Thursday, November 03, 2005

கிரிக்கெட்: தொட(ர்) ரும் வெற்றிகள்

வாழ்த்துக்கள் திராவிட். கேப்டனாக முதல் வெற்றியை பெற்று விட்டீர்கள்.

பூனாவில் நடந்த இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருந்தது. சென்ற வெற்றிகளுடன் ஒப்பிடுகையில் இவ்வெற்றி சற்று கடினமான வெற்றிதான்.புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், சூப்பர் சப்ஸ்டிடியூட்டின் அருமையான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி. ரைனா இல்லாவிட்டால் வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. 180 ரன்களுக்கு ஆறு விக்கெட் போன நிலையில் மற்ற ஆட்டக்காரர்கள் அடிப்பதா? தடுப்பதா என்ற குழப்பத்திலேயே விக்கெட்டுக்களை இழக்க நேரிட்டிருக்கலாம்.

இவ்வெற்றிக்கான இந்தியாவின் உழைப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவது இலங்கை அணியின் இன்னிங்ஸ் துவக்கத்தில் அகர்கர் எடுத்த விக்கெட்டுக்கள். அகர்கர் இடக்கை ஆட்டக்காரர்களுக்கு உள்வெட்டி வரும் பந்தை மிகவும் சிறப்பாக வீசுவார். ஆஸ்திரேலியாவின் லாங்கர் அகர்கரின் உள்வெட்டி வரும் பந்துக்களுக்கு பலமுறை அவுட் ஆனவர். இத்தொடரில் ஜெயசூர்யா நிரம்பவே சிரமப்படுகிறார். பூனாவின் ஆடுகளுமும் அகர்கரின் ஸ்விங் பவுலிங்கிற்கு உதவியது.

இரண்டாவது பகுதி, கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க விடாமல் இலங்கையை கட்டு படுத்திய பந்து வீச்சு. சென்ற போட்டியில் 100 ரன்களுக்கு மேலாக கடைசி 10 ஓவர்களில் கொடுக்கப்பட்டது. இம்முறை அகர்கரும், சேவாக்கும் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக அடபட்டுவை சேவாக் காட்ச் பிடித்து அவுட்டாக்கியது ரன்குவிப்பை மட்டுப்படுத்தி விட்டது. இல்லாவிடில் இன்னும் 25 முதல் 30 ரன்களை அதிகமாக இலங்கை குவித்திருக்க்கலாம்.

மூன்றாவது பகுதி, தோனி மற்றும் ரைனாவின் பார்ட்னர்சிப். ரைனா இதுவரை சர்வதேச அளவில் பெரிதாக சாதிக்கவில்லை. இலங்கை பயணத்தின் போது தரப்பட்ட வாய்ப்புக்களின் போதும் சரியாக ஆடவில்லை. இன்று முரளிதரனை உறுதியுடன் ஆடி ரன்களை குவித்தார்.ரைனா ஆடியது பொறுப்பு மிக்க ஆட்டம். ஒரு இளம் வீரரின் இத்தைகைய ஆட்டம் மிகவும் பாராட்டப்பட வேண்டியது. சென்ற முறை அதிரடி ஆட்டம் ஆடிய தோனி, காலரிக்காக ஆடாமல் பொறுப்பாக விக்கெட்டை தக்கவைத்து தடுப்பாட்டம் ஆடியதும் பாராட்டப்பட வேண்டியதுதான். கடைசியில் அதை சமன் செய்ய இரண்டு சிக்சர்கள் அடித்தார்.

இந்த மூன்று அம்சங்களை தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை (1) ராகுல் திராவிடின் தலைமை (அல்லது) அதிர்ஸ்டம். அவர் டாஸ் ஜெயித்து பீல்ட் பண்ணுவோம் என்று எடுத்த முடிவுகள் வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன. மொகாலியிலும் அம்முடிவு சரியாக அமைந்தது. பூனாவிலும் சரியாக அமைந்தது. இரண்டு துரித விக்கெட்டுக்கள் கிடைத்தன.ராகுலின் ஆட்ட வரிசை நிர்ணயமும் எதிர்பார்த்த பலனை தந்தது.

(2) ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு. போன மாதம்தான் இவர் பந்து வீச்சு சாதாரணமான இருந்தது போல் தோன்றியது. ஆனால் இத்தொடரில், அதுவும் சுழற்பந்தை நன்கு விளையாடும் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ரன்களை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாது, விக்கெட்டுக்களையும் எடுத்தது இத்தொடர் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம்.

கடந்த நான்கு மேட்சுகளில் நல்ல விளையாட்டை இந்திய அணி ஆடியிருக்கிறது. இது தொடர வேண்டும் . தற்போது இவர்கள் ஆடும் ஆட்டத்தில், கங்குலி என்ன, கயிப் அணியின் உள்ளே நுழைவதே சந்தேகமாக இருக்கிறது. யுவராஜ் சிங் வழி விட்டால்தான் உண்டு.

மீதியுள்ள போட்டிகளில் மேலும் பல பரிசோதனை முயற்சிகள் தொடரும் என நினைக்கிறேன். ஓய்வளிக்க வேண்டியவர்களாக நான் கருதுவது பத்தான், சச்சின், ஹர்பஜன், அகர்கர்.

மீண்டும் வாழ்த்துக்கள்- இந்திய அணிக்கு

2 comments:

பழூர் கார்த்தி said...

நல்ல விமர்சனம் ராஜ்குமார், தோனியின் விசுவரூபம் வியக்க வைக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் தோனி மற்றும் ரெய்னாவின் பொறுப்பான ஆட்டத்தை பாராட்டியே ஆக வேண்டும்.. அனேகமாக 7-0 என்ற முடிவை எதிர்பார்க்கலாம், பாவம் இலங்கை :-)

ஜெ. ராம்கி said...

//சூப்பர் சப்ஸ்டிடியூட்டின் அருமையான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி

Ganguly is also one of the reason na? :-)