Tuesday, December 28, 2004

கண்ணீர் தேசமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும்


கடல் கொந்தளிப்பைப் பற்றி எழுதுவதற்கே எனக்கு குற்ற உணர்ச்சி வருகிறது. இதைக் குறித்து எதுவும் செய்ய இயலாத கையாலகாத்தனம்தான் நிதர்சனம்.கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது கடலளவு என்பதை கடலே உணர்த்திய குரூர, துயரச் செயல் யாரும் எதிர்பாராத அளவு நடந்தேறியிருக்கிறது.


காலை விழித்ததே கட்டில் ஆடும் உணர்வில்தான். என்னைத் தவிர வீட்டில் யாருக்கும் அதைப் போன்ற உணர்வு ஏற்படவில்லை. ஏதோ உடல்நலக் கோளாறோ?என சிந்தித்த வேளையில் சன் டிவி செய்தி பூகம்ப நிகழ்வை உறுதிப் படுத்தியது.கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது பூகம்பம்.கடந்த முறையைப் போலவே சேதங்கள் ஒன்றும்
இருக்காது என்ற அதீத நம்பிக்கை அனைவருக்கும். எனவே கவலையின்றி இலக்கில்லா ஞாயிற்றுக் கிழமையை அனுபவிக்கத் தொடங்கியிருந்தேன். 10 மணி அளவில் காரைக்குடியிலிருந்து கவலையுடன் என் அண்ணன் போன் செய்தார். அவருக்கு கிடைத்த தகவல் "சென்னை கடலில் மூழ்குகிறது" என்பது. நான் அவரிடல் சிரித்துக் கொண்டே வதந்திகளை நம்பாதீர்கள் என கூறிவிட்டேன். சன் டிவியில் சிறப்புச் செய்திகள் 10.30க்கு என அறிிவித்திருந்தார்கள்.அதில்தான் கடல் கொந்தளிப்பு, மக்கள் பயப்பட வேண்டாம் என உண்மையாகவே உளறிக் கொட்டினார் ஒரு அறிவிப்பாளர்.


அப்போதுதான் மெதுவாக பயம் ஏற்படத் துவங்கியது. அது கூட கடற்கரை அருகே வசிக்கும் நண்பர்களைப் பற்றித்தான்.மனிதர்கள் பலியாவர்கள் என துளிக் கூட நினைக்கவில்லை. மிஞ்சிப் போனால் வீடு இழப்பார்கள் எனத்தான் நினைத்தேன்.( கடல் அலை மணற்பரப்பைத் தாண்டி சென்னை ஐஜி ஆபிஸ் வரை வரும் என்று யாராவது கற்பனையாவது செய்தது உண்டா?)அதன் பின்பு,எக்மோர் சென்றுவிட்டேன். அங்கங்கே மக்கள் கூடி நின்று கதைகள் பேசினார்கள்.கடல் நீர் மயிலாப்பூருக்குள் வந்து விட்டது என்றார்கள். என்னால் என்ன நடந்திருக்குன் என்பதை கற்பனை செய்யக் கூட இயலாதிருந்தது.மக்கள் கூட்டம் கூட்டமாக கூவத்தை வேடிக்கைப் பார்த்தனை. கூவத்தில் கடல் நீர் உட்புகுந்திருந்தது.என்னால் அதை முழுமையாக உணரமுடியவில்லை.அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டு போகும் கூவத்திற்கு திடீர் மவுஸ்.அடுத்த நாள் அதே கூவத்தை பார்த்த போதுதான் தண்ணீர் உட்புகுந்ததை என்னால் உணர முடிந்தது.


சிறப்புப் பதிவாக வந்த மாலைமலரைப் பார்த்த பின்புதான் பாதிப்புக்கள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உணர முடிந்தது. டிவியில் பார்க்க நேரிடும் கோரக் காட்சிகளின் சாத்தியம் பயமுறுத்தியது. பொன்னியின் செல்வனில் படித்த புயற்கால கடல் கொந்தளிப்பைப் போல பலமடங்கு வீர்யத்துடன் இயற்கையின் சீற்றம் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது.


உண்மையை சொல்லப்போனால் சுனாமியைப் பற்றிய புவியியல் அறிவு எனக்கு இல்லவே இல்லை.பூகம்பத்தால் உருவாகும் கடலலைகள் என்பதே என் மனைவியிடமிருந்துதான் அறிந்து கொண்டேன்.என்னைப் போன்று சுனாமிஅறியாத அறிவாளிகள்தான தமிழ்நாட்டில் பிரதானம். அதனல்தாம் கடல் பூகம்பம் ஆட்டத்தை ஏற்படுத்தியதோடு சரி. ஆபத்து ஏதுமில்லை என முடிவு செய்து விட்டோம்.டிவியில் மீண்டும் மீண்டும் சிரிப்பு பார்க்கத் தொடங்கி விட்டோம்.


இதைப்பற்றியஅறிவு இந்நாட்டுநிர்வாகத்திற்கிருந்திருந்தால்,அறிஞருக்கிருந்திருந்தால் இழப்பைக் கட்டுப்படித்திருக்கலாம்.வரலாற்று நிகழ்வுகளைப் ஆராய்ந்து அதனடிப்படையில் எதிர்கால பாதுகாப்புத் திட்டங்களை வகுக்கும் நமது மேலாண்மை முறை மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டது.கடலியல், புவியியல், மண்ணியல் பற்றிய ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்தியாவில் இவ்வாறான சேதங்கள் நிகழக்கூடிய சாத்தியங்களை உணர்ந்திருந்ததாக தெரியவில்லை.மேற்சொன்ன துறைகளில் பயில்வதற்கும் இளைஞர்கள் விரும்புவதில்லை. இதனால் இந்தியாவில் இதனைக் குறித்த ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்த அளவு இல்லை என நினைக்கிறேன்.


சில வாரங்கள் முன்பு சென்னை பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் பூகம்பத்தை கணிக்கக்கூடிய மாதிரியை உருவாக்கியதாகவும், அதனடிப்படையில் அஸ்ஸாமில் நிகழக் கூடிய பூகத்தை சரியாக கணித்ததாகவும் செய்தியை படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே மாதிரியால் இப்பூகம்பத்தை கணித்திருக்க முடியாமா என்பது தெரியவில்லை.


எப்படியிருந்தாலும் கடலடி பூகம்பம் சுனாமியை உருவாக்கும் என்ற அடிப்படை அறிவை கற்பிக்காத கல்வியை என்ன என்று சொல்வது? கடலடி பூகம்பம் சென்னைக்கு புதிதல்ல. 2001 செப்டம்பர் 26ம் தேதி பாண்டிச்சேரி அருகே கடலடி பூகம்பம ஏற்பட்டது. அப்போது மக்கள் பாதுகாப்பான திறந்த வெளிக்கு செல்ல வேண்டும் என கடற்கரையில் குவிந்தார்கள். அபோது கூட சுனாமியைப் பற்றி யாரும் பேசவில்லை.ஞாயிறன்றும் கூட, மாலையில் பூகம்பம் நிகழ்ந்திருந்தால் அனைவரும் கடற்கரைக்கு போயிருப்போம். சுனாமியாவது, பினாமியாவது. யாருக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது.


இத்தகைய அறியாமையை என்னவென்று சொல்வது?பூகம்பம் நடந்த பின் கடற்கரைக்குப் போய் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்த குடும்பத்தை கடல் விழுங்கி விட்டது.இத்தைகைய கொடுமையை என்னவென்று சொல்ல?


கடல்கொந்தளிப்பின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்தவுடன் நான் கவலைப்பட்டது கல்பாகக்ம் அணுமின் நிலையத்தைப் பற்றித்தான். இதன் சேதம் குறித்த சிக்கலுயும் பெரும்பாலோனோர் உணரவில்லை. இதுவும் நல்லதிற்குத்தான். இல்லாவிடில் இதைக்குறித்த வதந்திகளை பரப்பி இருப்பார்கள். பிபிசியில் இதைக் குறித்த கவலையை முதலில் வெளிப்படுத்தினார்கள். இதன் பின்பு ஹெட்லைன்ஸ் டுடே யில் இந்திய அணுமின் நிலைய இயக்குநர் தொலைபேசியின் மூலம் பேட்டி அளித்தார்.உலையை சட்டவுன் செய்ததாக குறிப்பிட்டார்.இருந்த போதும் நேற்று பிரதமரும், ஜனாதிபதியும் தமிழகம் வருவதை தள்ளிவைத்ததன் மூலம், அணுமின் நிலையத்தைப் பற்றிய புதிய சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டார்கள். இன்று ஆபத்தில்லை என அரசாங்கம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.


கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இந்நிகழ்விலிருந்து தனிமனிதனுக்கும், அரசாங்கத்திற்கும் நிறையவே இருக்கிறது.


