Thursday, September 30, 2004

மணிச்சித்திரதாழ்" தான் "சந்திரமுகியா"?

ஞாயிறன்று தினத்தந்தி வாங்கும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். முந்திய தினமே மாலை மலரில் 'ரஜினியின் புதிய படம்" என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

தினத்தந்தியில் தலைப்புச்செய்தி என்றவுடன் பேப்பரை வாங்கி விட்டேன்.தினத்தந்தியின் இலவச இணைப்பான குடும்ப மலரில் இப்படம் மலையாள சூப்பர்ஹிட் படமான "மணிச்சித்திரதாழ்"ன் தழுவல் என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இதை நான் நேற்றுவரை படிக்கவில்லை. என்னுடைய அலுவலக நண்பர் குடும்ப மலரை படித்து விட்டு , படித்த செய்தியை அரைகுறையாக நினைவில் வைத்து ரஜினி டிரகுலா படத்தில் நடிக்கிறார் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். பாபாவில் "கடவுள்", சந்திரமுகியில் " டிரகுலா" வா? என நான் அதிர்ந்து போனேன். பின்பு வீட்டிற்கு சென்று குடும்ப மலர் பார்த்த பின்புதான் தெரிந்தது ம்ணிச்சித்திரதாழ்" தான் என் நண்பர் குறிப்பிட்ட படம் என்று. இன்றைய தினமணியும் இச்செய்தியை வெளியிட்டு உள்ளார்கள்.

"மணிச்சித்திரதாழ்" பாசில் இயக்கத்தில் மோகன்லால், சோபனா, சுரேக்ஷ்கோபி நடித்து வெளியான மலையாளப்படம். மோகன்லாலிற்கும், சோபனாவிற்கும் (??) இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. மர்மதேசம் சீரியல் மூலமாக தமிழகத்தில் பிரபலமடைந்த "split personality" பிரச்சனையை அடிபடையாக கொண்ட கதை. மிகவும் விறுவிறுப்பாகவும், சஸ்பென்சுடனும் காட்சிகள் நகரும். அமானுடக் கதைகளையும் மெல்லிய மானுட உணர்வுகள் இழையோட சொல்லும் வல்லமை பாசிலுக்கே உரியது. தமிழில் பாசில் எடுத்த "கிளிப் பேச்சு கேட்க வா" படத்திலும் பாசிலின் இவ்வல்லமையை காணலாம். படத்தில் தமிழ் பாடல்களும் , பாசுரங்களும் உண்டு. "ஒரு முறை தழுவ மாட்டாயா" என்ற பாடலுக்கு ஷோபனா நடனமாடும் பிண்ணனியில் அமைக்கப் பட்ட கிளைமாக்ஸ். அனைவரும் நிஜமாகவே சீட்டின் நுனிக்கோ, வீட்டிலிருந்து பார்த்தால் சோபாவின் நுனிக்கோ வந்து விடுவோம்.

மோகன்லால் இடைவேளைக்கு முந்திய காட்சியில்தான் அறிமுகமாவார்.மனோத்தத்துவ நிபுணராக கலக்கும் மோகன்லால் , பேய்க்கு பயப்படும் சீனிவாசனுடன் செய்யும் காமெடி- கலக்கல். இன்றும் ஏசியாநெட்டில் போட்டால் தவறாது இப்படத்தை பார்த்து விடுவேன். இப்படத்தை மாற்றி சந்திரமுகி என எடுக்கிறார்கள் என்றால் எனக்கு பயமாகத்தானிருக்கிறது.இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி கிடையாது. டூயட்கிடையாது.இடைவேளையின் போதுதான் அறிமுகமாவார். சண்டைக்காட்சிகள் கிடையாது . மோகன்லாலின் பாத்திரத்தை ரஜினி செய்யும் பட்சத்தில், எவ்விதமான மாற்றங்களை திரைக்கதையில் செய்யப் போகிறார்கள்.

இப்படத்தை தமிழில் எடுப்பதைக் குறித்தும், அதில் ரஜினி நடிப்பதைக் குறித்தும் இரு கேள்விகள் என்னுள் எழுகின்றன.

ஒன்று, கேரளப் பிண்ண்னியில் அமைந்ததால், அமானுட ரீதியான கதைகளில் ஒன்ற முடிந்தது. இதை தமிழகப் பிண்ணனியில் அமைக்கும் போது எந்த அளவு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? தமிழகத்தில் அமானுடப் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.

இரண்டு ரஜினிக்காக மோகன்லால் பாத்திரத்தில் மாறுதல் செய்யப்பட்டு, டூயட், சண்டை என்று சேர்க்கப்பட்டால் கதைக் கலன் சிதைந்து விடும். இதை எவ்வாறு தவிர்ப்பார்கள்?"தேன்மாவு கொம்பத்து" என்ற படத்தை சிதைத்துத்தான் "முத்து" எடுத்தார்கள். ஆனால் முத்துவை ரஜினி பட இலக்கணத்திற்கேற்ப மாற்ற முடிந்தது.

இப்படிப்பட்ட கதைக்கு ரஜினி ஒப்புக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. வித்தியாசமான ரோல் செய்ய அவர் ஆசைப்படுகிறாரா? அல்லது 'அன்புள்ள ரஜினிகாந்தில் வந்ததைப் போல, கதாநாயகத் தன்மையற்ற ரோலை செய்ய விரும்புகிறாரா?

இது எப்படிப்பட்ட படம் என்பதை ரஜினி முதலிலேயே தெளிவுபடுத்தி விடுவது நல்லது. அதற்குள்ளாகவே யாஹ¤ குழுமத்தில் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ரஜினி ரசிகனும், ரஜினிக்கென்று மானசீக கதை வைத்திருப்பதாக எனக்கு படுகிறது. ரஜினி கால்க்ஷ£ட் கொடுத்தால் இயக்குநராகவே மாறி விடுவார்கள்.

படம் இப்படித்தான் இருக்கும் எனத் தெளிவாகச் சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை கட்டுப்படுத்துவது நல்லது. பாபாவையே சாமி படம் என்று சொல்லியிருந்தால் கட் அவுட்டிற்கு பாலூற்றி படம் பார்த்து வந்திருப்போம் என்றார் சக ரசிகர் ஒருவர். சமூகப் படமாகவும் இல்லாமல், சாமிப்படமாகவும் இல்லாமல் கலவையாக இருந்ததால் கலங்கிப் போனார்கள் ரசிகர்கள்.( 300 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்டை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

மணிச்சித்திரதாழ் தான் சந்திரமுகியாக மாறுமா? என்பதில் இன்னும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. வாசு ரஜினிக்காக வேறு ஏதாவது கதை பண்ணுவார் என நம்புகிறேன்.

அப்படி இல்லாத பட்சத்தில், விபரீதமான முயற்சி என்றே ரஜினி ரசிகனான எனக்கு படுகிறது."ஆயிரம் ஜென்மங்கள்" போல ஒரு படத்தை தற்பொழுது ரஜினி வெளியிட்டால் எடுபடுமா?
விடை ரசிகர்கள் கையில்


Monday, September 27, 2004

பாடல் காட்சிகள் தேவையா?

விநாயகர் சதுர்த்தியின் போது சன் டீவியில் டாக்டர் கமல்ஹாசனின் பேட்டி மிகவும் அர்த்தம் செறிந்ததாக இருந்தது. அப்பொழுது அவர் பாடல்கள் திரைக்கதை அமைக்கும் போது தரும் இடைஞ்சல்களை குறித்து நொந்து கொண்டார். பாடல்கள் வேகமாக செல்லும் வாகனத்தின் தடைகளாக அமைவது பெரும்பாலும் உண்மையே. எண்பதுகளில் சில படங்கள் பாடல் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டன. அவற்றுள் "வண்ணக்கனவுகள்" மற்றும் கமலஹாசன் தயாரித்த "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றன. "வீடு" படத்திலும் பாடல்கள் இல்லை. ஆனால் இத்தகைய முயற்சிகள் தொடரவில்லை.

பாடல்கள் இல்லாத படங்களை தருவதற்கு வலுவான கதைகளும் , திரைக்கதைகளும் அவசியம். வண்ணக்கனவுகளும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடும் இவ்வகையை சார்ந்தவையே. ஆனால் எல்லாப்படங்களும் பாடல் இல்லாமல்தான் வர வேண்டும் என்பதில் என்னுள் இருக்கும் சினிமா ரசிகனுக்கு ஒப்புதல் கிடையாது. மரங்களை சுற்றியோ அல்லது தொப்புளில் ஆம்லெட் போடும் டூயட் பாடல்களை வேண்டுமானால் தவிர்க்கப்படலாம். பாடல்களைப் பற்றிய கமலின் கருத்தும் டூயட் பாடல்களை குறித்த கருத்தே என்பது என்னுடைய அனுமானம். ஏனென்றால் திறமையான இயக்குநர்களின்
கையில் பாடல்கள் சக்தி வாய்ந்த சாதனமாகத்தான் பயன்பட்டு வருகிறது.

பாலு மகேந்திரா, மகேந்திரன் முதலிய இயக்குநர்கள் காதல் பாடல்களையும் வித்தியாசமாக படமாக்கி ரசிகர்களை கவர்ந்தார்கள்.பாடல்களை பிண்ணனியில் ஒலிக்கவிட்டு, இயல்பு வாழ்க்கையில் நாயகனும் நாயகியும் எவ்வாறு இயங்கிறார்கள் என்பதை காண்பிக்கும் உத்திகளை இந்த இரண்டு மகேந்திரர்களும் வெகுவாக கையாண்டுள்ளார்கள். "நெஞ்சத்தைக் கிள்ளாதே" யிலிருந்து "பருவமே", ஜானியிலிருந்து " சினோ ரீட்டா", சதிலீலாவதி"யிலிருந்து " ராஜனோடு ராணி வந்து" என பல பாடல்களில் இவ்வுத்திகள் கையாளப்பட்டுள்ளது.

என்னைக் கவர்ந்த சில பாடல் காட்சிகளை இங்கே வழங்குகிறேன்

1. பருவமே புதிய பாடல் பாடு... : நீருக்குள் ஒருவர் பாடல் சாதகம் செய்வதிலிருந்து தொடங்கும் இந்தப் பாடலில், மோஹனும், சுஹாசினியும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். ஒரு பாடல் காட்சியில் பதினைந்து காஸ்டியூம் மாற்றி, டிரை ஐஸ் மூலம் புகை போட்டு கனவுக் காட்சிகளாக பாடல்கள் எடுக்கப் பட்ட காலக் கட்டத்தில் ( இப்ப மட்டும் என்ன வாழுதாம்?), இது புதுமையான , முழுமையான முயற்சி.இசைஞானியின் அற்புதமான பாடல்.

2.அழகிய கண்ணே : உதிரிப் பூக்களிலிருந்து இந்த பாடலைக் கேட்டால் மனம் மிகவும் கனத்துப் போகும். இன்றும் இப்படத்தின் தாக்கம் நெஞ்சில் நிலைத்திருக்க இப்பாடலும் ஒரு காரணம் என்று நான் கூறுவேன். பேபி அஞ்சுவின் சேட்டைகளும், அஸ்வினியின் பரிதாப முகமும் இப்பாடலைக் கேட்கும் போது பிம்பங்களாய் மனதில் விரியும். இளையராஜாவில் வயலின் துள்ளலுக்கு ஆட்டுக்குட்டியின் துள்ளல் ஒருங்கிணைத்து எடிட் செய்யப்பட்டிருக்கும். அடுத்த முறை பார்க்கும் போது கவனித்துப் பாருங்கள்.

3.நீ ஒரு காதல் சங்கீதம்: இப்பாடலும் மகேந்திராக்களின் பாணியில் மணிரத்னத்தால் எடுக்கப்பட்ட பாடல். கமல், சரண்யாவை கல்யாணம் செய்தவுடன் வரும் இந்தப் பாடல், அவர்களது காதல் வானத்தில் நம்மையும் பறவையாக பறக்கச் செய்து விடும்.பாடல் இல்லாமல் கல்யாணம் முடிந்தவுடன் கமலும், சரண்யாவும் வீட்டுக்குப் போக டாக்ஸி பிடிப்பதைப் போல காட்டியிருந்தால் யதார்த்தம் இருந்திருக்கலாம். ஆனால் கதையின் தாக்கம் குறைந்திருக்குமே. மும்பை பிண்ணனியில் எடுக்கப்பட்ட , சிறப்பான காதல் பாடல்.

4.நினைத்தாலே இனிக்கும்: "இது ஒரு இன்னிசை/தேனிசை மழை" என்று டைட்டில் கார்டிலேயே போடுவார்கள் இப்படத்தில். பல பாடல்கள் இப்படத்தில் இருந்தாலும் "நினைத்தாலே இருக்கும்" என்ற ஒரு வரியுடனும், முழுக்க முழுக்க "லாலா" என ஹம்மிங்குடன் அமைந்த இந்தப் பாடல் மனதை கனக்கச் செய்து விடும். சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் இப்பாடல் எடுக்கப் பட்டாலும் நம் மனம், கமலையும் ஜெயப்பிரதாவையும் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும். அதுதான் பாலச்சந்தரின் வெற்றி.

5.சொல்லத்தான் நினைக்கிறேன்: விஸ்வநாதனின் குரலில் படத்தின் முக்கிய பாத்திரங்களான சிவக்குமார் மற்றும் மூன்று பெண்களின் மன ஓட்டத்தை சித்தரிக்கும் பாடல். மிகவும் எளிமையான, ஆழமான வரிகள். இப்பாடலை திரைக்கதைக்கு இடைஞ்சல் என்று எப்படி கூற முடியும்? சொல்லப் போனால் பத்து சம்பவங்களால் விளக்கக் கூடிய மன உணர்வுகளை ஒரு பாடல் மூலம் சொல்லி திரைக்கதையை வலுப்படுத்தியிருக்கிறார் பாலச்சந்தர் என்றுதான் நான் சொல்வேன்.

பாடலற்ற படங்களை எடுப்பதை விட,பாடல்களை தேவையான அளவு பயன்படுத்துவதே சிறந்தது. "அலைபாயுதே" படத்தை பாடல்கள் இல்லாமல் எடுக்க வேண்டும் என்று மணிரத்னம் நினைத்தாரம். நல்ல வேளை. பாடல் இல்லாமல் கண்டிப்பாக அப்படம் வெற்றி பெற்றிருக்காது. அதே வேளையில் ஆயுத எழுத்து பாடல் இல்லாமல் இன்னும் அழுத்தமாக செய்திருக்கலாம் என்பது என் கருத்து.

இன்னும் நிறைய பாடல்கள் பற்றி எழுதலாம். பின்பு எழுதுகிறேன்.

Saturday, September 04, 2004

சாதீய ஆதிக்கங்கள்- தற்போதைய பிரச்சனைகள்

வரலாறுகளைப் பற்றி மட்டும் அலசி விட்டு, சம கால நிகழ்வுகளைக் குறித்து கவனமற்றிருப்பது பல துறைகளிலும் இருக்கும் குறைபாடுதான்.ஆனாலும் இன்னும் பிராமணத் துவேசம், தந்தை பெரியாரின் சமூக நிலைப்பாடு என்று
வரலாற்றினை மேற்கோள் காட்டி வாதாடும் மனிதர்களிடம் மாறி வரும் உலகையும் கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிக்கொள்கிறேன்.சாதீய ஆதிக்கங்களை குறித்த சமூகக் கவலை மற்றும் அக்கறை தேவையான ஒன்று என்றாலும், வராலாற்றை விடுத்து சமகால நிகழ்வுகளையும் நிறைய அலசுங்கள்.

இப் பதிவு வேறெந்த பதிவுக்குமான சார்வினையோ அல்லது எதிர்வினையோ அல்ல.பிராமணர்கள் ஆதிக்கமே, சாதீய ஆதிக்கம் என அடையாளம் காணப்பட்ட காலக்கட்டங்களிலிருந்து, நாம் பலமைல் தூரம் கடந்து வந்து விட்டோம். சமூகப்பாகுபாடுகளை களைந்து, அனைத்து துறைகளிலும் அனைவரும் பங்கு பெறுவதற்கான சூழலை இந்திய மாநில, மத்திய அரசாங்கள் ஏற்படுத்தி கொடுத்து விட்டன என நான் நம்புகிறேன். தனி மனித வளர்ச்சிக்கு காரணமாக அமையும் கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள இட ஒதுக்கீடுகள் பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் பயனுறும்
வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பெரியாரின் காலத்திய பிராமண சாதிய ஆதிக்கம் இன்று இருக்கிறதா? என்ற சிறிய, எளிய கேள்வியுடன் என் அலசலை ஆரம்பிக்கிறேன். இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும். இன உணர்வுகளும், அதன் அடிப்படையில் வழங்கிக் கொள்ளும் சலுகைகளும் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட இன உணர்வுகள் அனைவருக்கும் இருக்கிறது. சதவீதங்கள்
வேறுபடலாம்.

சாதிய அடையாளங்களைப் பிரதானப்படுத்தாமல் கல்வித்துறையிலோ, அரசியல் துறையிலோ அல்லது இலக்கியத்துறையிலோ பங்கு கொள்ள முடியாத சூழலைத்தான் நம் சமூகத்தின் குறைபாடாக நான் கருதுகிறேன். முற்காலத்திய சாதிய ஆதிக்கங்களுக்கு எதிரான போராட்டங்களும், சமூக நீதி நிலை நாட்ட வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் நம்முடைய தனிப்பட்ட சாதி அடையாளங்களை சாதிச் சான்றிதழ்கள் மூலமாக நிரந்தரப் படுத்திவிட்டது. இதை விலக்கிய அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்ள யாராலும் இயலவில்லை. என் நிறம் கருப்பு என்பதுடன்
என் சாதியைப் பற்றிய அடையாளத்தையும் சேர்த்தே வைத்திருக்கிறார்கள் அனைவரும்.

ஆதிக்க சாதியென்று பிராமணர்களை எதிர்த்து நடத்தப் பட்ட மாபெரும் சமூக இயக்கத்தின் வெற்றி, மற்ற இனத்திற்கான சமூக பங்கேற்பை/மதிப்பை அதிகப்படுத்தியது. ஆனால் இந்த இனங்களுக்குள்ளே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது முதல் சாபக்கேடு. பிராமணர்களின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்த இவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான
தங்களது ஆதிக்க மனப்பான்மையை கைவிட முழுமையாக முன்வராதது இரண்டாவது சாபக்கேடு . பிராமணர்களுக்கும் பிற சாதியினருக்கும் இடயேயான சாதிக்கலவரங்கள் நிகழ்ந்து உயிர் பலியாகி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பிற சாதியினருக்கிடையே சாதிக்கலவரங்கள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயிருக்கிறது தமிழகத்தில்.பெரியார் புகழ் துதிக்கும் பல்வேறு சமூக அமைப்புகளும் ,அரசியல் கட்சிகளும் இவ்வகையான பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்துள்ளன/இருக்கின்றன. பிராமணர்கள் சம்பந்தப்படாத சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு இக் கட்சிகள் அடிகோலிவிட்டன.

இன்றைய சமூகத்துறையில் இவ்விதமான ஏற்றத்தாழ்வுகளால் விளைந்துவிட்ட தீமைகள் ஏராளம். அரசியல் கட்சிகளின் சாதிய அடிப்படையிலான வேட்பாளர் தேர்வுகள். அரசு இயந்திரங்களில் ஊடுருவியிருக்கும் சாதிய உணர்வுகள், பெருகிவரும் சாதிய சங்கங்கள் இவையெல்லாம் சாதி என்ற அடையாளத்தை ஒருவனுக்கு தொடர்ந்து நினைவூட்டும் வண்ணம் இயங்கி வருகின்றன."சாதி அடிப்படையில் புறக்கணிப்பு" என்ற சமூக அநீதியை எதிர்த்து போராடிய பெரியாருக்கு நன்றிக்கடனாக சாதிய அடையாளங்களை மறந்து விடாத சமூக அமைப்பை உருவாக்கி நன்றிக்கடன் செய்திருக்கிறோம் நாம்.சலுகைக்களுக்காக பிற்படுத்தப் பட்டவனாக அடையாளம் காணப்படுவதில் நமக்கு எவ்வித கௌரவக் குறைச்சலும் இல்லை.

அடையாளம் அடையாளம் என்று திரும்ப திரும்ப புலம்புகிறான் என்று சொல்கிறீர்களா? இதனால் ஏற்படும் சிக்கல்தான் இப்பிரச்சனையை நிரந்தரப்படுத்தி விடுகிறது. சாதிய அடிப்டையில் ஒன்றிணைவது என்பது மாணவ சமூகத்திலுருந்தேதொடங்கி விடுகிறது. இதன் வீச்சை நான் முழுமையாக உணர்ந்தது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மேலாண்மை பயின்ற போதுதான். இரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கிடையேயான போட்டி, மெஸ் செகரட்டரி, சேர்மன் என்ற பல்வேறு தேர்வுகளில் வெளிப்பட்டது. இந்த போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வாங்கிய ஆசிரியர்களும் செயல்பட்டது மிகவும் அதிர்ச்சிக்குரிய உண்மை.கல்வியறிவு நாகரீகத்தை மேம்படுத்தவில்லை.சாதிய உணர்வுகளைவலுப்படுத்துகிறது.அரசியல் உணர்வுகள் மாணவர்களிடையே குறைந்து வருகிறது என்று மாலன் சொன்னார். ஆனால் சாதிய உணர்வுகள் வலுப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்று உரக்கச் சொன்ன சமூக ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கு சாதி வேண்டாம் எனச் சொல்ல தைரியமில்லை.

பொது நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் சாதி அடிப்படையிலான சங்கங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்காக தனி சங்கங்கள் வைத்துக் கொள்கிறார்கள். வேலையென்று உள்ளே நுழைந்த பின்பும், இணைந்திருப்பதில் என்ன பிரச்சனை? பிரிந்திருப்பது புறக்கணிப்பாலா? அல்லது சவுகர்யத்திற்காகவா?.

ஆனால் இத்தகைய பிற இனத்தவர்களையெல்லாம் ஒன்றுசேர்க்கும் விசயம் "பிராமணீய எதிர்ப்பு". அவ்வப்போது அது வரலாற்றுப் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டி நிகழும். தனக்குள்ளேயே ஒருவருக்கொருவர் குழிபறிப்பது மறந்து போகும்.

பார்ப்பார் பட்டி, கீரிப்பட்டி என்ற இரு ஊர்களில் பஞ்சாயத்து தேர்தல் நிகழ்வது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது. இதுரிசர்வ்ட் தொகுதி. தலித் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஆனால் யாரும் முன்வரவில்லை. ஏனென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை. இந்திய சனநாயகத்திற்கு இடப்பட்ட மிகப்பெரிய சவால் இது. தாழ்த்தப்பட்டவர்களிம் ஆளுமையை
ஏற்றுக்கொள்ளாத பிற இன மக்கள். பெரியார் புகழ் போற்றும் அனத்துக் கட்சிகளும் தீர்க்க இயலாத விசயம். மீண்டும் இங்கே தேர்தல் விரைவில் நடக்கப் போகிறது.இவ் விசயத்தில் எங்கே போனது சமூக நீதி?

இதற்கான விடைகளை காணும் தைரியம் இருக்கிறதா நம்மிடம்.இதை விடுத்து வரலாற்றினை அலசவும் படிக்கவும் எனக்கு விருப்பமில்லை.