Monday, December 13, 2004

சிகரத்தின் உச்சியில் சச்சின்

1989ம் ஆண்டில், சார்ஜாவில் நடந்த ஒரு கிரிக்கெட் மேட்சில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வழக்கம் போலவே உதை வாங்கிக் கொண்டிருந்தோம். வெங்சர்கார், மொஹிந்தர்போன்ற முதுபெரும் ஆட்டக்காரர்கள் நிறைந்த இந்திய அணி. "இவனுக எல்லாம்வேஸ்டுடா. சச்சின் டெண்டுல்கரை டீம்ல சேர்க்கணும்டா" என்று புலம்பினான் என்நண்பன் அன்பரசன். அப்போதுதான் முதன் முறையாக சச்சின் டெண்டுல்கரை பற்றிக்கேள்விப்பட்டேன்.

1989ம் ஆண்டு பாக்கிஸ்தான் டூருக்கு முந்தைய இரானிக் கோப்பை பந்தயத்தில் டெல்லிஅணியும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதின.இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் ரெஸ்ட்ஆப் இந்தியா அணி வெற்றி பெற 555 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. டெண்டுல்கர்மட்டுமே சிறப்பாக விளையாட மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிந்து விட்டன. மத்திய வரிசை ஆட்டக்காரரான குர்சரன்சிங்கிற்கு கை ஒடிந்து போனதால் ஆட இயலாத
நிலைமை. டெண்டுல்கர் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்ற அனைத்து
ஆட்டக்காரர்களும் அவுட்டாகி விட்டனர். இந்நிலையில் ஒடிந்தகையுடனும் ஆட வந்தார் குர்சரன்சிங். அவருடன் இணைந்து விளையாடி சதம் அடித்தார் டெண்டுல்கர்.சச்சின் சதமடித்தவுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டு, டெல்லி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு இளம் ஆட்டக்காரரின் சதத்திற்காக, உடைந்த கையுடன்ஆடிய குர்சரன்சிங்கின் பரந்த மனப்பான்மையும், மன உறுதியும் மெச்சத்தகுந்த செயல்.

துரதிர்க்ஷடவசமாக குர்சரன் சர்வதேச அள்வில் சிறந்த ஆட்டக்காரராக
சோபிக்கவில்லை.சச்சினின் இரானிக்கோப்பை சதம் அவருக்கு பாகிஸ்தான் செல்லும் அணியில் இடம்பெற்றுத் தந்தது. இம்ரான், அக்ரம், ஜாபர், வக்கார். அக்விப் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் நிறைந்த அணியை அவர்கள் மண்ணிலேயே சந்திக்கும் மிகப்பெரிய சவாலை இந்தியா திறம்பட எதிர் கொண்டது. சஞ்சய் மஞ்ரேக்கரும், சித்துவும்சிறப்பாக விளையாடிய தொடரில், சச்சின் பேட் செய்த விதம் அனைவரின்கவனத்தையும் ஈர்த்தது. வக்காரின் பந்து மூக்கை பதம் பார்த்து ரத்தம் வரச்செய்ய, கலங்காமல் அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய துணிச்சல் ஒரு புதிய
புயலின் வரவை உலகிற்கு உணர்த்தியது.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் "சச்சின் சிறந்த டெஸ்ட்ஆட்டக்காரர். அவரை ஒருநாள் போட்டியில் விளையாடச் சொல்லி வீண்டிக்கக் கூடாது"என்ற கருத்தே நிலவி வந்தது. ஆர். மோகனும் ஹிந்து பத்திரிக்கையில் இக்கருத்தைவலியுறுத்தியே எழுதியிருந்தார். பாகிஸ்தானில் நடைபெற்ற முதலாவது ஒருநாள்போட்டிக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. அதிர்க்ஷ்டவசமாக மழையினால்முழுமையான ஆட்டம் ஆட இயலவில்லை. சர்வதேச போட்டிகளின் கணக்கில் சேராத 20 ஓவர் மேட்ச் விளையாட முடிவு செய்தார்கள். சச்சின் அணியில் சேர்க்கப்பட்டார்.

பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 157 ரன்களை குவித்தது. பதிலளித்த இந்தியா மிகவும் சிரமப்பட்டு ஆடியது. ஸ்ரீகாந்த் இந்த தொடரில் படுமோசமாக விளையாடினார். இப்போட்டியில் ஓப்பனராக வராமல் இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்தபின் ஆட வந்தார்.பந்தை அடிக்க முடியாமல் தடவிக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் ஆடவந்தார்சச்சின். பந்து வீசியவர் லெக் ஸ்பின் ஜாம்பவான் காதிர். காதிரின் ஒரு ஓவரில் நான்கு
சிக்ஸர்கள் ( 19வது ஓவர்), ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு. இந்த மேட்சை பார்த்த நான்கொடுத்து வைத்தவன் என்பது என் கருத்து. சச்சினின் விளாசும் திறமை தெரிந்தபின்நிறைய விளாசல்களை பார்த்திருக்கிறேன். இந்த மேட்சின் ஆட்டம், எதிர்பாராத ஆச்சர்யம்,சந்தோசம் எல்லாம் கலந்த உணர்வை ஏற்படுத்தியது. 18 பந்துகளில் எடுத்த 53 ரன்கள், சச்சின் ஒருநாள் போட்டியில் ஆடக்கூடாது என்று கூறிய அனைத்து விமர்சகர்களின் பேனாக்களையும் மூடிவிட்டது.இதனை அடுத்து ஆடிய அவரது முதல்சர்வதேச போட்டியில் எடுத்த ரன்கள் எத்தனை தெரியுமா? பூஜ்யம்.

இதன் பின் இந்தப் புயல் வலுப்பெற்று பல கண்டங்களை கடந்தது. எண்ணற்ற
விதங்களில் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. நிறைய வெற்றிக்கு உதவியதாலோ என்னவோ, பல வெற்றிகளை ரசிகர்கள் மறந்து விட்டனர்.டெண்டுல்கரின் மன உறுதியும், முதிர்ச்சியும் இளம் வயதில் பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவின. நியுசிலாந்தில் ஒருநாள் போட்டி ஒன்றில் அசாருதின் அவுட்டாக காரணமாக அமைந்து , அசாரிடமிருந்து கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை பெற்றார். முகமெல்லாம்கலங்கிப் போன சச்சினை பூஸ்ட் பார்ட்னர் கபில் சமாதானப்படுத்தினார். அடுத்த ஒவரிலேயே ஹாட்லியை இரண்டு பவுண்டரிகள் விளாசினார். சச்சின் எடுத்தது 39 ரன்கள் என நினைக்கிறேன். ஒரு ரன்னில் வெற்றி பெற்ற இந்த மேட்சிற்கு சச்சின் எடுத்த ரன்கள் உதவின.

வினோத் கம்ப்ளி அணியில் சேர்க்கப்பட்ட பின், கம்ப்ளியின் ஆரம்பகால ரன்குவிப்புக்கள் சச்சினிற்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தின. இத்தருணத்தில்சச்சினின் ரன்குவிப்பு மட்டுப்பட்டிருந்தது. சச்சினிற்கு முன்னதாகவே ஒருநாள்போட்டியில் சதமெடுத்தார் கம்ப்ளி. ஹீரோக் கோப்பையின் போது, சச்சின் முழுமையான பார்மில் இல்லை.அரையிறுதி ஆட்டத்தில் சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான சச்சின்வீசிய கடைசி ஓவரும், பெற்றுத் தந்த வெற்றியும் சச்சினின் தன்னம்பிக்கையை கூட்டியது. ஹீரோக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கபிலுடன் சேர்ந்து மீண்டும்ரன்கள் குவித்தார் சச்சின்.

தொழில்நுட்பத்தின்உதவியுடன்கிரிக்கெட் ஆடப்படும்காலக்கட்டத்தில்
விளையடுபவர்சச்சின். பேட்ஸ்மேன்களின் பலவீனங்கள் பல்வேறு கோணங்களில்அலசப்பட்டு உத்திகள் வகுக்கப்படுகிறது.தனக்கெதிரான உத்திகளை சிறப்பாக கையாண்டு ,தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க அசாத்திய திறமை வேண்டும்,சச்சின்தன்னுடைய ஆட்டத்தில்அதற்கான மாறுதலை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.கடந்த இரண்டு வருடங்களாக கவரில் அடித்து ஆடும் ஆட்டத்தை தவிர்த்து வருகிறார்.இது அவரது ஆட்டத்தின் கவர்ச்சியை சற்று குறைத்து விட்டது. அவ்வப்போது கவரில்விளையாட செய்த சில முயற்சிகள் கூட ஆட்டம் இழக்க காரணமாய் அமைந்து விட்டது.சச்சின் இதனை விரைவில் சரிசெய்து விடுவார் என நம்புகிறேன். 1992ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது லெக்கட்டரில் அவுட்டாகிக் கொண்டிருந்தார். இயான்
போத்தமும், அம்ப்ரோசும் அவரை லெக்கட்டரில் அவுட்டாக்கினார்கள். சிலகாலம் முன்பு சார்ட் பைன்லெக்கில் ஒரு தடுப்பாளரை நிற்கவைத்து கேட்ச் பிடித்தார்கள் ( சென்ற உலகக் கோப்பை- கென்யா மேட்ச்). இச்சிக்கல்களை பின்பு சரி செய்துவிட்டார்சச்சின்.

சச்சின் ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் "வெளியே தெரியாத பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்தும் நான் போராடி வருகிறேன்" என்று கூறியுள்ளார். உண்மைதான். காயங்களிலிருந்து இன்னும் முழுமையாக குணமாகவில்லை சச்சின்.அதே நேரத்தில் கிரிக்கெட்டிலிருந்து முழுவதும் தொடர்பற்றிருப்பதும் ஆபத்தான விசயம், எனவேதான் "Calculated Risk" எடுத்து ஆடி வருகிறார் சச்சின் என நினைக்கிறேன்.அவர் எடுக்கும் ரன்களின் பின்னால் கைத்தட்டும் நமக்கெல்லாம்தெரியாத வலியிருக்கிறது. இதையேதான் லாரா இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்தியத்தீவில் நடந்த தொடரில் செய்தார் ( ஸ்ரீலங்காவில் அவரது மணிக்கட்டு உடைந்து போனது).

சினிமா எனது சுவாசம் என்றார் கமல்ஹாசன். சச்சினின் சுவாசம் கிரிக்கெட். அவரது மற்றொரு சாதனை மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தாலும் திறமை இருந்தால் உலக அளவில் பிரகாசிக்கலாம் என்பது. சச்சினிற்குப் பின் நிறைய நடுத்தரக் குடும்பத்துகிரிக்கெட் வீரர்கள் கண்டிப்பாக உருவாயிருக்கிறார்கள்.

இனி வரும் தொடர்கள் சச்சினின் எதிர்கால திட்டங்களை முடிவு செய்யும். தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு சச்சின் ஒருநாள் பந்தயங்களை குறைத்துக் கொள்ளலாம்.சச்சின் செய்யமாட்டார். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோள் அவரை செய்யவிடாது.

சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்றெல்லாம் போதிக்கும் எண்ணம் எனக்கில்லை. அவர்பூரண உடல் பலத்துடன் நன்றாக கிரிக்கெட் விளையாடி ,வெற்றிகளை ஈட்டுத்தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்1 comment:

வினையூக்கி said...

அருமையானக் கட்டுரை