Tuesday, August 24, 2010

சில கவிதைகள்

இயல்பாக இருத்தல்


காதலுக்கும் அழகிற்கும்
உவமையாக்கி எழுதப்பட்ட
கவிதைகளின்
அருமை பெருமைகளை
அறியாதவரைக்கும்தான்
வண்ணத்துப் பூச்சிகளால்
வண்ணத்துப் பூச்சிகளாகவே
வாழ முடிகிறது.


மாயை


நூலில் இருந்து
அறுபட்ட
பட்டமும்
விடுதலை அடைந்த்தாக
நினைத்திருந்தது
மின் கம்பிகளில்
சிக்கிக் கொள்ளும்வரை.


புரிதல்
உலகம் என்னை விட்டு
விலகிச் செல்கிறது
என்றேன் நான்.
உலகத்தை விட்டு
நீதான் விலகிச் செல்கிறாய்
என்றாய் நீ
ரயில் நகரத் துவங்கி விட்டது
என மகிழ்ந்திருந்தது
குழந்தை.


கரையும் தனிமை


புறப்பட்டு விட்ட
ரயில் பெட்டியின்
வாசலிலிருந்து
நீங்கள் கையசைப்பதற்கு
பதிலாக கிடைக்கும்
பல்வேறு கையசைப்புகளில்
கரைந்து போகும்
வழியனுப்ப யாரும் வராத தனிமை.

2 comments:

Ahamed irshad said...

எல்லாமே நல்லா இருக்கு..

அதிலும்

//நூலில் இருந்து
அறுபட்ட
பட்டமும்
விடுதலை அடைந்த்தாக
நினைத்திருந்தது
மின் கம்பிகளில்
சிக்கிக் கொள்ளும்வரை.//

ரசித்த வரி.. அருமை வாழ்த்துக்கள்

Word Verification எடுத்து விடுங்கள் அது யாருக்கும் பிடிப்பதில்லை..

Mohan said...

அனைத்துமே நன்றாக இருந்தன!