Monday, April 11, 2005

ரஜினி ச(கா)ப்தமா?- நூல் விமர்சனம்

ஒரு ஆய்வுநூலைப் போன்ற தலைப்பு. ரஜினியின் பன்முகங்களை ஆசிரியர் அக்குவேறாக ஆணிவேராக அலசி புட்டு வைக்கப் போகிறார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தலைப்பு. ரஜினியின் வாழ்க்கை வரலாறு என சில புத்தகங்களை படிக்க நேரிட்டிருந்தாலும் அவை வேறு காலக்கட்டங்களில், அதாவது ரஜினி என்னும் மனிதனுக்கு அரசியல் முக்கியத்துவம் ஏற்படாத காலக்கட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள். பாபா படத்தின் ஏமாற்றம், ராமதாஸ் பிரச்சனை, பொதுத் தேர்தலில் எடுபடாத வாய்ஸ் என பல சரிவுகளை கண்ட பின்னால் ரஜினியைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். இதனால்தான் சப்தமா? சகாப்தமா என்று தைரியமாக (?) பெயர் வைத்துள்ளார்களா? என்று கூட தோன்றியது.

ரஜினி ராம்கி என்ற அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு, ஜெ. ராம்கியாக ஆசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். ஆனால் ரஜினி ரசிகன் என்ற என்னுடைய அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு இந்த நூலை என்னால் படிக்கவும் முடியாது. விமர்சிக்கவும் முடியாது. புத்தகத்திற்காக தன்னுடைய பெயரிலிருந்து ரஜினியை ராம்கி துறந்திருந்தாலும் கூட, தன்னுடைய ரஜினி ரசிகத்தன்மையை முழுவதுமாக விலக்கி வைத்து ராம்கி இப்புத்தகத்தை எழுதவில்லை( எழுத முயற்சித்தாரா என்பதும் தெரியவில்லை). தலைப்பு எதிர்பார்க்க வைக்கும் காட்டமான அலசல் புத்தகத்தில் மிஸ்ஸிங். போதக்குறைக்கு ரஜினியின் படங்களை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தலைப்பாக கொடுத்திருக்கிறார். எனவே இது மற்றுமொரு வித்தியாசப்படுத்தப்பட்ட வாழ்க்கை வரலாறுதான் என்றே தோன்றுகிறது.

ரஜினியின் வாழ்க்கை வரலாறு என்று வரும்போது, இதுவரை வெகுஜன மீடியாவிலும், ரஜினிரசிகன் இதழ்களிலும் வெளிவராத சம்பவங்களை கண்டுபிடித்து எழுதுவது கடினம். அவ்வகையில் இந்நூலில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான சம்பவங்கள் புதிதாக இல்லை. ஆனாலும் ரஜினியின் ஜெயகாந்தன் அபிமானம் எனக்கு தெரியாத செய்தி.மேலும் எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் துவக்கத்தில் வந்த பல்வேறு பத்திரிக்கைப் ( விசிட்டர் போன்ற பத்திரிக்கைகள்) பேட்டிகளை தேடி எடுத்து குறிப்பிட்டுள்ளார் ராம்கி.

ரஜினி ரசிகரல்லாத ஒருவருக்கு இப்புத்தகம் அளிக்கும் வாசிப்பனுவத்தை வேறு யாராவதுதான் சொல்ல வேண்டும். நான் புத்தகத்தை கீழே வைக்காமல் படித்துவிட்டேன். ராம்கியின் எளிய எழுத்து நடையும், வார்த்தைப் பிரோயகங்களும் அவரது பலம். சாதாரண நடிகனாக இருந்த ரஜினி, மூன்றாண்டுகளுக்குள் சூப்பர் ஸ்டார் ஆனதை விளக்குகிறது "முள்ளும் மலரும்" என்ற அத்தியாயம். இதன் பின்னால் இருந்த வணிக காரணங்களையும், சினிமாவில் ரஜினி புகுத்திய புதிய பரிமாணத்தையும் இன்னும் விரிவாக ராம்கி அலசியிருக்க வேண்டும் . எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு பின்பு அவ்விடத்தை பிடிக்க முயற்சி செய்தவர்கள் கமல், ரஜினி மட்டுமல்ல, விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ், ஏன் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் கூட வலுவாக முயற்சித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது.

இவர்களையெல்லாம் மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் ஓவர்டேக் செய்ததது ரஜினியின் சினிமா சாதனை. அதற்குக் காரணம் அவரது தனித்தன்மை. அந்தத் தனித்தன்மையை வெறும் ஸ்டைல்தான், நடிப்பல்ல என்று சாடியவர்கள் பலர். ஆனாலும் மக்கள் ரசித்தனர். படங்கள் சிறப்பாக ஓடின. கதை சரியில்லாவிட்டாலும், ரஜினி என்ற தனிமனிதனுக்காக.

ரஜினியின் ஆன்மிக முகத்தையும், அரசியல் முகத்தையும் அலசி, இரண்டும் ஒருங்கிணைவதில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் ராம்கி.இதிலும் காட்டமான விமர்சனங்களை முன் வைக்க முயலவில்லை ராம்கி. ரஜினி அரசியல் வராததற்கான மூன்று யூகங்களை முன் வைக்கிறார் ஆசிரியர். இவற்றுள் எது நிஜமான காரணம் என்பதை வாசகர்களின் முடிவிற்கே விட்டு விடுகிறார். ரஜினியின் அரசியல் குறித்த அத்தியாயங்கள் பல்வேறு பிரபலங்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பாக படுகிறதே தவிர ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படவில்லை.மேலும் ரஜினியின் அரசியல் குறித்த நிலையை வெறும் 1995 தூர்தர்சன் பேட்டியிலிருந்து மேற்கோள் காட்டி முயற்சித்திருப்பது நிறைவாக இல்லை.

ரஜினியும் ரசிகர்களும் பற்றிய தளபதி அத்தியாயம் சிறப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆருடனான ஒப்பீடு, ரசிகர்களுடன் உள்ள இடைவெளி ஆகிய அம்சங்களை சிறப்பாக அலசியிருக்கிறார்."தன்மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் ரஜினி இருக்கிறதோ இல்லையோ, அவரது பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை"- ராம்கி எழுதிய மேற்குறிப்பிட்ட வரிகள் சத்தியமான உண்மை.

ஒட்டுமொத்த தமிழகமும் தன்பேச்சைக் கேட்கும் மாயை ரஜினிக்கு இல்லை. அந்த தெளிவுதான் அரசியல் வராததற்கான காரணம் என்று குறிப்பிடுகிறார். இது விவாதத்திற்குறிய விசயம். என்னைப் பொறுத்தவரை மக்களை நேரிடையாக சந்திக்கத் தேவையான பொறுமையும், வலுவும், தைரியமும் ரஜினிக்கு இல்லை ( விஜயகாந்திடம் நிறைய இருக்கிறது). ரஜினி ஒரு தனிமை விரும்பி என்பது இதற்கான காரணமாய் இருக்கலாம்.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளாக ராம்கி பட்டியலிட்டுருப்பதை ரஜினியிடம் யாரவது காட்டினால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் ரஜினியிடம் ரசிகர்களுக்கு குறைந்திருக்கும் அரசியல் எதிர்பார்ப்பையும், குறையாத அபிமானத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

சப்தமா? சகாப்தமா? என டைட்டில் வைத்ததோடு சரி. இதற்கு விடைதேடவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ராம்கிக்கு இல்லை.குறைந்த பட்சம் , திரையுலகில் வணிகரீதியாக ரஜினி ஒரு சகாப்தம் என்று ராம்கி கூறியிருக்கலாம் என்பது என் கருத்து.

நட்புடன் ராம்கிக்கு எனக்கு கருத்துப் பிழைகளாக பட்ட சில விசயங்களை கூற விரும்புகிறேன்.


  • நெற்றிக்கண் படத்தை ஆக்சன் படம் என குறிப்பிட்டுள்ளது சரியல்ல
  • ரஜினி பெரியாரின் கருத்துக்கள் தேவையற்றவை என்று சொன்னது, தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில்தான். அருணாச்சலம் பட விழாவின் போதல்ல.
  • 1998ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக-தாமாக கூட்டணிக்கு ரஜினி தன் ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். பொங்கல் தினத்தன்று அனைத்துப் பத்திரிக்கைகளும் இந்த செய்தியை பிரசுரித்திருந்தன.வெளிநாடு செல்லும்முன், ரஜினி கலைஞரையும், முரசொலி மாறனையும் கோபாலபுரத்தில் சந்தித்தார்.
  • நாம் வாழ வைப்பேன் படத்தில் இடம்பெற்ற "ஆகாயம் மேலே"பாடலை வாலி எழுதியதாக ஞாபகம்.( உறுதியாக கூற் முடியவில்லை)

ரஜினி ரசிகர்களுக்கு கண்டிப்பாக சுவையாக இருக்கும். மற்றவர்களுக்கு??

நண்பர் ராம்கியின் எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

3 comments:

ROSAVASANTH said...

நான் புத்தகத்தை எப்போது படிப்பேன் அல்லது படிப்பேனா என்று தெரியாது.அதனால் பதிவுக்கு நன்றி. ஆனால் ..

//ரஜினி ராம்கி என்ற அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு, ஜெ. ராம்கியாக ஆசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். //

இப்படியே எல்லோரும் சொல்லிகொண்டு அதையும் ஒரு பாராட்டாகவும் சொல்லிகொண்டிருயப்பது ரொம்ப ஓவராய் இருக்கிறது. ரஜினி ரசிகன் என்ற 'அடையாளத்தை' எப்படி துறக்க முடியும், அதுவும் தனது பெயரில் சேர்த்துகொண்ட ரஜினி அடைமொழியை மறைப்பதன் மூலம் எப்படி துறக்க முடியும் என்பதற்கு அபத்தமாக கூட எதுவும் விடை தெரியவில்லை. ரஜினி ராம்கி என்ற பெயரை வெறும் ராம்கி என்று வைத்து கொண்டிருப்பதன் மூலம், ரஜினி ரசிகர் என்ற அடையாளத்தை மறைத்திருக்கிறாரே ஒழிய துறந்திருக்கிறார் என்று சொல்லமுடியாது. இப்படி மறைப்பதும், அப்படி மறைப்பதையே நடுநிலைமைக்கு அத்தாட்சியாய் சொல்வதும் நேர்மைகுறைவாகவே தெரிகிறது. நேர்மைகுறைவையே நேர்மை என்று தர்க்கம் செய்ய முடிவது (நீங்கள் செய்வதாக சொல்லவில்லை) தர்க்கத்தை எப்படி வளைக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம்.

மற்றபடி பதிவிற்கு நன்றி.

Wordsworthpoet said...

சரியா சொன்னீங்க ரோசா...
J.Ramki அவர்கள், தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்றும், தனக்கு சூட்டிக்கொண்ட J.ரஜினிராம்கி என்ற பெயரை, இந்த புத்தகம் எழுதுவதற்காகவே, வெறும் J.ராம்கி என்று வைத்துள்ளதாயும், அதே புத்தகத்தில் எழுதியிருந்தால் பாராட்டலாம், இல்லையா.?

நான் அந்த புத்தகத்தை படிக்க மாட்டேன் என்று சொல்லமாட்டேன், அந்த நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியான வேலை இல்லையென்றால்.

Boston Bala said...

>>>"தன்மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் ரஜினி இருக்கிறதோ இல்லையோ, அவரது பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை"- ராம்கி எழுதிய மேற்குறிப்பிட்ட வரிகள் சத்தியமான உண்மை.----

வழிமொழிகிறேன்!