விற்பனைக்கு ரெடி
ஹிந்து பத்திரிக்கையிலும் , பிசினஸ் லைன் பத்திரிக்கையிலும் ஐ பி எம் நிறுவனம் தன்னுடைய கணினி தயாரிக்கும் பிரிவை ( சர்வர்கள் தவிர) விற்க முன் வந்திருக்கும் செய்தியை கட்டம்கட்டி வெளியிட்டுள்ளார்கள். இது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
கணினி தயாரிக்கும் துறையில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் ஐ பி எம். கணினி உற்பத்தியில் பல ஆண்டுகளாக கோலோச்சியவர்கள். இடையில் வியாபார சரிவை சந்திக்க நேரிட்டாலும் பின்பு அதிலிருந்து மீண்டு வந்தவர்கள். இதற்கு உதவியாக அமைந்தது கணினி சார்ந்த சேவைகளை வழங்குவதில் அவர்கள் கவனம் செலுத்த தொடங்கியதுதான். ஐ பி எம்மின் சேவைத்துறை பன்மடங்கு வளர்ச்சி பெற்று அதிக லாபமீட்டும் துறையாக உருப்பெற்றது. கணினி விற்பனை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சேவைப்பிரிவு, தனிப் பெரும் லாபகரமான தொழிலாக உருப்பெற்றது. "Identifying and Exploiting opportunities" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதற்கான சிறந்த உதாரணமாக ஐ பி எம்மின் சேவைத் துறை முயற்சியை சொல்லலாம்.
புள்ளியில் ஆரம்பித்து கோலமாய் உயர்ந்த முயற்சிகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் துணி உற்பத்தி துறையில் ஆரம்பித்து( ஒன்லி விமல்- கவுதமியை வைத்து 90 களின் துவக்கத்தில் சிறப்பாக விளம்பரங்கள் வெளியிட்டார்கள்- ஞாபகம் இருக்கா?) , பின்ஒருங்கிணப்பு முறையில் ( தான் விற்கின்ற பொருளின் மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்வது) சிந்தடிக், பெட்ரோலியம் என்றெல்லாம் புதிய தொழில் துவக்கி, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக வலுப்பெற்றது. விமல் பிராண்டிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை தற்போது பலர் மறந்திருக்க கூடும்.
இன்றைய நிலையில்கணினி தயாரிப்பது என்பது அறிவுசார்ந்த தொழிலாக இல்லாமல் உற்பத்தி தொழிலாக மாறிவிட்டது. இதில் எவ்வாறு உற்பத்திறன் அதிகரிக்கப்படுகிறது என்ற அடிப்படையிலேயே வெற்றியாளர்கள்நிர்ணயிக்கப் படுகிறார்கள். லாப விகிதங்கள் குறைந்து வரும் இத்துறையில் போட்டிபோடிவதை விட, லாபம் அதிகம் கிடைக்கும் அறிவுசார்ந்த தகவல் தொழில்நுட்பத்துறையில் கவனம் செலுத்த முடிவு செய்து விட்டார்கள். சைனா நிறுவனம் ஒன்று ஐபிஎம்மின் கணினிப் பிரிவை வாங்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவிலும் இதைப்போன்ற வியாபார மாற்றங்கள் நிகழும் என நினைக்கிறேன். விப்ரோவின் கணினி தயாரிக்கும் தொழிலை பிரேம்ஜி விரைவில் விற்கக்கூடும் என நம்புகிறேன். விப்ரோ இன்போசிஸ், டிசி எஸ் போன்ற சேவை நிறுவனங்களுடன் போட்டி போடும் போது, கணினி தயாரிப்புத் தொழில் மட்டும் தனிப்பட்டு நிற்கிறது. மேலும் இத்தொழில் அவர்கள் முண்ணனி நிலையிலும் இல்லை. ஹச் சி எல் நிறுவனம் கணினிகள் விற்பதில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இன்னும் சவால் விட்டு வருகிறது.
ஐ பி எம் மிம் இந்த முடிவுக்கு வேறு காரணங்கள் உள்ளதா? சக வலை நண்பர்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்
No comments:
Post a Comment