Wednesday, March 23, 2005

மறக்க முடியாத டெஸ்ட்: இந்தியா-பாகிஸ்தான் 1987-பெங்களூர்

1986-87ன் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி மேட்ச் இது. இதன் முன்பு நடந்த 5 மேட்சுகளும் டிராவில்
முடிந்தன.வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டிலும், தோல்வி அடையக் கூடாது என்ற எண்ணமே இரு

அணிவீரர்களிடமும் மேலோங்கி இருந்ததால் , இரு அணிகளுமே உக்கிரம் காட்டாமல் ரன்களை குவிக்கும் பாதுகாப்பான

கிரிக்கெட்டை விளையாடி போரடித்து விட்டன.இந்த அறுவையான தொடரின் நடுவேதான் சென்னையில் இம்ரான்கானை

ஸ்ரீகாந்த் விளாசினார். அஜாருதீன் கல்கத்தாவிலும், ஜெய்ப்பூரிலும் இரண்டு சதங்களை அடித்தார். கவாஸ்கர் 10000 ரன்களை

அகமதாபாத்தில் கடந்தார். பாகிஸ்தான் தரப்பிலும் சாகிப் அகமத், ரமீஸ் ராஜா என பலர் ரன்களை குவித்தனர்.டெஸ்ட்

மேட்சுகளின் நடுவே ஒருநாள் போட்டிகளும் நடைபெற்றாதாலேயே இத்தொடரை ஆர்வமாக மக்கள பார்த்தார்கள். ஆனால்

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் நம்மை சாப்பிட்டு விட்டது. கல்கத்தாவில் தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றியை

ஈட்டிக்கொடுத்த சலிம்மாலிக்கின் ஆட்டம்.. இன்று நினைத்தாலும் தூக்கம் வருவதில்லை.

இத்தகைய சூழலில்தான் தொடரின் கடைசி டெஸ்ட் பெங்களூரில் நடைபெற்றது. இத்தொடரின் மற்றபோட்டிகள்

அனைத்திலும் பேட்ஸ்மேனுக்கு சாதகமான ஆடுகளங்களே அமைந்தன. பெங்களூர் ஆடுகளம் சரியாக தயார்செய்யப்படாமல்

முதல் நாளிலேயே பந்து பலகோணங்களில் திரும்ப தொடங்கியது.டாஸை இழந்தது நம் துரதிர்க்ஷ்டம். ஆனால் லெக்ஸ்பின்

ஜாம்பவான் அப்துல்காதிரை பாகிஸ்தான் அணியில் சேர்க்காதது நம் அதிர்க்ஷ்டம். அவருக்கு பதிலாக இக்பால் காசிம் என்ற

இடதுகை சுழற்பந்து வீச்சாளரை அணையில் சேர்த்திருந்தார்கள். இவருடைய வல்லமையை யாரும் ஆரம்பத்தில்

உணரவில்லை.

இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது பாகிஸ்தான். கபில்தேவ் முதல் இருவிக்கெட்டுக்களை எடுக்க, மற்ற

விக்கெட்டுக்களை எல்லாம் மணீந்தர்சிங் பார்த்துக் கொண்டார். வசிம் அக்ரம் கால்களின் இடையே பந்து புகுந்து சென்று ,

தற்கால வார்னேயின் பந்து செய்வதைப் போல கிளீன்போல்ட் செய்தது. சிறுவர்களாகிய நாங்கள் மிகுதியாக

சந்தோசப்பட்டோம். under prepared பிட்சின் குறைபாடுகளையும் அத்தகைய பிட்சில் நான்காவது இன்னிங்க்ஸ்

விளையாடுவதன் ஆபத்தையும் உணரக்கூடிய அளவிற்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் அப்போது தெரிந்திருக்கவில்லை.

116 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய பின் நான்காவது இன்னிங்ஸ் ஆபத்தையெல்லாம் பற்றி இந்தியா கவலைப்பட

அவசியம் இல்லாமல்தான் போனது. கவனத்துடன் விளையாடி 100 முதல் 150 ரன்கள் லீட் எடுத்தாலே வெற்றி நிச்சயம் என்ற

நிலைதான் இருந்தது. இந்தியாவின் இன்னிங்க்ஸ் முதல்நாளிலே துவங்கிவிட்டது. ஆட்டநேர இறுதியில் 68 ரன்களை

கவாஸ்கர், ஸ்ரீகாந்த் ஆகியோரின் விக்கெட்டுக்களை இழந்து ,இந்தியா பெற்றிருந்தது.மொகிந்தர் அமர்நாத்தும்,

வெங்சர்காரும் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அக்காலக்கட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் துலீப் வெங்சர்க்கார். 1986ம் ஆண்டு இங்கிலாந்து

சுற்றுப்பயணத்திற்கு பின் சர்வதேச பேட்ஸ்மேன்கள் தரப்பட்டியலில் முதலிடத்தை பெற்றிருந்தார்.இந்திய அணியில்

இவரைத்தவிர அசாருதீன், சாஸ்த்ரி, கபில் என பல ஜாம்பவான்கள் இருந்தார்கள். கிரன்மோரேயும் உருப்படியாக பேட்

செய்வார். எனவே இந்தியா அதிகரன்களை குவிக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.

ஆனால் மறுநாள் கொஞ்ச நேரத்திலேயே மொகிந்தர் அவுட் ஆனார். அதன் பின்பு வந்த ஆட்டக்காரர்களோ நின்று

ஆடமுயலாமல், அடித்து ஆடமுயன்று ஆட்டம் இழந்தார்கள். டீப் மிட்விக்கெட்டிலேயே இரண்டு மூன்று கேட்சுகள்

சலிம்மாலிக் பிடித்தார்.வெங்சர்க்கார் மட்டும் 50 ரன்கள் எடுத்தார். மற்றபடி 145 ரன்களுக்கு உணவு இடைவேளைக்கு

முன்பாகவே அனைத்து விக்கெட்டுக்களும் விழுந்தன. டெளசிப்பும், காசிமும் தலா 5 விக்கெட்டுக்கள். 29 ரன்கள் மிக

சொற்பமான முண்ணனிதான். ஆனாலும் ரசிகர்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

பாகிஸ்தான் அணி இத்தருணத்தில் மகிழச்சியாக இருந்திருக்க வேண்டும். முதல் நாளின் மோசமான ஆட்டத்தின் பாதிப்பை,

இந்திய அணியின் இரண்டாவது நாள் மோசமான ஆட்டம் ஈடு செய்துவிட்டது.இம்ரான்கன் சுதாரித்து கொண்டு புதிய

உத்திகளை கையாண்டார். ரிஸ்வான் அஜ் உமானிற்கு பதிலாக ஜாவேத் மியாண்டாட் ஓப்பனராக களம் இறங்கினார்.முதல்

இன்னிங்ஸைப் போலில்லாமல் இரண்டாவது இன்னிங்சில் 45 ரன்களை முதல் விக்கெட்டிற்கு சேகரித்தனர் ரமீஸ¤ம்,

ஜாவெத்தும். சாஸ்திரியின் பந்தில் ஜாவெத் ஆட்டமிழந்தார்.

இதன் பின்பு முதல் இன்னிங்சைப் போல பாக் விக்கெட்டுக்கள் மளமளவென சரியவில்லை.ரமீஸ்,மாலிம், இம்ரான் ஆகியோர்

கவனமாக விளையாடி ரன்களை சேகரித்தார்கள். முன்னதாக அனுப்பப்பட்ட இக்பால் காசிம் 26 ரன்கள் எடுத்தார்.மனீந்தர்

முதல் இன்னிங்ஸ் விக்கெடுக்கள் கொடுத்த உற்சாக மிகுதியால் பல்வேறு மாற்றங்களை முயற்சித்ததால் அவருக்கு

விக்கெட்டுக்கள் கிடைக்கவில்லை.பாக் 155 ரன்களை 5 விக்கெட்டுக்களை இழந்து இரண்டாம் நாள்ஆட்ட இறுதியில்

பெற்றிருந்தது.

அடுத்த நாள் இந்தியா விக்கெட்டுக்களை சுருட்டி விடும் என்ற ஆர்வத்தில் நாங்கள் அனைவரும் இருந்தோம்.ஆனால் நடந்தது வேறு. இம்மேட்சின் திருப்பு முனையாக நான் பாக் விக்கெட் கீப்பர் சலிம் யூசுப்பின் இன்னிங்சை கூறுவேன். அவர் குவித்த 41 ரன்கள் பாகிஸ்தான் ஸ்கோரை 249க்கு உயர்த்தியது. 198 ரன்களுக்கு 8 விக்கெடுக்களை இழந்தபின், 9 விக்கெட்டிற்கு டெளசிப் அகமதுவுடன் சேர்ந்து 51 ரன்களை குவித்தார் யுசுப்.இந்த ரன்குவிப்பு ஆட்டத்தின் முக்கியமான அம்சமாக மாறிவிட்டது. ஏனெனில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றது.

வெற்றி பெற 221 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சிரமமான இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்சை

துவக்கியது.இம்ரானின் நிழலிருந்து வாசிம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது இக்காலக்கடத்தில்தான். இரண்டாவது

இன்னிங்ஸில் ஸ்ரீகாந்த் மற்றும் மொகிந்தரின் விக்கெட்டுக்களை ஸ்பின்னர்களுக்கு வேலையின்றி அக்ரம் எடுத்து

விட்டார்.இதன்பின்பு வந்த இந்திய பேட்ச்மேன்கள் இக்பால் காசிமையும், டெளசிப் அகமதுவையும் விளையாட முடியாமல்

திணறினார்கள்.மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணையின் ஸ்கோர் 99/4.

மணீந்தர்சிங் பந்து வீச்சில் திணறியதைப் போல காசிம் திணறவில்லை. இதற்கு காரணம் பிசன்சிங் பேடி கொடுத்த டிப்ஸ்.

சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான மைதானத்தில் பந்தை அதிகம் சுழற்ற முயலாமல் நேராக வீசவேண்டும் என்பதே பேடி

கொடுத்த டிப்ஸ். இதைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக பந்து வீசினார் இக்பால்.இந்திய இன்னிங்ஸில் வைரமாக

ஜொலித்தது கவாஸ்கரின் இன்னிங்ஸ் மட்டுமே. சீறும் பாம்பாக திரும்பும் பந்தினை எதிர்கொள்வதில் அவர் காட்டிய

அணுகுமுறை கிரிக்கெட் பாடங்களாக அமைந்தன. மிகவும் வேதனையான அம்சம் கவாஸ்கரின் இந்த இன்னிங்சைப் பற்றிய

வீடியோப் பதிவுகள் யாரிடமும் இல்லாதது. தூர்தர்சனின் ஒளிபரப்பு மிகவும் மட்டமாக அக்காலத்தில் இருந்தது.

கவாஸ்கரின் இந்த இன்னிங்ஸில் அவரது ஸ்கோர் 50 களில் இருக்கும்போது காட்சிற்கான ஒரு அப்பீல் மறுக்கப்பட்டது.

மிகவும் உறுதியான அப்பீல் அது. ஆனால் 96 ரன்களில் அவர் ரிஸ்வானால் காட்ச் பிடிக்கப்பட்ட போது பந்து மட்டையில்

படவில்லை என்றே தோன்றியது. கிரிக்கெட்டில் இவையெல்லாம் சகஜம். கண்ணீருடன் பெவிலியன் திரும்பினார்

கவாஸ்கர். கவாஸ்கரின் கடைசிப் போட்டி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப்டாவிட்டாலும் கூட, இப்போட்டிக்கு

டாஸ் போட கபில்தேவ் கவாஸ்கரையே அனுப்பினார்.96 மணியான ரன்கள் இந்திய வெற்றிக்கு உதவாதது வேதனை. இதைப்

போலவே சச்சின் சென்னையில் 1999 ம் ஆண்டு பிரமாதமான இன்னிங்ஸ் ஆடினார்.

கவாஸ்கரின் விக்கெட்டிற்கு பின் , பாகிஸ்தானின் வெற்றி உறுதியாகி விட்டது. ரோஜர் பின்னி ஒரு சிக்சரை அடித்து

பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனாலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று விட்டோம். யூசுப் குவித்த ரன்கள் பாக் வெற்றிக்கு

வழிவகுத்தன.பாக் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இம்ரானின் கனவு நினைவானது.

மிகவும் திறமையான வீரர்களை வைத்துக் கொண்டும், ஒருங்கிணைந்து ஆடும் தன்மை இல்லாததால் பல தோல்விகளைப்

பெற்ற காலம் அது. அதனுடன் ஒப்பிடும் போது தற்போதைய இந்திய அணி பலமடங்கு முன்னேற்றம் பெற்றுள்ள அணி.

தற்போது நடைபெறவுள்ள பெங்களூர் டெஸ்ட் - கலக்கப் போவது யாரு?- நாளை முதல் தொலைக்காட்சித் திரையில்

காண்க.

No comments: