முகம் தெரியாத
இரவுகளில்
மலைப்பாம்பாய் இறுக்கி
என் ஆடை களைவாய்
என் தளர்வையோ, கிளர்வையோ
பற்றிய கவலையின்றி.
என் நுரையீரல்களை
காயப்படுத்தும்
உன்னிடமிருந்து வரும்
உயர்சாராய வாசனை.
சுருதி மீட்டப்படும்
நம்பிக்கைகளுடன் இருந்த
தந்திகளையெல்லாம்
அறுத்தெறிந்து விட்டு
கட்டையாகிப்போன
வீணையுடன் தொடர்கிறது
உன் கச்சேரி.
மேல் பரந்து
நீ இயங்க
உறுத்துகிறது
முதுகுப் பக்கம்
புரண்டோடி விட்ட தாலியும்
இணக்கமாக சம்போகித்த
அந்த நாள் நினைவுகளும்.
உன் நகங்கள்
ஏற்படுத்திய
மார்புக் காயங்கள்
எரிகின்ற பகல் நேரக் குளியலில்
தேடுகிறேன் உனை புறக்கணிக்கும்
தைரியத்தை.
வீட்டிலிருந்து
தொலை பேசும் என் அம்மா கூட
உன் நலனை முதலில்
விசாரிக்க..
உணர்ந்தேன்
திருமணப் பந்தலுடன் சேர்த்து
கலைந்து போனது
என்னுடைய சுய அடையாளங்களும்தான்
என்பதை
No comments:
Post a Comment