Thursday, August 19, 2004

ஜப்பானியர்களைப் பற்றிய பத்ரியின் தேவையற்ற கவலை..

ரஜினி ராம்கியின் பதிவைப் படித்து விட்டு தேவைக்கதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டார் பத்ரி. புள்ளி விவர அலசல்களுடன் எழுதும் மனிதர்களும் சமயங்களில் சுய விருப்பு, வெறுப்பிற்கு பழியாகி விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. "ஜப்பானியர்களின் தேவையற்ற செயல்" என்பதை சொல்வதற்காக ரஜினி என்ற நடிகனைப் பற்றி கிழித்திருக்கிறார். ரசனை என்பது தனிமனிதன் சம்பந்தப் பட்ட விசயம். தன்னுடைய ரசனையே பிறருக்கு இருக்க வேண்டும் என்பதோ, பிறருடைய குறிப்பிட்ட ரசனையை வைத்து அவன் புத்திசாலி அல்லது முட்டாள் என்று முடிவு செய்வதோ நியாயமாகாது.இதே ஜப்பானியர்கள், கமலஹாசனைப் பார்க்க வந்திருந்தால் இவ்வாறு எழுதியிருப்பாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் கமலஹாசனை ரசிப்பது அறிவு ஜீவிகளுக்கான அடையாளம்.ரஜினி ரசிகர்கள் மூளையற்றவர்கள் என்பதே சிலரது கருத்தாக இருக்கிறது.

ரஜினியிடம் என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இவ்வாறாக குறிப்பிட்டு காரணம் சொல்ல முடியாத பல்வேறு ரசனைகளும், ரசிகர்களும் உலகத்தில் நிறைய இருக்கின்றன/இருக்கின்றார்கள் என்பதை பற்றி பத்ரி அறியாதவரா என்ன? எங்கோ இருக்கும் தொலை தேசத்தில் யாரும் கனவில் கூட நினைக்காத வகையில் ஒரு நடிகர் தாக்கத்தை ஏற்படுத்தினால், கிறுக்குத்தனம் என்று மட்டும் நிராகரிக்க முடியாது. இதற்கான உளவியல் காரணங்கள் அலசப்பட வேண்டும்.

தனிமனிதனை துதித்து, இவ்வாறு கிறுக்குத்தனம் செய்கிறார்களே? என்ற அக்கறையுடன் நீங்கள் எழுதியிருந்தால் நான் வரவேற்றிருப்பேன். உங்களுக்கு அந்த தனிமனிதன் ரஜினியாய் இருப்பதுதான் பிரச்சனையே. ஜக்குபாய் பற்றி யூகங்கள் வெளியிடும் பத்திரிக்கைகள் பிடிக்காது. கங்குலி- சச்சின் சண்டையைப் பற்றி எழுதும் பத்திரிக்கைகள் பிடிக்கும். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு முன் இந்திய அணி அப்படி கிழிக்கப் போகிறது, இப்படி கிழிக்கப் போகிறது என எழுதும் பத்திரிக்கைகள் பிடிக்கும். என்ன நியாயம் இது?

ரஜினியின் சாதனைகளை கலைரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இருவகையாக அலசலாம். கலைரீதியாக உங்களது கருத்தை விமர்சிப்பது நியாயமாகாது.வர்த்தக ரீதியாக ரஜினியின் சாதனைகள் பல்வேறு சினிமா தொழில் நுட்ப கலைஞர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் வாழ வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மினிமம் காரண்டி என்ற நிலைக்கும் பல மடங்கு மேலான வர்த்தகத் தளத்தில்தான் ரஜினி இருந்தார்/இருக்கிறார் . தற்கால சத்யராஜைப் போல மினிமம் காரண்டி நடிகர் என்று எழுதி, அதில் எம்.ஜி. ஆரையும் சேர்த்து , இருவரையும் கேவலப்படுத்தி விட்டீர்கள்.

சக்ஸஸ் பார்முலாவை உருவாக்கி அதிலே உழலுவது என்பதை கலைரீதியாக விமர்சிக்கலாமே தவிர, வர்த்தக ரீதியாக தவறு காணமுடியாது. மசலாப் பட பார்முலாக்களில் வெற்றி காண கமலஹாசனும் பேர் சொல்லும் பிள்ளை, கலைஞன் வரை முயற்சி செய்துதான் வந்தார். அவருடைய பலம் மசாலாப் படங்களில் இல்லை. சகல கலா வல்லவன் வந்த போதுதான் எங்கேயோ கேட்ட குரல் வந்தது. மிகவும் வித்தியாசமான படம். படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது. இந்த படத்தை பாராட்டி கல்கியில் அந்த காலத்தில் தலையங்கம்.. கவனத்தில் கொள்ளுங்கள் விமர்சனம் அல்ல தலையங்கம் எழுதியிருந்தார்கள்.ஆனால் வர்த்தக ரீதியாக "சகலகலா வல்லவன்" மாபெரும் வெற்றி.ரஜினியின் "எங்கேயோ கேட்ட குரல்" அத்தகைய வெற்றியை பெறவில்லை.

வெற்றியின் சூட்சமம் எதுவோ, அதை தொடர்வது வர்த்தக நியதி. அதைத்தான் ரஜினி செய்து வந்தார். ரஜினியைப் பொறுத்த மட்டில் அவரது படத்தை பார்க்காமலே விமர்சனம் செய்வதே சிலரது நிலையாய் இருக்கிறது.பத்ரி படம் பர்த்திருக்கிறாரா? இல்லையா?

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பின்னூட்டத்தின் பதிலாக, "ரஜினி படங்கள் ரசிகர்களின் ஆழ்மனதில் தவறான எண்ணங்களை விதைக்கும். அதனால் தமிழகத்திற்கு ஆபத்து" என்றெல்லாம் எழுதியிருக்கிறார் பத்ரி. என்ன சார் ? எப்பொழுது ராம்தாஸ் கட்சியில் சேர்ந்தீர்கள்? கொஞ்ச நாட்கள் முன்புதான் தினமலர் விசயத்தில் அய்யாவை விமர்சித்தீர்கள். அதற்குள் ரஜினி மீது தாக்குதல். அய்யாவை குளிர்விக்கவா?

தமிழகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அதில் என்ன இருந்தது? தனி நாடு கேட்கச் சொன்னாரா? தீவிரவாதிகளை ஆதரித்தாரா? செக்ஸ் காட்சிகள் அதிகம் இருந்ததா? "காதல் கொண்டேன்", "நியு" பார்த்து கெடாத தமிழ் சமுதாயம் ரஜினி படம் பார்த்து கெடுமா? "இதயக்கனி", "இன்று போல் என்றும் வாழ்க" படங்கள் விளைவிக்காத ஆபத்து ரஜினி படங்களால் விளையுமா? ரஜினி ஐஸ்வர்யாராவிற்கு இச் கொடுக்க கூடாது. கமல் கொடுத்தால் அது செக்ஸ் கல்வி. அப்படித்தானே?

அலசல்கள் நேர்மையாக இருக்க வேண்டும் பத்ரி. தனிமனித துதிக்கு எதிரான குரலாய் உங்கள் குரல் ஒலித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். இது அந்த தனிமனிதன் ரஜினியாய் இருந்ததால் வந்த வெறுப்பு.

உங்கள் சுய வெறுப்புகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எழுவதற்கு இதைக் காட்டிலும் சிறப்பான விசயங்கள் உங்களிடம் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன் நான்.

No comments: