Wednesday, April 28, 2004

கவிதை

வழி தவறி வந்துவிட்ட
ஒற்றைத் தும்பிக்காக
மின்விசிறியை அணைக்கும் கைகளாலும்

அரிசி மாவுக்கோலத்தை உண்ண
அணிவகுத்து நிற்கும்
சாரை எறும்புகளை
சலனப்படுத்தா கால்களிலும்

சாலை கடக்க முயன்று
வாலை சுருட்டி மிரண்ட
செவளை நாய் மதித்து நின்ற
சான்ட்ரோ விலும்

மின்சார ரயிலிலே
பார்வையற்ற இளைஞனிடம்
வாங்கிய ஊதுபத்தியின்
மணத்தை நுகரும்
நாசிகளிலும்

சுருக்கமே முகமாய்ப் போன
சுமங்கலிக் கிழவி சுமந்து வரும்
இளநீருக்காக
பெப்சி கோக் தவிர்க்கும்
நாவினாலும்

தவறவிட்டுவிட்ட
தலை நரைத்த கிழவரின்
தளர் கரங்களை மதித்து
ஸ்டாப் இல்லையென்றாலும்
நின்ற பேருந்தாலும்

காகம் உண்ட மிச்சச் சோற்றுக்கு
வந்த அணிலை
மிரட்ட மனமின்றி ஆடை எடுக்க
பீரோவை திறக்கத் தயங்கிய
எண்ணங்களாலும்

மனித நேயம் செழிக்கிறது.


- ராஜ்குமார்

( கொஞ்ச காலத்துக்கு முன் எழுதிய கவிதை. தினம் ஒரு கவிதை இணையக்குழுவில் வெளிவந்தது. )





No comments: