Sunday, November 15, 2009

நிகழ்வுகள்

இந்த வாரம் திருச்சி மற்றும் மதுரைக்கு தொழில்முறை சுற்றுப் பயணம். திருச்சி விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு மதுரையிலிருந்து சென்னை பஸ்ஸில் செல்லும்போது கேபிஎன் பஸ் நள்ளிரவு பணிரெண்டு மணிக்கு நிற்கும் சங்கீதாவில் சாப்பிட்டேன். இங்கு சிற்றுண்டி ந்ன்றாக இருக்கும். சாப்பாடு படு சுமார்.திருச்சியில் அஜந்தா என்ற பழைய ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு சாப்பாடு நன்றாக இருக்கும். இம்முறை ஹோட்டல் பெயரை மறந்து போனேன். கூட வந்த உள்ளூர்காரரோ சங்க்கிதாவில் சாப்பிடவே விருப்பப்பட்டார்.

சமயபுரம் கூட்டமில்லாமல் இருந்தது. நெடுஞ்சாலை பைபாஸ் போட்டபின்னால் பேருந்துகளும், லாரிகளும் சமயபுரம் உள்ளே வர வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.பல புரோட்டா கடைகள் கணிசமான வியாபாரம் இழந்துள்ளன.புதிய நெடுஞ்சாலைகள் கிராமங்களை கணிசமாக கண்ணிலிருந்து மறைத்து அடுத்த ஊருக்கு அழைத்து சென்று விடுகின்றன. அவ்வப்போது சைக்கிள்களை கையில் தூக்கி கொண்டு சாலைகளை கிராஸ் செய்யும் சாகச மனிதர்கள் கிராமங்களின் இருப்பை உணர்த்துகிறார்கள்.திண்டுக்கல்லிருந்து மதுரை வரும்போது இதை உணரமுடிந்தது.

மதுரை சுவரோட்டி கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுக்க முடியாத நகரம். இருப்பவனுக்கும், இறந்தவனுக்கும், மகிழ்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஏன் இறந்து போன ஜல்லிக்கட்டு மாட்டிற்கும் சுவரொட்டி ஒட்டும் நகரம்.மனித நேயத்தையும் தாண்டிய மாட்டு நேயம், இறந்து போன ஜல்லிக்கட்டு மாட்டிற்கு ஒட்டிய போஸ்டரில் தெரிகிறது. மற்றபடி பெரும்பாலான சுவரொட்டிகளிலும் அழகிரி மற்றும் அவருடைய குடும்பத்தார்.

கோவிலை சுற்றிய சாலைகள் அழகாக இருக்கின்றன. ஒருவழிப்பாதைகள் நெரிசலை குறைத்திருக்கறதா என்பது தெரியவில்லை. மதுரை விமான நிலையமும் விரிவாக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து அழகிரி நேரடியாக வீட்டிற்கு போக தனிச்சாலை போடுவதாக சொல்கிறார்கள்.விமான நிலையத்தின் வெளியே உள்ள கடை ஒன்றில் அனைத்துக்கட்சி கொடிகளையும் விற்கிறார்கள். விமான நிலையத்தில் கட்சிக் கொடி விற்கும் ஒரே ஊர் மதுரையாகத்தான் இருக்க முடியும். வாழ்க மதுரை மக்களின் அரசியல் விழிப்புணர்வு.

டீலா நோ டீலா சன் குழுமத்தின் பல மொழி சானல்களில் பலரால் நடத்தப்படுகிறது. மூளைக்கு அதிக வேலை தேவைப்படாத நிகழ்ச்சி. நேற்று விளையாட வந்த பெண்மணி நன்றாக பாடினார். ஆனால் இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆப்சன் தேவைப்பட்டது. படித்த முட்டாள்.

இப்போதெல்லாம மழை வரும் என்று வானிலை அறிக்கையில் சொன்னால் சொன்னபடியே நடக்கிறது. சென்னயில் நேற்று முதல் சரியான மழை. நேற்று பிர்லா கோளரங்கம் சென்றிருந்தேன். முப்பரிமாண திரைக்காட்சி அருமை. அறிவியல் அரங்கத்தில் பல அமைப்பு மாதிரிகள் பணி செய்யவில்லை. அதை பராமரிக்க முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை. பெரியார் அரங்கம் மட்டும் சுத்தமாக இருந்தது. மாண்வர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க பெரியார்
அரங்கம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா?



1 comment:

குப்பன்.யாஹூ said...

for travel related posts, next time pls post with photos