Tuesday, May 25, 2004

கலைந்த மெளனம்

என்னுடைய அமெரிக்க பூனைக்கு யார் மணியைக் கட்டுவது என்ற கட்டுரைக்கு வந்த பதில் பதிவுகள் என் கவலையை மேலும் அதிகரித்து விட்டது. விட்டேனா பார் என்று வார்த்தை சாட்டைகளை சுழற்றுவது தமிழர்களுக்கு கை வந்த கலை.வாழ்க! வளர்க!

இந்தியாவிற்கு வந்திருந்த போது தொலை பேசியில் கூட தொல்லை தராமல் சமர்த்தாய் இருந்து விட்டு வலைப் பதிவில் வரிந்து கட்டியிருக்கிறார் வந்தியத் தேவன். "பின்"னூட்டமாய் குத்தியிருக்கிறார் மூக்கு சுந்தர். முகம் தெரியாத சோடா பாட்டிலிடமிருந்து தெளிவான அலசல் அவரது வலைப் பதிவில் விரிந்திருக்கிறது ( அலசலுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்).

"NRI's may not like such articles" என்று கூறுகிறார் சுந்தர். தமிழ்நாட்டைப் பற்றி எழுதுவதையே அவர்கள் விரும்புவார்கள்என்றும் மொழிந்திருக்கிறார்.நான் இந்திய வாழ் இந்தியன். நீங்கள் எனக்காக எழுதவில்லையா? நான் உங்கள் வலைப்பதிவை படிக்கக் கூடாதா. பல நண்பர்களுக்கு உங்கள் தளத்தை பரிந்துரைத்திருக்கிறேன். அவர்களும் படிக்கக் கூடாதா? திருப்பி திருப்பி ரஜினியையும், ராம்தாசையும் திட்டி , அதனை என் ஆர் ஐ மக்கள் மட்டும் படித்து என்ன மாற்றம் நிகழப் போகிறது?

திரை கடலோடி திரவியம் தேடி, அந்நிய தேசத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் கலை செல்வங்களாய் எங்களுக்கு தாருங்கள். அரசியல் வாதிகளால் நிகழக்கூடிய ஆபத்தை காட்டிலும் பல மடங்கு ஆபத்து வளர்ந்த நாடுகளால் நிகழப் போகிறது. எப்படி எதிர்கொள்வது? சொல்லுங்கள். அரசியல் வாதிகளையாவது அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வைக்கும் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது.வளர்ந்த நாடுகளின் வியாபார தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பது?உங்கள்
உலகளாவிய சிந்தனைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவுடன் ஒப்பிட்டு, படித்த இந்தியர்கள் தங்கள் நெஞ்சில் வளர்த்துக் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை இந்தியாவின் முதலாவது சாபக்கேடு.இரண்டாவது சாபக்கேடு இந்த நாட்டில் சாதித்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கையின்மை.இந்த சாபக்கேட்டினை நீக்கும் சமூகப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் ஏற்றால் மகிழ்ச்சி அடைவேன். அதை விடுத்து அரசியல்வாதிகளை கிண்டலடிக்க, ஆயிரம் குப்பை பத்திரிக்கைகள் தமிழ்நாட்டில் உள்ளது.புதிதாக நீங்கள் வேண்டாம்.

அமெரிக்க பயமா? என்ற கேள்விக்கு, பயம் ஒன்றுமில்லை, பிறர் படிக்க மாட்டார்கள் என்கிறீர்கள். படிக்க நாங்கள் ரெடி சார். எழுதுங்கள்.இந்தியர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க அது உதவும். சோடா பாட்டில் பாலா சொன்ன "வச்சா குடுமி, அடிச்சா மொட்டை" மனோபாவத்தை போக்க உதவும். அமெரிக்காவை பற்றிய நிஜங்களை எழுதுங்கள். அதே வேளையில் இந்தியாவை பற்றிய நிஜங்களை அறிந்து / புரிந்து எழுதுங்கள். மீடியாவின் மூலம் இந்தியாவை பார்த்து உங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்த முயலாதீர்கள். அது முழுமையாய் இராது.

