Thursday, May 12, 2005

சுடுதண்ணீர் கால்வாய் தெரு

மதுரையில் மில்கேட் ( தற்பொழுது பெரிய பாலம் இருக்கு) அருகே, ரயில்வே டிராக்கை ஒட்டி இருக்கும் ஒரு தெருவின் பெயர்தான் இது. மதுரைவாசிகள் இத்தெருவை அறிந்திருக்கக் கூடும். ஆனால் எதனால் இத் தெருவிற்கு இப்பெயர் வந்தது? என்ற காரணம் நிறைய பேருக்கு தெரியாது.சில மாதங்கள் முன்புதான் இதன் பெயர் காரணத்தை நான் அறிந்தேன்.

தொழில்மயமாக்கத்தால் இன்றுவரை பாதிக்கப்படாத நகரம் மதுரை. தமிழகத்தின் பிறநகரங்களான சென்னை, கோவை ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் அமையாத நகரம்.ஆனாலும் தானியம் மற்றும் நகை வர்த்தகத்தில் மதுரை முக்கிய பங்கு வகிக்கிறது. தானியங்களுக்கு தேர்முட்டி, நகைக்கடைகளுக்கு ஆவணிமூலவீதி, காமராஜர் சாலையில் பல அரிசி ஆலைகள், பல ஊர்களிலிருந்து திரளாக 24 மணிநேரமும் வந்து கொண்டிருக்கும் மக்கள், அவர்களுக்காக ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் புரோட்டாக் கடை- எனக்குத் தெரிந்து மதுரை பல வருடங்களாக இப்படியே மாறாமல்தான் இருக்கிறது.

மதுரையில் அமைந்த தொழில் நிறுவனங்களில் டிவிஎஸ் குழுமமும், மதுரா கோட்ஸ் மற்றும் பென்னர் காட்கில் ( சின்னப் பசங்களா இருக்கும் போது காட்கில் எல்லாம் தெரியாது, பென்னர் காக்கி என்றுதான் பேச்சு வழக்கில் சொல்வார்கள்) ஆகியவை முக்கியமானவை.இவற்றுள் டிவிஎஸ் குழுமம் இந்திய நிறுவனம். ஆனால் கோட்ஸும், பென்னரும் துரை கம்பெனிகள் ( ஆங்கில பங்குதாரர்களால் நிர்வகிக்கப்பட்ட கம்பெனிகள்). 1970 மற்றும் 80 ம் ஆண்டுகளில் கோட்ஸிலும், பென்னரிலும் வேலைபார்த்தவர்களுக்கு சம்பளம் கணிசமாக இருந்தது. கோட்ஸில் நிறைய தொழிலாளர்கள் வேலை பார்த்தார்கள். மில்கேட் என காலம்காலமாக குறிப்பிடப்படும் பகுதி மதுராகோட்ஸ் தொழிற்சாலையின் நுழைவாயில்தான்.

மூன்று சிப்டுகளில் தொடர்ச்சியாக இயங்கி வந்த இந்நிறுவனத்தில், சிப்டின் முடிவில் வெளியேறும் தொழிலாளர்களாலும்,அடுத்த சிப்டிற்கு உள்ளே வரும் தொழிலாளர்களாலும் போக்குவரத்தே ஸ்தம்பித்துப்போகும் என்று சொல்வார்கள்.மதுரையிலிருந்து வாடிப்பட்டி வரை தொழிலாளர்களுக்காக ரயில் ஒன்று இயங்கி வந்தது என்பதும் ஆச்சரியமான தகவல்.

சரி. மீண்டும் சுடுதண்ணீர் கால்வாய் பற்றிய விசயத்துக்கு வருவோம். மதுரா கோட்ஸில் அக்காலத்தில் இரு டர்பைன்கள் இயங்கி வந்தன. அந்த டர்பைனின் சுடுநீரை வைகை ஆற்றில் கொண்டு சேர்ப்பதற்காக கட்டப்பட்ட கால்வாய்தான் சுடுதண்ணீர் கால்வாய். முன்பு டர்பைன் நீரை திறப்பதற்கு முன் மக்களிடம் முன்னறிவிப்பு செய்வார்களாம். சுடுதண்ணீர் உடலில் பட்டால் பொத்துப் போய் விடுமாம். ஆனால் இதே சுடுதண்ணீர் உபயோகித்து சலவை செய்ய ஆற்றங்கரையில் சலவைத் தொழிலாளர்கள் தயாராக இருப்பார்களாம். இந்த சுடுதண்ணீர் திறந்து விடும் வழக்கம் எப்பொழுது நிறுத்தப்பட்டது என்பதை பற்றிய தகவல் இல்லை. சுற்றுப் புற சூழல் பாதிப்பை பற்றி யாராவது பிரச்சனை எழுப்பியிருக்கலாம்.

கோட்ஸிலும், பென்னரிலும் வேலைபார்த்தவர்களின் குடும்பம் அக்காலத்தில் பொருளாதாரச் செழிப்புடன் இருந்தன.கேண்டினில் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இனிப்புகள் கிடைக்கும். பென்னரில் வேலை பார்த்த தோட்டக்காரரின் சம்பளமே 1980ம் வருடத்திலேயே 1200 ரூபாய்க்கு மேல் இருந்தது. இந்நிறுவனங்கள் தரும் போனசை வைத்து மதுரையிலிருக்கும் துணிக்கடைகள், நகைக்கடைகள் எல்லாம் வியாபாரம் நடத்தியது அக்காலம். இந்நிலைமை சாசுவதம் என தொழிலாளர்கள் நினைத்து இயங்கிவந்தார்கள், ஆனால் காலமும் ,தொழில்நுட்பமும், வியாபரப் போட்டிகளும் அனைவரிடமும் தொடர்ச்சியாக கருணை காட்டுவதில்லை.


பென்னர் நிறுனத்தை ஜேகே டயர்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் தேவையற்றதாக முடிவு செய்யப்பட்டு விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆட்குறைப்பு முழு வேகத்தில் நிகழ்ந்தேறியது. கோட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் உலக அளவில் மிக சொற்பமே என்பதால் கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அந்நிறுவனத்திலும்மேற்கொள்ளப்பட்டன.இந்நடவடிக்கைகள் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் அதிகம். ஆனாலும் இத்தனிமனித பாதிப்புக்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் சமூகம் இருந்தது. பொருளாதாரம் பிரதானப்படுத்தப்பட்ட உலகின் இத்தைகைய வேதனைகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அம்சமாக சிறிது காலத்தில் மாறிப்போனது.

ஆயிரத்திற்கும் மேல் சம்பாதித்த தோட்டக்காரருக்கு அடுத்த வேளை சாப்பாடு பிரச்சனையாய் போனபோது பாவமும் பழியும் யாரிடம் என்று தெரியவில்லை. ஆனால் இவை உணர்த்திய பாடங்கள்- உலகின் சாசுவதமற்ற நிலையையும், நமது திறமை என்று மதிப்பிழந்து போகும் என்பதை பற்றிய அறியாமையும், தொடர்ந்து நம் தகுதிகளையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் தான். சொல்வது எளிது. ஆனால் திறமைகளை தொடர்ந்து வளர்ப்பதெல்லாம் அனைவருக்கும் சாத்தியப்படும் விசயமா?

மதுரை மில்லில் இன்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. ஆனால் தொழிலாளர்கள் தற்போது சொற்பமாகவே உள்ளனர். தொழிற்சாலை நடப்பதும், மூடியிருப்பதும் ஒன்றுதான் எனச் சொல்கிறார்கள். பென்னரில் வேலைபார்த்த தோட்டக்காரர் பையன் தற்பொழுது விப்ரோவில் இஞ்சினியராக இருக்கிறானாம். காலத்தின் இன்னொரு கருணை முகம் இது. ஆனாலும் அவரால் மறக்கமுடியுமா அனுபவித்த வலிகள்.

சுடுதண்ணீர் கால்வாயில் சுடுதண்ணீர் ஓடுவதில்லை. ஆனாலும் அது உணர்த்தும் உண்மைகள் சுடுகின்றன.

No comments: