Monday, August 01, 2005

நண்பர்கள் தினம்- கவிதை

உன் வானம் வேறு
உன் பகல் வேறு.
வேர்த்து வழிந்து நான்
அலுவலகம் சேரும் போது
கொட்டாவி விட்டுக் கொண்டு
சாட்டிங்கில் வருவாய் நீ.

எப்படியிருக்கிறாய்?
நன்றாகயிருக்கிறேன்.
என
சம்பிரதாயமாய் சாட்டிங்கில்
தெரிக்கும் வார்த்தைகளில்
எப்படி உணர்ந்து கொள்ளமுடியும்
நம் வலிகளை?

நான் அதிகமாய் புகைக்கும்
சிகரெட்டுக்களிருந்தும்,
உன் திடீர் மவுனத்திலிருந்தும்
நம் பிரச்சனைகளை நாமே அவதானிப்போமே..
வார்த்தைகள் அங்கே தேவையற்றுதானேயிருந்தன.

அமெரிக்காவிலிருக்கானா?கெட்டிக்காரன்
என உன்னை விசாரித்து
என்னை முட்டாளாக்குகிறார்
கணக்கு வாத்தியார்.

இன்று நம்மை பற்றி நாம் சுமக்கும்
பிம்பங்களில்
எது நிஜம்? எது பொய்?
யாருக்கு தெரியும்?

உன்னுடமிருக்கும் நட்பை
உலகிற்கு உணர்த்த
போதுமானதாயிருக்கிறது
உன் வசிப்பிடப் பெயரும்
மின்னஞ்சல் முகவரியும்.
ஆனால்
நமக்கு மட்டுமே தெரியும்
பரஸ்பரம் சொல்லிக் கொள்ள மறந்த
பிறந்தநாள் வாழ்த்துக்களும்
உன் கடந்த இந்திய விஜயத்தின் போது
நாம் பார்த்துக் கொள்ளாததும்.

என் நினைவுகளில்
எப்போதும் இருக்கிறாய்
என்றெல்லாம்
என்னால் பொய் சொல்ல முடியாது.
ஆனாலும்
ஒரு டீக்கடையின் இளையராஜா பாடல்
உன் நினைவுகளை கிளறி விடுகிறது.
என் வாடிக்கையாளனிடமிருந்து
வரும் செல்பேசி அழைப்போ
உடனடியாக
அதை சிதைத்து விடுகிறது.

எப்பொழுதாவது போகிறேன்
நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும்
அந்த நூலகத்திற்கு.

பழைய நாவல்களின்
சிதைந்த பக்கங்களில்
நீயும் நானும் சேர்ந்து
அடிக்கோடிட்ட சில வரிகளில்..
உணர்வேன்
உன் கைகளின் ஸ்பரிசத்தை.

இப்போதும்
யாரோ இருவர்
புத்தகத்தை வைத்து
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுள்
யார் நீ?
யார் நான்?
இக்கவிதையை எழுதப்போவது யார்?

14 comments:

Mookku Sundar said...

:-}

srishiv said...

உண்மையில் என்னை ஊருக்கு அழைத்துச்சென்று அழவைத்துவிட்டீர் தோழர், என் பள்ளிக்காலத்திற்கு மீண்டும் ஒரு பயணம் சென்று வந்த திளைப்பு, நன்றிகள் ஐயா...இன்னும் எழுதுங்கள்....
இதயக்கசிவுடன்,
ஸ்ரீஷிவ்....

icarus prakash said...

உங்கள் கவிதையும், பசுபதிராயனின் நகைக்குறியும், எதையோ நினைவுபடுத்துகின்றது

"Anamikaa" Meyyappan said...

நண்பா,
மற்றும் ஒரு அருமையான கவிதை.
உன் கவிதைகளும், களமும் உண்மையான கவிஞனை மீண்டும் அடையாளம் காட்டுகின்றது.

Vanthiyathevan said...

பூந்தளிர், கோகுலம், முத்து காமிக்ஸை
விடிய விடியப் படித்து போது
தெரியவில்லை இதுதான் நட்பா?

பள்ளிப் போட்டிகளில் முட்டியபோதும்
பரிசுகளைப் பங்கிட்டபோதும்
தெரியவில்லை இதுதான் நட்பா?

கல்லூரி காலத்தில்
காதலர் தினம் மட்டும்
தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம்

எழுதுவதற்கும் சொல்லுவதற்கும்
எத்தனையோ இன்றுண்டு
நண்பர் தினம் ஞாபகத்திற்கு வந்தது


அருமையான கவிதை !!! தொடரட்டும் கவிவீச்சு !!!

மதுரைத் தமிழ்ச்சங்க கவிதை கைவசம் உள்ளதா?

Arun Vaidyanathan said...

Nice,Good one Raj.
யார் நீ?
யார் நான்?
இக்கவிதையை எழுதப்போவது யார்?

Idhu mattum engaeyo paarthaa maadhiri irukku...but indha kavidhaikku poruththamaavum irukku!

Kaps said...

kavithai poattiyil vendramaikku enadhu vaazhthukkal. thodarattum ungal tamizh pani.

பினாத்தல் சுரேஷ் said...

நண்பர்கள் தினத்துக்கு பொருத்தமாக இருக்கும் நல்ல கவிதை.
//ஒரு டீக்கடையின் இளையராஜா பாடல்//
//அடிக்கோடிட்ட சில வரிகளில்..//
//உன் கடந்த இந்திய விஜயத்தின் போது
நாம் பார்த்துக் கொள்ளாததும்.//
//இக்கவிதையை எழுதப்போவது யார்? //

இந்த வரிகளில் நானும் வாழ முடிந்தது!

போட்டி வெற்றிக்கும் வாழ்த்துக்கள்!

Jeevan said...

Super kavithai friend

Happy friendship day

Pradeep said...

ஹுஹும்..இந்த மாதிரி எல்லாம் நான் என்னைக்கு எழுதி..அட போங்கப்பா!

மிக அற்புதமான கவிதை! நட்பு வாழ்கிறது உங்கள் கவிதையில்..

கொங்கு ராசா said...

//அமெரிக்காவிலிருக்கானா?கெட்டிக்காரன்
என உன்னை விசாரித்து
என்னை முட்டாளாக்குகிறார்
கணக்கு வாத்தியார்.
//

வீட்டுக்கு வீடு வாசப்படி

பதினைஞ்சு நாள் முன்னமே படிச்சுட்டு, பின்னூட்டம் குடுக்க வார்த்தை வராம போனேன்.. இன்னைக்கு வரைக்கும் நெஞ்சுக்குள்ளயே இருந்த கவைதை இது.. அருமௌ!! அருமை!!

ஒரு பொடிச்சி said...

prathi tharum unarvu nantru.

நளாயினி said...

ஒண்டுமே இந்த கவிதைக்கு சொல்லாமல் அப்பிடியே இந்த கவிதையின் சுகத்தோடு தூங்கிப்போகலாம் மாதிரி இருக்கு.

ganthi2 said...

அருமை அருமை!