Friday, May 06, 2005

நுனிப்புல் திரைப்பட ரசனை- இக்கடச் "சூடு'

நண்பர் அருணின் தமிழர்களின் திரைப்பட ரசனை பற்றிய பதிவும், ரஜினியும் விஜய்யும்தான் தமிழ்படங்களின் தரம் உயராததற்கான காரணம் என்று பறைசாற்றி, ரஜினியைபற்றி ஒரு பதிவு போடப்போகிறேன் என தொடர்ச்சியாக பயமுறுத்திக்கொண்டிருக்கும் சுரேக்ஷ் ( பிச்சைப்பாத்திரம்) அவர்களும்தான் நான் இப்பதிவை எழுதுவதற்கான காரணகர்த்தாக்கள்.அருணின் பதிவில் "மூன்றுமணி நேரம்பொழுதுபோக்குக்காக படம் பார்ப்போம்" என்ற தமிழனின் மனோபாவத்தை நுனிப்புல் மேயும் தன்மை எனக் குறிப்பிட்டு, இதற்குக் காரணம் தமிழ் ரசிகர்கள் எனச் சாடியுள்ளார்.இந்தக் கண்டுபிடிப்புக்கான ஆதங்கம் சந்திரமுகியின் வெற்றிக்குப் பிறகு வந்துள்ளது என்பதுதான் இவரது கவலை குறித்த ஆதார சந்தேகங்களை எழுப்புகிறது."சந்திரமுகி ஒரு ஓவர்ரேட்டட் மூவி,இவ்வாறாக ஓவராக தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவதன் மூலம் தமிழர்களின் சினிமா ரசனை தரமிழந்து விட்டது" என்பதே இவர் எழுதியிருப்பதன் மையக் கருத்தாகஇருக்கிறது.

ரசிகர்களின் தரக்குறைவினால்தான் கமல் ,மணிரத்னம் போன்ற படைப்பாளிகள் மசாலாக் குப்பைகளை தருகிறார்கள் என்பது கூடுதலாக கொடுத்திருக்கும் இன்னொரு வாதம். நல்ல படங்கள் என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக் கொண்டு, இவர்களின் இலக்கணத்திற்கு உட்பட்ட படம் ஓடும்போது தமிழனின் ரசனை உயர்ந்து விட்டது என பெருமை பேசுவதும், ஓடாவிட்டால் தமிழனின் ரசனை மாண்டு விட்டதே என நோவதும் பல ஆண்டுகாலமாகவே நடப்பதே.அருண் புதிதாக சேர்ந்திருக்கிறார்.

சினிமா என்பது பொழுதுபோக்கு மீடியம்தான் எனும் பொழுது, பொழுதுபோக்கை எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்வதில் என்ன தவறிருக்கிறது?இந்தியா போன்ற ஏழை நாட்டில் அன்றாட பிரச்சனைகளின் சுமைகளிலிருந்து தப்பித்தலுக்கான ஒரு மீடியமாய் சினிமா மாறி நீண்டகாலம் கிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் சினிமாவின் வளர்ச்சிக்கான மூலதனமே, சுமைகளின் நிஜங்களிலிருந்து தப்புவதற்கான மக்களின் கேளிக்கை எதிர்பார்ப்புக்களை வைத்துத்தான் அமைந்தது/அமைந்திருக்கிறது.தமிழ் தெரிகிறது என்பதற்காக அனைவரும் மவுனியை படித்து புரிந்து கொள்ள முடியுமா?அல்லது மவுனி படிப்பவர்கள் எல்லாம் ஆனந்தவிகடனை, முத்துக்காமிக்ஸை ஒதுக்கி விட்டார்களா?எல்லா
முரண்பாடுகளையும்,வெகுஜன விருப்பு/வெறுப்புக்களையும் மீறி இலக்கியமும் மொழியும் வாழ்ந்து,வளர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முதலாவதாக அநாமிகா மெய்யப்பன் சொன்னது போல், சினிமாக்களின் பலவகைகள் அனைத்து நாட்டு சினிமாக்களிலும் எடுக்கப்பட்டு, பார்க்கப்பட்டு வருகின்றன. ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் போல, சிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் ஓடாததால் ஆங்கிலப் படங்களின் தரம் குறைந்து போனதா? தலை சிறந்த ஆங்கிலப் படங்கள் வந்தாலும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? என்ற ர்வம் குறைந்து போனதா? ஜேம்ஸ்பாண்டைப் பற்றி கவலைப்படுகிறார்களே...என்ன ரசனை இவர்களுக்கு? என யாராவது அங்கலாய்த்தார்களா? ஒரு வியாபாரிக்கு மக்களின் ரசனைக்கு மதிப்பளிக்கத் தெரிய வேண்டும் வியாபாரிக்கு.அல்லது நான் இப்படித்தான் தயாரிப்பேன். இவர்கள் வாங்கினால் போதும் என ஒதுங்கத் தெரிய வேண்டும்.அதை விட்டு விட்டு வாங்கும் போது புத்திசாலி, ஒதுக்கும் போது முட்டாள் என்று சாடினால் அது சரியான வியாபாரமுமல்ல, உன்னதமான கலையுமல்ல.

தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்றாலே கமல், மணிரத்னம் என்று ஆரம்பிக்கிறீர்களே? ஏன்? அதன் முன் இருந்தவரெல்லாம் சினிமாவை படுபாதாளத்தில் தள்ளி வைத்திருந்தார்கள். இவர்கள்தான் கைகொடுத்து நிறுத்தினார்களோ?தனிமனித துதி இருப்பதாலும்,தேவைக்கதிக புகழை ,மதிப்பை ஒரு படத்துக்கு அளிப்பதனாலும், மக்களின் ரசனையும், சினிமாவும் அழியுமென்றால் எம்.ஜி.ஆர் காலத்திலேயே அழிந்திருக்கும். அவ்வாறின்றி ஸ்ரீதர், பாலச்சந்தர், பீம்சிங் போன்ற இயக்குநர்கள் தமிழ்திரையுலகின் கதைக்கலன்களில், தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகளை
செய்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை தந்தார்களே? மக்களின் ரசனை இன்றி அது எவ்வாறு சாத்தியப்பட்டது?13 நாட்களிலே ஒரு ஆஸ்பத்திரி செட்டுக்குள் வைத்து எடுக்கப்பட்ட "நெஞ்சில் ஒர் ஆலயம்" மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லையா? "சொன்னது நீதானே" பாட்டிற்கு கறுப்பு வெள்ளையில் ஒரு அறைக்குள்ளே பல ஆங்கிள் வைத்து அசத்திய ஒளிப்பதிவாளர் வின்செண்ட். மக்கள் ரசிக்கவில்லையா? மாட்டுக்கார வேலன் பார்த்த மக்கள்தானே நெஞ்சில் ஓர் ஆலயமும் பார்த்தார்கள்.

தற்போது கூட "ஆட்டோகிராப்பும்" கில்லியும் ஒரே சமயத்தில் ஓடி வெற்றி
பெறவில்லையா?
கேளிக்கை முன்னிலைப்படுத்தி மசாலாப் படங்களை தரும் இயக்குநர்களை
விட,கலைச்சேவகன் பட்டமும் வேண்டும்,வியாபாரமும் செழிக்க வேண்டும் என்று இரண்டான்கெட்டானாய் படம் எடுப்பவர்கள்தான் தமிழ்படங்களை சிக்கலில் தள்ளி விட்டார்கள்.85ம் வருடத்திற்கு மேல் படம் எடுக்க வந்த சில இயக்குநர்களுக்கு உலக படங்களின் வீடியோக்கள் சுலபமாகக் கிடைத்தன. இந்தப்படங்களின் தாக்கத்தினால் ,தொழில்நுட்ப மேலாதிக்கத்தையும்,யதார்த்தங்களை மீறிய காட்சி பிரம்மாண்டங்களையும் முன்னிலைப்படுத்தி படம் எடுத்து வெற்றி பெற்றவர்தான் மணிரத்னம்,கமல்ஹாசன் போன்றவர்கள். காட்பாதரின் தாக்கத்தில் மூன்று படங்களை எடுத்த பெருமை மணிரத்னத்தையே சேரும்.காப்புரிமை திருட்டு என்று மூலக்கதைக்கு கிரடிட் கொடுத்து மணிச்சித்திரதாழை தழுவியிருக்கும் வாசுவை தாக்கும் சிலருக்கு,மணிரத்னத்தின் காட்பாதர் தழுவல் கண்ணில் படவில்லை."நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்லை" என்ற பாலகுமாரனின் வசனத்தின் உதவியுடன், நம் அயோத்திக் குப்பம் வீரமணிகளை, வேலு நாயக்கனாக,தளபதி சூர்யாவாக மாற்றி சமூக புரட்சி செய்த புரட்சியாளர் அல்லவா மணிரத்னம். அக்னி நட்சத்திரம் படத்தில் பாட்டி செத்த வீட்டிலும்,பாட்டியின் தலைக்கு கீழே லைட்டிங் வைத்து புரட்சி செய்தவர் அல்லவா மணிரத்னம். யதார்த்தம் இருக்கிறதா? கேட்காதீர்கள்.அதுதான் தொழில்நுட்ப வளர்ச்சி, தமிழ் சினிமா வளர்ச்சி. ஆயுத
எழுத்து ஏதோ மெக்ஸிகோ படமாமே? கேட்காதீர்கள். இவர்கள் பாரதி வழி
வந்தவர்கள்.எட்டுத்திக்கும் பல பிலிம் பெஸ்டிவல்கள் செல்வார்கள்.கதைகளை காப்பி அடித்து கொண்டு இங்கு படமாய் எடுப்பார்கள்.

நல்ல படங்கள் எடுக்க மண் சார்ந்த கதைகள் தேவை என்ற எண்ணத்தை மாற்றி, தொழில்நுட்ப மேலாதிக்கமும், பிரம்மாண்டமும் அவசியம் என்ற சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய பங்கு மணிரத்னம், கமலஹாசன் மற்றும் சங்கருக்கு உண்டு. இங்கேதான் தேங்கி நிற்கிறது தமிழ்சினிமாவின் வளர்ச்சி. தமிழகத்தின்,இந்தியாவின் பிரச்சினைகள் சார்ந்த கதைகள் எங்கே
படமாக்குகிறார்கள்? கேட்டால் ரோஜா இல்லையா, பம்பாய் இல்லையா என்று
கூறுவார்கள். ஆனால் ஒரு ஜீவாதாரப் பிரச்சனையை மேம்போக்காக அலசிவிட்டு, சில தனி மனிதர்களின் தவிப்புக்களை முன்னிலைப் படுத்திய ஏமாற்று வேலைதான் அப்படங்களில் நடந்தது.பம்பாய் படத்தில் இந்து சார்பு அரசியல்வாதி கலவரத்தைப் பார்த்து வருந்துவதாக ஒரு காட்சி. இந்நிலை யதார்த்தமா? பொழுதுபோக்கு என்ற நோக்கில் மேற்குறிப்பிட்ட மணிரத்னத்தின், கமலஹாசனின் படங்களை நல்ல படங்கள் என்று ஏற்றுக் கொள்வேனே தவிர, தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துகிறது என்பதெல்லாம் மிகப் பெரிய பாசாங்கு என்பதுதான் என் கருத்து.ஏனெனில் தேவைக்கதிகமாக பிரம்மாண்டத்தை வலியுறுத்தி,மேலைநாட்டு பாணிகளையே பின்பற்றி, தமிழ் திரைப்படங்களுக்கு தனி அடையாளம் கிடைக்காமல் செய்தவர்கள்தான் இவர்கள்.இவர்களுள் கமலையும், மணிரத்னத்தையும் காட்டிலும் மிகப்பெரிய குற்றவாளி சங்கர். இவர் எடுத்ததெல்லாம் சபஸ்டிகேட்டட் மசாலாப் படம். இவரது படங்களால் தமிழ்பட தரம் உயர்கிறதாம். ஜோக்குதான் போங்க.

கதைகளின் பலத்தில் வெற்றி பெறும் இயக்குநர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
சேரன் ஒரு பொற்காலத்தின் மூலமும், ஆட்டோகிராப் மூலமும் அதைச் செய்தார்.
"விட்டுக் கொடுத்து வாழ்வோம்" என்ற பாரதிராஜாவின் கிழக்குச்சீமையிலே படத்தின் கிளைமாக்ஸ் ஸ்லைட் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படங்கள் ஓடவில்லையா? இப்படங்களினால் தமிழ்படங்களின் தரம் உயரவில்லையா?மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் கமல் நகைச்சுவையின் சில சிகரங்களை தொட்டிருக்கிறார் என்கிறார் அருண். இது அவருடைய ஓவர்ரேட்டிங் இல்லையா?நகைச்சுவையின் பல சிகரங்களை தமிழில் ஏற்கனவே தொட்டு விட்டார்கள். அவற்றுடன் ஒப்பிடும்போது மும்பை எக்ஸ்பிரஸ் சாதாரணம். எத்தனை நாளைக்குத்தான் காதலிக்க நேரமில்லை
சிறந்த படம் என்று சொல்வீர்கள். மும்பை எக்ஸ்பிரஸ் வந்தவுடன் நிலைமை மாறும்? -இது கமலஹாசனின் பேட்டியின் ஒரு பகுதி. நிலைமை மாறியதா? அருணின் மனச்சாட்சிக்குத் தெரியும்.

உலக சினிமாவில் இல்லாத ஆனால் தமிழ் சினிமா பெற்றிருக்கும் பலம் என
நகைச்சுவை நடிகர்களை குறிப்பிடுகிறார் இயக்குநர் மகேந்திரன். சபாக்ஷ் மீனா படம் பார்த்து இன்று வரை சிரிக்க முடிகிறது. இவையெல்லாம் பார்த்து
ரசித்தவர்கள் மும்பை எக்ஸ்பிரஸ்ஸிற்கு தேவையான அளவு வரவேற்பைத்தான் தருவார்கள். கமல் சிகரங்களைத் தொடுகிறார் என கமல் பக்தர்களாய் பாராட்ட முடியாது.

கமல் ரசிகர்களுக்கு மிகப் பெரிய வசதி.ரஜினியை திட்டும் போது, தமிழ்சினிமா காவலராய் மாறி அக்கறைப்பட்டு திட்டுவது. முரட்டுக்காளையிலிருந்தே இதைத்தான் செய்கிறார்கள்.கலை வளர்க்கும் வேந்தர்களும், இயக்குநர்களும் ரஜினியை வைத்து படம் எடுத்து கல்லாவையும் நிரப்பிக் கொண்டார்கள். ரஜினியை வைத்து ராகேவேந்தர் படமா எடுக்க முடியும்? என்று உணர்ச்சி வசப்பட்ட பாரதிராஜா,கொடிபறக்குது படத்தால் லாபம் சம்பாதித்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். "அருணாச்சலா" படத்தின் கேரள விநியோகஸ்தர் என்ற முறையில் படத்தின் வெள்ளி விழாவில் கேடயம் வாங்கினார் கமல்ஹாசன்.

சினிமா முதலில் வியாபாரம்தான். கலை வளர்க்க முயல்பவர்கள் இவ்வியாபார நோக்கங்களை பிரதானப்படுத்தாமல், அதே நேரத்தில் நக்ஷ்டப்படாமல் முயற்சிகளை செய்யலாம். குறும்படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் ,சின்னத்திரை என பல சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் இவ்வாறான முயற்சிகளில் பாலச்சந்தர், பாலுமகேந்திரா தவிர வேறு யாரும் ஏன் வரவில்லை. கலையைக் காட்டிலும் பெரியதிரையின் வணிக சாத்தியங்கள் அவர்களை கவர்ந்திழுக்கின்றன. அந்த வணிகத்தில் வெகுஜன ரசனையை பூர்த்தி செய்பவரே வெல்வார்.

வெகுஜன ரசனை அறிவுத்தளத்தில் மட்டும் தனித்து இயங்கும் அம்சமல்ல. சமூகம் சார்ந்த விசயம். கல்லாமை , இல்லாமை எல்லாம்தான் இம்மக்களிடம் இருக்கிறது. இன்று ஒரு படம் ஓடாவிட்டால் மக்கள் ரசனை மழுங்கி விட்டது என சொல்வது எளிது. ஆனால் இதே "கல்லாமை. இல்லாமை" மக்கள்தான் கமலஹாசனுக்கும், மணிரத்னத்திற்கும் அவர்கள் தற்போது அனுபவிக்கும் பிரதானத்திற்கு காரணமாய் அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதே மக்கள்தான் மக்கள் அபிமானத்தை தவறாக எடை போட்டு "பாபா" தந்த ரஜினிகாந்தை புறக்கணித்தது.

மக்களின் ரசனை சமூகம் சார்ந்த விசயம்.அதன் குறைபாடுகளுக்கு ரஜினியையும், விஜயையும் காரணமாக்காதீர்கள். சமூக மாற்றத்திற்கேற்ப ரசனைகள் மாறலாம். ஆனாலும் மசாலாப் படங்கள் ஒழியாது. தமிழ் படங்களும் அழியாது.எல்லாவற்றுக்கும் மேலாக திரைப்படத்துறை என்பது லட்சக்கணக்கான தொழிலாளிகள் பணியாற்றும் துறை. ஹாலிவுட் போலன்றி, பட்டினி கிடக்கும் உதவி இயக்குநர், லைட்பாய் முதல் தியேட்டர்களின் சைக்கிள் காண்ட்ராக்டர் மற்றும் முறுக்கு விற்பவன் வரை இதை நம்பி வாழ்பவர் பலர். இவர்களுக்கு வேண்டியது கூட்டம். இந்தக் கூட்டங்களை மசாலாப் படங்கள் பெற்றுத்தருகிறது என்றால் அதற்காக மகிழத்தான் என்னால் முடிகிறதே தவிர , தமிழ் படங்கள் தரம் உயரவில்லையே என கவலைப்பட இயலவில்லை.

5 comments:

Muthu said...

நல்ல புதிய கோணத்தில் பார்க்கிறீர்கள். எனக்கும் இது நியாயமாகவேபடுகிறது.

Anonymous said...

//ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் போல, சிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் ஓடாததால் ஆங்கிலப் படங்களின் தரம் குறைந்து போனதா? தலை சிறந்த ஆங்கிலப் படங்கள் வந்தாலும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? என்ற ர்வம் குறைந்து போனதா? ஜேம்ஸ்பாண்டைப் பற்றி கவலைப்படுகிறார்களே...என்ன ரசனை இவர்களுக்கு? என யாராவது அங்கலாய்த்தார்களா?//

ஏகப்பட்ட அங்கலாய்ப்புக்கள் இருக்கின்றன - பட்டியல் போட்டால் இடம் போதாது. Guns, girls and gadgets என்பதைத்தாண்டி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒரு மண்ணும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. சாயங்காலம் அடித்த சரக்கு காலையில் தெளிந்துவிடுவது போலத்தான்.

//அக்னி நட்சத்திரம் படத்தில் பாட்டி செத்த வீட்டிலும்,பாட்டியின் தலைக்கு கீழே லைட்டிங் வைத்து புரட்சி செய்தவர் அல்லவா மணிரத்னம்.//
'சத்ரியன்' படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, 'அரிக்கேன் விளக்கைப் பொருத்தித் திரை மூலையில வைங்கப்பா' என்று ஒரு குரல் தியேட்டரில் வந்தது. இத்தனைக்கும் மணிரத்னம் வெறும் தயாரிப்பு மட்டும்தான். படத்தின் நடுநிலைமை குறித்துப் பேசுவது வேறு விஷயம், ஆனால் பாட்டி தலைக்கடியில் லைட்டிங் வைப்பதையெல்லாம் குற்றம்சொன்னால் பாவம் அவர் எங்கே போவார்!!

//மேலைநாட்டு பாணிகளையே பின்பற்றி, தமிழ் திரைப்படங்களுக்கு தனி அடையாளம் கிடைக்காமல் செய்தவர்கள்தான் இவர்கள்.//
//உலக சினிமாவில் இல்லாத ஆனால் தமிழ் சினிமா பெற்றிருக்கும் பலம் என
நகைச்சுவை நடிகர்களை குறிப்பிடுகிறார் இயக்குநர் மகேந்திரன்.//
ஜெர்ரி லூயிஸ் தனக்கு ஒரு பெரிய உந்துதல் என்று நாகேஷ் குறிப்பிட்டிருக்கிறார். தனிமரம் தோப்பாகாது. அவ்வளவுதான் சொல்லநினைப்பது.

துளசி கோபால் said...

நல்ல பதிவு. ம்ம்ம் வேற கோணத்திலே சிந்திக்கத்தான் வேணும்!

ஆங்கிலப் படங்களிலே தேவை இல்லாம பலகாட்சிகள் வருதே, அதையும்
கொஞ்சம் அலசலாம்!

Unknown said...

\\நல்ல படங்கள் எடுக்க மண் சார்ந்த கதைகள் தேவை என்ற எண்ணத்தை மாற்றி, தொழில்நுட்ப மேலாதிக்கமும், பிரம்மாண்டமும் அவசியம் என்ற சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய பங்கு மணிரத்னம், கமலஹாசன் மற்றும் சங்கருக்கு உண்டு\\

இதையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்!.....

\\தமிழகத்தின்,இந்தியாவின் பிரச்சினைகள் சார்ந்த கதைகள் எங்கே
படமாக்குகிறார்கள்? \\

இதையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்!.....

\\சினிமா முதலில் வியாபாரம்தான். கலை வளர்க்க முயல்பவர்கள் இவ்வியாபார நோக்கங்களை பிரதானப்படுத்தாமல், அதே நேரத்தில் நக்ஷ்டப்படாமல் முயற்சிகளை செய்யலாம்\\.

இதையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்!.....

\\பட்டினி கிடக்கும் உதவி இயக்குநர், லைட்பாய் முதல் தியேட்டர்களின் சைக்கிள் காண்ட்ராக்டர் மற்றும் முறுக்கு விற்பவன் வரை இதை நம்பி வாழ்பவர் பலர். இவர்களுக்கு வேண்டியது கூட்டம். இந்தக் கூட்டங்களை மசாலாப் படங்கள் பெற்றுத்தருகிறது என்றால் அதற்காக மகிழத்தான் என்னால் முடிகிறதே தவிர , தமிழ் படங்கள் தரம் உயரவில்லையே என கவலைப்பட இயலவில்லை\\.

இதையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்!.....

மண் சார்ந்த படங்கள் எடுக்கவேண்டுமென விரும்புகிறீர்கள் எப்படி? முரட்டுகாளை மாதிரியும், எஜமான் மாதிரியுமா? தமிழ்கத்தின் இந்தியாவின் பிரச்சனைகளைப் படமாக்க வேண்டும் என்கிறீர்கள்., எப்படி ஒரு 'மனிதன் மாதிரி', 'பாட்சா' (இது வீரமணியோட தம்பியப்பத்திதான்! வீரமணிய இல்ல!). அப்புறம் சொன்னிங்கண்ணா, கலை வளர்க்க முயல்பவர்கள் எல்லாம், ஓடிப்போய் டி.வில எடுத்துக்க! இல்லையின்னா போனாப்போகுது 'சின்ன பட்ஜெட்ல' எடுத்துக்க!. சமூகம் சார்ந்து எடுக்கும் பாலுமகேந்திராவை போன்றோரை டி.வி க்குப் போச்சொல்லிட்டு, சமூகம் சார்ந்து படம் எடுத்தாத்தான் ஓடும்னு சொல்றிங்க!. சரி இவங்ககிட்ட வேலை பார்த்த உதவி இயக்குனர், லைட் பாயெல்லம் எங்க போவாங்க?., பெரிய பட்ஜெட் படம் எடுக்கிற சங்கர் மாதிரி ஆளுககிட்டயாண்ணே? சங்கர் மசலாப் படம் எடுக்கிறார்னு சொல்லிட்டு, கூட்டம் சேர்க்கிற மசாலாப் படமெடுத்தா மகிழ்வேங்கிறிங்க!.பம்பாய்ல அப்ப சாத்தியம்ணே, நீங்க சாத்தியமான்னு? கேட்டது. தாக்கரே! தாக்கரே!ன்னு ஓடிவந்திருப்போம் நீங்களும், நானும் அங்க இருந்திருந்தோம்னா!. உங்களைத் தாக்கறதோ, கமல், மணிரத்தினத்த உயர்த்தரதோ இல்லண்ணே என் நோக்கம். கமல் பத்திரிக்கைக்கு பேட்டி குடுத்தே ஓட்டிப்புடுவார் படத்த! மணிரத்தினம் அறிவு ஜீவிகளுக்கு படம் எடுக்குற ஆளுதான்!, இவங்கள பின்பற்றி எத்தன பேர் நடக்குறாங்க?, ஆனா 'கூட்டம் சேர்க்கிற' நீங்க சிகரட்ட தூக்கிப்போட்டா லட்சம் பேர் தூக்கிப்போடறானேண்ணே?., 'பபிள்கம்' மென்னிங்கன்னா, கோடிப்பேர் மெல்றானண்ணே!, 'தனிமனித துதி!', நம்மளப் பார்த்துதானண்ணே நண்டு, சிண்டெல்லாம் சலம்புது?, எம்.ஜி.ஆரப் பாத்தா செய்யுதுக?., அவரப் பாத்து நாம்தான் பண்ணுனோம்!. அவரு படத்துல கூட, கூட வர்ற அல்லக்கைஸ் தான் 'இப்பிடிபட்டவர், அப்பிடிப்பட்டவர்'னு கூவும்!. இல்ல, பாட்டு எழுதறவங்க 'கூட்ட்த்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்னு' அவுங்க ஆசையை எழுதிதர பாடுவாரு!. 'நான் மலடான்னு' ஒரு நாளும் அவர் பேசினது இல்ல!. என்னமோ போங்கண்ணே.

பிச்சைப்பாத்திரம் said...

"கர்மம் புடிச்சவனுங்க என்னத்தய்யா படம் எடுக்கறானுங்க. பெங்கால்ல பாருங்க. என்னமா எடுக்கறாங்க. (வங்காளத்திலும் நிறைய குப்பைப்படங்கள் வருவது வேறுவிஷயம்) அட நம்ம பாலிவுட் கூட 'ப்ளாக்' லாம் எடுத்து அசத்தறாங்க. தமிழ்லதாம்ப்பா இன்னும் கிராமத்து பஞ்சாயத்து ஆலமரத்த உட்டு வெளியே வரமாட்றானுங்க. அகேலா கிரேனு வந்து கூட என்ன பிரயோசனம். அது நேரா ஹ¤ரோயின் லவுக்கைக்குள்ளேதான் பாயுது" என்று சாதாரண சினிமா ரசிகர்களிடமிருந்து விலகி நின்று தன்னை ஒரு படி மேலே நிற்பதாக கற்பனை செய்து கொண்டு ரகசியமாக உள்ளுக்குள் தன்னை அறிவுஜீவியாக கற்பனை செய்து கொண்டு மகிழும் நபர்களின் மாற்றுக்கருத்தாக பாமரர்களின் பார்வையிலிருந்து இந்த பிரச்சினையை அணுகி வித்தியாசமாக பதிந்துள்ளீர்கள்.

சரி. ஆனால்.....

இதற்கு மிக நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே சற்று அவகாசம் எடுத்துக் கொண்டு இதே பதிவில் பின்னூட்டமாகவோ அல்லது என் வலைத்தளத்தில் தனிப்பதிவாகவோ பதிலளிக்கிறேன்.