Saturday, January 29, 2005

வளரும் நாட்டின் அவலங்கள்- ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம்

விமானப் பயணத்தின் போது படிக்கக் கிடைக்கும் செய்தித்தாள்கள் அவ்வப்போது சுவையாக இருக்கும். நாம் போவது ஹைதராபாத் என்றாலும் விமானம் மும்பையிலிருந்தோ அல்லது கல்கத்தாவிலிருந்து வந்திருப்பதால், அந்தப் பிராந்தியத்திற்குரிய செய்தித்தாளை படிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இம்முறை மும்பை டைம்ஸ் ஆப் இண்டியா படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படிக்க நேரிட்ட செய்தி மிகுந்த அதிர்ச்ச்சியை அளித்தது. அரபு நாடுகளில் வசிக்கும் ஒருவர் தன் மகனை படிப்பதற்காக போபால் அனுப்பியிருக்கிறார்.அவருடைய உறவினர்கள் போபாலின் சிறந்த பள்ளியில் சேர்ப்பதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள். சேர்க்கை முறையின் ஒரு பகுதியாக எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்தப் பையனும் ஒரு மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளான்.

அங்கே ஜெனரல் அனஸ்தீஸியா கொடுத்து ஸ்கேன் எடுத்துள்ளார்கள். ஸ்கேன் எடுத்த பின் பையனின் மயக்கம் தெளியவில்லை. ஸ்கேன் எடுத்த இரு டாக்டர்களும் இன்னும் சிறிது நேரத்தில் பையன் எழுந்து விடுவான் என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள்.ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு போனதும் பையன் எழுந்து விடுவான் என்று கூறி வீட்டுக்கும் அனுப்பி விட்டார்கள். பையன் கடைசி வரை எழவேயில்லை.மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டான்.

இச்செய்தி தரும் அதிர்ச்சியின் பரிமாணங்கள் பலவாக இருக்கிறது. முதலாவது பிரச்சனை- பள்ளியில் சேர்க்கும் போது எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? பள்ளி ரெசிடென்சியல் ஸ்கூலா? என்பது தெரியவில்லை. ரெஸிடென்சியல் பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை கட்டாயமானதா? அதன் முக்கியத்துவம் என்ன? சாதாரண மருத்துவப் பரிசோதனையும், மருத்துவர் சான்றிதழும் போதாதா? இக்கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை.

எனக்கென்னமோ இந்த ஸ்கேன் வலியுறுத்தல் எல்லாம் மிகப்பெரிய வியாபாரத் தந்திரமாக படுகிறது. மருத்துவமனையும் , பள்ளியும் இணைந்து கொள்ளையடிக்கும் யுக்திதான் இது.பணக்காரப் பள்ளிகளின் சேர்க்கை முறைகளை குறித்த தணிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்வதில்லை. இப்பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும் மேல்வர்க்கமும் மந்தை ஆட்டு மனோபாவத்தால் கேள்விகள் எழுப்புவதில்லை.எனவே எவ்வித சிக்கலுமில்லாமல் செழிக்கிறார்கள் கல்வி வியாபாரிகள்.

இரண்டாவது பிரச்சனை- மருத்துவர் குழாமை பற்றியது. Diagnostic treatment என்ற கணிப்பு அடிப்படையிலான மருத்துவ முறைகளை தேவைக்கும் அதிகமாக வலியுறுத்தி வருமானத்தை பெருக்குவதில் பெரும்பாலான மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலான மருத்துவர்களுக்கு சொந்தமாக ஒரு ரத்தபரிசோதனை நிலையம்,ஸ்கேன் சென்டர், மருந்துக்கடை எல்லாம் உள்ளது. எனவே இந்த அனைத்து வணிகமும் செழிக்கும் வகையில் நோயாளிகளுக்கு பரிசோதனைகளும், மருந்துகளும் எழுதித் தருகிறார்கள். நோயாளி கொடுக்கும் பீஸைக் காட்டிலும்,சிறந்த வருமானம் மேற்குறிப்பிட்ட வணிக நிலையங்களிலிருந்து மருத்துவர்களுக்கு கிடைக்கிறது.

இவர்களுக்கு எதிரான துவேசத்தை மனதில் சுமக்கிறோம் .ஆனாலும் வெளிப்படுத்த ஏதோ ஒரு தயக்கம். இந்த தயக்கத்தின் தொடர்ச்சிகள், பள்ளியில் சேர விரும்பிய சிறுவனின் எதிர்பாராத மரணத்தைப் போன்ற அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடுகிறது.

முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியவை- மேற்கூறிய அசம்பாவிதங்கள். மந்தைஆட்டு மனோபாவம் அகற்றப்பட்ட தனி மனித விழிப்புணர்வைத் தவிர, வேறு தீர்வுகள் இதற்கு இல்லை.

2 comments:

துளசி கோபால் said...

அடப்பாவமே!

Jsri said...

இதை மந்தை ஆட்டு மனோபாவம்னு சொல்றதைவிட, யாருமே எந்தப் பெரிய பிரச்சனையோ, விபத்தோ, நோயோ தனக்கோ தன்வீட்டுக்கோ வராதுன்னு நினைக்கற ஒரு எண்ணம்தான் காரணம். அந்தப் பள்ளியிலேயே இருக்கற மற்ற மாணவர்களின் பெற்றோர்கள்கூட அப்படித்தான் நினைப்பாங்க. அடுத்து வரவங்க எல்லாம் டெஸ்ட் ரிப்போர்ட்டோட சீட்டுக்கு காத்திருப்பாங்க. ஆனா இது மாறித்தான் ஆகணும்.