Saturday, May 22, 2004

ஏன் மெளனம்?

பெரும்பான்மையான வலைப்பதிவு நண்பர்கள் அமெரிக்காவிலும், அயல்நாட்டிலும்இருப்பதாக தெரிகிறது. அயல் நாட்டிலிருந்து தமிழ் வளர்ப்பது செயற்கரிய செயல் என்றாலும், சம்பளம் கொடுக்கும் நாட்டிற்கு உங்கள் விசுவாசம் அதிகம் என்றுதோன்றுகிறது.இந்திய அரசியலை அலசும் அளவிற்கு, அமெரிக்க அரசியல்அலசப்படாததிற்கு என்ன காரணம்? இந்தியாவின் மீதான நாட்டுப் பற்றா? அல்லது அமெரிக்க பயமா?

மேற்கண்ட சந்தேகத்திற்கான காரணம், ஈராக் சிறையில் அமெரிக்க ராணுவம் நடத்தும் மிருகக் கூத்துக்களைப் பற்றிய அலசல்கள் வலைப்பதிவுகளில் அதிகமில்லாததுதான்.மனித உரிமைகளின் பாதுகாவலனாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, போர் மரபுகளை புறந்தள்ளி, மிருகங்களை வெட்கங் கொள்ளச் செய்யும் வெறிச் செயலில் ஈடுபடுவது கண்டணத்திற்குரியதாய் ஏன் படவில்லை? இத்தகைய தேசத்திற்கு காஷ்மிர் மனித உரிமை மீறல்களை பற்றி பேச என்ன தகுதி உள்ளது.

இதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த இயலாத கையாலாகத்தனத்தால் கட்டுண்டு கிடக்கின்றன அனைத்து நாடுகளும். இந்த அரக்கத்தனத்திற்கு உலக சமாதானம்கொடுக்கும் விலை கொஞ்சநஞ்சமில்லை.இந்த அரக்கத்தனத்திற்கு, அமெரிக்க குடிமக்களின் மெளன ஒப்புதல் உள்ளதா? ஒப்புதல் இருந்தால் அது கவலைக்குரிய விஷயம். புஷ் மீண்டும் வெற்றி பெற்றால் ராணுவத்தின் வெறிச் செயல்களை அமெரிக்கர்கள்அங்கிகரித்தது போலாகி விடும். வலைப்பூ நண்பர்களே, இந்திய தேர்தல் முடிந்து விட்டது. அமெரிக்க தேர்தலைப் பற்றியும் கொஞ்சம் தைரியமாக எழுதுங்கள்

ஒரு கல்யாண வீட்டையே, சாவு வீடாக சுலபமாக மாற்றி விட்டார்கள்.முதிர்ச்சி அடைந்த ஜனநாயக நாட்டின் செயலாக இதனை எடுத்துக் கொள்ள முடியாது. செய்திகளை இருட்டடிப்பு செய்யாமல் வெளியிடுகிறார்களே? இது பெரிய விக்ஷயமல்லவா? என்று பலர்கேட்கிறார்கள். இது பாசாங்கு. இதன் மூலம் செய்த செயல்களை நியாயப் படுத்த முடியாது.

உலகில் பிற நாடுகளுக்கு பயப்படவோ, பதில் சொல்லவோ அவசியமில்லை என்ற மனோபாவம்தான் அமெரிக்காவிற்கு கர்வத்தை தந்திருக்கிறது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை உலகம் ஒப்புக் கொண்டு விடும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கில்லை. வர்த்தக ரீதியாக பிற நாடுகள் அமெரிக்காவை சார்ந்திருப்பதும், பிற நாடுகளால் கூச்சல் போட முடியுமே தவிர, ராணுவ ரீதியாக எதிர்க்க முடியாது என்ற உண்மையும் அமெரிக்காவை ஒரு அசுரனாக மாற்றி விட்டது.

அமெரிக்காவுடனான வர்த்தக ரீதியான சார்பு, நாடுகளை அடிமைப் படுத்தும் மாயச் சங்கிலி. அன்னியர் பிரதமராவதா என எதிர்க்கும் இந்தியர்கள் , பங்கு சந்தையிலிருந்து முதலீட்டை உருவுவதன் மூலம், ஒரு நாட்டின் பிரதமரையே நிர்ணயிக்கும் சக்தியை அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே அளித்து விட்டதை உணர மறுக்கிறார்கள்.இந்த முதலீட்டாளர்கள் இந்தியர்களின் வியாபாரத் திறமையை மதித்தோ,தொழில் திறமையை மதித்தோ முதலீடு செய்யவில்லை. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைந்த்தால் இந்தியாவிற்கு வந்து சூதாட்டம் நிகழ்த்துகிறார்கள்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பார்கள்.

அமெரிக்க பூனைக்கு யார் மணி கட்டுவது?

"Green card" க்காக காத்திருக்கும் இந்தியர்களே, நீங்கள் யார் பக்கம்?

No comments: