Monday, May 30, 2005

அவலம்: கவிதை

என்னுடைய மற்றுமொரு கவிதை முயற்சி. இதில் கவிதை இருக்கிறதா என்ற அடிப்படைக் குழப்பத்தைத் தவிர, உபயோகிக்கும் வடிவத்தில் எது கொஞ்சமாவது தேறும் என்ற மற்றோரு குழப்பமும் சேர்ந்து கொண்டது. எனவே இரு வடிவத்தில் ஒரே கவிதையை (?) வழங்கியிருக்கிறேன்.
வடிவம் 1

உள்ளிருப்போர்
வெளியே தெரியாத
"ஏசி" கார்

ஆள் இல்லாத
பின்சீட் நோக்கி
பிச்சை எடுத்தவளிடம்

காசு போடாமல்
களவாடிவிட்டேன்
இக்கவிதையை.

வடிவம் 2

உள்ளிருப்போர்வெளித்தெரியாத
"ஏசி" கார்

எப்படிச் சொல்வது
சிக்னல் பிச்சைக்காரியிடம்
பின் சீட்டில்ஆளில்லை என்பதை?

எந்த வடிவம் கொஞ்சமாவது தேறுகிறது?

Thursday, May 26, 2005

பொறியியல் கல்வி- நுழைவுத் தேர்வு தேவையா?

நுழைவுத் தேர்வு என்பது சமீப காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விசயமாகிவிட்டது. இன்று நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று மருத்துவர் ராம்தாஸ் மற்றும் ஜி. கே வாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளும், நேற்று முனைவர் ஆனந்தக் கிருஷ்ணன் " பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகிறார்கள்" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய செய்திகள். இவற்றை அரசியல்வாதிகளின் மற்றுமொரு அறிக்கை என ஒதுக்கித் தள்ள முடியாது. ( முனைவர் ஆனந்தக்கிருஷ்ணன் அரசியல்வாதியல்ல)

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்ப்பிற்கு முன்பிருந்த நேர்முகத் தேர்வு முறையை மாற்றி, நுழைவுத்தேர்வு முறையை எம்.ஜி,ஆர் காலத்தில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு கிடைத்த வரவேற்பும், அதனால் விளைந்த பலன்களும் அதிகம். நேர்முகத் தேர்வில் சாத்தியப்பட்ட தில்லுமுல்லுகளை அது களைந்ததோடு, கிராமப்புற மற்றும் கீழ்தட்டு மாணவர்களுக்கும் இடம் கிடைக்க வகை செய்தது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் செய்த மற்றோரு சீர்திருத்தம்-தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்தது. ஆரம்பத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பிருந்தாலும், இன்று பொறியல் திறன் கொண்ட மனிதவளத்தில் தமிழகம் முண்ணனியில் இருப்பதற்கு, தனியார் பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம்.

ஆனால் பிற்காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகியதும், பல கல்லூரிகள் தரமற்று இயங்குவதும், பொறியியல் கல்வியின் தரம் குலைந்து போனதும் வேறு வகையான பின்விளைவுகள். அவை எல்லா நானயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளது என்ற தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்து விட்டன. இதே தத்துவத்தை உணர்த்தும் வகையில்தான் நுழைவுத்தேர்வுகளும் மாறிவிட்டன.

நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் இடமளிக்கும் முறையின் தற்கால அவசியத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். கல்லூரியில் இட அனுமதி பெறுவதை எளிதாக்கும் நோக்குடன் துவக்கப்பட்ட இத்திட்டம், பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக தற்போது மாறிவிட்டது. இத்திட்டல் அமுல் படுத்தப்பட்ட காலத்தில் இத் தேர்வு எழுதுவதற்காக விசேடமான ஆயத்தங்கள் செய்வது அவசியமில்லாமல் இருந்தது. பெரும்பாலும் 12ம் வகுப்புக்குரிய பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். இதைத் தவிர பொது அறிவுக் கேள்விகள் சில கேட்கப்படும். நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள்,அவர்கள் நகர்புறத்தில் படிப்பவர்களானாலும் சரி, கிராமப்புரத்தில் படிப்பவர்களானாலும் சரி, நல்ல மதிபெண்கள் எடுக்கும் வகையில் நுழைவுத் தேர்வு அமைந்திருந்தது.தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.50 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு,100 மதிப்பெண்களாக மாற்றப்பட்டது.கேட்கப்பட்ட கடினக் கேள்விகளின் சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.

இவ்வகையான மாற்றம் மாணவர்களின் சுமையை அதிகப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. 12ம் வகுப்புத் தேர்விற்கு ஆயத்தம் செய்வதோடு, நுழைவுத்தேர்விற்கும் தனியாக விசேடமாக ஆயத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டார்கள். நுழைவுத்தேர்வெழுத மாணவர்களுக்கு பயிற்சி தருவதற்காக தனியார் பயிற்சி நிறுவனங்கள் உருவாகின. இவர்களது கட்டணமும் பல ஆயிரங்களாக உயர்ந்து நிற்கிறது. நுழைவுத்தேர்வில் கடினக் கேள்விகளின் சதவிகிதம் அதிகரித்த நிலையில் பயிற்சி பெறாத மாணவர்கள் தேர்வில் பரிமளிக்க இயலாத நிலை ஏற்பட்டு போனது.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளானவர்கள் அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும், ஏழை மாணவர்களுமேயாகும .இப்பள்ளிகளில் ஒழுங்காக பாடம் சொல்லித்தரவே ஆசியர்கள் இல்லை. இச்சூழ்நிலையில் நுழைவுத்தேர்விற்கான பயிற்சியை யார் அளிப்பார்கள்?

தனியார் பயிற்சிநிலையங்களில் சேர்ந்து பயில தேவையான வசதி இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், மற்ற ஏழை மாணவர்களுக்கும் இருக்கிறதா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் இறுதித் தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்தால் கூட, நுழைவுத்தேர்வில் மதிப்பெண் குறைந்த காரணத்தால் ஏழை மாணவர்கள் வாய்ப்பிழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறதே? இதன் மூலம் நகர்புற மாணவர்களும், வசதி படைத்தோரும் மட்டும் அதிகம் பயன்பெறும் வகையில் ஒரு நடைமுறை இருக்கலாமா?

இக்கேள்விகளை தேவையற்றது என ஒதுக்கித் தள்ள முடியாது. கிராமப்புற மாணவர்கள் மிகக் குறைவாக மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். எனவே மதிப்பெண் தரப்பட்டியலை வெளியிடக் கூடாது என கூறியிருக்கிறார் மருத்துவர் ராம்தாஸ். இதற்கான புள்ளிவிவரம் அவரிடம் உள்ளதா? என்பது தெரியவில்லை. அதற்கான சரியான புள்ளி விவரம் உள்ள பட்சத்தில், இந்த சமனற்ற தன்மை நிவர்த்தி செய்ய வேண்டியதுதான்.

மாணவனின் சுமையை அதிகரிக்கும் மற்றுமொரு அம்சம்- பல்வேறு நுழைவுத் தேர்வுகள். இவை தேவையில்லாத ஒன்று. நுழைவுத் தேர்வின் அவசியமே புதிராகிப் போன காலக்கட்டத்தில் , பிராந்திய அளவில் நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் தேவையில்லாதுதான். மாநில அளவில் CAT போன்ற ஒரே நுழைவுத்தேர்வை நடத்தி அதனடிப்படையில் மாணவர்சேர்ப்பு நடத்துவதே உசிதமான செயல்.

நுழைவுத் தேர்வினால் உள்ள் சிறப்புப் பயன் என்ன? நுழைவு தேர்வு தவிர்த்த, பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டும் ஏன் இட அனுமதி தரக்கூடாது? புரபசனல் கோர்ஸ் என்பதால் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு வைத்துத்தான் சேர்க்க வேண்டுமா? நுழைவுத் தேர்வில் 5 மார்க் வாங்கியவன் கூட ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் பெற்று எஞ்சினியராகும் கூத்தெல்லாம் நடக்கிறதே-இவ்வாறிருக்க நுழைவுத்தேர்வால் என்ன பயன்?

நுழைவுத்தேர்வுக்கான அவசியத்தை மறுபரீசலனை செய்து, அதனை சீரமைப்பதற்கான தருணம் இது என்றே நான் கருதுகிறேன்.

Thursday, May 12, 2005

சுடுதண்ணீர் கால்வாய் தெரு

மதுரையில் மில்கேட் ( தற்பொழுது பெரிய பாலம் இருக்கு) அருகே, ரயில்வே டிராக்கை ஒட்டி இருக்கும் ஒரு தெருவின் பெயர்தான் இது. மதுரைவாசிகள் இத்தெருவை அறிந்திருக்கக் கூடும். ஆனால் எதனால் இத் தெருவிற்கு இப்பெயர் வந்தது? என்ற காரணம் நிறைய பேருக்கு தெரியாது.சில மாதங்கள் முன்புதான் இதன் பெயர் காரணத்தை நான் அறிந்தேன்.

தொழில்மயமாக்கத்தால் இன்றுவரை பாதிக்கப்படாத நகரம் மதுரை. தமிழகத்தின் பிறநகரங்களான சென்னை, கோவை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் அமையாத நகரம்.ஆனாலும் தானியம் மற்றும் நகை வர்த்தகத்தில் மதுரை முக்கிய பங்கு வகிக்கிறது. தானியங்களுக்கு தேர்முட்டி, நகைக்கடைகளுக்கு ஆவணிமூலவீதி, காமராஜர் சாலையில் பல அரிசி ஆலைகள், பல ஊர்களிலிருந்து திரளாக 24 மணிநேரமும் வந்து கொண்டிருக்கும் மக்கள், அவர்களுக்காக ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் புரோட்டாக் கடை- எனக்குத் தெரிந்து மதுரை பல வருடங்களாக இப்படியே மாறாமல்தான் இருக்கிறது.

மதுரையில் அமைந்த தொழில் நிறுவனங்களில் டிவிஎஸ் குழுமமும், மதுரா கோட்ஸ் மற்றும் பென்னர் காட்கில் ( சின்னப் பசங்களா இருக்கும் போது காட்கில் எல்லாம் தெரியாது, பென்னர் காக்கி என்றுதான் பேச்சு வழக்கில் சொல்வார்கள்) ஆகியவை முக்கியமானவை.இவற்றுள் டிவிஎஸ் குழுமம் இந்திய நிறுவனம். ஆனால் கோட்ஸும், பென்னரும் துரை கம்பெனிகள் ( ஆங்கில பங்குதாரர்களால் நிர்வகிக்கப்பட்ட கம்பெனிகள்). 1970 மற்றும் 80 ம் ஆண்டுகளில் கோட்ஸிலும், பென்னரிலும் வேலைபார்த்தவர்களுக்கு சம்பளம் கணிசமாக இருந்தது. கோட்ஸில் நிறைய தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். மில்கேட் என காலம்காலமாக குறிப்பிடப்படும் பகுதி மதுராகோட்ஸ் தொழிற்சாலையின் நுழைவாயில்தான்.

மூன்று சிப்டுகளில் தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்நிறுவனத்தில், சிப்டின் முடிவில் வெளியேறும் தொழிலாளர்களாலும்,அடுத்த சிப்டிற்கு உள்ளே வரும் தொழிலாளர்களாலும் போக்குவரத்தே ஸ்தம்பித்துப்போகும் என்று சொல்வார்கள்.மதுரையிலிருந்து வாடிப்பட்டி வரை தொழிலாளர்களுக்காக ரயில் ஒன்று இயங்கி வந்தது என்பதும் ஆச்சரியமான தகவல்.

சரி. மீண்டும் சுடுதண்ணீர் கால்வாய் பற்றிய விசயத்துக்கு வருவோம். மதுரா கோட்ஸில் அக்காலத்தில் இரு டர்பைன்கள் இயங்கி வந்தன. அந்த டர்பைனின் சுடுநீரை வைகை ஆற்றில் கொண்டு சேர்ப்பதற்காக கட்டப்பட்ட கால்வாய்தான் சுடுதண்ணீர் கால்வாய். முன்பு டர்பைன் நீரை திறப்பதற்கு முன் மக்களிடம் முன்னறிவிப்பு செய்வார்களாம். சுடுதண்ணீர் உடலில் பட்டால் பொத்துப் போய் விடுமாம். ஆனால் இதே சுடுதண்ணீர் உபயோகித்து சலவை செய்ய ஆற்றங்கரையில் சலவைத் தொழிலாளர்கள் தயாராக இருப்பார்களாம். இந்த சுடுதண்ணீர் திறந்து விடும் வழக்கம் எப்பொழுது நிறுத்தப்பட்டது என்பதை பற்றிய தகவல் இல்லை. சுற்றுப் புற சூழல் பாதிப்பை பற்றி யாராவது பிரச்சனை எழுப்பியிருக்கலாம்.

கோட்ஸிலும், பென்னரிலும் வேலைபார்த்தவர்களின் குடும்பம் அக்காலத்தில் பொருளாதாரச் செழிப்புடன் இருந்தன.கேண்டினில் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இனிப்புகள் கிடைக்கும். பென்னரில் வேலை பார்த்த தோட்டக்காரரின் சம்பளமே 1980ம் வருடத்திலேயே 1200 ரூபாய்க்கு மேல் இருந்தது. இந்நிறுவனங்கள் தரும் போனசை வைத்து மதுரையிலிருக்கும் துணிக்கடைகள், நகைக்கடைகள் எல்லாம் வியாபாரம் நடத்தியது அக்காலம். இந்நிலைமை சாசுவதம் என தொழிலாளர்கள் நினைத்து இயங்கிவந்தார்கள், ஆனால் காலமும் ,தொழில்நுட்பமும், வியாபரப் போட்டிகளும் அனைவரிடமும் தொடர்ச்சியாக கருணை காட்டுவதில்லை.


பென்னர் நிறுனத்தை ஜேகே டயர்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் தேவையற்றதாக முடிவு செய்யப்பட்டு விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆட்குறைப்பு முழு வேகத்தில் நிகழ்ந்தேறியது. கோட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் உலக அளவில் மிக சொற்பமே என்பதால் கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அந்நிறுவனத்திலும்மேற்கொள்ளப்பட்டன.இந்நடவடிக்கைகள் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அதிகம். ஆனாலும் இத்தனிமனித பாதிப்புக்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் சமூகம் இருந்தது. பொருளாதாரம் பிரதானப்படுத்தப்பட்ட உலகின் இத்தைகைய வேதனைகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அம்சமாக சிறிது காலத்தில் மாறிப்போனது.

ஆயிரத்திற்கும் மேல் சம்பாதித்த தோட்டக்காரருக்கு அடுத்த வேளை சாப்பாடு பிரச்சனையாய் போனபோது பாவமும் பழியும் யாரிடம் என்று தெரியவில்லை. ஆனால் இவை உணர்த்திய பாடங்கள்- உலகின் சாசுவதமற்ற நிலையையும், நமது திறமை என்று மதிப்பிழந்து போகும் என்பதை பற்றிய அறியாமையும், தொடர்ந்து நம் தகுதிகளையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் தான். சொல்வது எளிது. ஆனால் திறமைகளை தொடர்ந்து வளர்ப்பதெல்லாம் அனைவருக்கும் சாத்தியப்படும் விசயமா?

மதுரை மில்லில் இன்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. ஆனால் தொழிலாளர்கள் தற்போது சொற்பமாகவே உள்ளனர். தொழிற்சாலை நடப்பதும், மூடியிருப்பதும் ஒன்றுதான் எனச் சொல்கிறார்கள். பென்னரில் வேலைபார்த்த தோட்டக்காரர் பையன் தற்பொழுது விப்ரோவில் இஞ்சினியராக இருக்கிறானாம். காலத்தின் இன்னொரு கருணை முகம் இது. ஆனாலும் அவரால் மறக்கமுடியுமா அனுபவித்த வலிகள்.

சுடுதண்ணீர் கால்வாயில் சுடுதண்ணீர் ஓடுவதில்லை. ஆனாலும் அது உணர்த்தும் உண்மைகள் சுடுகின்றன.

Friday, May 06, 2005

நுனிப்புல் திரைப்பட ரசனை- இக்கடச் "சூடு'

நண்பர் அருணின் தமிழர்களின் திரைப்பட ரசனை பற்றிய பதிவும், ரஜினியும் விஜய்யும்தான் தமிழ்படங்களின் தரம் உயராததற்கான காரணம் என்று பறைசாற்றி, ரஜினியைபற்றி ஒரு பதிவு போடப்போகிறேன் என தொடர்ச்சியாக பயமுறுத்திக்கொண்டிருக்கும் சுரேக்ஷ் ( பிச்சைப்பாத்திரம்) அவர்களும்தான் நான் இப்பதிவை எழுதுவதற்கான காரணகர்த்தாக்கள்.அருணின் பதிவில் "மூன்றுமணி நேரம்பொழுதுபோக்குக்காக படம் பார்ப்போம்" என்ற தமிழனின் மனோபாவத்தை நுனிப்புல் மேயும் தன்மை எனக் குறிப்பிட்டு, இதற்குக் காரணம் தமிழ் ரசிகர்கள் எனச் சாடியுள்ளார்.இந்தக் கண்டுபிடிப்புக்கான ஆதங்கம் சந்திரமுகியின் வெற்றிக்குப் பிறகு வந்துள்ளது என்பதுதான் இவரது கவலை குறித்த ஆதார சந்தேகங்களை எழுப்புகிறது."சந்திரமுகி ஒரு ஓவர்ரேட்டட் மூவி,இவ்வாறாக ஓவராக தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவதன் மூலம் தமிழர்களின் சினிமா ரசனை தரமிழந்து விட்டது" என்பதே இவர் எழுதியிருப்பதன் மையக் கருத்தாகஇருக்கிறது.

ரசிகர்களின் தரக்குறைவினால்தான் கமல் ,மணிரத்னம் போன்ற படைப்பாளிகள் மசாலாக் குப்பைகளை தருகிறார்கள் என்பது கூடுதலாக கொடுத்திருக்கும் இன்னொரு வாதம். நல்ல படங்கள் என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக் கொண்டு, இவர்களின் இலக்கணத்திற்கு உட்பட்ட படம் ஓடும்போது தமிழனின் ரசனை உயர்ந்து விட்டது என பெருமை பேசுவதும், ஓடாவிட்டால் தமிழனின் ரசனை மாண்டு விட்டதே என நோவதும் பல ஆண்டுகாலமாகவே நடப்பதே.அருண் புதிதாக சேர்ந்திருக்கிறார்.

சினிமா என்பது பொழுதுபோக்கு மீடியம்தான் எனும் பொழுது, பொழுதுபோக்கை எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்வதில் என்ன தவறிருக்கிறது?இந்தியா போன்ற ஏழை நாட்டில் அன்றாட பிரச்சனைகளின் சுமைகளிலிருந்து தப்பித்தலுக்கான ஒரு மீடியமாய் சினிமா மாறி நீண்டகாலம் கிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் சினிமாவின் வளர்ச்சிக்கான மூலதனமே, சுமைகளின் நிஜங்களிலிருந்து தப்புவதற்கான மக்களின் கேளிக்கை எதிர்பார்ப்புக்களை வைத்துத்தான் அமைந்தது/அமைந்திருக்கிறது.தமிழ் தெரிகிறது என்பதற்காக அனைவரும் மவுனியை படித்து புரிந்து கொள்ள முடியுமா?அல்லது மவுனி படிப்பவர்கள் எல்லாம் ஆனந்தவிகடனை, முத்துக்காமிக்ஸை ஒதுக்கி விட்டார்களா?எல்லா
முரண்பாடுகளையும்,வெகுஜன விருப்பு/வெறுப்புக்களையும் மீறி இலக்கியமும் மொழியும் வாழ்ந்து,வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முதலாவதாக அநாமிகா மெய்யப்பன் சொன்னது போல், சினிமாக்களின் பலவகைகள் அனைத்து நாட்டு சினிமாக்களிலும் எடுக்கப்பட்டு, பார்க்கப்பட்டு வருகின்றன. ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் போல, சிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் ஓடாததால் ஆங்கிலப் படங்களின் தரம் குறைந்து போனதா? தலை சிறந்த ஆங்கிலப் படங்கள் வந்தாலும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? என்ற ர்வம் குறைந்து போனதா? ஜேம்ஸ்பாண்டைப் பற்றி கவலைப்படுகிறார்களே...என்ன ரசனை இவர்களுக்கு? என யாராவது அங்கலாய்த்தார்களா? ஒரு வியாபாரிக்கு மக்களின் ரசனைக்கு மதிப்பளிக்கத் தெரிய வேண்டும் வியாபாரிக்கு.அல்லது நான் இப்படித்தான் தயாரிப்பேன். இவர்கள் வாங்கினால் போதும் என ஒதுங்கத் தெரிய வேண்டும்.அதை விட்டு விட்டு வாங்கும் போது புத்திசாலி, ஒதுக்கும் போது முட்டாள் என்று சாடினால் அது சரியான வியாபாரமுமல்ல, உன்னதமான கலையுமல்ல.

தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்றாலே கமல், மணிரத்னம் என்று ஆரம்பிக்கிறீர்களே? ஏன்? அதன் முன் இருந்தவரெல்லாம் சினிமாவை படுபாதாளத்தில் தள்ளி வைத்திருந்தார்கள். இவர்கள்தான் கைகொடுத்து நிறுத்தினார்களோ?தனிமனித துதி இருப்பதாலும்,தேவைக்கதிக புகழை ,மதிப்பை ஒரு படத்துக்கு அளிப்பதனாலும், மக்களின் ரசனையும், சினிமாவும் அழியுமென்றால் எம்.ஜி.ஆர் காலத்திலேயே அழிந்திருக்கும். அவ்வாறின்றி ஸ்ரீதர், பாலச்சந்தர், பீம்சிங் போன்ற இயக்குநர்கள் தமிழ்திரையுலகின் கதைக்கலன்களில், தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகளை
செய்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை தந்தார்களே? மக்களின் ரசனை இன்றி அது எவ்வாறு சாத்தியப்பட்டது?13 நாட்களிலே ஒரு ஆஸ்பத்திரி செட்டுக்குள் வைத்து எடுக்கப்பட்ட "நெஞ்சில் ஒர் ஆலயம்" மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லையா? "சொன்னது நீதானே" பாட்டிற்கு கறுப்பு வெள்ளையில் ஒரு அறைக்குள்ளே பல ஆங்கிள் வைத்து அசத்திய ஒளிப்பதிவாளர் வின்செண்ட். மக்கள் ரசிக்கவில்லையா? மாட்டுக்கார வேலன் பார்த்த மக்கள்தானே நெஞ்சில் ஓர் ஆலயமும் பார்த்தார்கள்.

தற்போது கூட "ஆட்டோகிராப்பும்" கில்லியும் ஒரே சமயத்தில் ஓடி வெற்றி
பெறவில்லையா?
கேளிக்கை முன்னிலைப்படுத்தி மசாலாப் படங்களை தரும் இயக்குநர்களை
விட,கலைச்சேவகன் பட்டமும் வேண்டும்,வியாபாரமும் செழிக்க வேண்டும் என்று இரண்டான்கெட்டானாய் படம் எடுப்பவர்கள்தான் தமிழ்படங்களை சிக்கலில் தள்ளி விட்டார்கள்.85ம் வருடத்திற்கு மேல் படம் எடுக்க வந்த சில இயக்குநர்களுக்கு உலக படங்களின் வீடியோக்கள் சுலபமாகக் கிடைத்தன. இந்தப்படங்களின் தாக்கத்தினால் ,தொழில்நுட்ப மேலாதிக்கத்தையும்,யதார்த்தங்களை மீறிய காட்சி பிரம்மாண்டங்களையும் முன்னிலைப்படுத்தி படம் எடுத்து வெற்றி பெற்றவர்தான் மணிரத்னம்,கமல்ஹாசன் போன்றவர்கள். காட்பாதரின் தாக்கத்தில் மூன்று படங்களை எடுத்த பெருமை மணிரத்னத்தையே சேரும்.காப்புரிமை திருட்டு என்று மூலக்கதைக்கு கிரடிட் கொடுத்து மணிச்சித்திரதாழை தழுவியிருக்கும் வாசுவை தாக்கும் சிலருக்கு,மணிரத்னத்தின் காட்பாதர் தழுவல் கண்ணில் படவில்லை."நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்லை" என்ற பாலகுமாரனின் வசனத்தின் உதவியுடன், நம் அயோத்திக் குப்பம் வீரமணிகளை, வேலு நாயக்கனாக,தளபதி சூர்யாவாக மாற்றி சமூக புரட்சி செய்த புரட்சியாளர் அல்லவா மணிரத்னம். அக்னி நட்சத்திரம் படத்தில் பாட்டி செத்த வீட்டிலும்,பாட்டியின் தலைக்கு கீழே லைட்டிங் வைத்து புரட்சி செய்தவர் அல்லவா மணிரத்னம். யதார்த்தம் இருக்கிறதா? கேட்காதீர்கள்.அதுதான் தொழில்நுட்ப வளர்ச்சி, தமிழ் சினிமா வளர்ச்சி. ஆயுத
எழுத்து ஏதோ மெக்ஸிகோ படமாமே? கேட்காதீர்கள். இவர்கள் பாரதி வழி
வந்தவர்கள்.எட்டுத்திக்கும் பல பிலிம் பெஸ்டிவல்கள் செல்வார்கள்.கதைகளை காப்பி அடித்து கொண்டு இங்கு படமாய் எடுப்பார்கள்.

நல்ல படங்கள் எடுக்க மண் சார்ந்த கதைகள் தேவை என்ற எண்ணத்தை மாற்றி, தொழில்நுட்ப மேலாதிக்கமும், பிரம்மாண்டமும் அவசியம் என்ற சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய பங்கு மணிரத்னம், கமலஹாசன் மற்றும் சங்கருக்கு உண்டு. இங்கேதான் தேங்கி நிற்கிறது தமிழ்சினிமாவின் வளர்ச்சி. தமிழகத்தின்,இந்தியாவின் பிரச்சினைகள் சார்ந்த கதைகள் எங்கே
படமாக்குகிறார்கள்? கேட்டால் ரோஜா இல்லையா, பம்பாய் இல்லையா என்று
கூறுவார்கள். ஆனால் ஒரு ஜீவாதாரப் பிரச்சனையை மேம்போக்காக அலசிவிட்டு, சில தனி மனிதர்களின் தவிப்புக்களை முன்னிலைப் படுத்திய ஏமாற்று வேலைதான் அப்படங்களில் நடந்தது.பம்பாய் படத்தில் இந்து சார்பு அரசியல்வாதி கலவரத்தைப் பார்த்து வருந்துவதாக ஒரு காட்சி. இந்நிலை யதார்த்தமா? பொழுதுபோக்கு என்ற நோக்கில் மேற்குறிப்பிட்ட மணிரத்னத்தின், கமலஹாசனின் படங்களை நல்ல படங்கள் என்று ஏற்றுக் கொள்வேனே தவிர, தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துகிறது என்பதெல்லாம் மிகப் பெரிய பாசாங்கு என்பதுதான் என் கருத்து.ஏனெனில் தேவைக்கதிகமாக பிரம்மாண்டத்தை வலியுறுத்தி,மேலைநாட்டு பாணிகளையே பின்பற்றி, தமிழ் திரைப்படங்களுக்கு தனி அடையாளம் கிடைக்காமல் செய்தவர்கள்தான் இவர்கள்.இவர்களுள் கமலையும், மணிரத்னத்தையும் காட்டிலும் மிகப்பெரிய குற்றவாளி சங்கர். இவர் எடுத்ததெல்லாம் சபஸ்டிகேட்டட் மசாலாப் படம். இவரது படங்களால் தமிழ்பட தரம் உயர்கிறதாம். ஜோக்குதான் போங்க.

கதைகளின் பலத்தில் வெற்றி பெறும் இயக்குநர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
சேரன் ஒரு பொற்காலத்தின் மூலமும், ஆட்டோகிராப் மூலமும் அதைச் செய்தார்.
"விட்டுக் கொடுத்து வாழ்வோம்" என்ற பாரதிராஜாவின் கிழக்குச்சீமையிலே படத்தின் கிளைமாக்ஸ் ஸ்லைட் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படங்கள் ஓடவில்லையா? இப்படங்களினால் தமிழ்படங்களின் தரம் உயரவில்லையா?மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் கமல் நகைச்சுவையின் சில சிகரங்களை தொட்டிருக்கிறார் என்கிறார் அருண். இது அவருடைய ஓவர்ரேட்டிங் இல்லையா?நகைச்சுவையின் பல சிகரங்களை தமிழில் ஏற்கனவே தொட்டு விட்டார்கள். அவற்றுடன் ஒப்பிடும்போது மும்பை எக்ஸ்பிரஸ் சாதாரணம். எத்தனை நாளைக்குத்தான் காதலிக்க நேரமில்லை
சிறந்த படம் என்று சொல்வீர்கள். மும்பை எக்ஸ்பிரஸ் வந்தவுடன் நிலைமை மாறும்? -இது கமலஹாசனின் பேட்டியின் ஒரு பகுதி. நிலைமை மாறியதா? அருணின் மனச்சாட்சிக்குத் தெரியும்.

உலக சினிமாவில் இல்லாத ஆனால் தமிழ் சினிமா பெற்றிருக்கும் பலம் என
நகைச்சுவை நடிகர்களை குறிப்பிடுகிறார் இயக்குநர் மகேந்திரன். சபாக்ஷ் மீனா படம் பார்த்து இன்று வரை சிரிக்க முடிகிறது. இவையெல்லாம் பார்த்து
ரசித்தவர்கள் மும்பை எக்ஸ்பிரஸ்ஸிற்கு தேவையான அளவு வரவேற்பைத்தான் தருவார்கள். கமல் சிகரங்களைத் தொடுகிறார் என கமல் பக்தர்களாய் பாராட்ட முடியாது.

கமல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய வசதி.ரஜினியை திட்டும் போது, தமிழ்சினிமா காவலராய் மாறி அக்கறைப்பட்டு திட்டுவது. முரட்டுக்காளையிலிருந்தே இதைத்தான் செய்கிறார்கள்.கலை வளர்க்கும் வேந்தர்களும், இயக்குநர்களும் ரஜினியை வைத்து படம் எடுத்து கல்லாவையும் நிரப்பிக் கொண்டார்கள். ரஜினியை வைத்து ராகேவேந்தர் படமா எடுக்க முடியும்? என்று உணர்ச்சி வசப்பட்ட பாரதிராஜா,கொடிபறக்குது படத்தால் லாபம் சம்பாதித்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். "அருணாச்சலா" படத்தின் கேரள விநியோகஸ்தர் என்ற முறையில் படத்தின் வெள்ளி விழாவில் கேடயம் வாங்கினார் கமல்ஹாசன்.

சினிமா முதலில் வியாபாரம்தான். கலை வளர்க்க முயல்பவர்கள் இவ்வியாபார நோக்கங்களை பிரதானப்படுத்தாமல், அதே நேரத்தில் நக்ஷ்டப்படாமல் முயற்சிகளை செய்யலாம். குறும்படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் ,சின்னத்திரை என பல சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் இவ்வாறான முயற்சிகளில் பாலச்சந்தர், பாலுமகேந்திரா தவிர வேறு யாரும் ஏன் வரவில்லை. கலையைக் காட்டிலும் பெரியதிரையின் வணிக சாத்தியங்கள் அவர்களை கவர்ந்திழுக்கின்றன. அந்த வணிகத்தில் வெகுஜன ரசனையை பூர்த்தி செய்பவரே வெல்வார்.

வெகுஜன ரசனை அறிவுத்தளத்தில் மட்டும் தனித்து இயங்கும் அம்சமல்ல. சமூகம் சார்ந்த விசயம். கல்லாமை , இல்லாமை எல்லாம்தான் இம்மக்களிடம் இருக்கிறது. இன்று ஒரு படம் ஓடாவிட்டால் மக்கள் ரசனை மழுங்கி விட்டது என சொல்வது எளிது. ஆனால் இதே "கல்லாமை. இல்லாமை" மக்கள்தான் கமலஹாசனுக்கும், மணிரத்னத்திற்கும் அவர்கள் தற்போது அனுபவிக்கும் பிரதானத்திற்கு காரணமாய் அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதே மக்கள்தான் மக்கள் அபிமானத்தை தவறாக எடை போட்டு "பாபா" தந்த ரஜினிகாந்தை புறக்கணித்தது.

மக்களின் ரசனை சமூகம் சார்ந்த விசயம்.அதன் குறைபாடுகளுக்கு ரஜினியையும், விஜயையும் காரணமாக்காதீர்கள். சமூக மாற்றத்திற்கேற்ப ரசனைகள் மாறலாம். ஆனாலும் மசாலாப் படங்கள் ஒழியாது. தமிழ் படங்களும் அழியாது.எல்லாவற்றுக்கும் மேலாக திரைப்படத்துறை என்பது லட்சக்கணக்கான தொழிலாளிகள் பணியாற்றும் துறை. ஹாலிவுட் போலன்றி, பட்டினி கிடக்கும் உதவி இயக்குநர், லைட்பாய் முதல் தியேட்டர்களின் சைக்கிள் காண்ட்ராக்டர் மற்றும் முறுக்கு விற்பவன் வரை இதை நம்பி வாழ்பவர் பலர். இவர்களுக்கு வேண்டியது கூட்டம். இந்தக் கூட்டங்களை மசாலாப் படங்கள் பெற்றுத்தருகிறது என்றால் அதற்காக மகிழத்தான் என்னால் முடிகிறதே தவிர , தமிழ் படங்கள் தரம் உயரவில்லையே என கவலைப்பட இயலவில்லை.