Wednesday, February 12, 2020

இயல்பு வாழ்க்கை

இரு சந்திப்புகளுக்கிடையே
வாழ்த்துவதற்கு எத்தனை விசயங்கள் உன்னிடத்தில்.

புதிதாக கார் வாங்கியிருக்கிறாய்.
பதவி உயர்வு கிடைத்திருக்கிறது
கண்கள் தெரியாத அளவு முடிவத்திருக்கும்
உங்கள் நாய் கூட போட்டியில் பரிசு வென்றிருக்கிறது.
உன் மகள் அற்புதமாக திருப்பாவை பாடுகிறாள்.

வாழ்த்தி முடித்ததும்
சந்திப்பு முடிந்துவிட்டது.

இதெல்லாம் நிகழா
என் போன்றோர் வாழ்க்கைக்குத்தான்
இயல்பு வாழ்க்கை என்று பெயர்.

எனக்கென்ன பெரிதாய் வேண்டும்
இயல்பு வாழ்க்கைக்கு.

அடையாருக்கு நேராக செல்ல
கூட்டமில்லா பேருந்தும்
கூடுதலாக ஜன்னலோர இருக்கையும்

நடைபயிற்சியின் போது
குரைக்காதிருக்க நாயின் ஸ்நேகிதமும்

எட்டிப்பார்த்து படிக்க இயலும் வண்ணம்
பக்கத்து சீட்டுக்காரனிடம்
ஒரு புத்தகம்.

இதையும் ஒரு கவிதை என ஏற்றுக்கொள்ள சிலரும்
அதற்கு வரும் லைக்க்குகளும்.

Thursday, October 31, 2019

சென்னை மழை

அடுத்த பத்து நாட்களுக்கு சென்னையில் மழை இருக்காது என்ற செய்தி கவலை அளிக்கிறது. அப்படி ஒன்றும் பெரிதாக மழை இன்னும் சென்னையில் பெய்யவில்லை. நவம்பர் மாதம்தான் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். அதில் பத்து நாட்களை வறண்ட வானிலையில் இழந்தால் அது கவலை தரும் விஷயம்தான்.

Wednesday, October 30, 2019

யாருமில்லா தனியறையில்..

பரணில் கிடக்கும்
பழைய கவிதை நூலைப்போல
இந்த வலைப்பதிவு.

தூசிதட்டி நான் மட்டும் படிப்பேன்.
பிற்கு மீண்டும் பரணில் பத்திரமாக

இன்று யாரும் கவனிக்காத
 தனியறையாக
தனித்திருக்கிறது. புதிதாய் ஜனித்திருக்கிறது.

யாரும் வராத அறையில்
ரகசியங்களை உரக்கச் சொல்லலாம்.
புதிய ஒப்பனைகளை செய்து பார்க்கலாம்.
அஷ்டகோணத்தில் முகத்தை மாற்றி
பிம்பங்களை நோக்கலாம்.

யாரும் கவனிக்காததது
மிகப் பெரிய சுதந்திரந்தான்
மக்களே
யாருமில்லை என்ற நிலை உருவாகதவரை.

யாரும் கவனிக்காத எழுத்து
தன்னை தானே விமர்சித்துக் கொள்ளும் .
முதல் வாக்கியத்திற்கும்
மூன்றாம் வாக்கியத்திற்கும் ஏற்படும் மோதலில்
சொற்கள் சிதறி குழம்பி நிற்கும்.

என்றாவது வர நேர்ந்தால்
சிதறி கிடக்கும் சொற்களை சேர்த்து
உங்களுக்கு பிடித்தமான வாக்கியங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஏனெனில்
வாழ்வின் அர்த்தம் நமக்கு நாமே
கற்பித்துக் கொள்ளும் தத்துவமே தவிர
பிறரால் கூறப்படுவதல்ல.