மியூசிக் பார்ட்டி
ரொம்ப நாள் கழித்து சென்னையில் மழை. ஆனாலும் மக்கள் அதிகம் கவலைப்படாது சந்தோசமாகவே இருக்கிறார்கள். ரோடுகளில் நீர் தேங்கி சர்க்கஸ் செய்து ஆபிஸ் போக வேண்டியதிருந்தாலும், மழை நிற்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. இவ்வாறான மழை பொழிந்த ஒரு மாலைப் பொழுதில், “சாதகப் பறவைகள்” மெல்லிசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சியை தமிழகமெல்லாம் "கோலங்கள்" தொடர் பார்க்கும் நேரத்தில் ஒளிபரப்பினார்கள்.
" எண்ணத்தில் ஏதோ சில்லென்றது' என "கல்லுக்குள் ஈரம்" படப் பாடலை கேட்டவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடிக்கடி வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ கேட்கக் கூடிய பாடல் அல்ல அது. சிறந்த இளையராஜா ரசிகர்கள் மட்டுமே மறக்காத பாடல் அது. பாடியவரும் சிறப்பாக பாடினார். அதனை தொடர்ந்து " ஆராதனை" படத்திலிருந்து மற்றோரு இளையராஜாவின் பாடல். பின்பு "பயணங்கள் முடிவதில்லை" யிலிருந்து "சாலையோரம்" என அரைமணி நேரம் இன்னிசை மழையில் ஆழ்த்தி விட்டார்கள்.
தொலைக்காட்சிகளின் பாதிப்பில்லாத எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளிலும் "மியூசிக் பார்ட்டி" என அழைக்கப்படும் மெல்லிசை நிகழ்ச்சிகள் அனைவரும் ஆர்வத்துடன் ரசித்த நிகழ்ச்சி. பெரும்பாலும் அம்மன் கோவில் திருவிழாக்களிலோ, தெருவில் நடத்தப் படும் பொங்கல் விழாக்களிலோ, சித்திரை திருவிழாவின் போதோ இம்மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறான நிகழ்வுகளை தவிர, திருமண வரவேற்புகளின் போதும் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இன்று வரை திருமண வரவேற்புகளில், அனைவரும் உரத்த குரலில் புரணி பேசிக்கொண்டிருக்க, யாராவது ஒரு பாடகர் " நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்" என வாழ்த்திப் பாடிக் கொண்டிருக்கிறார்.
மதுரையில் வசித்த போது, இளம் பிராயத்தில் நான் பார்த்த மெல்லிசை நிகழ்ச்சிகள் பல இன்னும் பசுமையாக நினைவில் நிற்கின்றன.பெத்தானியாபுரம் பைபாஸ் ரோட்டின் அருகே எங்கள் வீடு இருந்தது. மதுரையை அறிந்தவர்களுக்கு இந்த இடத்தைப் பற்றி தெரியும். அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமும் இங்கே நடத்தப்படும். இப்பகுதியை சுற்றி பல கோவிகளிலும், தெருக்களின் பொங்கல் விழாக்களிலும் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மெல்லிசை நிகழ்ச்சிகளில் அக்காலத்தில் மிகவும் ஈர்க்கும் வாத்தியங்களாக இருந்தது டிரம்மும், டிரம்பட்டும்தான். தைரியம் என்ற பெயருடைய டிரம் வாசிக்கும் நபர் அப்போது எங்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார். மிகவும் நீண்ட தலைமுடி வைத்துக் கொண்டு டிரம் அடித்து முடியை ஒரு சுழற்று சுழற்றுவார். நாங்கள் வாய் மூடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். அக்காலத்தில் அனைத்து மெல்லிசை நிகழ்ச்சியிலும் " சித்தாடைக் கட்டிகிட்டு" பாடல் கண்டிப்பாக பாடுவார்கள். விசிலும் ஆட்டமும் தூள் பறக்கும். இன்னொரு முக்கியமான பாடல் " ரகுபதி ராகவன் ராஜாராம்"படத்திலிருந்து "தங்கத் தேரோடும் வீதியிலே" என்ற பாடல்.
இந்திப்பாடல்களின் ஆதிக்கத்தை மெல்லிசை நிகழ்ச்சிகளிலிருந்து அகற்ற இளையராஜாவின் பாடல்கள் உதவின. பிரியாவின் " டார்லிங் டார்லிங்" பாட்டுக்கு டிரம்பட் ஊதுபவர் எவ்வாறு ஊதப் போகிறார் என்பதை ஆர்வத்துடன் கவனித்திருப்போம்.
குர்பானியும் சங்கராபரணமும் மீண்டும் மற்ற மொழிப் பாடல்களை மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாட வைத்தது. குர்பானியின் " லேலா மெ லேலா" பாட்டுக்கு எவ்வாறு டிரம் அடிக்க போகிறார் என்பதை வைத்தே டிரம்மரின் திறமை முடிவு செய்யப்படும். இதைப் போலவே கித்தார் வாசிப்பவருக்கு சவால் விடும் மற்றுமொரு நோட்ஸ் - " இளைய நிலா பொழிகிறது" பாடலின் இறுதியில் வரும் கித்தார் இசை. நிறைய நிகழ்ச்சிகளில் இதை சொதப்பி விடுவார்கள்.
மதுரையில் "புளூ பேர்ட்ஸ்", "ரெட் ரோஸ்" மற்றும் அவர்களிடமிருந்து பிரிந்து வந்த " ஒய்ட் ரோஸ்" என பல மெல்லிசை குழுக்கள் பிரபலமாக இருந்தன. சின்ன சீட்டில் என்ன பாடல் வேண்டும் என எழுதி நேயர் விருப்பம் தெரிவிக்கப் படும். எண்பதுகளில் சுந்தர் ஜெகன் என்ற இன்னிசைக் குழு மிகவும் பிரபலமாக இருந்தது. பொதுவாக இன்னிசைக் குழுக்களில் அக்காலத்தில் சிறந்த பெண்பாடகிகள் கிடையாது. பொது மேடைகளில் பாட பெண்கள் முன்வராத காலம். சுந்தர் ஜெகன் குழுவில் அனிதா என்ற சிறந்த பெண்பாடகி இருந்தார். இவர் பாடக் கேட்ட "பாட வந்ததோ கானம் " ( படம்: இளமைக்காலம்) பாடல் இன்றும் நினைவில் இருக்கிறது.
இதன் பின்பு கல்லூரி படிக்கும் காலத்தில் கலை விழாக்களில் முக்கியமான போட்டியே மெல்லிசைப் போட்டிதான். அழகப்பா பொறியியற் கல்லூரியில் " Acculfes" என்ற கலைவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தோம்.இதில் மூகாம்பிகைக் கல்லூரியில் படித்த " சிகாமணி" என்ற பாடகரும், முகம்மது சதக் கல்லூரியில் படித்த " உமா மகேஸ்வரன்" என்ற பாடகரும் மறக்க முடியாத கலைஞர்கள்.
கல்லூரி விழாக்களில் நான் கேட்ட மறக்க முடியாத இன்னிசை நிகழ்ச்சி அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த "லிபோனிக்ஸ்-91" விழாவில் கும்பகோணம் இசைக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி. இரவு 10 மணிக்கு தொடங்கி பாடிக் கொண்டேயருந்தார்கள். நாங்கள் காரைக்குடிக்கு ரயில் பிடிக்க இரவு ஒன்றரை மணிக்கு ரயில் நிலையம் வந்து விட்டோம்.
இதன் பின்பு "அங்கிங்கு " இசைக்குழு ( சன் டிவி "பாட்டுக்கு பாட்டு" புகழ்) கலக்கி கொண்டிருந்தார்கள் /இருக்கிறார்கள். "லக்ஷ்மண் சுருதி" பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.
இன்றும் ஆசையாக இருக்கிறது. ஊருக்குப் போய் கோவில் திருவிழாக்களில் மியூசிக் பார்ட்டி கேட்க. "மன்மத ராசா" பாடி கடுப்பேத்துவார்களோ என்பதுதான் ஒரே பயம்.
No comments:
Post a Comment