இந்தியா பசித்திருக்கும் கண்ணீர் தேசம். பசித்த வயிற்றுக்கு தவறுகளை இனம் பார்க்க இயலாது. உண்டு ஏப்பம் விடும் அமெரிக்க தேசத்தில் மக்கள் தவறுகளை திருத்திக் கொள்கிறார்கள் என்று பெருமை கொள்வதில் பயன் ஒன்றுமில்லை பாலா. தவறுகள் தவிர்க்கப் பட வேண்டும். அதில்தான் பெருமை. ரஜினிகாந்தின் எளிமை வேக்ஷம் என்று சொல்லும் மூக்கு சுந்தர் அமெரிக்கர்களின் வேக்ஷத்தை பற்றி கவலைப்படாததேன்? நாட்டுப்பற்றை வலைப்பதிவு செய்ய வேண்டுமா? என்று குரலெழுப்பும் நண்பரே, இந்தியாவிற்கு பதிவுகள் தேவைப்படுகிறது. எழுதுங்கள். யார் பக்கம்? என்று கேட்டதற்கே ஏன் இந்த விக்ஷமத்தனம்? என்று சிலிர்த்து விட்டீர்கள். என் மேல் பாயாதீர்கள். நான் இந்தியா பக்கம் என்று சொல்லிவிட்டுப் போங்கள். நான் சந்தோசப் படுகிறேன். இந்தியா இன்னும் ஒரு குழந்தையாய்தான் இருக்கிறது நண்பர்களே. குழந்தைகள் ஒடி ஆட ஆக்கமும் ஊக்கமும் வேண்டும். அதனைத்தான் எதிர்பார்க்கிறேன்.

அமெரிக்கர்களின் செயல்க¨ள் விளக்க, வரலாற்றினை சுட்டிக் காட்டிருக்கிறார் சோடா பாட்டில். பிரிட்டிக்ஷ், ஜெர்மனி போன்ற வல்லரசுகள் செய்த ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்கர்கள் செய்வது மிகவும் கொஞ்சமாம்.இது
தவறான உதாரணம்.கஜினி முகமது படையெடுத்த போதும், மொகலாயச் சக்கரவர்த்திகள் காலத்திலும் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் குறைவுதான் என்று வாதாட
முடியுமா?குஜராத்தை பார்த்து நாம் கொதித்து எழவில்லையா? பிரிட்டிக்ஷ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்திய அரசுகள் தங்கள்ஆற்றலை பிற்காலத்தில் பறி கொடுத்தன. இதன்அடிப்படையில்தான் "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று எழுதினேன். அந்த "வல்லவனை நீங்களும் தேடுகிறீர்களா" என்பது எனது கேள்வி.பச்சை அட்டை வாங்கி அமெரிக்காவில்
தங்க விரும்புவர்களுக்கு அமெரிக்காவை வெல்லும் வல்லவன் உருப் பெருவதில் ஒப்புதல் இருக்காது என்பதுதான் என்கருத்து.

முதலாளித்துவத்தின் அடிப்படையே சுயநலம்தான். அமெரிக்காவை பழித்து பயனில்லை என்று விழைந்திருக்கிறார் சோடாபாட்டில். உலகமயமாக்கலை தவிர வேறு வழியில்லை என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார். உலகமயமாக்கலின்விரோதி அல்ல நான். என் சந்தைக்குள் வராதீர்கள். வந்தால் கூலி வேலைக்கு வாருங்கள். உங்கள் சந்தையில் நான் விற்க வருகிறேன். நீங்கள் தற்போது விற்பதை நிறுத்துங்கள். உங்கள் சந்தையிலே என்னிடம் கூலி வேலை பாருங்கள் என்ற அமெரிக்காவின் மனோபாவத்தைதான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.சுயநலத்தை பரப்பும் சித்தாந்தத்தை
செயல்படுத்தினால் இந்தியா அளிந்துவிடும் பாலா.இந்தியா என்பது தமிழ்நாடும் ஆந்திராவும் மட்டுமல்ல. வடகிழக்கு இந்தியாவின் நிலைமை தெரியுமா உங்களுக்கு? ரெயில்வே கலாசி உத்தியோகத்திற்காக பிகாரிகளும்,அஸ்ஸாமிசுகளும்
ஒருவரை ஒருவர் கொன்று குவித்த கொடுமை இந்திய மீடியாவிலேயே அதிகம் அலசப் படவில்லை. வடகிழக்கு மாநில பிரச்சனைகளை வெளிப்படுத்த முயன்ற " உயிரே" படம் படுதோல்வி அடைந்தது. சிறுபான்மையாக இருக்கும் வடகிழக்கு இந்தியமக்களின் சிரமங்கள் மற்ற இந்தியர்களுக்கு புரியாததும் இப்படத் தோல்விக்கு ஒரு காரணம்.

தமிழ்நாட்டை பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும் என நம்புகிறீர்களா? ஊட்டியில் வாழும் தேயிலை தொழிலாளர்களின் இன்றைய நிலைமை தெரியுமா? முரசொலி மாறன் காலத்தில் தேயிலையின் இறக்குமதி வரியை குறைத்தார்கள்.இறக்குமதிப் பொருளின் விலையுடன் போட்டி போட இயலாமல் நசித்து விட்டது தேயிலை தொழில். எங்கு செல்வார்கள் அந்த தொழிலாளர்கள்? இந்தியாவின் இந்த ரணம் பட்ட முகங்கள் உங்களுக்கு தெரியுமா?இந்த பிரச்சனைகளை எல்லாம்
வைத்துக் கொண்டு இந்தியா ஒளிர்கிறது என்றால் எப்படி ஜெயிக்க முடியும்? இந்த மாயச் சுழலின் மறுபக்கம், இறக்குமதிவரி ஏற்றப்பட்டால் வீழும் பங்குச்சந்தை. அலறும் மீடியா.

சிக்கலில் இருக்கிறது இத்தேசம்.நண்பர்களே, உங்கள் அயல்நாட்டு அனுபவங்களால் இதனை விடுவிக்கப் பாருங்கள்.கல்வி வசதிகளும், அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகளும் இல்லாமல் சிரமப் படுகிறது இத்தேசம். இந்தியப் பற்றிருந்தால் இந்தியாவிலிருந்தே வேலை செய்யலாமே? என்று மாலன் தனமாக நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ஒரு நாராயண மூர்த்தியால் இந்தியாவில் சாதிக்க முடிந்திருக்கிறது. அப்போலோ மருத்துவ மனையில் "Sr oncologist " ஆக உள்ளார் ரமேஷ். அமெரிக்க அனுபவத்தை வைத்து இந்தியாவில் பல உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அயல் நாட்டில் பல கோடிகளை அவர் சம்பாதித்திருக்க முடியும்.

சித்தாந்தக் கண்ணாடியை கழற்றி வைத்து அமெரிக்காவை பார்க்க நான் ரெடி பாலா. நீங்கள் நெருங்கி வந்து இந்தியாவை பார்க்க வேண்டும்.நீங்கள் இத் தேசத்திற்கு உதவுகிறீர்கள் என நம்புகிறேன். ஆனால் தேவைப்படும் உதவிகளின் பரிமாணங்கள் மாறிவிட்டது.உணர வேண்டுகிறேன்.

இந்திய தேசத்திற்கு ( எலிகளுக்கு) அமெரிக்க பூனைகளால் ஆபத்து வரும்போது மணி கட்டத்தான் வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.

உதவுவீர்களா? -கேள்வி. உதவி செய்வீர்கள்- நம்பிக்கை.

No comments: