Thursday, March 30, 2006

நிலைமை அவ்வளவு மோசமா?

இன்று நண்பர் அனாமிகா மெய்யப்பன் சாட்டில் வரும்போது தி.மு.க தோற்றுவிடுமா? என்று ஆர்வத்துடன்/கவலையுடன் கேட்டார். கிட்டத்தட்ட ஊடகங்களின் மூலம் தேர்தலை பின்பற்றுபவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. குமுதம் இதழின் தேர்தல் கணிப்பில் தொடங்கி, ஜூனியர் விகடன், ரிப்போர்டர் என அனைத்துப் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளும் திமுக கூட்டணியின் வலுவிழப்பை நேரடியாக மறைமுகமாகவோ குறிப்பிடும் கட்டுரைகளை சுமந்து வருகின்றன.

அதிமுக அனியிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. வைகோவும், திருமாவளவனும் போட்டியிடாதது பிற்கால தர்மசங்கடங்களை தவிர்க்கவே. ஏற்கனவே திமுகவை விட்டு பிரிய நேரிட்ட போது திருமா பதவியை ராஜினமா செய்தார். அத்தகைய சிக்கல்களை அவரும் வைகோவும் தவிர்க்க விரும்புகிறார்கள். அதிமுகவின் வேட்பாளர் தேர்வு குறித்து நிலவும் அதிருப்தியை குறித்தும், செங்கோட்டையனின் கார் மறிக்கப்பட்டதை குறித்தும் தினமலர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகைய அதிருப்தி வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.

ஆனால் பல பத்திரிக்கைகள் திருவடைமருதூர் தொகுதியில் பா.மா.காவிற்கும் திமுகவிற்கும் இடையே நிகழ்ந்து வரும் பிரச்சனைகளை படங்களுடன் பிரசுரித்து உள்ளன. பத்திரிக்கை துறையினர் பல்வேறு அவதூறு வழக்குகளையும், சிக்கல்களையும் சந்தித்தது அதிமுக ஆட்சியின் போதுதான். ஆனால் அவற்றையும் மீறி இன்று பத்திரிக்கைகள் எடுத்திருக்கும் திமுக எதிர்ப்புநிலைக்கு காரணங்கள் என்னவாயிருக்கும் என்று கேள்வி எழுகிறது.

ஊடக வணிகத்தில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக குங்குமம் மற்றும் தினகரனின் வியாபார உத்திகள் பிற பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளன. அதன் வெளிப்பாடே இன்று ஊடகங்கள் திமுக கூட்டணியின் பலவீனங்களை மிகைப்படுத்தி பிரசுரிக்கும் செயல்கள்.

ஆனால் திமுக தலைமை இதைக் குறித்து கவலையடைந்ததை போல் தெரியவில்லை. மேலும் குமுதம் போன்ற பத்திரிக்கைகளை இடித்துரைத்து பகைமையை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

குமுதம் இதழின் கருத்துக் கணிப்பு விஞ்ஞான ரீதியில் அமைந்தது அல்ல. ஆதரவு அலைகளோ, எதிர்ப்போ பெரிதாக இல்லாத தற்போதைய சூழலில் இத்தைகைய கருத்துக் கணிப்புகள் சரியாக இருக்காது என்பது என் கருத்து.

திமுகவிம் நிலைமை தற்போது அவ்வளவு மோசமில்லை என்று நினைக்கிறேன்.ஆனால் மேலும் மோசமாக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது.

No comments: