Friday, March 28, 2014

பயணம்

எதிர்பார்த்த இலக்குகளை
அடைவதில்லை
அல்லது
இலக்குகள் எதிர்ப்பார்த்ததைப் போல்
இல்லை..


முந்த வேண்டும் என்பதற்காக
தனித்து விரைந்து
ஓடி வந்திருப்பீர்கள்.
முந்தியதன் பலன்
பின் வருபவர்களுக்காக வெட்டியாக
காத்திருப்பது  மட்டுமே.
அவர்களின் பாராட்டுகள் இன்றி
உங்கள் வெற்றியை
நீங்களே அங்கீகரிக்க முடியாது.

எத்தனையோ மொழிகளில் கேட்ட  வார்த்தைகள்
கூவிய பறவைகள்.
தேவதூதர்கள் உனக்கான சரியான செய்திகளை
கூறிக் கொண்டுதானிருந்தார்கள்.
ஆனால் பெரும்பாலும்
உனக்குத் தெரியாத மொழிகளில்.

களைப்பில் சலித்தாலும்
அடுத்த பயணத்திற்கான மானசீக ஆயத்தமும்,
ஓய்வின் மீதான இனம் புரியாத அச்சமும்தான்
அடைந்த இலக்கினைப் பற்றிய
அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.

ஒரு
பயணத்தின் அர்த்தம் அடையும் இலக்குகளால் மட்டும்
நிர்ணயிக்கப்படுவதில்லை
கடந்து வந்த தூரங்களாலும்,
தவறிய வழிகளாலும் ,
தவற விட்ட ரயில்களாலும்
சுமைகளை தூக்க கரம் நீட்டிய சக பயணியாலும்
அழகான பெண்ணின் காரணம் தெரியா விழியோர கண்ணீராலும்
சொல்ல மறந்த நன்றிகளாலும் கூட நிர்ணயிக்கப்படுகிறது.


இலக்குகளை அடைவதல்ல.
பயணிப்பதே
பயணத்தின் பயன்.


1 comment:

Senthil Natarajan said...

:-) Journey is the destination ..