Thursday, December 23, 2010

தொடர்பு


நானும் நீயும்
சந்தித்த போது
அவனை பற்றி
பேசத் துவங்கினோம்.
அவன் சம்பந்தப்பட்ட
சுவாரஸ்யமான சங்கதிகளை சொல்லி
கண்களில் நீர்வர சிரித்தோம்.
ஊற்றாய் பீறிட்ட
நட்பின் மிகுதியால்
யாரோ ஒருவன் தந்திருந்த
அவனது கைபேசி எண்ணை
அழைக்கும் தைரியம் பெற்றோம்.
க்வும்..க்வும்
என சில நொடிகள் முனங்கிய
கைபேசி இந்த எண் உபயோகத்தில் இல்லை
என்றது.
காலச் சுழற்சியில்
நீயும் அவனும் சந்தித்து
என் கைபேசியை அலைக்க நேரிடலாம்.
அப்போது
நான் தொடர்பு கொள்ளும்
எல்லைக்கு வெளியே இருக்கக்கூடும்.
பின்பு அழைக்கலாம்
என்று என் எண்ணை
அவன் பத்திரப்படுத்தக் கூடும்.
*  *  *
மீண்டும் அழைப்போம்
என்ற நம்பிக்கையில்..
சேகரித்து வைக்கப்பட்ட
அழைக்கப்படா எண்களால்
நிறைந்திருக்கிறது கைபேசி.

No comments: