Wednesday, April 26, 2006

தேர்தல்- படித்தவர்களின் ஆர்வமின்மை

குத்துச் சண்டையை வேடிக்கை பார்ப்பதைப் போல தேர்தலை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு வாக்காளர்களை ஊடகங்கள் தள்ளி விட்டன என குற்றம் சாட்டியிருக்கிறார் ஞாநி. இந்நிலை உண்மையென்றாலும், வாக்காளர்கள் தங்களுக்கான ஜனநாயக் கடமையைப் பற்றிய புரிதலுடன் உள்ளார்களா? என்ற கேள்வியையும் நாம் அலசிப் பார்க்க வேண்டும்

ஜனநாயக வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி அவசியம் என்றே அனைவரும் நம்பிக் கொண்டிருகிறோம். இந்திய சுதந்திரம் பெற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது நம் நாடு கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் கருத்து. ஆனால் இத்தகைய வளர்ச்சி நம் ஜனநாயக நெறிமுறைகளை பலப்படுத்தியிருக்கிறதா? படித்தவன்/ள் ஒரு படிக்காத பாமரனுடன் ஒப்பிடும் போது எந்த அளவு தனது ஜனநாயகக் கடமைகளை உணர்ந்திருக்கிறான்/ள்? ஜனநாயக வளர்ச்சிக்கு படித்தவர்களின் பங்களிப்பு என்ன? என்ற பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இப்பதிவு.

படித்தவர் விகிதம் அதிகரித்து வரும் கடந்த சில பத்தாண்டுகளில்,தேர்தல்களில் வாக்களிப்பவர்களின் சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டுகளில்தான் வாக்காளர்களின் வயது வரம்பு குறைக்கப்பட்டு 18 ஆக மாற்றப்பட்டது. இந்த மாற்றம் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தாலும், அதையும் மீறி வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது.

எதனால் இவ்வாறு நிகழ்கிறது? எனக்கு படும் சில காரணங்களை நான் கீழே விவரித்திருக்கிறேன்.

ஒரு குடிமகன் அரசாங்கத்திடமிருந்து எதை எதிர்பார்ப்பது? தன் மக்களுக்கான அரசாங்கத்தின் கடமையென்ன? ஒரு நல்ல அரசாங்கத்திற்கான வரையரைகள் என்ன? ஒரு மோசமான அரசாங்கம் ஏற்படுத்தும் சமுதாய பாதிப்புகள் என்ன? ஆகிய விசயங்களில் வாக்காளர்களிடையே நிலவும் தெளிவின்மை முதல் காரணம். படிக்காதவர்கள் நிரம்பிய சமுதாயத்தில் இத்தகைய சிக்கல் ஆச்சரியத்தை தராது. ஆனால் படிப்பு விகிதம் அதிகரித்தாலும், மேற்கூறிய விசயங்களில் வாக்காளர்கள் எவ்வித தெளிவையும் பெறாமல் எந்தக் கோழி ஜெயிக்கும் என்ற மனோபாவத்தில் தேர்தலை அணுகுவது ஏமாற்றம் அளிக்கும் அம்சம். இதில் வருந்தக் கூடியதாக நான் கருதுவது யார் ஜெயித்தால் என்ன ? என் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்ற ராமன் ஆண்டால் என்ன? ராவண்ன் ஆண்டால் என்ன என்ற மனப்பான்மை. படிக்காதவர்களை காட்டிலும், படித்தவர்களிடம் மிகவும் அதிகமாக இருக்கிறது இந்த மனப்பான்மை.

இந்த மனப்பான்மைக்கான அடிப்படைக் காரணம் என்ன?பற்றாக் குறைகள் மிகுந்த சமுதாயத்தில் அனைவரும் அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்த்து இருக்கிறோம். அப்பொது வழங்கும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் படிப்பறிவு தந்த பொருளாதார வளர்ச்சி தரும் தன்னிறைவு அரசாங்கத்தை எதிர்பார்க்காத நிலைக்கு படித்தவர்களை ஓரளவு உயர்த்தி விடுகிறது. கார்பரேசன் நீர் வரவில்லை என்றால் மினரல் வாட்டர் வாங்க பழகிக் கொள்கிறார்கள். கார்பரேசன் தண்ணீர் வரவில்லையென்றாலும் அது பெரிய குறைபாடாக தோன்றுவதில்லை. என்றாவது ஒரு நாள் பதிவாளர் அலுவலகம் போகும் போதோ, அல்லது மின்சார பில் கட்டும் போது அரசாங்க முகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போதும் மிகுந்த எரிச்சலுடன் எல்லாவற்றையும் தனியார்மயமாக்க வேண்டும் என புலம்பிக் கொள்கிறோம். காரிலோ, பஸ்ஸிலோ அலுவலகம் சென்று பத்திரமாக தினமும் வீடு திரும்பும் அன்றாட நடவடிக்கையின் பிண்ணனியில் அரசாங்கத்தின் செயல்பாடு உள்ளது என்பதையும் அத்தகைய அரசின் செயல்பாட்டை கவனித்து , அதனை ஆதரிக்கவோ,எதிர்க்கவோ நமது வாக்குரிமையை பயன்படுத்தலாம் என்ற உணர்வையும் படிப்பறிவு அதிகரிக்க வில்லை. மாறாக தன்னுடைய வசதிகளில் மட்டும் கவனம் செலுத்தி வாழும் பொருளியல் மனப்பான்மையை அதிகரித்து விட்டது. இவர்களுக்கு அரசாங்கமும் மந்திரி சபையும் தேவையில்லாத ஒன்று. அரசியல் நிலைப்பாடும் அவசியமில்லாத ஒன்று.

படித்தவர்கள் மத்தியில் தோன்றி வலுப்பெற்றுள்ள அரசியல் நிலைப்பாட்டிற்கான அவசியமின்மையின் பின்விளைவுதான் நம்முடைய அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் வலுப்படாமல் பழைய பின் தங்கிய நிலையிலே தொடர்வது. உண்மையை சொல்லப்போனால் படித்தவர்கள் விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, அரசியல் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மேலும் மோசமடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கென வம்பு? என ஒதுங்கிப் போகும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு படித்த வர்க்கம் ஒதுங்கி நிற்க, துணிந்தவர்களின் அராஜம் தொடர்கிறது.

இத்தகைய சூழலில் இன்னும் அரசை நம்பியிருக்கும் பற்றாகுறை மிகுந்த மக்கள் சமுதாயம் அரசியல்வாதிகளின் பின்னால் போகிறது. அவர்களை கவர இலவச அரிசி, டிவி என சலுகைகளை அள்ளி வீசுகின்றன அரசியல் கட்சிகள்.ஒதுங்கி நிற்பவர்கள் உணர்வதில்லை ஒரு நல்ல அரசாங்கத்தின் அவசியத்தை- சுனாமியோ, வெள்ளமோ வரும் வரை, அல்லது ஒரு சோகமான சந்தர்பத்தில் காவல் நிலையத்தையோ, மற்ற அரசு சேவைகளையோ அணுகும் வரை.

படித்தவர்கள் மத்தியல் அரசியல் நிலைப்பாட்டின் அவசியம் இல்லாமல் போனதற்கான காரணங்களாக எனக்கு தோன்றுபவை இரண்டு.

ஒன்று-அரசியல் நிலைப்பாட்டைக் காட்டிலும், சாதி நிலைப்பாடு பெற்ற முக்கியத்துவம்- சாதி ரீதியாக உருவான அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியின் சாதி சார்ந்த அணுகுமுறைகள்.

இரண்டு- படித்தவர்களுக்கும், மாணவர்களும் பிரதிநிதித்துவம் தராத அரசியல் கட்சிகள். படித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போதே இயங்கி வந்த மாணவர் இயக்கங்கள், கல்லூரிகள் மிகுந்த காலக்கட்டத்தில் வலுவிழந்து போனதும், அதைப் பலப்படுத்த கட்சிகள் முயலாததும்.

இந்த சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. நம்முடைய அரசாங்கங்கள் வெளிப்படையான பிரச்சனைகளை கையாள்வதில் கவனம் செலுத்துகின்றனவே தவிர பிரச்சனைகளாக உருவாகக் கூடியவற்றை கண்டுபிடிப்பதிலோ, தவிர்ப்பதிலோ கவனம் செலுத்துவதில்லை. வேலை இல்லாதவருக்கு மான்யம் அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது, வேலைகளை உருவாக்குவதை விட சுலபமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய நடவடிக்கைள் நீண்ட கால பயன்களை தருமா? யாருடைய வரிப்பணத்தில் இத்தகைய விரயங்களை செய்கிறார்கள். இத்தகைய கேள்விகளை கேட்க துணிவை தரவில்லை படிப்பு.

இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? இதற்கான தீர்வு மாணவர் இயக்கங்களிலிருந்துதான் துவங்க வேண்டும். ஆனால் மாணவர்களுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வியும், படித்து பல லட்சம் ஈட்டு என்ற பெற்றோர்களின் வழிகாட்டலும், மாணவர்களின் பொருள் மோகமும் தடைக்கற்களாக உள்ளன.
அரசியல் நிலைப்பாடும், அரசியல் கட்சி சார்பும் வேறு வேறு அம்சங்கள் என்பதை எப்போது உணரப்போகிறார்கள். அதுவரை குத்துச் சண்டையைப் போல், கோழிச் சண்டையை போல் தேர்தலை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

No comments: