ்.இவரை வளர்த்ததற்காக திமுக கொடுத்த விலையும், இனி கொடுக்கப் போகும் விலையும் மிக அதிகம்.

புதிய தொடக்கம்- நன்மையா தீமையா சின்னத்திரைகளில் காண்க ( சன் டிவி, ஜெயா டிவி மற்றும் தமிழன் டிவி)

Wednesday, May 12, 2004

முரள் எறிதரன்

இவர் உலக சாதனை செய்ததில் எனக்கு எவ்வித சந்தோசமும் எழவில்லை. இலங்கை நண்பர்கள் என் மேல் கோபம் கொள்ளலாம். சாதனைகள் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டு இருப்பது அவசியம் என்பது எனது கருத்து.

ஆசிய கிரிக்கெட் வலுவாகவுள்ள காலக்கட்டத்தில் விளையாட நேர்ந்தது இவருடைய அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் இவரை என்றோ வீட்டுக்கு அனுப்பி இருப்பார்கள்.விதிமுறை மீற்ல்களை விஞ்ஞான ரீதியில் நியாயப்படுத்துவது விளையாட்டுக்கு ஒவ்வாது.இந்த நிலை நீடித்தால் உடல் உறுப்புகள் பாதிககப்பட்டவர்களின் விளையாட்டாக கிரிக்கெட் மாறிவிடும்.

பாடுபட்டு கவிதைமயமான ஆக்சனுடன் மாங்கு மாங்கென்று பந்து வீசி "வால்ஷ்" எடுத்த விக்கெட்டுக்களை, இந்திய துணைக்கண்டத்தில் சுழற் பந்து "எறிந்து" முந்தியிருக்கிறார் முரளி. ஐசிசியின் அரைகுறை நடவடிக்கைகள் இம்மாதிரியான பந்து வீச்சாளர்களை மேலும் ஊக்குவிக்கிறது.முரளியின் தூஸ்ராவை மட்டும் தடை செய்யப்போகிறார்களாம். முரளி எப்போது தூஸ்ரா வீசுவார் என்பதை அம்பயர் எவ்வாறு கணிக்கப் போகிறார்?.இதுவரை முரளி தூஸ்ராவில் எடுத்த விக்கெட்டுக்களை அவரது கணக்கில் இருந்து நீக்குவார்களா?

இந்த பிரச்சனை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும், இல்லாவிடில் முரளி 800 விக்கெட் எடுப்பது உறுதி. "வார்னே" போன்ற உண்மையான வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் தவிர்க்கப்பட வேண்டும்.

Saturday, May 01, 2004

எழுந்தது IT புரட்சி

கணிப்பொறிக்குள்
சிக்கியது உலகம்.

ஒளிரும் திரைகளைப் பார்த்து
ஒளிர்கிறது வாழ்க்கை (?)

வாய் மொழி வார்த்தைகள் பற்றாது
என்று மின்னஞ்சல் அனுப்ப சொல்கிறான்
பக்கத்து சீட்டிலிருக்கும்
சக ஊழியன்.

அமெரிக்கர்கள் செழித்திருக்க
இந்தியர்கள் விழித்திருக்கிறார்கள்
இரவு முழுவதும்

சுந்தர பாண்டியனுக்கு "ஸாண்டி" யென்று
ஞான ஸ்நானம் செய்து விட்டார்கள்
"Call centre" ல்.

பெண்ணுக்கு இணையத்தில் வரன் தேட
கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார்
பக்கத்தாத்து சாம்பு மாமா

மலையாளப் படம் சென்று
மாட்டிக் கொள்ளும் பயமில்லை.

பிரவுசிங் சென்டரின்
மூடிய கேபினுக்குள்
விரிகிறது
பாலியல் உலகம்.

வேலையின்றி அலைவோர்கள்
அனைவரின் பயோடாட்டாவும்
கணணியல் வல்லமையை
பறைசாற்றுகின்றன.

2000 ரூபாய்க்கு பிள்ளையை
கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தால்
அமெரிக்கா போக முடியுமா?
வேலைக்காரியின் கேள்வி

தோச நிவாரணத்திற்காக
108 போஸ்ட் கார்டு அனுப்பவது போய்
108 மின்ன்ஞ்சல் அனுப்புகிறார்கள்.

சாம்பார் ஊற்றும்
சர்வர் அணிந்திருக்கிறான்
" மைக்ரோசாப்ட்" டி சர்ட்.

எழுந்தது பார் IT புரட்சி