Monday, August 31, 2020


அலைபேசியில் வந்த
 புத்தாண்டு வாழ்த்துகள்
ஒரு சேர ஏற்படுத்துகின்றன
என் என்ணை சேமித்து வைத்திருக்கிறாய்
என்ற மகிழ்ச்சியையும்
பேசவில்லையே
என்ற வலியையும்.

சற்று தாமத்தித்து
தட்டிப்பார்க்கிறேன்
இந்த கடைசிக்கதவை.

திறந்து விடும் என்ற நம்பிக்கையில்
கரைந்துவிடட்டும் இன்னொரு இரவு.

Tuesday, March 10, 2020



யாசிக்க நீண்ட கரங்களை பார்த்து
பதறி விடுகிறீர்கள்

கைகுலுக்கும் போது
சிறியதாக இருந்த கரம்
யாசிக்கும் போது
நிரப்புவதற்கு இயலாத
பிரம்மாண்டதாக மாறி விடுகிறது.

என்னுடைய பழைய கிரீடங்களை
நினைவு கூர்ந்து
வாழ்ந்த ராஜ வாழ்க்கையை
உணர வைக்கிறீர்கள்

என்னை உற்சாகப்படுத்த
வார்த்தைகளாய் பனிக்க்ட்டிகளை என்
உள்ளங்கைகளுக்குள்
நிரப்புகிறீர்கள்.

வெம்மைக்கு இதமாய்தான் இருந்தது
உள்ளங்கையில் பரவிய குளிர்ச்சி.
மீண்டும் பார்ப்போம்
என்று விடைபெற்று
கை நிறைய பனிக்கட்டிகளுடன்
தகிக்கும் சாலைகளில்
நடக்கிறேன்.

அடுத்தவனை பார்க்க
அடுத்த ரயிலை பிடிக்கும் முன்னே
உலர்ந்து போனது
வெறுமையான கரங்கள்.

அடுத்தவனின் வீட்டுக் கதவை
தட்டுகிறேன்.
எனை எதிர்பார்த்து காத்திருந்தான்
அவனும் பனிக்கட்டிகளுடன்.

Wednesday, February 12, 2020

இயல்பு வாழ்க்கை

இரு சந்திப்புகளுக்கிடையே
வாழ்த்துவதற்கு எத்தனை விசயங்கள் உன்னிடத்தில்.

புதிதாக கார் வாங்கியிருக்கிறாய்.
பதவி உயர்வு கிடைத்திருக்கிறது
கண்கள் தெரியாத அளவு முடிவத்திருக்கும்
உங்கள் நாய் கூட போட்டியில் பரிசு வென்றிருக்கிறது.
உன் மகள் அற்புதமாக திருப்பாவை பாடுகிறாள்.

வாழ்த்தி முடித்ததும்
சந்திப்பு முடிந்துவிட்டது.

இதெல்லாம் நிகழா
என் போன்றோர் வாழ்க்கைக்குத்தான்
இயல்பு வாழ்க்கை என்று பெயர்.

எனக்கென்ன பெரிதாய் வேண்டும்
இயல்பு வாழ்க்கைக்கு.

அடையாருக்கு நேராக செல்ல
கூட்டமில்லா பேருந்தும்
கூடுதலாக ஜன்னலோர இருக்கையும்

நடைபயிற்சியின் போது
குரைக்காதிருக்க நாயின் ஸ்நேகிதமும்

எட்டிப்பார்த்து படிக்க இயலும் வண்ணம்
பக்கத்து சீட்டுக்காரனிடம்
ஒரு புத்தகம்.

இதையும் ஒரு கவிதை என ஏற்றுக்கொள்ள சிலரும்
அதற்கு வரும் லைக்க்குகளும்.

Thursday, October 31, 2019

சென்னை மழை

அடுத்த பத்து நாட்களுக்கு சென்னையில் மழை இருக்காது என்ற செய்தி கவலை அளிக்கிறது. அப்படி ஒன்றும் பெரிதாக மழை இன்னும் சென்னையில் பெய்யவில்லை. நவம்பர் மாதம்தான் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். அதில் பத்து நாட்களை வறண்ட வானிலையில் இழந்தால் அது கவலை தரும் விஷயம்தான்.

Wednesday, October 30, 2019

யாருமில்லா தனியறையில்..

பரணில் கிடக்கும்
பழைய கவிதை நூலைப்போல
இந்த வலைப்பதிவு.

தூசிதட்டி நான் மட்டும் படிப்பேன்.
பிற்கு மீண்டும் பரணில் பத்திரமாக

இன்று யாரும் கவனிக்காத
 தனியறையாக
தனித்திருக்கிறது. புதிதாய் ஜனித்திருக்கிறது.

யாரும் வராத அறையில்
ரகசியங்களை உரக்கச் சொல்லலாம்.
புதிய ஒப்பனைகளை செய்து பார்க்கலாம்.
அஷ்டகோணத்தில் முகத்தை மாற்றி
பிம்பங்களை நோக்கலாம்.

யாரும் கவனிக்காததது
மிகப் பெரிய சுதந்திரந்தான்
மக்களே
யாருமில்லை என்ற நிலை உருவாகதவரை.

யாரும் கவனிக்காத எழுத்து
தன்னை தானே விமர்சித்துக் கொள்ளும் .
முதல் வாக்கியத்திற்கும்
மூன்றாம் வாக்கியத்திற்கும் ஏற்படும் மோதலில்
சொற்கள் சிதறி குழம்பி நிற்கும்.

என்றாவது வர நேர்ந்தால்
சிதறி கிடக்கும் சொற்களை சேர்த்து
உங்களுக்கு பிடித்தமான வாக்கியங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஏனெனில்
வாழ்வின் அர்த்தம் நமக்கு நாமே
கற்பித்துக் கொள்ளும் தத்துவமே தவிர
பிறரால் கூறப்படுவதல்ல.







எதற்காக இழப்பீடு?


மணப்பாறை ஆழ்துளை கிணற்றில் குழந்தை வீழ்ந்து இறந்த சம்பவம் துயரம் மிக்கது எனினும்,  மனித கவனக்குறைவால் நிகழ்ந்த சம்பவம் என்பதை மறுக்க முடியாது. குழந்தையின் குடும்பத்தார் இந்த கவனக்குறைவான செயல்களை செய்துள்ளார்கள். ஆனால் இதே குடும்பத்தார்க்கு ஆளுங்கட்சியும், அரசாங்கமும் மற்றும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு நிதி உதவி வழங்குவது என்ன நியாயம் என்பது விளங்கவில்லை.  அரசாங்கத்தின் தவறினால் பாதிப்புக்குள்ளாகி நியாயமான இழப்பீடு எதிர்நோக்கி பல குடும்பங்கள் காத்திருக்க, மீடியா வெளிச்சத்தில், அமைச்சர்கள் முன்னிலையில் நிகழ்ந்த துயரம் என்பதற்காக இந்த இழப்பீட்டை வழங்குவது முறையற்ற செயல்.

Sunday, October 26, 2014

வழி தவறினவா ஆடுகள்?

வழிதவறியதாக நான் முடிவு செய்த
ஆடுகளுக்கு உதவ முயன்றேன்

பயந்து ஓடின சில ஆடுகள்

தெரிந்துதான் செல்கிறோம்
இது எங்கள் விடுதலைப் பயணம்
என்றன சில ஆடுகள்

இது சரியான வழியே..
அறுதியிட்டுச் சொன்னது சில ஆடுகள்

செல்வது தவறான வழி என்று
எதை வைத்து சொல்கிறாய்
வினவின சில ஆடுகள்

போன வாரமும் இவனைப்போல
ஒருத்தன் வந்தான்
கிசுகிசுத்தன சில ஆடுகள்.

உன் வேலையைப் பாத்துக்கிட்டு போ
என சீறின சில ஆடுகள்.

மெளனமாக இருந்த
ஒரே ஆட்டை
அணுகி பேசமுயன்றபோது
அது
உறுமியது
நான் ஆடல்ல சிங்கம்.

Tuesday, October 14, 2014

 அறியாமை

தனக்கு பயந்துதான்
கதவுகளை மூடிகிறார்கள்
என்பதை 
அறியாத வரைதான்
கொசுக்கள்
கொசுக்களாக இருக்கின்றன.

நிதர்சனம்

என்னுடைய
முகமூடியை கிழித்தெறிந்து
நிஜ முகத்தை வெளிக் கொணர விழையும்
உங்கள் ஆவேசத்தை
ரசிக்கிறேன்.
கிழித்த பின்
நீங்கள்
காண்பது
என் நேற்றைய முகமூடியைத்தான்
என்ற உணர்தலால்


Thursday, April 03, 2014

வரம்

இரைச்சலால் சூழப்பட்டிருக்கும்
அரண்களை
உடைத்து
உனை அடையும்
வலிமையான  மவுனத்தை
வேண்டி

தொடங்குகிறேன் என் தவத்தை..

Saturday, March 29, 2014

அவர்கள் அருகில் இல்லை..

எழுப்பி விட
கைகளை நீட்டும் போதுதான்
தெரிகிறது

அவர்கள் எவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறார்கள் என்பது


வாகன விபத்தை தவிர்க்க
கண்ணாடியில் தெரியும் வாகனங்கள்
தெரிவதை விட அருகில் இருப்பதாகவும்


வாழ்க்கையில் விபத்தை தவிர்க்க
நம்மை நேசிப்பவர்கள்
நாம் நினைப்பதை விட குறைவாகவே நேசிப்பதாகவும்

அனுமானித்துக் கொள்ளுங்கள்.



Friday, March 28, 2014

பயணம்

எதிர்பார்த்த இலக்குகளை
அடைவதில்லை
அல்லது
இலக்குகள் எதிர்ப்பார்த்ததைப் போல்
இல்லை..


முந்த வேண்டும் என்பதற்காக
தனித்து விரைந்து
ஓடி வந்திருப்பீர்கள்.
முந்தியதன் பலன்
பின் வருபவர்களுக்காக வெட்டியாக
காத்திருப்பது  மட்டுமே.
அவர்களின் பாராட்டுகள் இன்றி
உங்கள் வெற்றியை
நீங்களே அங்கீகரிக்க முடியாது.

எத்தனையோ மொழிகளில் கேட்ட  வார்த்தைகள்
கூவிய பறவைகள்.
தேவதூதர்கள் உனக்கான சரியான செய்திகளை
கூறிக் கொண்டுதானிருந்தார்கள்.
ஆனால் பெரும்பாலும்
உனக்குத் தெரியாத மொழிகளில்.

களைப்பில் சலித்தாலும்
அடுத்த பயணத்திற்கான மானசீக ஆயத்தமும்,
ஓய்வின் மீதான இனம் புரியாத அச்சமும்தான்
அடைந்த இலக்கினைப் பற்றிய
அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.

ஒரு
பயணத்தின் அர்த்தம் அடையும் இலக்குகளால் மட்டும்
நிர்ணயிக்கப்படுவதில்லை
கடந்து வந்த தூரங்களாலும்,
தவறிய வழிகளாலும் ,
தவற விட்ட ரயில்களாலும்
சுமைகளை தூக்க கரம் நீட்டிய சக பயணியாலும்
அழகான பெண்ணின் காரணம் தெரியா விழியோர கண்ணீராலும்
சொல்ல மறந்த நன்றிகளாலும் கூட நிர்ணயிக்கப்படுகிறது.


இலக்குகளை அடைவதல்ல.
பயணிப்பதே
பயணத்தின் பயன்.


Wednesday, September 11, 2013

கார்ப்பரேட் கவிதைகள் 1


வழியும் ரத்தத்துடன்
இலக்கினை
நெருங்கி விட்டேன்.
மடிப்புக் கலையாத சட்டைகளுடன்
கோப்பைகளை
பெற்றுக் கொள்ள
எனக்கும் முன்னே
அவர்கள்..

Monday, September 17, 2012

தலைப்பற்ற கவிதைகள்

ஒப்பனைகளற்ற
உன் முகத்தை
சகித்துக் கொள்ளும்
மனிதர்களின்
நடிவில்தான்
பரிபூரண சுதந்திரத்தை
நீ உணர இயலும்
அதற்கு
உன்னுள் இருக்கிறதா
ஒப்பனைகளற்ற பிறர் முகங்களை
சகிக்கும் தன்மை?

_____________________________________

பட்டகாயங்களை
மறைக்க ஒப்பனைகளும்
காயமே இனிபடாது
என்ற கற்பனைகளும்
உள்ள வரை
முன்னோக்கி நகரும்
வாழ்க்கை

________________________________

அழுது கொண்டிருக்கும்
மனிதர்களை விட
அழுது முடித்து
சிறிதாக கண்ணீரை
சுமந்து கொண்டிருக்கும்
விழிகள்
அதிகம் உணர்த்துகின்றன
வலியை.

__________________________________________

Thursday, August 11, 2011

வாழ்க்கையின் இயக்க விதிகள்-4

உங்கள்
வலிக்கான நிவாரணம்
குணமடைவதில் மட்டுமல்ல.
வலியையும் இதயத் துடிப்பைப் போல
இயல்பாக
ஏற்றுக் கொள்வதிலும் இருக்கிறது.
*  *  *
குணமடைந்தவர்களோ
வலி வருமோ என்ற பயத்துடன் வாழ்கிறார்கள்.
வலிகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கு
இப்பயமின்றி
இயல்பாக இருக்கிறது வாழ்க்கை.
* * *

Tuesday, August 09, 2011

நட்பு பாராட்டல்

இருபது கிலோ
அரிசி மூட்டையை
தூக்குவதற்கு வேண்டியதைக் காட்டிலும்
அதிக பலம்
தேவைப்படுகிறது
சக ரயில் பிரயாணியைப் பார்த்து
புன்னகை செய்ய.

Saturday, July 30, 2011

வாழ்க்கையின் இயக்க விதிகள்-3

பேருந்துப் பயணத்தில்
உனக்குப் பிடித்த
பாடலை ஒலிபரப்ப துவங்கும் போது
நீ இறங்கும் இடம் வந்து விடுகிறது.

Saturday, July 16, 2011

முகங்களும் முகமூடிகளும்

விளையாட்டாக அணியத் துவங்கிய
முகமூடிகளின்
நாள்பட்ட அதிகரிப்பில்
முகங்களை தொலைத்து
முகமூடிகளே முகங்களாய் அவதானித்து
சமரசம் செய்து இயங்கிக் கொண்டிருக்கும்
 நாளில்..
என் பழைய முகத்தின்
அளவுகளையும், பரிமாணங்களையும்
இவ்வளவு நாட்கள் பத்திர படுத்தியுள்ள
உன் ஸ்னேகத்திற்கு கைமாறாக
காட்டுவதற்கு
எங்கே தேடுவேன்
என் முகத்தை?
முடிந்தால் நீ தரும்
அளவுகளை வைத்து
அடுத்து ஒரு முகமூடியை தயார் செய்து வைக்கிறேன்
நம்முடைய அடுத்த
சந்திப்பிற்காக..

வாழ்க்கையின் இயக்க விதிகள் 2

மகிழ்ச்சியாய் இருந்திருக்கக்
கூடிய
தருணங்களை தவற விட்ட
நினைவுகளில்
நீந்திக் கொண்டே
மகிழ்ச்சியாய்
இருப்பதை
தவற விட்டுக் கொண்டிருக்கிறேன்

வாழ்க்கையின் இயக்க விதிகள் 1

படிக்காமல்
அலமாரியில் பதுங்கியிருக்கும்
புத்தகங்களில்
என் கேள்விகளுக்கான
விடைகள் இருக்கின்றன.
தேடி தூசி தட்டி
பக்கங்களை புரட்டுவதற்குள்
கேள்விகள்
மறந்து போகின்றன.