Tuesday, November 02, 2004

கட்டுரை கதையின் பரிணாம வளர்ச்சியா ?

பி. கே. சிவக்குமாருக்கான பா.ராகவனின் பதிலைப் படித்ததும் சில விடயங்கள் மனதில் நெருடிக் கொண்டிருந்தது. நான் ஒரு தமிழ் சிறுகதை ரசிகன். தமிழ்படுத்தப் பட்ட மற்ற மொழி சிறுகதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சத்யஜித்ரேயின் சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.

சிறுகதை எழுதாததற்கான காரணங்களாக ராகவன் முன் வைத்த காரணங்களில் நான் புரிந்து கொண்டதை பட்டியலிடுகிறேன்.

1) சமகால அரசியல் நிகழ்வுகளை தோலுரித்துக்காட்டும் முயற்சிகளில் சிறுகதை எழுத்தாளர்கள் இறங்கவில்லை.

2) கதைக்களம் அகன்றதாக இல்லை. மீண்டும் மீண்டும் நடுத்தர வர்க்கத்தின்
பிரச்சனைகளைப் பற்றியே எழுதுகிறார்கள்.

3) சிறு பத்திரிக்கைகளில் கதை எழுதுபவர்கள் பாலியல் கதைகளை எழுதுவதே பெரிய சாதனை என நினைக்கிறார்கள். மற்றபடி பெரிதாக அவற்றுள் ஒன்றும் இல்லை.

4) கனமான சாரத்தை சிறுகதை வடிவில் வழங்கினால், அதை படிக்க வெகுஜன வாசகர்கள் விரும்புவதில்லை .கனமான விடயங்களை கட்டுரை வடிவில் வழங்கினால் வாசகர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.

சிற்றிதழ் எழுத்தாளர்களைப் பற்றிய கருத்தை தவிர மற்ற கருத்துக்கள் எனக்கு கவலையளிப்பதாக உள்ளது. ஒரு படைப்பாளியாக சிறுகதைகளைப் பற்றிய அவரது தரநிர்ணயமும், அந்த அளவுகோலில் தேறுபவர்கள் பற்றியுமான அவருடைய கருத்து வேறுவிதமாக இருக்கலாம். ஆனால் ஒரு வாசகனாய் ராகவனார் குறிப்பிட்டுள்ளதைக்காட்டிலும் அதிகமாகவே சாமான்யர்களை பாதித்த சிறுகதைகளும் நாவல்களும் வந்துள்ளன என்பதுதான் என்னுடைய அபிப்ராயம்.

அடக்குமுறைக் காலக்கட்டத்தில்தான் சிறந்த இலக்கியங்கள் வருமோ என்ற சந்தேகமும் ( சுஜாதாவின் கூற்று) நியாயமானதே. இலக்கியவாதி அற்ற சாமான்யனுக்கும் சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியின் கவிதைகளை அறிந்திருந்ததற்கும், இன்றும் பெரும்பாலானவர்களுக்கு பாரதியின் தேசப்பக்திப் பாடல்கள் நினைவில் நிற்பதற்கும் அக்கால அரசியல் சூழ்நிலையை ஒட்டி பாரதியின் பாடல்கள் எழுதப்பட்டது காரணமாய் இருக்கலாம்.

மற்றுமொரு உதாரணமாக சமீபகாலமாக இணையத்தில் படிக்க நேரிடும் ஈழப்பாடல்களை கூறலாம். நரம்பை முறுக்கேற்றும் மரபுக் கவிதைகள் இன்று தமிழ் நாட்டில் காணக்கிடைக்காது. ஏனெனில் இங்கே வெளிப்படையான போராட்டங்கள் இல்லை. ஆனால் தனிமனிதனின் போராட்டங்கள் பல்வேறு பரிமாணங்களில் இங்கேதொடர்கிறது. இதை கூர்ந்து கவனித்து எழுத இலக்கியவாதிகளுக்கு மனமோ, அவகாசமோ அல்லது இரண்டுமோ இல்லை. நடுத்தர வர்க்கத்தைப் பற்றியே எழுதுகிறார்கள் என்று ராகவன் கூறியிருக்கிறார். இப்பிரச்சனைகளை கதைகள் அலசக் கூடாதா? இவற்றை அலசும் கதைகள் இலக்கியமாக கருதப்படாதா?

இந்தியா போன்ற நாடுகளிலே ஓங்கி நிற்பவர், ஒடுக்கப்படுபவர் என்ற இருவேறு நிலைகளிலே நாம் மனிதர்களைப் பொருத்திப் பார்க்கிறோம். இலக்கியவாதிகளுக்கும் கதாப்பாத்திரங்களை இந்நிலைகளில் பொருத்தி கதை எழுதுவதே வசதியாய் இருக்கிறது. இந்தியாவிற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த கருத்துப்படிவம்- திரிசங்கு. ரெண்டுங்கெட்டான் நிலையில் மாட்டிக் கொண்டு வாழ்க்கையில் உழலும் சிக்கல் அதற்கான போராட்டம்- இதுதான் இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும், நிகழப் போகும் இந்த நூற்றாண்டுக்கான போராட்டம். இதன் வேதனைப் பரிமாணங்களை இலக்கியவாதிகள் முழுவதுமாக கவனிப்பதில்லை. கவனித்தால் பல்லாயிரக் கணக்கான சிறுகதைகள் வரும் சாத்தியம் உள்ளது. வெகுஜன மக்களும் படிப்பார்கள். இதை விடுத்து கதை எழுத மாட்டேன் , கட்டுரைகள் போதும் என ராகவன் கூறுவது எனைப் போன்ற கதை ஆர்வலர்களுக்கு நட்டத்தைத்தான் ஏற்படுத்தும்.

மத்திய வர்க்க வாழ்க்கை மனித நேயத்தை சிதைத்து வருகிறது. மனிதர்கள் தனித்தீவுகளாக பிரிந்திருக்கிறார்கள், பிரச்சனை வரும்வரை பிரிந்திருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒன்றுபடுவதை விரும்பாத / ஒன்றுபடுவது தேவையில்லை என்ற மனநிலையை வளர்க்கும் சமுதாயம் இருக்கும் போது எங்கே போராட்டம் வெடிப்பதும் அதனால் இலக்கியம் வளர்வதும் நிகழப்போகிறது?

அரசியல்வாதிகளுக்கு மத்தியவர்க்கத்தின் இம்மனநிலை வரப்பிரசாதமாகி விட்டது. "வாய் கிழிய விமர்சித்துவிட்டு ஓட்டுச்சாவடிக்கு வரமாட்டார்கள் இவர்கள்" என்பதில் அரசியல்வாதிகளுக்கு அசைக்க முடியா நம்பிக்கை. அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு, மத்தியவர்க்கத்தாரின் பங்களிப்பும், மத்தியவர்க்கத்தாரின் வாழ்க்கை தொடர்ச்சிக்கு அரசியலின் பங்களிப்பும் தேவையில்லாத சூழ்நிலை உருவாகி விட்டது.

இதற்கு ஆங்கிலத்தில் "Finding Private Solutions for Public Problems" என்ற சொற்றொடர் உண்டு.குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் தண்ணீர் லாரி வாங்கி தொட்டியில் நிரப்பி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வரும் நீரை பல பாத்திரங்களில் சேமித்து வைத்துக் கொள்கிறோம். ரயில் நிலையத்தில் குழாய் நீரை நம்பாமல் மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்கிறோம். வசதி குறைந்தவர்களுக்கு வாட்டர் பாக்கெட். காலப்போக்கில் ஆள்பவர்கள் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்பதே எதிர்கட்சிகளால் மட்டுமே நினைவூட்டப்படுகிறதே தவிர பொதுமக்கள் மறக்கத் தொடங்கி விட்டார்கள். இதற்காக போராட தயாராக இல்லை.

இந்த மனப்பான்மை வரவேற்கத் தக்கதா? இதன் மூலமாக ஏற்படும் இழப்புகள் என்ன? இதன் பாதிப்புக்கள் குறித்து இலக்கியவாதிகள் படைக்க வேண்டிய அவசியம் இல்லையா? இல்லையென்றால் இப்பிரச்சனைகளைப் பற்றி கட்டுரை எழுதினால் மட்டுமே போதுமா? இல்லையென்றால் கட்டுரைகளுக்கும் கதைகளுக்குமிடையேயான ஒரு புது இலக்கிய வடிவம் அவசியமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும்.

என்னை பொறுத்தவரை கட்டுரைகளால் மட்டுமே ஒரு இலக்கியவாதி தனக்கான இலக்கிய அல்லது சமூகப் பங்களிப்பை முழுமையாக செய்துவிட முடியாது. கட்டுரையும் கதையும் கலந்த ஒரு புது இலக்கிய வடிவத்தை அமைப்பதே பரிணாம வளர்ச்சியாய் இருக்க முடியுமே தவிர, கதையும் கட்டுரையும் ஏற்கனவே இருக்கும் வடிவங்களே.

என்னுடைய பார்வையில் ராமகிருக்ஷ்ணனின் "துணையெழுத்து " கதையும் கட்டுரையும் கலந்த புதிய வடிவமாக படுகிறது. கதைகளுக்கான களத்தின் அகலத்தை விஸ்தரித்து, அதே சமயத்தில் கட்டுரைக்கான வெளிப்படை உண்மைகளை கலந்து எழுதிய இவரது படைப்புகள் வாசகர்களால் விரும்பப்பட்டது என்பதை ராகவன் மறுக்கமாட்டார் என நம்புகிறேன். இப்படைப்புக்களின் சாராம்சத்தில் கனமிருந்தது, மனித நேயமின்மையின் பாதிப்புக்கள் வெளிப்பட்டன. இவ்வகையான படைப்புக்களை இலக்கியவாதிகள் படைக்கமுடியாதா? படைத்தால் வாசகர்கள் படிக்கமாட்டார்களா?

சமீபத்தில் தனது வலைப்பூவில் எஸ். ராமகிருக்ஷ்ணன் வருமானவரி அலுவலர்கள் சார்பாக நடத்தப்பட்ட எழுத்தாளர்கள் மாநாட்டில் "உலகமயமாக்கல் பற்றிய இந்திய இலக்கியங்கள்' குறித்து நடந்த கருத்தரங்கைப் பற்றி எழுதியிருந்தார். அவர் அதில் குறிப்பிட்டிருந்த உண்மை "தமிழில் உலகமயமாக்கலைப் பற்றிய இலக்கியங்கள் இல்லை. தெலுங்கில் அதிகம் இருக்கிறது" என்பது.

ஏனிந்த நிலை? தமிழ் இலக்கியவாதிகள் உலகமயமாக்கலைப் பற்றி சார்புநிலை கொண்டவர்களா? அல்லது அதன் தாக்கத்தை கவனிக்க மறுப்பவர்களா? அல்லது உலகமயமாக்கல் என்பது தமிழர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா?

வெகுஜனப்பதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வை மட்டும் கவனிப்பேன் என ஒரு மேலாளனோ அல்லது அரசியல்வாதியோ கூறலாம். இலக்கியவாதி அவ்வாறு கூற முடியாது. தனிமனித இழப்பையும் சுட்டிக்காட்டி இலக்கியம் படைக்கும் உரிமை அவனிடம் உண்டு.

தேயிலை வர்த்தக விதிகள் தளர்த்தப்பட்டதால், இலங்கை தேயிலையுடன் போட்டி போட இயலாது,ஊட்டி தேயிலை தொழிலாளர்கள் படும் பாட்டை எந்த இலக்கியவாதியாவது கண்டு கொள்கிறாரா? கதை/கட்டுரை எந்த வடிவிலாவது இருக்கட்டும். யாராவது எழுதியிருக்கிறார்களா?

அமெரிக்காவில் "Human leasing " குற்றமாக கருதப்படும் செயல். அதாவது உங்கள் அலுவலகத்தில் அக்கவுண்டட் ஆக வேலை பார்த்து வந்தவரை திடீரென பணிநீக்கம் செய்து , இன்னொரு அவுட்சோர்சிங் கம்பெனியின் எம்ப்ளாயியாக சேர்த்துவிட்டு , பழைய கம்பெனியிலேயே பணியாற்றுமாறு சொல்ல முடியாது. எளிமையாகச் சொல்லப் போனால், "செய்யும் வேலையும் பணியாற்றும் இடமும் அதேதான். ஆனால் சம்பளம் தரும் கம்பெனி வேறு". கம்பெனியின் பணியாளர்கள் எண்ணிக்கை செயற்கையாக குறைக்கப்பட்டு, பணியாளர்கள் ஈட்டும் லாபசதவிகிதம் (Profit per employee) அதிகமாக காட்டப்படும். இதை அமெரிக்காவில் தடை செய்துவிட்டார்கள்.

நம்நாட்டில் இவ்வாறான வேலைநீக்கங்கள் நிறைய நடக்கின்றன.15 வருடம் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவன், அதே நிறுவனத்தில் ஆனால் அந்த நிறுவனத்தின் ஊழியன் என்ற அடையாளம் இல்லாமல் வாழ்கிறான்.

என் நண்பனின் தந்தையார் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அவர் தூத்துக்குடியில் சந்தித்த ஒரு உப்பு வியாபாரியின் ஆதங்கத்தை கூறினார். லீவர் சோப்பு தயாரிக்கிறது சரி. சிறு வியாபாரி விக்கிற உப்பு கூடவா? என்று. இக்கேள்விக்கு பின்னால் மறைந்திருக்கக் கூடிய உலகமயமாக்கலின் தாக்கம் அதிகம்.

இலக்கியவாதிகள் இக்கேள்விகளை கவனிக்க வேண்டுமா? கூடாதா? கதை எழுத விடயங்களுக்கு பஞ்சமில்லை. ராகவன் அவர்களது கட்டுரைகளுக்கு கிடைத்த வரவேற்புக்கு காரணம், வாசகனின் மனதிலிருந்த அவ்வகையான படைப்புகளுக்கான தேவையே தவிர, சிறுகதைகளுக்கான தேவையின்மை அல்ல.

அமெரிக்கா , ஆப்கானிஸ்தான் என வரலாற்றையும், அயல்நாட்டுப் பிரச்சனைகளையும் எழுதியது சுவையூட்டியதே தவிர, இலங்கைப் பிரச்சனை, தாரளமயமாக்கல் என இந்தியாவின் ஆதாரப் பிரச்சனைகளை எழுதினால் பிரசுரிப்பதிலும் சரி, படிப்பதிலும் சரி பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இலக்கியத்தின் கதை வடிவால் சொல்ல முடியாத ஆதாரப் பிரச்சினைகள் கட்டுரை வடிவில் சொல்ல முடிகிறது என்றால் படைப்பாளிகள் கட்டுரை எழுதுவதை மட்டுமே செய்வதை வரவேற்கலாம். அவ்வாறில்லாத பட்சத்தில் இலக்கியவாதிகள் கதைகளாக படைக்க வேண்டியவை நிறைய தமிழகத்தில் உள்ளது.


ராகவன் போன்ற பிரபலமான, சிறந்த இலக்கியவாதிகள் கட்டுரை மட்டுமே எழுதுவது வளர்ச்சியாக படவில்லை. இலக்கிய இழப்புதான் ஏற்படும்

1 comment:

சுரேஷ் கண்ணன் said...

அன்பு ராஜ்குமார்,

கதையின் பரிணாம வளர்ச்சி கட்டுரை என்று எண்ணுவது ராகவனின் தனிப்பட்ட உரிமை என்று கருதுகிறேன். மொத்த இலக்கிய எழுத்தாளர்களுக்கும் இதை அவர் அளவுகோலாக வைக்கவில்லை என்றே நான்எடுத்துக் கொள்கிறேன். இன்றைக்கு எழுதப்படும் அத்தனை சிறுகதைகளையும் நீங்கள் வாசித்துப் பார்த்தால், பெரும்பான்மையானவை, நடுத்தர வாக்க தனிமனித சோகங்களையும், மாமியார் கொடுமை போன்ற உறவுமுறைச் சிக்கல்களையும் பற்றியே எழுதப்படுகிறது. சர்வதேச தரத்தில் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கதைகள் அளவில் சொற்பமாகவே இருக்கிறது. தலித் எழுத்தாளர்கள் தங்கள் பிரச்சினைகளை, அழகியல் உணர்ச்சி குறைந்த அளவில் இருந்தாலும், மிகச்சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். 'கலை மக்களுக்காகவே' என்கிற கோஷத்தையே இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய தேதியில் அறிவுபூர்வமான தகவலடங்கிய, எளிய முறையில் எழுதப்படும் கனமான விஷயங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுதிகள், ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது, தமிழில் மிகக்குறைவாகவே இருக்கின்றன. ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் கட்டுரைத் தொகுதிகள் பாமரர்கள் அணுகக்கூடியதாக இல்லை. இவ்வாறான நிலையில் வெகுஜன இதழ்களில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்ததன் மூலம் எளிய வாசகர்களுக்கேற்றவாறு உலக விஷயங்களை கட்டுரைகள் மூலம் இதை பரிணாம வளர்ச்சி என்றே நானும் நம்புகிறேன். கதை வடிவில் இவை எழுதப்பட்டால், மருந்தை துப்பி விட்டு இனிப்பை மட்டும் சுவைபார்க்கிற மனோபாவம் உடையவர்கள் கதையை மட்டும் ரசித்துவிட்டுப் போகக்கூடிய அபாயமிருக்கிறது.

இதற்கு சம்பந்தமில்லாத இன்னொரு விஷயம்.

என்னுடைய பெயரிலேயே இன்னொரு கருத்து மேலே பதிவாகியிருப்பது என்னை வியப்பூட்டுகிறது. அதே பெயரில் இன்னொரு நண்பரும் இணையத்தில் வலம் வருகிறாரா? அல்லது தன் பெயரை வெளியிட விரும்பாத நண்பர் என் பெயரை உபயோகித்து இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அவர், சில முகமூடிகள் பெயரில் ஆபாசமாக கூவிவிட்டு செல்லாமல், பாராட்டி விட்டு சென்றது வரைக்கும் பிரச்சினையில்லை.