Monday, August 31, 2020


அலைபேசியில் வந்த
 புத்தாண்டு வாழ்த்துகள்
ஒரு சேர ஏற்படுத்துகின்றன
என் என்ணை சேமித்து வைத்திருக்கிறாய்
என்ற மகிழ்ச்சியையும்
பேசவில்லையே
என்ற வலியையும்.

சற்று தாமத்தித்து
தட்டிப்பார்க்கிறேன்
இந்த கடைசிக்கதவை.

திறந்து விடும் என்ற நம்பிக்கையில்
கரைந்துவிடட்டும் இன்னொரு இரவு.

Tuesday, March 10, 2020



யாசிக்க நீண்ட கரங்களை பார்த்து
பதறி விடுகிறீர்கள்

கைகுலுக்கும் போது
சிறியதாக இருந்த கரம்
யாசிக்கும் போது
நிரப்புவதற்கு இயலாத
பிரம்மாண்டதாக மாறி விடுகிறது.

என்னுடைய பழைய கிரீடங்களை
நினைவு கூர்ந்து
வாழ்ந்த ராஜ வாழ்க்கையை
உணர வைக்கிறீர்கள்

என்னை உற்சாகப்படுத்த
வார்த்தைகளாய் பனிக்க்ட்டிகளை என்
உள்ளங்கைகளுக்குள்
நிரப்புகிறீர்கள்.

வெம்மைக்கு இதமாய்தான் இருந்தது
உள்ளங்கையில் பரவிய குளிர்ச்சி.
மீண்டும் பார்ப்போம்
என்று விடைபெற்று
கை நிறைய பனிக்கட்டிகளுடன்
தகிக்கும் சாலைகளில்
நடக்கிறேன்.

அடுத்தவனை பார்க்க
அடுத்த ரயிலை பிடிக்கும் முன்னே
உலர்ந்து போனது
வெறுமையான கரங்கள்.

அடுத்தவனின் வீட்டுக் கதவை
தட்டுகிறேன்.
எனை எதிர்பார்த்து காத்திருந்தான்
அவனும் பனிக்கட்டிகளுடன்.