முதலாவதாக இயற்கைச் சீற்றத்தைக் குறித்த பாதுகாப்பு திட்டத்தை வகுக்கும் போது "Worst case scenario" என்று சொல்லப்படும் மோசமான தாக்கத்தை உருவாக்கக்கூடிய சூழல்களை கற்பனை செய்து, அவ்வாறு நிகழும் பட்சத்தில் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான திட்டத்தை வரைய வேண்டியது அவசியம். இது இல்லாத பட்சத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதை புரிந்து கொள்ளவே நீண்ட நேரத்தை செலவிடவேண்டியிருந்தது.இது சென்னையில் மட்டுமல்ல.மற்ற கடலோர நகரங்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ள வேண்டிய செயல்.


இரண்டாவதாக,கடலோரங்களில் அமைக்கப்படும் அணுமின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்த நேர்மையான வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையம் வடிவமைக்கப் பட்டபோது சுனாமியின் தாக்கம் குறித்து அலசியிருப்பார்களா என்பது தெரியவில்லை. இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் வலு இவ்வுலைக்கு இருக்கிறதா என்பதை கண்டிப்பாக ஆராயவேண்டும். இல்லாவிடில் இதற்கு ஏற்படும் சேதம் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.மேற்கொண்டு கூடங்குளம் போன்ற இடங்களில் அமைக்கப்படும் அணுமின் நிலையங்களும் இயற்கையின் சீற்றத்தால் நிகழக் கூடிய ஆபத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


மூன்றாவதாக சென்னையை Seismic zone பிரிவில் இரண்டாவது பிரிவில் இருந்து மூன்றாவது பிரிவிற்கு மாற்றியிருக்கிறார்கள். 2001 ல் நிகழ்ந்த இம்மாற்றம் அனைவருக்கும் தெரியாது.இதன் மூலம் பூகம்பம் நிகழக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதை ஒத்துக்கொண்டுள்ளார்கள்.சாத்தியக்கூறுகள் அதகரித்திருக்கும் போது, பூகம்பத்தை தாங்கக் கூடிய குடியிருப்புக்களும், கட்டடங்களும் வடிவமைக்கப் பட வேண்டியது அவசியம். தற்போது கட்டடம் கட்டுபவர்கள், பூகம்பப் பாதுகாப்பை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்களா? பெருகியயுள்ள பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் பூகம்பத்தை தாங்கக் கூடியதா? இப்பொறுப்பை அரசாங்கம் தட்டிக் கழிக்கக் கூடாது.மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இருக்கிறது.


இவ்வுலகின் பாதுகாப்பின்மையை உணர்த்தியிருக்கிறது இந்த துயரச் சம்பவம்.சாதி மதங்களால் நம்மைப் பிரித்துக் கொள்ளலாம். அனைவரையிம் மரணத்தின் மும் சமன்படுத்தியுள்ளது இக்கடல். ஆனாலும் ஏழை, பணக்காரன் பிரிவை சமன் செய்ய இயலவில்லை. இறந்தவர்கள் பெரும்பாலும் ஏழைகள். மீனவர்கள். கடலை பிரார்த்தனை செய்யும் மக்கள். சுனாமி அடித்த பின்பும் சில மீனவப் பெண்கள் கடலிடம் பிரார்த்தனை செய்யும் காட்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளியிடிருந்தார்கள். மனதை மிகவும் நெகிழச் செய்த காட்சி அது. கடலையே நம்பி வாழ்ந்த அவர்களது வாழ்வில் மிகப்பெரிய நம்பிக்கை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது கடல்.அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது.இவர்களது வாழ்வை புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

மற்றபடி இப்படிப்பட்ட துயர நிகழ்விற்கு அருகாமையிலுக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்தி விட்டான் இறைவன். பொருளுதவி செய்வதைக் காட்டிலும் வேறு ஒன்றும் செய்ய இயலாத சாமான்ய மனிதானாகத்தான் இருக்கிறேன்.இலங்கையின் சேதங்கள் மிகவும் துயரத்தை ஏற்படுத்துகின்றன.பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போய், பிணங்களை எடுத்து, புதைத்து பல்வேறு உதவிகளை செய்யும் மனிதர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் நல்ல ஆயுளையும் செல்வத்தையும் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.


அத்தகைய மனித நேயமும், தைரியமும் இல்லாத சாமான்யன் நான்.

No comments: