Monday, January 17, 2005

வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்

சங்கரமடப் பிரச்சனையின் பரிமாணங்கள் பல்வேறு விதமாக மாறி, தற்பொழுது மிகவும் சிக்கலான நிலைமையை அடைந்து விட்டது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நியாயமானதுதான் என நினைத்தவர்கள் கூட தற்போது இதன் பின்புலத்தில் இருக்கும் உண்மை சாமான்யர்களின் அறிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்துவிட்டார்கள். ஆனால் தனி மனிதனுக்கோ அல்லது இயக்கத்திற்கோ அரசாங்கத்தால் விளைவிக்கப்படும் இன்னல்களை, நமக்கு அம்மனிதனின் மீதோ அல்லது இயக்கத்தின் மீதோ இருக்கும் சுய விருப்பைப் பொறுத்தே ஒப்புக் கொள்கிறோம் அல்லது எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.

அரசாங்கமும் மனிதர்களின் சுயவிருப்பங்களையும் வெறுப்பினையும் தன்னுடைய செளகர்யத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது.அரசாங்கத்தின் வழிமுறைகளை நடுநிலைமையுடன் அலசக் கூடிய விமர்சகர்களோ, பத்திரிகையாளர்களோ தற்போது இல்லை.தன்னுடைய எதிரியின் மீது அரசாங்கம் அராஜக தாக்குதலை மேற்கொண்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. தன் மீது பாய்ந்தாலோ அய்யகோ என குரல் கொடுக்கிறார்கள்.

சங்கர மடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் நடவடிகைகளை அலசும் போது அது சட்டம் செய்யக் கூடிய கடமை மட்டுமே என யாராவது நியாயப்படுத்தினால் அது மடமை மட்டுமே. நசுக்கப்படுபவர் ஜெயேந்திரர் என்றவுடன் வரவேற்கும் வீரமணியும், ஞாநியும், நெடுமாறன் மேல் இதைப்போல நடவடிக்கை எடுத்தால் அராஜகம் என கூக்குரலிடுவார்கள். இது எவ்விதமான நடுநிலைமை? தனக்கு பிடிக்காதவரின் மீது எடுக்கப்படும் சில அராஜக நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கும் ஒருபடி மேலே போய் பாராட்டுவதும் பகுத்தறிவு வாதமா?

தமிழக அரசின் போலீஸ் நடவடிக்கைகள் , கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. நீதித் துறையின் கைகளை கட்டிப்போட்டு போலிஸ் நடவடிக்கைகளை எடுப்பது இவர்களது ஸ்டைல். கலைஞர் கைதிலிருந்து, ஏன் அதற்கு முன்பே பரிதி இளம்வழுதியின் கைதிலிருந்தே இந்த வழிமுறை துவங்கி விட்டது. கலைஞர் கைதின் போது நீதிபதி அசோக்குமார் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்ததும், அதற்காக அவர் எதிர் கொண்ட சிரமங்களும் அனைவரும் அறிந்ததே.

அதன் பின்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பாய்ந்தது கஞ்சா கேஸ். இதிலும் போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. சுதாகரன் என்ற தனிமனிதனின் நேர்மையைப் பற்றிய பிரமாதமான கருத்து யாருக்கும் இல்லை. எனவே "இவருக்கு வேண்டியதுதான்" என்பதே வெகுஜனக் கருத்தாக இருந்தது.

ஆனால் இத்தகைய வழிமுறைகளுக்கு எதிராக நாம் கடைபிடிக்கும் மவுனம் , அரசாங்கத்திற்கு அளிக்கும் அதீத தைரியத்தையும், நாளை இத்தகைய அராஜகம் நம் மேலேயே ஏவப்படலாம் என்ற ஆபத்தையும் நாம் உணரவில்லை. கிட்டத்தட்ட சுனாமி அலைகளை கரையிலிருந்து வேடிக்கைப் பார்த்த அறியாமைதான் நம் அனைவரிடமும் இருக்கிறது.

கலைஞர் கைதான போது ஜெயேந்திரர் வேடிக்கைப் பார்த்தார். செரீனா கைதான போது அனைவரும் வேடிக்கைப் பார்த்தோம். பொடா சட்டங்களின் துஷ்பிரயோகத்தை பிஜேபியும் சோவும் வேடிக்கைப் பார்த்தது. இன்று ஜெயேந்திரரின் பிரச்சனையை வீரமணியும், ஞாநியும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அரசு ஊழியர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்ட பெரிய ஆங்கிலப் பத்திரிக்கை பட்டாளமேயிருந்தது. ரீடிப் தளத்தில் பல கட்டுரைகள் ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதப்பட்டன. இன்று அதே தளத்தில் ஜெயேந்திரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் சுய விருப்பு வெறுப்பின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நடுநிலைமையுடன் ஆராயும் மனோபாவம் அனைவரிடமும் இல்லாததுதான்.

இதன் விளைவென்ன தெரியுமா?போலிஸ் பற்றிய பயம் நம் அனைவரிடமும் அதிகரித்து உள்ளது. "கஞ்சா கேஸ் போட்டிருவாங்கப்பா" என பயத்தை வெளிப்படுத்துகிறோம் நான் பெயிலபிள் வாரண்ட் , ஆண்டிசிபேட்டரி பெயில் பற்றிய லீகல் லிட்டரசி பெருகியுள்ளது. இதன் நடுவில் "காவல் துறை உங்கள் நண்பன்" என்பது வெறும் கேலிக் கூத்தாகப் போனது.

ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட போலிஸ் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டன. இன்று அராஜக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக நாளை ஆட்சிக்கு வர நேரிட்டால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும் என நினைக்கிறீர்களா? அராஜகம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. மெளனச் சாமியாராய் பொறுத்துக் கொண்ட உங்களையும் என்னையும் தவிர வேறு யாரையும் இதற்காக குறை சொல்ல முடியாது.

சங்கர மடம் அல்கொய்தா போல உருவகப்படுத்தப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. ஜெயேந்திரரின் புலன் விசாரணை சிடி எதிர்கட்சி டிவி சானலுக்கு கிடைக்கிறது. இதைக் கசிய விட்டது யார்? யார் மீதும் இந்தக் கசிவை குறித்த துறை ரீதியான விசாரணை கூட ஏன் துவக்கப்படவில்லை? நாளை முக்கியமான ராஜாங்க ரகசியங்கள கசியாது என்பது என்ன நிச்சயம்?

சங்கர மட வழக்கிற்கு பல தனிப்படைகள் அமைக்கப் படுகின்றன. எக்கச்சக்கமான செலவு. இவற்றுக்கெல்லாம் நடுவே கூலிப்படையினால் முன்னாள் மந்திரி ஆலடி அருணா கொல்லப்படுகிறார். ஆளுங் கட்சியின் முன்னால் அமைச்சரே கொல்லப்படுகிறார். போலிஸின் பயமின்றி தமிழகமெங்கும் கூலிப்படைகள் உலவுகின்றன. இவையெல்லாம் இருக்க தமிழகத்தை அமைதிப் பூங்கா என்று பறை சாற்றிக் கொள்கிறார்கள்.

சுயவிருப்பங்களுக்கு அப்பாற்பட்ட சீரிய சிந்தனையும்,ஜனநாயக வலியுறுத்தலும் நம் தேசத்தின் அமைதிக்கு இன்றியமையாதவை. இந்த பங்களிப்புக்கு நாம் தயாரா என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியதே இன்றைய அவசியம்.

7 comments:

Indianstockpickr said...

//தனக்கு பிடிக்காதவரின் மீது எடுக்கப்படும் சில அராஜக நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதற்கும் ஒருபடி மேலே போய் பாராட்டுவதும் பகுத்தறிவு வாதமா?
//

நடுநிலைவாதிகள் என்ற போர்வையில் உலாவிவரும் பகுத்தறிவாளர்களுக்கு இந்தபதிவு செம்மட்டியால் அடித்தது போலிருக்கும். தங்களின் விருப்புவெறுப்புகளை அலசி அதற்கேற்ப பகுத்து அறிவதே பகுத்தறிவு என ஆகிவிட்டது. இனி எத்தனை பெரியார் வந்தாலும் இந்நிலை மாறவாய்ப்பில்லை!!

Kasi Arumugam said...

ஆக, ஒன்று மட்டும் நிச்சயம்:

இதைப் படித்ததில் ஜெயலலிதா, கருணாநிதி, பிஜேபி, செரினா, சோ, வீரமணி, ஞாநி, நெடுமாறன், . . . எல்லாரும் ஒரே மட்டத்தில்தான் இருக்கிறார்கள் என்பது இந்த நிறுவப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. கொஞ்ச நாள் முன் வரை அவர்கள் எல்லாம் குட்டையில் ஊறிய மட்டைகள், இவர் ஒருத்தர் மட்டும் மாணிக்கம் என்று இருந்தது. அது இல்லை இப்போது. அவ்வளவுதான் சொல்ல முடியும். மற்றபடி யார் சரி யார் தவறு என்பது மாறிக்கொண்டே உள்ள சக்கரம்தான். எதுவுமே நிரந்தரமில்லை.

PKS said...

அன்புள்ள ராஜ்குமார்,

உங்கள் கருத்துச் சாயல் தெரிந்தாலும், பதிவின் அடிப்படைக் கருத்துடன் ஒத்துப் போகிறேன். எந்தக் காரியத்தையும் கொள்கை, அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கிற ஒருதலைப் பார்வையால் ஏற்படுகிற விளைவுதான் நீங்கள் சொன்ன நடுநிலையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கறது. இவ்விஷயம் குறித்து அருண், நாமக்கல் ராஜா, மூக்கு சுந்தர் ஆகியோர் முன்னர் எழுதியதற்கும், இப்போது எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகளைத் தாங்கள் கவனித்திருக்கலாம். எனவே, அந்த நடுநிலையாளர்களில் வலைப்பதிவர்களும் அடக்கம். ரவி ஸ்ரீனிவாஸ் போன்றோர்கூட கொஞ்சம் அதிகமாகவே ஜெயேந்திரர் விஷயத்தில் உற்சாகப்பட்டு விட்டார்கள். ஜெயேந்திரரின் கருத்துகளிலும் நடைமுறைகளிலும் உடன்பாடில்லை என்பதைச் சொல்லிவிட்டு, சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்கிற முதிர்ச்சியுடன் நிறுத்திக் கொண்டவர்கள் அருணா ஸ்ரீனிவாசன், நான் என்று வலைப்பதிவில் மிகச் சிலரே. இவ்விஷயத்தில் ஜெயேந்திரரை ஆதரித்தும் எதிர்த்தும் பத்திரிகைகள் போல, வலைப்பதிவு நண்பர்களும் "கலக்கி" மகிழ்ந்தார்கள். மகிழ்கிறார்கள்.

இப்போதும்கூட, தனிப்பட்ட முறையில் ஜெயேந்திரர்மீது எனக்குப் பெரிய அபிப்பிராயமில்லை. ஜெயலலிதா அரசாங்கம் இந்த வழக்கில் நிறைய சொதப்பி இருக்கிறது என்றாலும் அதற்கான பலனை ஜெயேந்திரருக்கு அளிப்பது சரியாகுமா என்ற கேள்வி எனக்கு உள்ளது. ஆனாலும், சட்டம் தன் கடமையைச் செய்ய விட்டுவிட்டு வாய்மூடிக் கொண்டிருப்பதுதான் சரியான செயலென்று பலர் அமைதியாக உள்ளனர். அவர்களுள் நானும் ஒருவன். சுப்ரீம் கோர்ட்டும் இப்போது இதில் நுழைந்திருக்கிறது. ஜெயலலிதா அரசாங்கம், சங்கர மடம், காவல் துறை, ஆகியவற்றைவிடச் சற்று அதிகமான மதிப்பு எனக்கு நீதித்துறை மீது இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இப்படிப்பட்ட ஒரு முக்கிய வழக்கில், சட்டப்படியான வழியிலேயே நடந்து கொள்ளும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பும் இருக்கிறது.

சட்டப்படி அல்லது சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, இவ்வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை ஆகவேண்டி நேர்ந்தாலும், அவர் மீது எனக்கு நல்லபிப்பிராயம் வந்துவிடப் போவதில்லை. அவரும் விஜயேந்திரரும் மடத்தின் பொறுப்புகளை ஏற்கனவே துறந்திருப்பது குறைந்தபட்சத் தேவையாக இருந்திருக்கும். அப்போதாவது, விட்டு விலகுகிறார்களா என்றே நான் எதிர்பார்ப்பேன். எனவே, அவர்கள் விடுதலை ஆனாலும், தண்டனை பெற்றாலும், அவர்கள் பால் எனக்குள்ள கேள்விகள் தொடரும். எனது கேள்விகள் சட்டம், அரசியல் ஆகியவற்றின் பாற்பட்டதாக இல்லாமல், தத்துவம், விழுமியங்கள் பாற்பட்டதால், சட்டத்தையும் அரசியலையும் மீறி நிற்கிற தார்மீகம் அவற்றுக்கு உண்டு. அந்தக் காரணத்தினாலேயே ஜாமீன் மறுக்கப்பட்டதைக் கொண்டாட ஒரு பதிவு போடாமலும், ஜாமீன் கிடைத்தைக் கொண்டாட ஒரு பதிவு போடாமலும் இருக்கிறவர்களில் ஒருவனாக இருக்கிறேன். நான் நாத்திகன் அல்ல. என் மதத்தை மதிக்கிற, பிற மதங்களையும் என் மதம்போல நேசிக்க விரும்புகிற, முயலுகிற இந்து. எனவே, ஓர் இந்துவாக, ஜெயேந்திரரின் மீதும் விஜயேந்திரரின் மீதும் எனக்குள்ள கோபமும் விமர்சனமும் சட்டம், அரசியல் ஆகியவற்றைவிட வலுவானவை. சமாதானங்களாலும் தர்க்கத்தாலும் அடக்க இயலாதவை. விழுமியமும், நடத்தையும், துறவற ஒழுக்கமும் கொண்டு நிரூபிக்கப்பட வேண்டியவை. அப்படி நிரூபிக்கிற வாய்ப்பை தகுதியை ஏற்கனவே ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் இழந்துவிட்டார்கள்.

மற்றபடிக்கு, வழக்கையும் அதன் போக்கையும் அமைதியாகக் கவனிப்பதே இப்போதைக்கு உசிதமான செயல். அப்படி செய்யாமல் நடுநிலையாளர்கள் வாயைத் திறந்து உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொட்டினால், பின்னர் அவற்றைத் தேடி நாமே தின்றாக வேண்டிய நிலை உண்டாகும். அரசியல் செய்பவர்கள் சார்பாகவும், எதிர்த்தும் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் பார்வைகள், கருத்துகள் பொய்த்துப் போவது பற்றிக் கவலையில்லை. அதற்கான காரணத்தை மனசாட்சி தவிர பிறவற்றின்மீது போட்டுத் தப்பித்துக் கொள்கிற மனசாந்தி அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

அன்புடன், பி.கே. சிவகுமார்

SnackDragon said...

கருத்து எனபது சொன்னால் தான் தெரியும். சொல்லாமல் மெளனமாய் இருந்திருந்தால், இன்றூ வீரமணியையோ,ஞாநியையோ நம்மால் குறைசொல்லமுடியாது. அது போலவே மவுனம் காத்திருப்பவர்களும் எல்லாம் தெரிந்த தீர்க்கதரிசிகள் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது அது எவ்வாறு மெச்சுரிட்டி என்று சொல்லிக்க ஏதுவாக இருந்தாலும், தன் சார்புடையவை நடக்காதா என்று பொறுத்திருந்ததற்காக் அல்ல என்று எப்போதும் நிருபிக்க முடியாது. அந்த வகையில் ஒருவருக்கு கருத்து சொல்வது அவசியமும் கூட.எதிர்பார்த்திருப்பதை எழுதுவதிலும் கூட ஒரு குறைந்தபட்ச தைரியம் தேவைப்படுகிறது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாம். முதலில் ஒரு மூன்றாம் தர தளமாகிய ஜெயலலிதாவின் அரசியலைக் கொண்டு கருத்துகளையும் சார்புகளையும் பேசுவது வேண்டுமாகில் குற்றமென்க் கொள்ளலாம். வழக்கமாய் தெரியும் வெளிப்படையான நிலைப்பாடு தெரியாமல் இது ஒரு களி சுட்ட வழக்கு என்பதால் முரணான் கருத்துக்கள் நிச்சயம் வரும். வந்திருக்கவேண்டும்.

ஆகப் பெரியதென சொல்லலவேண்டுமெனில், ஜெயேந்திர, விஜேயேந்திர மட ஞாநிகளின் மசிருக்கும் உதவாத கடவுட்த்தோற்றக்கட்டமைப்பு உடைக்கப்பட்டு இனிமேலும் அது அதே வீச்சுடன் தொடராது என்ற விதத்தில் இது ஒரு முழுவெற்றியுடையது அல்லது கணிசமான வெற்றியுடையது என்றுதான் சொல்லுவேன். அந்த இரு தனிமனிதர்களுக்கு சமூகத்தில் சாமானியனுக்கு கிடைக்கும் அதே நீதி வழங்கல் கொஞ்சமும் குறைவோ கூடவோ இன்றி வழங்கப்படுதலே சரியாகும். ஆனாலும் கூட சூழலின் சாதக பாதக நிலைகளை பார்க்கும் பட்சத்தில், இவ்வழக்கும் மொத்தமாய் மூடி மறைக்கப்படும் விடும் என்றோ, அதற்கு மாறாய் நடக்காது என்றும் நாம் மொத்தமாய் நம்பவியலாதெனவும் சொல்லிக்கொள்ள் விரும்புகிறென்.

இது குறித்து நான் எழுதும் முதல் கருத்து இதுவே எனவும் சொல்லிக்கொள்கிறேன்.

Vanthiyathevan said...

//ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட போலிஸ் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டன. இன்று அராஜக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக நாளை ஆட்சிக்கு வர நேரிட்டால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும் என நினைக்கிறீர்களா? அராஜகம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. மெளனச் சாமியாராய் பொறுத்துக் கொண்ட உங்களையும் என்னையும் தவிர வேறு யாரையும் இதற்காக குறை சொல்ல முடியாது.//

முற்றிலும் ஒத்துப்போகின்றேன். நல்ல பதிவு...எதிர்காலத்தை பற்றி கவலையையும், பயத்தையும் உருவாக்கியபோதும்...

இராதாகிருஷ்ணன் said...

//இதன் பின்புலத்தில் இருக்கும் உண்மை சாமான்யர்களின் அறிதலுக்கு அப்பாற்பட்டது//

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

//கலைஞர் கைதான போது ஜெயேந்திரர் வேடிக்கைப் பார்த்தார். செரீனா கைதான போது அனைவரும் வேடிக்கைப் பார்த்தோம். பொடா சட்டங்களின் துஷ்பிரயோகத்தை பிஜேபியும் சோவும் வேடிக்கைப் பார்த்தது. இன்று ஜெயேந்திரரின் பிரச்சனையை வீரமணியும், ஞாநியும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அரசு ஊழியர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்ட பெரிய ஆங்கிலப் பத்திரிக்கை பட்டாளமேயிருந்தது. ரீடிப் தளத்தில் பல கட்டுரைகள் ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதப்பட்டன//

தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும் - இப்பொழுது சாமனிய மக்களான நாம் என்ன சொல்வது. அமெரிக்கா போன்ற நாடுகளில் காவல் துறையின் சின்ன வரம்பு மீரல்கள் கூட பூதகரமாய் பார்க்கப் பட்டு விமர்சிக்கப் பட்டு, காவல் துறையிடம் இருந்து மில்லியன் டாலர்களில் இழப்பிடு பெறப் பட்டு கொடுக்கப் படுகிறது. நாம் மக்கள் இதற்காக என்ன செய்தோம். நீதித் துறை வலுவுள்ளதாக இருந்தாலும், காவல் துறையின் பல்வேறு தவறுகள் சாமானியர்களால் குரல் கொடுக்க முடியாத நிலையிலேயே இன்றும் உள்ளோம் என்பதனை மறந்து விடக் கூடாது.