Thursday, December 27, 2007

மெல்போர்னில் திண்டாட்டம்

முதல்நாள் முடிவில் இருந்த மகிழ்ச்சியை காணாமல் போகச் செய்து விட்டார்கள் இந்திய ஆட்டக்காரர்கள். இத்தனைக்கும் ஆடுகளம் இந்திய ஆடுகளத்தைப் போலத்தான் இருந்தது. முகததை உடைக்கும் அளவு பந்து எகிறவில்லை. ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் துல்லியமாக பந்து வீசினார்கள்.ஆடுகளத்தின் உதவியின்றி, துல்லிய பந்து வீச்சின் மூலமே வீழ்த்தி விடக்கூடிய பரிதாம நிலையில்தான் இந்தியா தற்போது இருக்கிறது.

இந்தியாவின் இந்த வீழ்ச்சிக்கு அடிகோலியவர் திராவிட்தான்.அவர் ஆடிய அதீத தற்காப்பு ஆட்டம் இந்தியாவிற்கு எந்த பலனையும் தரவில்லை. முதல் நாற்பது பந்துகள் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. திராவிடின் இந்த ஆட்டத்திற்கு பின்னால் ஒரு திட்டமோ, உத்தியோ இல்லை. சரியான பயந்தாங்கொள்ளி ஆட்டம். ஒரு கட்டத்திற்கு மேல் ஒற்றை ரன்கள் குவிப்பதற்காவது முயற்சித்திருக்க வேண்டும். எதுவும் செய்யாது ஐந்து ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போது திராவிட் இவ்வாறு அதீத தற்காப்புடன் ஆடி,சோபிக்காமல் போனார். 2004 ல் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்தது. இம்முறை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

அதன் பின்பு டெண்டுல்கர் சிறப்பாக ஆடினாலும், ஆஸி பவுலர்களின் தன்னம்பிக்கை மலைபோல் பெருகிவிட்டது. அவர்களின் வலைபின்னலுக்கு சுலபமாக பலியாகிவிட்டார்கள்.திராவிடைக் காட்டிலும் அதிகம் சொதப்பியது யுவராஜ். இவரை அணியில் சேர்க்க திராவிடை ஓப்பன் செய்ய வைத்தார்கள். திராவிடின் சொதப்பலை, இவர் அடித்து ஈடு செய்வார் என்றால் இவர் அடித்ததோ முட்டை.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கான ஆஸி பவுலர்களின் திட்டங்கள், துல்லிய்மாக பணி செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவிற்கு மிகவும் கலக்கம் தரும் செய்தி.இதனை முறியடிக்க, அதிரடியாக ஆடும் சேவாக் போன்ற ஆட்டக்காரர் தேவை. சென்ற முறை ஆஸி பவுலர்களை அவரது அதிரடி ஆட்டம் கலங்கவைத்தது. இம்முறை "குழி தோண்டி வை. நானே வந்து குதிக்கிறேன்" என்னும் வகையில் இருக்கிறது நம்மவர்களின் ஆட்டம்.

இரண்டாவது நாள் இறுதியிலே 171 ரன்கள் முண்ணனி. என்னுடைய கணிப்பு ஆஸி அணி 500 க்கும் மேலான முண்ணனியை பெறும். பாண்டிங் சதம் அடிப்பார்.

Sunday, August 13, 2006

உறவுகள் (அல்லது) பூச்சி

மழைக்கால பின்னிரவில்
சரியாக மூட இயலா
சன்னல் கதவின் வழியேவந்தது
பெயர் தெரியா பூச்சி ஒன்று.

டிவியின் ஒளிர் திரையின்
மூலையில் அமர்ந்து கொண்டது
மெளனமாக.

நடுவில் அமர்ந்து
நான் பார்ப்பதை கெடுக்காமல்.

அருகில் சென்று அடித்திருக்கலாம்.
மூலையில்தானே இருக்கிறது என விட்டு விட்டேன்.

தினமும் இரவுகளில்
வரத்துவங்கியது அது.

அதன் பின்பு அதனுடன்
விளையாடத் தோன்றிற்று.
டிவியின் சத்தத்தை
அதிகரித்துப் பார்த்தேன்
அது பயப்பட்டு பறக்கிறதா என்று

அதிர்ச்சி அடைந்து
எழுந்து வந்த
குடும்ப நபர்களிடம்
அதற்கு காது கேட்காது
என்றேன்.
அவர்கள் மெளனமாக போய்விட்டார்கள்.

பின்பு ஒளிர்திரையின் வெளிச்சத்தை
மாற்றிப் பார்த்தேன்.
அது நகரவேயில்லை.

எப்போது டிவியைஅணைக்கிறேனோ
உடனே அது இடத்தை காலி செய்து விடும்.
நான் தூங்கப் போகிறேன் என்று தெரியுமோ என்னவோ?

தூக்கம் வராமல் டிவி பார்த்த நான்
பெயர் தெரியா பூச்சிக்காக தூங்காமல் டிவி பார்த்தேன்.

ஊர் செல்ல நேரிட்ட
இரு தினங்களுக்கு பின்பு
அதனைக் காணவில்லை.

சுவற்று பல்லி பிடித்து தின்றதா?
மிட்நைட் மசாலா பார்க்கும் போது யாரும் அடித்தார்களா?
இல்லை மழைக்காலம் முடிந்தது என்று பறந்து போய்விட்டதா?

மழைக்காலம் முடிந்ததால்தான் போயிருக்க வேண்டும்.
காத்திருந்தேன் அடுத்த மழைக்காலம் வரை.

மீண்டும் மழை.
சரியாக மூடாத சன்னல்.
உள்ளே வந்த பூச்சி
இம்முறை பலமாக கடித்தது.

Wednesday, May 10, 2006

தேர்தல் முடிவு- சில மிகை வினைகள்

இன்னும் முடிவுகள் வரவில்லை. அதற்குள் வலைப்பதிவு உலகத்திலும் , பத்திரிக்கை உலகத்திலும் முடிவு வந்துவிட்டது போல நடந்து கொள்கிறார்கள். நான் பார்த்த சில மிகைவினைகள் சில.

  1. பதவி ஏற்பு விழாவிற்கு அம்மா சென்னன பல்கலைக்கழக அரங்கை ரிசர்வ் செய்திருப்பதாக கூறப்படுவது.
  2. குமுதம் ரிப்போர்டரில் வந்திருக்கும் 'கலைஞர் அமைச்சரவை லிஸ்ட் ரெடி" நியூஸ்
  3. ஜோசப்சார் வலைப்பதிவில் எழுதியிருக்கும் கலைஞருக்கு ஓர் கடிதம்.(ந்ன்றாக எழுதியிருக்கிறீர்கள் சார்)
  4. தமிழக அரசின் இணையதளத்தில் (tn.gov.in) அம்மாவின் படத்தை நீக்கியதோடு அல்லாமல், இணையதள நிறத்தையும் மாற்றி விட்டார்கள் ( பச்சையிலிருந்து வெளிர்நீலம்)

இணையதள நிறமாற்றம் ஆட்சிமாற்றம் ஏற்படுவதை சொல்லாமல் சொல்கிறதோ?

நாளை நடப்பதை யாரோ அறிந்திருக்கிறார்களோ?

Tuesday, May 02, 2006

அரசு ஊழியர்- உடைபட வேண்டிய பிம்பங்கள்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அதிமுக அரசு கையாண்ட விதத்தை குறித்த குழலியின் பதிவு இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.அந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்கள் ஒரு காலஞ் சென்ற அரசு ஊழியரின் மகனான என்னை கோபப்பட வைத்தன என்றாலும் , இக்கட்டுரை வெற்று கோபத்தில் விளைந்த பதில் வசவு அல்ல. முடிந்த வரை தெளிவாக அரசு ஊழியர்களை குறித்து நிலவும் போலி பிம்பங்களை உடைத்து, அவர்களின் சிரமங்களை எடுத்துரைக்கும் முயற்சியே. அதையும் மீறி நான் ஒருசார்புநிலையில்தான் எழுதியுள்ளேன் என்று சிலர் குற்றம் சாட்டினாலும் அதற்காக வருந்தப் போவதில்லை.

அரசு ஊழியர்கள் என்ற கூட்டமைப்பில் பலதரபட்ட பணிகள் செய்யும் படித்த மற்றும் படிக்காத மக்கள் அடங்கியுள்ளார்கள். சுதந்திரத்திற்கு பின் கல்வியில் சிறந்த மாணவர் மற்றும் மாணவியரின் கனவாக அரசு ஊழியம் இருந்தது. வேறு எவ்வித துறைகளிலும் வேலை வாய்ப்புக்கள் அதிகமில்லாத பட்சத்தில், அதிக சம்பளத்தை காட்டிலும், பணி நிரந்தரம் முக்கியத்துவம் பெற்றிருந்த காலக் கட்டத்தில் அரசாங்க வேலை அனைவரையும் ஈர்த்தது.இதனால் கல்வியில் சிறந்த பலர் அரசாங்க வேலையில் ஈடுபட்டு, நலத்திட்டங்களை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் ,சுழலும் காலக்கட்டத்தில் தனியார் துறையின் வளர்ச்சியையும், அதன் அதிக வருமானம் ஈட்டும் சாத்தியத்தையும் காண நேர்ந்தது. அவர்களை காட்டிலும் திறமை குறைவானவர்கள் அதிக பொருளீட்டுவதை காண நேர்ந்தது. ஆனாலும் அவர்கள் பணிநிரந்தரம், நீண்டகால பாதுகாப்பு ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அரசாங்க வேலைக்கு சமூகம் கொடுத்திருந்த கவுரவத்தை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அத்தகைய கவுரவம் கூட கால ஓட்டத்தில் சிதைந்து விட்டது.பணி நிரந்தரமும், நீண்டகால ஓய்வூதிய பாதுகாப்பு மட்டுமே அரசாங்க வேலையின் கவர்ச்சி அம்சங்களாக நிலைத்தன.

மேலே குறிப்பிட்ட கவர்ச்சி அம்சங்களுக்கும் குந்தகம் விளைந்த போது, ஏற்பட்ட குமுறல்தான் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்.இந்த அரசு ஊழியர்களின் குமுறலுக்கு மக்களின் வெளிப்படையான ஆதரவு கிடைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத விசயம்தான். அதற்கு காரணம் குடிமகனுக்கான சேவைகளை தரும் அரசு ஊழியர்களிடம் , சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள். ஆனால் இத்தகைய கசப்பான அனுபவங்களுக்கு பின்புலமாக இருக்கும் ஒரு அரசியல் கட்சியே ஆட்சி பீடத்தில் அமர்ந்து, ஊழலை அரசு ஊழியர்களின் தனிப்பட்ட முகமாக முன்னிலைப்படுத்தி, 94% சதவீத வருமானத்தை அரசாங்க ஊழியர்களுக்கு செலவு செய்கிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து,மக்களுக்கு அரசாங்க ஊழியர்களின் மேல் எவ்வித அனுதாபமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது.அரசு ஊழியர்கள் என்றாலே சாதி சான்றிதழுக்கு காசு கேட்கும் அதிகாரி அல்லது டிரைவிங் லைசென்ஸிற்கு காசு கேட்கும் அதிகாரி என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்ட பொது மக்களுக்கும், இவ்வாறான வாய்ப்புக்கள் இல்லாமல்/மனப்பான்மை இல்லாமல் பல லட்ச ஊழியர்கள், மிகவும் மோசமான சூழ்நிலையில் அரசு ஊழியம் செய்கிறார்கள் என்ற உண்மை தெரியாமல் போனது.

அரசாங்கத்தில் ஊழல் மிகுந்த துறைகளாக இருப்பது வரி வசூலிக்கும் வருவாய் துறை,பதிவுத் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை போன்றவைதான்.மற்ற துறைகளிலும் ஊழல் இருக்கிறதென்றாலும் அதன் சதவிகிதம் குறைவு.இந்த துறைகளிலும் கூட குடிமகனுக்கான சேவை வழங்கக் கூடிய முன்னிலைப் பணியாளர்கள், சேவை வழங்கும் அதிகாரம் படைத்தவர்களின் எண்ணிக்கை இருபதிலிருந்து, முப்பது சதவிகிதம் இருக்கும்.மீதி எழுபது சதவிகித ஊழியர்கள் அரசாங்க சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பிண்ணனியிலும் வித்தியாசமான தேவைகளும் சிக்கல்களும் இருக்கிறது. அரசு இயந்திரத்திற்கும் ,அரசியல்வாதிகளுக்குமான தவிர்க்க இயலாத தொடர்பு ஊழலின் ஆணிவேர்.அரசு இயந்திரமும் அரசியல்வாதியும் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம்தான். ஆனால் அரசு இயந்திரத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அரசியல்வாதிகளால்தான் ஊழல்கள் மலிந்தன.மக்களுக்கு அரசு அதிகாரிகளால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடைத்தரகர்களாய் பெருகினார்கள் அரசியல்வாதிகள் அல்லது அவர்களை சார்ந்தவர்கள் .இத்தகைய இடைத்தரகர்களை ஒழிக்காமல் வளரவிட்டது அரசியல் கட்சிகள்தான்.தன் கட்சி தொண்டர்களின் விசுவாசத்திற்காக தரப்படும் பரிசே இடைத்தரகம் செய்வதற்கான உரிமை.

இதற்கு மேலாக அரசியல்வாதிகளின் ஆடம்பரத்திற்கான செலவுகளுக்கு படியளப்பதும் ஊழல் பணம்தான். படைபரிவாரங்களுடன் அமைச்சர் வந்து பள்ளிக்கூடம் ஏதாவது ஒன்றை திறந்து வைப்பார். அந்த படைபரிவாரங்களுக்கு பெட்ரோல் முதற்கொண்டு,பிரியாணி வரை போடுவதற்கான செலவினங்கள் ஒரு பி.டி.ஓ தலையில் விழும். வருமானத்திலிருந்தா செலவு செய்வார் பி.டி.ஓ? இதற்காக செலவு செய்ய லோக்கல் தொழிலதிபர்கள் உண்டு. அதற்காக சில சலுகைகள் எதிர்பாப்ர்பது உண்டு.இடைத்தரகர்களும் இத்தகைய செலவுகளுக்கு உதவுவது உண்டு.இவ்வாறான செயல்களை அரசியல்வாதிகளுக்கு செய்ய மறுக்கும் உரிமை அதிகாரிகளுக்கு கிடையாது. அப்படி மறுத்தால் தண்ணி இல்லா காட்டிற்கு மாற்றப்படுவார். இச்சிக்கலே வேண்டாமென்று பதவி உயர்வை மறுத்து, சாதாரண வேலையை பார்க்கும் பல ஊழியர்களை அரசாங்க அலுவலகத்தில் காணலாம்.

சில ஊழியர்கள் அரசியல் சார்பு நிலை எடுத்து பணம் புரளும் பதவிகளை வாங்கிக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் அரசியல் சார்புக்கான விலையை உணர்ந்தே இருக்கிறார்கள். மாற்று அரசியல் கட்சியின் ஆட்சியின் போது அனுபவிக்கப் போகும் சிரமங்களுக்கும் சேர்த்தே சம்பாதித்து தங்களை பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு அதிகாரம் மேல்தான் ஆசை. நிரந்தரப் பணி, ஓய்வூதிய பயன்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இத்தகைய அதிகாரிகள் வெகு சொற்பமே. இவர்களை வைத்து ஒட்டு மொத்த அரசு ஊழியர் குழுமத்தை எடைபோடும் தவற்றை மக்கள் செய்து வருகிறார்கள். அதை அரசாங்கமும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது பயன்படுத்திக் கொண்டது.

இந்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்கலையும், நிவாரணப்பணிகளையும் செய்ததாக மார்தட்டிக் கொள்கிறது. இது உண்மையாயயிருக்கும் பட்சத்தில் இதை நிறைவேற்றிய களப்பணியாளனாக இருந்த அரசு ஊழியனையும் நாம் பாராட்டத்தானே வேண்டும்.ஆனால் அவர்களுக்கு எவ்வித பாராட்டும் கிடையாது.அரசாணையில் கையெழுத்துப் போட்ட அரசியல்வாதிகளைத்தான் நாம் பாராட்டுவோம். வெள்ளம் வந்ததோ, வரவில்லையோ, 500 ரூபாய் கமிசன் வாங்கி 2000 ரூபாய் வாங்கிக் கொடுத்த இடைத்தரகனின் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம்.மழையிலும், புயலிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர்?அவர்களது முயற்சியால்தானே நிவாரணப் பணிகளை செம்மையாக மேற்கொண்டோம் என்று மார்தட்ட முடிந்தது?ஆனால் இந்த உண்மைகளை மக்கள் உணரமாட்டார்கள். அரசாங்க ஊழியர்கள் அவர்கள் கடமையைத்தானே செய்தார்கள் என்பார்கள்.

அரசாங்க ஊழியர்கள் கடமையைத்தானே செய்தார்கள் என்பவர்கள் அரசாங்கத்தை கடமையை செய்ய வலியுறுத்தியிருந்தால் நாம் எப்போதோ உருப்பட்டிருப்போம். ஆனால் அதற்கான ஒன்றுபடுதலோ, வலுவோ தனிமனிதனுக்கு இல்லை என்ற பயத்தை அனைத்து மக்களின் மனத்தில் விதைத்திருப்பதுதான் அரசியல் கட்சிகளின் சாதனை.

சரி. ஆரம்பித்த பிரச்சனைக்கு வருகிறேன். அரசு ஊழியர்கள் ஆதாரமாக நினைத்த ஓய்வூதியப் பயன்களின் குறைப்பே அரசு ஊழியர் பிரச்சனையின் அடிப்படைக் காரணம்.இதனால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட வலியை பொதுமக்கள் உணராமல் செய்ததற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் லஞ்சம் வாங்குபவர்கள் என்ற பிம்பமும், அரசு ஊழியர்களுக்காக அதிகம் செலவழிக்கப்படுகிறது என்ற பிரச்சாரமும் காரணம்.

இதன் பின்னால் இந்த வேலைநிறுத்தத்தை ஒடுக்க அரசாங்கம் கையாண்ட முறைகளும்,அரசு ஊழியர்களுக்கு இழைத்த அவமானமும் மிகவும் கொடுமையானவை.நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய அரசு ஊழியன் என்ன அரசியல்வாதியா? கைதான பின்பு களிப்புடன் இருக்க ,குடும்பத்தார் அரசியல் கட்சி உறுப்பினர்களா?அடிப்படை ஆதாரமான வேலையையும், சம்பளத்தையும் இழந்து, அதை எப்போது பெறுவோம் என்பதற்காக அலைந்த அரசு ஊழியர்களில் பலர் தற்கொலையைப் பற்றி சிந்தித்தார்கள். இவ்வளவு தூரம் ஒடுக்கப்படுவதற்கு அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?

இத்தகைய அடக்குமுறையை வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரித்தார்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது. அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசாங்கத்தின் மேலிருந்த பயமே அதற்கு காரணமே தவிர, அரசாங்க ஊழியர்களின் மேலிருந்த வெறுப்பல்ல. இதனை பிரச்சாரம் செய்த கும்பல் உணர்ந்ததோ இல்லையோ, அரசாங்கம் உணர்ந்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னால்.

அரசு இயந்திர சீரமைப்பு என்பது சம்பளக் குறைப்பில் துவக்கக் கூடிய நடவடிக்கையல்ல.நன்றாக பணி செய்பவர்கள் முன்னேறக் கூடிய சாத்தியங்களுடனான ஒரு நிர்வாக அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் தன்னுடைய கடமைகளை அரசு ஊழியர்கள் செய்யக் கூடிய சுதந்திர சூழலை உருவாக்க வேண்டும். இதை செய்ய, ஏன் இதற்கான வாக்குறுதிகளை வழங்கக்கூட ஒரு அரசியல் கட்சியும் முன்வராது. சட்டப்படி இயங்கக்கூடிய ஒரு அமைப்பை பொதுமக்கள் கூட விரும்பாத வேதனையான சூழல்தான் இங்கேயுள்ளது.

ஆர்.டி.ஓ ஆபிஸ் போகாமலே டிரைவிங் லைசென்ஸ் நமக்கு வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் போலிஸ் நம்மை பிடித்தால் ஏதாவது வாங்கிக் கொண்டு விட்டுவிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதை மீறி அவர் கேஸ் போட்டால் அவர் நல்ல அரசு அதிகாரி என்று எப்போதாவாது சொல்கிறோமா? சட்டத்தை மீறுவதற்கான கட்டாயங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அதற்கான ஒரு குறிப்பிட்ட விலையை கொடுக்க அனவரும் சம்மதத்துடன் இருக்கிறோம். அந்த விலை அதிகரிக்கும் போதுதான் ஊழல் சமுதாயத்தை பற்றிய விழிப்புணர்வு வருகிறது.

வரும் காலக்கட்டங்களில் அரசாங்கத்தின் கடமைகளும், அரசாங்கப் பணியின் பரிமாணங்களும், பணியின் சவால்களும் மாறுபடும்.அப்போது அறிவுத்திறன் மிக்க துடிப்பான இளைஞர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படுவார்கள். திறன் வாய்ந்த இளைஞர்களை அரசாங்கம் தனியார் துறைக்கு இழந்து கொண்டிருந்தால் மிஞ்சும் தரம்குறைந்த மனிதவளத்தை வைத்து அரசாங்கம் எவ்வாறு தரமான சேவைகளை வழங்க முடியும்? இத்தகைய சூழல் ஏற்கனெவே உருவாகிவிட்டது. இந்திய ஆட்சிப் பணியில் சேர்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் குறைந்து விட்டது. தற்போதுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட தனியார் துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் அரசு இயந்திரத்தை சீரமைப்பது சம்பளத்தை குறைக்கும் செயலாக அல்லாமல், அரசு வேலையை கவுரமான, வளர்ச்சி வாய்ப்புக்களை உள்ளடக்கிய பணியாக மாற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும்.அரசு ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்.இவற்றுள் கவனம் செலுத்தாமல் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சலுகைகளில் கைவைக்கும் செயலில் ஈடுபட்டால் நிர்வாக சீர்திருத்தங்கள் துவங்காமலே போய்விடும்.

அரசு ஊழியர்கள் மேல் எடுத்த நடவடிக்கைகளால் அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்கள் என பின்னூட்டம் இடுகிறார் ஜெயக்குமார். ஆனால் இதன் பின்னால் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளை பார்க்கும் போது ,நிர்வாக சீர்திருத்தங்களை கூட செய்ய இயலா நிலைக்கு தன்னை தள்ளிக் கொண்டுவிட்டது அரசு என்றே என்னால் சொல்ல இயலும்.

இந்தியா போன்ற வளரும் நாட்டில், ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த நாட்டில், சமுதாய வேறுபாடுகள் பரவலாக உள்ள நாட்டில், அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்த்து பலர் வாழும் நாட்டில் அரசு இயந்திரம் சீராக இருக்க வேண்டும். இதற்கு சிறந்த இணக்கமான அரசு ஊழியர்கள் அவசியம்.குறைபாடுகளிலிருந்தாலும் இது இயங்க வேண்டியது நாட்டின் நன்மைக்கு அவசியம். ஆனால் இதை ஸ்தம்பிக்க வைத்து, இதன் ஆதாரமான ஊழியர்களை அவமானப்படுத்திய அரசின் செயல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே. இதனை உறுதியான முடிவு என பெருமைப்படுபவர்கள், நாளை வேறு ஒரு சூழலில் இரும்புக்கரம் நெரிக்கும்போது திணறும் மூச்சில்தான் தெரிந்து கொள்வார்கள்.

Thursday, April 27, 2006

தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்தி, வீட்டுச் சுவர்களையும், விடிய விடிய அலறும் ஒலி பெருக்கிகளிடம் இருந்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.மாறி வரும் சூழலில் தேர்த்ல் ஆணையம் கீழ்கண்ட சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தம்

தேர்தல் அறிக்கைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அறிவிக்கப்படும் திட்டங்களைப் பார்த்தால் அண்ணாமலை படத்தில் ரஜினி- சரத்பாபு பங்கு பெறும் ஏலம் நினைவுக்கு வருகிறது.தேர்தல் அறிக்கை வந்த பின்னாலும் புதிதாக வாக்குறுதிகளை அரசியல்வாதிகளின் விருப்பப்படி அவிழ்த்து விடுகிறார்கள்.

பொருட்களை விளம்பரப்படுத்தும் போது, அதன் பயன்களாக இல்லாததையும், பொல்லாததையும் விளம்பரப் படுத்தக் கூடாது என்ற வரையரை உண்டு.அதைப் போல ,முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வெற்றி பெற நிறைவேற்ற இயலா வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளித் தருவதை கட்டுப்படுத்த வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

இதன் படி தரப்படும் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதையும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.அதன் சாத்தியங்களை கட்சி சார்புள்ள/சார்பற்ற பொருளியல் வல்லுநர் இருவர் உறுதி செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்பந்தப் புள்ளிகலைப் போல ( டெண்டர்) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் அறிக்கைகளையும் வெளியிடும். இதன் பின்பு வாக்குறுதிகளை கூட்டுவதோ, குறைப்பதோ கூடாது.

கூட்டணித் தாவல் தடைச் சட்டம்

கர்நாடகாவில் நடந்த அரசியல் கூத்துகளுக்கு பின்னால் இச்சீர்திருத்தம் மிகவும் அவசியமாகிறது. தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து ஓட்டுக் கேட்டவர்கள், தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க இன்னொரு கூட்டணிக்கு தாவக் கூடாது. அவ்வாரு தாவும் பட்சத்தில் அவர்களை தகுதி இழக்கச் செய்ய வேண்டும். ஒரு கூட்டணியிலிருந்து வாக்கு கேட்டு விட்டு, இன்னொரு கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதை கூட அனுமதிக்கக் கூடாது. ஆளும் பிரதானக் கட்சி அநியாயம் செய்தால் , அதை மற்ற கூட்டணி கட்சிகள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? என்று கேட்கலாம். கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள வேண்டாம். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்க்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால் இன்னொரு தேர்தலை தவிர்க்கிறோம் என்று பொது நலனுக்காக மெனக்கெடுவதைப் போல் காட்டிக் கொண்டு, மாற்று அரசு அமைக்க பேரம் பேசும் அரசியல்வாதிகளின் கொட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இதற்கு பீகாரில் நடந்ததைப் போல மற்றொரு உடனடித் தேர்தல் எவ்வளவோ மேல். தாவி பலன்பெறும் வாய்ப்புக்கள் குறைந்தாலே, சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் நாளடைவில் குறைந்து விடும்.

பட்டாசு வெடிப்புத் தடை

இந்த தேர்தல் பிரச்சாரத்தை பார்த்த பின் தோன்றிய சிந்தனை இது. போஸ்டர்களை ஒட்டக் கட்டுப்படுத்தியதால், ஊரெங்கும் வேட்பாள்ர் வரும் போது வாண வேடிக்கை காட்டி அல்லோகலப் படுத்திகிறார்கள். இதற்கான செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறதா? ஏனென்றால் வெடிக்கப்படும் வாணவேடிக்கைகளின் மதிப்பு லட்சங்களை தாண்டும்.சுற்றுப் புறமும் மிகுதியாக பாதிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்திய செலவுக் கட்டுப்பாடு

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் , ஆட்சி அமைத்த பின் ஆடும் ஆட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலின் போது தப்பிய சுவர்கள், தேர்தலுக்கு பின்னால் வெற்றி பெற்ற வேட்பாளரின் முகங்களையும், அரசியல்வாதிகளின் முகங்களையும் சுமந்து கொண்டு பரிதாபமாக நிற்கின்றன. இதைத் தொடர்ந்து நன்றி அறிவிப்புக் கூட்டம் என்ற பெயரில் ஆடம்பரமான பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான செலவுகள் ,கட்சிகாரர்களால் வியாபாரிகளிடமிருந்தும் , பொதுமக்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு பின்னாலும் சுவர்களையும், நன்கொடை வசூலிக்கும் தொ (கு) ண்டர்களிடமிருந்து பொதுமக்களையும் காப்பாற்ற மேற்கூறிய சீர்திருத்தம் அவசியமாகிறது.

என்றாவது ஒரு நாள் இவை சாத்தியப்படலாம்.

Wednesday, April 26, 2006

தேர்தல்- படித்தவர்களின் ஆர்வமின்மை

குத்துச் சண்டையை வேடிக்கை பார்ப்பதைப் போல தேர்தலை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு வாக்காளர்களை ஊடகங்கள் தள்ளி விட்டன என குற்றம் சாட்டியிருக்கிறார் ஞாநி. இந்நிலை உண்மையென்றாலும், வாக்காளர்கள் தங்களுக்கான ஜனநாயக் கடமையைப் பற்றிய புரிதலுடன் உள்ளார்களா? என்ற கேள்வியையும் நாம் அலசிப் பார்க்க வேண்டும்

ஜனநாயக வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி அவசியம் என்றே அனைவரும் நம்பிக் கொண்டிருகிறோம். இந்திய சுதந்திரம் பெற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது நம் நாடு கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து. ஆனால் இத்தகைய வளர்ச்சி நம் ஜனநாயக நெறிமுறைகளை பலப்படுத்தியிருக்கிறதா? படித்தவன்/ள் ஒரு படிக்காத பாமரனுடன் ஒப்பிடும் போது எந்த அளவு தனது ஜனநாயகக் கடமைகளை உணர்ந்திருக்கிறான்/ள்? ஜனநாயக வளர்ச்சிக்கு படித்தவர்களின் பங்களிப்பு என்ன? என்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இப்பதிவு.

படித்தவர் விகிதம் அதிகரித்து வரும் கடந்த சில பத்தாண்டுகளில்,தேர்தல்களில் வாக்களிப்பவர்களின் சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டுகளில்தான் வாக்காளர்களின் வயது வரம்பு குறைக்கப்பட்டு 18 ஆக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தாலும், அதையும் மீறி வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது.

எதனால் இவ்வாறு நிகழ்கிறது? எனக்கு படும் சில காரணங்களை நான் கீழே விவரித்திருக்கிறேன்.

ஒரு குடிமகன் அரசாங்கத்திடமிருந்து எதை எதிர்பார்ப்பது? தன் மக்களுக்கான அரசாங்கத்தின் கடமையென்ன? ஒரு நல்ல அரசாங்கத்திற்கான வரையரைகள் என்ன? ஒரு மோசமான அரசாங்கம் ஏற்படுத்தும் சமுதாய பாதிப்புகள் என்ன? ஆகிய விசயங்களில் வாக்காளர்களிடையே நிலவும் தெளிவின்மை முதல் காரணம். படிக்காதவர்கள் நிரம்பிய சமுதாயத்தில் இத்தகைய சிக்கல் ஆச்சரியத்தை தராது. ஆனால் படிப்பு விகிதம் அதிகரித்தாலும், மேற்கூறிய விசயங்களில் வாக்காளர்கள் எவ்வித தெளிவையும் பெறாமல் எந்தக் கோழி ஜெயிக்கும் என்ற மனோபாவத்தில் தேர்தலை அணுகுவது ஏமாற்றம் அளிக்கும் அம்சம். இதில் வருந்தக் கூடியதாக நான் கருதுவது யார் ஜெயித்தால் என்ன ? என் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்ற ராமன் ஆண்டால் என்ன? ராவண்ன் ஆண்டால் என்ன என்ற மனப்பான்மை. படிக்காதவர்களை காட்டிலும், படித்தவர்களிடம் மிகவும் அதிகமாக இருக்கிறது இந்த மனப்பான்மை.

இந்த மனப்பான்மைக்கான அடிப்படைக் காரணம் என்ன?பற்றாக் குறைகள் மிகுந்த சமுதாயத்தில் அனைவரும் அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்த்து இருக்கிறோம். அப்பொது வழங்கும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் படிப்பறிவு தந்த பொருளாதார வளர்ச்சி தரும் தன்னிறைவு அரசாங்கத்தை எதிர்பார்க்காத நிலைக்கு படித்தவர்களை ஓரளவு உயர்த்தி விடுகிறது. கார்பரேசன் நீர் வரவில்லை என்றால் மினரல் வாட்டர் வாங்க பழகிக் கொள்கிறார்கள். கார்பரேசன் தண்ணீர் வரவில்லையென்றாலும் அது பெரிய குறைபாடாக தோன்றுவதில்லை. என்றாவது ஒரு நாள் பதிவாளர் அலுவலகம் போகும் போதோ, அல்லது மின்சார பில் கட்டும் போது அரசாங்க முகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போதும் மிகுந்த எரிச்சலுடன் எல்லாவற்றையும் தனியார்மயமாக்க வேண்டும் என புலம்பிக் கொள்கிறோம். காரிலோ, பஸ்ஸிலோ அலுவலகம் சென்று பத்திரமாக தினமும் வீடு திரும்பும் அன்றாட நடவடிக்கையின் பிண்ணனியில் அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது என்பதையும் அத்தகைய அரசின் செயல்பாட்டை கவனித்து , அதனை ஆதரிக்கவோ,எதிர்க்கவோ நமது வாக்குரிமையை பயன்படுத்தலாம் என்ற உணர்வையும் படிப்பறிவு அதிகரிக்க வில்லை. மாறாக தன்னுடைய வசதிகளில் மட்டும் கவனம் செலுத்தி வாழும் பொருளியல் மனப்பான்மையை அதிகரித்து விட்டது. இவர்களுக்கு அரசாங்கமும் மந்திரி சபையும் தேவையில்லாத ஒன்று. அரசியல் நிலைப்பாடும் அவசியமில்லாத ஒன்று.

படித்தவர்கள் மத்தியில் தோன்றி வலுப்பெற்றுள்ள அரசியல் நிலைப்பாட்டிற்கான அவசியமின்மையின் பின்விளைவுதான் நம்முடைய அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் வலுப்படாமல் பழைய பின் தங்கிய நிலையிலே தொடர்வது. உண்மையை சொல்லப்போனால் படித்தவர்கள் விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மேலும் மோசமடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கென வம்பு? என ஒதுங்கிப் போகும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு படித்த வர்க்கம் ஒதுங்கி நிற்க, துணிந்தவர்களின் அராஜம் தொடர்கிறது.

இத்தகைய சூழலில் இன்னும் அரசை நம்பியிருக்கும் பற்றாகுறை மிகுந்த மக்கள் சமுதாயம் அரசியல்வாதிகளின் பின்னால் போகிறது. அவர்களை கவர இலவச அரிசி, டிவி என சலுகைகளை அள்ளி வீசுகின்றன அரசியல் கட்சிகள்.ஒதுங்கி நிற்பவர்கள் உணர்வதில்லை ஒரு நல்ல அரசாங்கத்தின் அவசியத்தை- சுனாமியோ, வெள்ளமோ வரும் வரை, அல்லது ஒரு சோகமான சந்தர்பத்தில் காவல் நிலையத்தையோ, மற்ற அரசு சேவைகளையோ அணுகும் வரை.

படித்தவர்கள் மத்தியல் அரசியல் நிலைப்பாட்டின் அவசியம் இல்லாமல் போனதற்கான காரணங்களாக எனக்கு தோன்றுபவை இரண்டு.

ஒன்று-அரசியல் நிலைப்பாட்டைக் காட்டிலும், சாதி நிலைப்பாடு பெற்ற முக்கியத்துவம்- சாதி ரீதியாக உருவான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியின் சாதி சார்ந்த அணுகுமுறைகள்.

இரண்டு- படித்தவர்களுக்கும், மாணவர்களும் பிரதிநிதித்துவம் தராத அரசியல் கட்சிகள். படித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போதே இயங்கி வந்த மாணவர் இயக்கங்கள், கல்லூரிகள் மிகுந்த காலக்கட்டத்தில் வலுவிழந்து போனதும், அதைப் பலப்படுத்த கட்சிகள் முயலாததும்.

இந்த சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. நம்முடைய அரசாங்கங்கள் வெளிப்படையான பிரச்சனைகளை கையாள்வதில் கவனம் செலுத்துகின்றனவே தவிர பிரச்சனைகளாக உருவாகக் கூடியவற்றை கண்டுபிடிப்பதிலோ, தவிர்ப்பதிலோ கவனம் செலுத்துவதில்லை. வேலை இல்லாதவருக்கு மான்யம் அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது, வேலைகளை உருவாக்குவதை விட சுலபமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய நடவடிக்கைள் நீண்ட கால பயன்களை தருமா? யாருடைய வரிப்பணத்தில் இத்தகைய விரயங்களை செய்கிறார்கள். இத்தகைய கேள்விகளை கேட்க துணிவை தரவில்லை படிப்பு.

இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? இதற்கான தீர்வு மாணவர் இயக்கங்களிலிருந்துதான் துவங்க வேண்டும். ஆனால் மாணவர்களுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வியும், படித்து பல லட்சம் ஈட்டு என்ற பெற்றோர்களின் வழிகாட்டலும், மாணவர்களின் பொருள் மோகமும் தடைக்கற்களாக உள்ளன.
அரசியல் நிலைப்பாடும், அரசியல் கட்சி சார்பும் வேறு வேறு அம்சங்கள் என்பதை எப்போது உணரப்போகிறார்கள். அதுவரை குத்துச் சண்டையைப் போல், கோழிச் சண்டையை போல் தேர்தலை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

Monday, April 10, 2006

சரத் விலகல், ராடன் மற்றும் சன் டிவி

ஊடகங்களால் கிசுகிசுக்கப்பட்டபடி இன்று திமுகவிலிருந்து விலகி விட்டார் சரத்குமார்.நானும் என் மனைவியும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என்று காரசாரமான கடிதத்தை கலைஞருக்கு அனுப்பியிருக்கிறார். சரத் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே திமுகவில் இணக்கமாக இல்லை. அவருடைய ரசிகர்களுக்கெனெ ஒரு கொடியை திடீரென அறிமுகம் செய்தார். சங்கராச்சாரியாரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். இத்தகைய செயல்கள் திமுகவில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.

சரத்தின் விலகல் அரசியல் ரீதியாக பெறும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், சரத்தின் மனைவி ராதிகாவும் அவருடைய முடிவுக்கு உடன்படும் பட்சத்தில், சன் டிவிக்கும், ராடான் நிறுவனத்திற்குமான தற்போதைய உறவின் பின் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்ற கேள்வியே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.ராடன் நிறுவனத்திற்கான முக்கியத்துவம் சன் டிவியில் மிக அதிகம்.தகதக தங்கவேட்டை, செல்வி முதல் பல தொடர்களை ராடன் நிறுவனம் தயாரித்து சன் குழும தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பி வருகிறது. இத்தகைய சூழலில் ராதிகாவின் அரசியல் முடிவின் வியாபாரத் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதை ஊடகங்கள் கூர்ந்து கவனிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

வியாபார ஒப்பந்தங்களை பரஸ்பர ஒப்புதல்களுடன் முறித்துக் கொள்வார்களா? அல்லது அரசியல் வேறு, வியாபாரம் வேறு என தொடரப் போகிறார்களா? அல்லது அடித்துக் கொண்டு நீதிமன்றம் ஏறுவார்களா? என பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

சரத் அதிமுகவுடன் இணையும் பட்சத்தில், ஜெயா டிவியுடன் புதிய ஒப்பந்தங்களில் ராடன் ஈடுபடலாம். அது நிகழும் பட்சத்தில் ஜெயா டிவியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை உயரக் கூடும். சன் டிவி சில புதிய தயாரிப்பாளர்களை முன்னிறுத்தக் கூடும். முன்பு சன் டிவியில் பிரபலமாக இருந்த மின் பிம்பங்கள் நிறுவனம் மீண்டும் சன் டிவியுடன் கைகோர்க்கலாம்.

சன் டிவி ராடனை நம்பி இல்லை என்ற வாதமும் உண்டு. முன்பு மின்பிம்பங்கள் நிறுவனம் சன் டிவியை விட்டு விலகியபோது ,அதனால் சன் டிவி பாதிக்கப்படவில்லை.ஆனால் ராடன் நிறுவனம் மின் பிம்பங்களை காட்டிலும் மிக அதிக நிகழ்ச்சிகளை பல மொழிகளில் வெகு காலமாக வழங்கி வருகிறது. அதில் பல ப்ரைம் ஸ்லாட் நிகழ்ச்சிகள். எனவே ராடனின் விலகல் தற்காலிக பாதிப்புக்களையாவது ஏற்படுத்தாமல் இருக்காது.

என்ன நடக்கப் போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.