Thursday, June 02, 2005

ஈழப் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும்

வலைகளில் விவாதிப்பதற்கு அனைவரும் தயங்கக் கூடிய பிரச்சனை ஈழப்பிரச்சனையே. தர்க்க ரீதியில் இப்பிரச்சனை எழுப்பும் தாக்கத்தை விட, உணர்வு ரீதியில் எழுப்பும் தாக்கம் மிக அதிகம். உணர்வு ரீதியான விவாதங்களுக்கு நியாயம் அநியாயம் என்று தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரு பக்கங்கள் இல்லை. அவரவர் வலி அவர்களுக்கு.

ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரை தமிழக மக்களின் புரிதல், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டைப் பொறுத்தே அமைந்து வந்துள்ளது. 1983ம் ஆண்டிலே நிகழ்ந்த இனக்கலவரங்கள் விளைவித்த அவலங்களே இலங்கைப் பிரச்சனையைக் குறித்த பரவலான அறிதலை மக்களிடையே ஏற்படுத்தின. குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் படுகொலை மற்றும் இனக்கலவரங்கள் குறித்து திராவிடர் கழகம் பல்வேறு ஊர்களில் நடத்திய கண்காட்சிகள் மற்றும் இந்திய ஊடகங்கள் ஆகியவை தமிழக மக்களிடையே ஏற்படுத்திய சிங்கள் வெறுப்புணர்வும், இந்திய அரசாங்கம் இப் படுகொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் ஏகோபித்த கருத்து , பல தொடர் போராட்டங்களில் எதிரொலித்தது.

ஆனால் இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனையை வைத்து பின்னப்பட்ட சர்வதேச அரசியல் இழைகளும், யார் இலங்கை தமிழர்களுக்கான உண்மையான பாதுகாவலன் என்பது குறித்து பிராந்திய ரீதியில் திராவிடக் கட்சிகள் பின்னிய அரசியல் இழைகளும் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகி விட்டன. இதைக் குறித்து முடிவற்று விவாதிக்குமளவு பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் கூட அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய அம்சம்- இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கும், போராளிக் குழுக்களுக்கும் உதவி அளிக்க ஒப்புக் கொண்டதில் தமிழர்களின் நலவிருப்பத்தை தவிர, பிராந்திய மேலாதிக்கத்தை நிலைப்படுத்த முயலும் அரசியல் நோக்கங்களும் காரணம் என்பது. ஆனாலும் அக்காலத்தில் கூட தமிழ்நாட்டு தமிழன் இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்தியா முயற்சி செய்து கொண்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருந்தான்.அதனால்தான் போராளிகளுக்கான உதவி என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைக் கூட மக்கள் பொறுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

ஈழப்பிரச்சனையில் தவறான வெளியுறவுக் கொள்கையால் இந்தியா இலங்கை அரசாங்கம் மற்றும் போராளிகள் ஆகிய இருவேறு எதிரிகளை தேடிக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக ராஜிவ் காந்தியின் படுகொலை ஈழப் பிரச்சனையைக் குறித்த இந்திய மக்களின் மனோபாவத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது. இப் படுகொலையின் தொடர்ச்சியாக எழுந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி, வெளியுறவுக் கொள்கையில் செய்த சொதப்பல்களை இந்திய அரசாங்கம் மறைத்துக் கொண்டது. இதே வெறுப்புணர்வை பயன்படுத்தி, ஈழப்பிரச்சினை குறித்த இந்தியர்களின் அனுதாபத்தை குறைத்து, மக்கள் மனதிலிருந்து ஈழப் பிரச்சனையை அந்நியப்படுத்தி விட்டார்கள். இதில் இந்திய அரசாங்கத்திற்கு நல்ல வெற்றி என்று கூட சொல்லலாம். போராளிகளுக்கும் அப்பாற்பட்டு ஈழப்பிரச்சனையை அலச மாட்டேன் என்பதில் இந்திய அரசாங்கமும், போராளிகளை தவிர்த்த ஈழ விடுதலை சாத்தியப்படாது என்பதில் ஈழத் தமிழர்களும் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க, ஈழத் தமிழர்களுக்கான நலனில் இந்தியத் தமிழர்களின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் போனது. தேவைக்கதிகமாக முன்பு இப்பிரச்சனையில் இந்தியா எவ்வளவு ஈடுபடுத்திக் கொண்டதோ , அதன் பின்பு தேவையான அளவு கூட அக்கறை காட்டாமல் விலகி நின்றது இந்தியா.

ராஜிவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட இந்தியத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்குமான பிளவும் ,நம்பிக்கையின்மையும் ஈழப் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியதா? ஒன்றும் இல்லை என்று மறுப்பார்கள் ஈழ நண்பர்கள். ஆனால் ஈழப் பிரச்சனை குறித்த வேறுவகையான முன்னேற்றங்கள் சாத்தியப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.

இலங்கைப் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்க முடியாத சட்ட சூழலையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தி என்ன பயன்? போராளிகளின் இந்திய நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் , இயக்கங்களை பலமிழக்க செய்யலாம் என்று நினைத்திருந்தால் அந்த நோக்கமும் நிறைவேறவில்லை. சமீப காலமாக போராளிகளின் படைபலம் குறித்த செய்திகள் கவலை தருவதாகவே உள்ளது.

விடுதலைப் புலிகளின் கடற்படை பலத்தைப் பற்றி கட்டுரைகள் வருகின்றன. வான்படை பலத்தை பற்றி இந்து பத்திரிக்கை கவலை தெரிவிக்கிறது. கொச்சின் விமான நிலையம் புலிகளால் தாக்கப்படப் போகிறது என செய்திகள் வருகின்றன. ஒருநாள் தமிழகத்தில் பெண்வெடிகுண்டு உலவுகிறது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. மறுநாள் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இல்லை என்று கூறுகிறார் சிவராஜ் படேல்.

தமிழகத்தில் எல்லைப் பகுதியில் ராணுவ ரீதியான பதட்டம் உருவாகக் கூடிய சூழ்நிலை வெளிவரும் செய்திகளிலிருந்து கணிக்க முடிகிறது. இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறது இந்தியா? இதற்கான இந்திய நிலைப்பாட்டை உருவாக்க என்ன பங்களிக்க போகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். இலைமறைவு காய்மறைவாக இப்பிரச்சனையை பேசி என்ன முன்னேற்றம் காணமுடியும்? ராஜிவ் காந்தி கொலை என்ற செயலுக்கு அப்பாற்பட்டு இலங்கைப் பிரச்சனையை அணுகி எல்லைப்புற பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் முன்வருமா? அல்லது போராளிகள் எதிர்ப்பு என்ற பெயரில் நிலைப்பாட்டை எடுத்து, ராணுவ ரீதியாக மட்டுமே அணுகுமா?

மற்றுமோரு எல்லைப்புற சிக்கலை ராணுவரீதியாக ஏற்படுத்திக் கொள்வது இந்தியாவிற்கு உதவாது. எல்லைப் புற சிக்கல் நிறைந்த மாநிலமாய் மாறுவதை தமிழகமும் விரும்பாது. என்னுடைய இந்த சிக்கலைப் பற்றிய கற்பனைகள் அபரீதமாக படுகிறதா? அப்படியென்றால் எதனால் அபரீதமாக படுகிறது என்ற வாதங்களை முன்வையுங்கள். எல்லா சிக்கல்களும் சிறியதாக இருந்தபோதே கட்டுப்படுத்தாமல் விட்டவைதான்.

இந்தியாவை பொறுத்தவரை ஈழ சுயாட்சியில் விடுதலைப் புலிகளை தவிர பிற அமைப்புக்களும் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல தோன்றுகிறது. அவ்வாறான பிற அமைப்புக்களுக்கு மக்கள் செல்வாக்கு ரீதியான சாத்தியம் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். மக்கள் அபிமானம் இல்லாமல், பேருக்கு பிற அமைப்புகளை உருவாக்கி அதிகாரப் பகிர்வளிப்பது எவ்விதத்திலும் உதவாது.

எல்லைப் புற பதட்டம் தணிக்க சகநாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை வளர வேண்டும் . இலங்கையை பொறுத்தவரை, ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை போராளிகளுக்கிருக்கும் முக்கியத்துவத்தை இந்தியா அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் தற்போது உருவாகிவிட்டது. அதைப் போல தொடர்ச்சியான இந்திய எதிர்ப்பு ஈழ சுயாட்சிக்கு உதவப் போவதில்லை.

பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து ,அமைதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பணியாற்ற வேண்டிய தருணமாக இதைக் கருதுகிறேன். இதை ஒரு சாமான்யனாக சொல்கிறேன். ஏனெனில் இலங்கைப் பிரச்சனைக்கான புரிதல்கள் திராவிடக் கட்சிகளின் நிலைப்பாட்டை குறித்தே அமைந்துள்ளது என்று தொடக்கத்தில் எழுதியிருந்தேன். அவற்றிலிருந்து விலகி வந்து இப்பிரச்சனையை அலச செய்த முயற்சியே இது.

மீண்டும் ஒரு இந்திய அமைதிப்படை- ராஜிவ் காந்தி மரணம் குறித்த விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் யாருக்கும் பிரயோசனம் இல்லை.

2 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
ஈழநாதன்(Eelanathan) said...

ராஜ்குமார் சில விடயங்களை உண்மையாகத் தொட்டுள்ளீர்கள்.இந்திய எதிர்ப்பென்பது அளவுக்கு மீறினால் கறிக்குதவாது என்று புலிகளுக்கும் தெரிந்திருக்கிறது அதனாலேயே இரண்டு வருடங்களுக்கொருமுறை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டும்போது வழக்காடியிருக்கிறார்கள் நோர்வே மூலமாகவாவது இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியாவின் அனுசரணையைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள்.

இரண்டு தரப்பும் நல்லுறவைப் பேணுவதற்கு மனச்சுத்தியுடன் முயற்சிக்கின்றன என்று கூறமுடியாவிட்டாலும் காலத்தின் தேவை கருதி ஏதாவதொரு உடன்பாட்டுக்கு வர திரைமறைவில் முயற்சிக்கின்றன.இலங்கை இராணுவத்தினருடன் உறவைப் பேணுவதை விட புலிகளுடன் உறவைப் பேணுவது இந்திய அரசுக்கு அனுகூலமானது.ஆனாலும் இருக்கவே இருக்கிறார்கள் அகண்ட தமிழீழம் பிரிவினைவடகம் என்ற வேதம் ஓதும் சிலர் அவர்களின் குரல்தானே இன்றுவரைக்கும் எடுபடுகிறது.

தனிநாட்டுக் கோரிக்கையைக் கூட கைவிட புலிகள் தயாராக இருக்கிறார்கள் தீர்வுக்கு ஏதாவதொருவழியில் இந்தியா முஇயற்சிக்கவேண்டும்.ஒன்று நல்லதொரு அண்ணனாக காட்டிக்கொள்வதோடு நின்றுவிடாது தான் தலையிட்டு ஏதாவது செய்யவேண்டும் அல்லது நல்லதொரு அண்டைவீட்டுக்காரனாக இரண்டு தரப்புக்கும் உதவி செய்யாது பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்(உதாரண்மாக பரந்தன் ஞானசேகரன் போன்ற பழைய இயக்கத் தலைவர்களை அனுப்பி கருணாவுடன் கூட்டுச் சேர்ப்பது போன்ற செய்கைகள்)