Friday, June 17, 2005

நட்சத்திரப் பாடல்கள்-1

நான் ஒரு இசை ரசிகன். குறிப்பாக திரை இசை ரசிகன். ஆனால் ராகம்,தாளம் அலசி,நுணுக்கமாக விமர்சனம் எழுதுவதெல்லாம் என்னால் இயலாது. ரசனைக்கான உணர்வுரீதியான காரணங்களைத் தர இயலுமே தவிர, அறிவியல் ரீதியான அலசல்களை செய்ய இயலாது. ஆனால் இந்த இயலாமை இசையை ரசிப்பதற்கு இடைஞ்சலாக இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது.

திரைப்படத்தில் பாடல்களே தேவையில்லை என்ற நிலைப்பாட்டுடன் சிலர் இருக்க, அவற்றுடன் ஒத்துப் போகாதவன் நான். பாடல்களை திரைப்படத்தில் தேவையான இடத்தில், சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களிடம் கதையின் தாக்கத்தை அதிகப்படுத்தலாம் என்ற கண்ணோட்டம் உடையவன் நான். இதைக் குறித்து மியூசிக் பார்ட்டி பற்றிய என்னுடைய பழைய பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில பாடல்களை நட்சத்திரப் பாடல்களாய் கவுரவித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நட்சத்திரப் பாடல் #1

பாடல்: உறவுகள் தொடர்கதை
பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்
படம்: அவள் அப்படித்தான்
இசை: இளையராஜா
இயக்குநர்: ருத்ரய்யா

இலங்கை வானொலியில் முதன் முதலாய் இப்பாடலை கேட்டேன். காரைக்குடியில் நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த சொற்ப வீடுகள் ஒன்றில் நாங்கள் குடியிருந்தோம். அப்போது இலங்கை வானொலியில் மாலை 5.30 முதல் 5.58 வரை நீங்கள் கேட்டவை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அழகப்பா கல்லூரியின் மாணவர் விடுதியில் சத்தமாக வைக்கப்படும் வானொலி காற்றில் மிதந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் காதுகளை வந்தடையும். அவ்வாறான ஒரு சமயத்தில் கேட்ட பாடல். பிற்காலத்தில் இத்திரைப்படத்தை பார்த்த பின் நெஞ்சில் பசை போட்டு ஒட்டிக் கொண்ட பாடல்.

மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்ட பாடல். பாடல் காட்சியில் நடித்தவர்கள் சிவச்சந்திரன் மற்றும் ஸ்ரீபிரியா. கொஞ்சம் அதிரஷ்டம் இருந்திருந்தால் ஸ்ரீப்பிரியாவிற்கு இப்படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கும். இவருள் இத்தைகைய நடிப்பாற்றலா என்று படம் பார்த்தவர் அனைவரையும் வியக்கவைத்த நடிப்பு.
அனைத்திற்கும் மேலாக கண்ணதாசனின் அற்புதமான வரிகள்.

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்ணிலே ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம், வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே, புது அழகிலே நாமும் இணையலாம்.

நொந்து போயிருக்கும் ஸ்ரீபிரியாவை, ஆறுதல் சொல்லி தேற்றுவதைப் போன்ற சூழ்நிலை. இதற்கு இதைக்காட்டிலும் எளிமையாக அதே சமயத்தில் மனதை தொடும் வகையில் , குறிப்பாக வார்த்தை விளையாட்டுக்கள் ஏதுமின்றி பாடல் எழுத கண்ணதாசனால் மட்டுமே இயலும்.

பாடல் வரிகளில் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்தருள்க. இளையராஜா இசை மகாராஜாவாக முடிசூட்டிக் கொண்ட காலத்தில் வெளியான படம். இப்படத்தின் மூன்று பாடல்களுமே முத்தான பாடல்கள். குறிப்பாக பெண்குரலில் வரும் "வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை" பாடலை கேசட்டுக்களிலும், நல்ல மற்றும் பிளாட்பார ஓர திருட்டு குறுந்தகடுகளிலும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்காவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

9 comments:

icarus prakash said...

கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... தோ வரேன்.

வசந்தன்(Vasanthan) said...

பதிவு நன்று. அவள் ஒரு தொடர்கதை எனக்குப் பிடித்த படமும்கூட.
நிற்க, 'ஒளி பரப்புவார்கள்' என்று வந்துள்ளது. திருத்திவிடவும்.

icarus prakash said...

வாழ்க்கை ஓடம் செல்ல... மற்றும் பன்னீர் புஷ்பங்களே ( கமல்ஹாசன் பாடிய பாடல் ) என்ற மற்ற இரண்டு பாடல்களும் கூட அருமையாக இருக்கும். இளையராஜாவின் ஆரம்பகால பாடல்கள் பல பார்க்க கோராமையாக இருக்கும். விதிவிலக்குகளில் இதுவும் ஒன்று. ஸ்ரீபிரியாவின் பாத்திரப் படைப்பு அருமையாக இருக்கும். அதை அவர் அழகாகச் செய்திருப்பார். இந்தப் படம் ஹிட்டா?

வாழ்க்கை ஓடம் பாட்டை இங்கே இறக்கிக் கொள்ளலாம் [ registration reqd. but free]

Vanthiyathevan said...

பழைய நினைவுகளைக் கிளறும் பதிவு. ருத்ரய்யா வேறு (அவள் அப்படித்தான் தவிர) படமேதும் இயக்கியிருக்கின்றாரா?

Mookku Sundar said...

பிரபாகர் பெற்றோர் ஊருக்குப் போயிருக்க, அங்கே இந்தப் படத்தை பார்த்தது ஞாபகம் வருகிறது. ஏதாவது free server இருந்தால் சொல். என்னிடம் கிட்டத்தட்ட 600 எம்பி3 பாடல்கள் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சுமைஏற்றுகிறேன் ( upload - ஹிஹி)

பத்மா அர்விந்த் said...

எனக்கு பிடித்த படம். பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை பாராட்ட யாரும் இல்லை என்ற வரிகள் உண்மையை தெளிவாய் சொல்லும்.சிந்திக்க வைத்த கடைசி வரிகள் சரிதாவுடையது " பெண் சுதந்திரம்னா என்னங்க?"
பழைய பாடல்கள் பற்றி எழுதுவதற்கு நன்றிகள்.

Chandravathanaa said...

பாடல்கள் பற்றி யாராவது பேசினால் எனக்குப் பிடிக்கும்.
இந்தப் பதிவும் பிடித்திருக்கிறது.

ராம்கி said...

Rajkumar,

Link of all the Rajini film songs are available in www.rajinifans.com

-L-L-D-a-s-u said...

மனத்தை கொள்ளை கொள்ளும் பாடல் ..இப்போதும் என்னுடைய நம்பர் - 1 விருப்பப்பாடல் .. நீங்கள் காரைக்குடியா?