Tuesday, August 03, 2004

கதவுகள் தட்டப்படுகின்றன

கேட்டுக் கொண்டேதானிருக்கிறது
கதவுகள் தட்டப்படும் சப்தம்.
அழைப்பு மணி மீதான
அவநம்பிக்கையால்
தட்டவே கைகள் நீள்கின்றன
பெரும்பாலும்.

அதிகாரத் தட்டல் ஆவேசமாய்..
ஆதாயத் தட்டல் நாசூக்காய்
யாசகத் தட்டல் தயக்கமாய்.
கதவுகள் திறக்காத போது
விரல்கள் இணைத்து
முக்ஷ்டி இறுக்கி
வலுக்கிறது தட்டல்.

ஆளில்லை என்பதுதெரிந்தும்
தட்டி விட்டு போவது
வாடிக்கையாகி விட்டது
சிலருக்கு.
குழந்தையின் நித்திரையையோ,
தியான மவுனத்தையோ
கலவி சுகத்தையோ
சிதைப்பதைப் பற்றிய கவலையின்றி..
தட்ட நீள்கிறது கைகள்.

சிதைவுகள் அனுபவித்தும்
கதவுகள் மூடியே இருக்கிறது.
மூடிய கதவுகளின் மேல்
தட்டல் வலுக்கிறது.

இந்த சப்தங்கள் நடுவே
கேட்காது போனது
மூடிய கதவின்
திறப்பை எதிர்பார்த்த
கைகளில்லாதவனின்
அலறல்.

பின் குறிப்பு: என்ன புரிஞ்சதா? புரியலையா? அடிக்காதிங்கப்பா.

No comments: