Friday, July 22, 2005

பரட்டையன் டூ வேட்டையன்

எச்சரிக்கை: ரஜினிகாந்தை பிடிக்காதவர்களுக்கும், "நல்ல திரைப்பட" ஆர்வலர்களுக்கும் கீழே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியைத் த்ரக்கூடும். அதனால்... கண்டிப்பாக படிக்க வேண்டுகிறேன்)

எவ்விதமான தொழிலும் முதன்மை நிலையை பெறுவது சிரமமான காரியம். அதனை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது இன்னும் சவாலான காரியம். இவ்வாறான சவால்களை வென்றவர்களை நமக்கு பிடித்தவர்களென்றால் பாராட்டுவதும், பிடிக்காதவர்கள் என்றால் உள்ளூர வியந்தாலும், வெளியே இகழ்வதும் மனித இயல்பு. போட்டிகள் நிறைந்த தமிழ் திரைத்துறையில் 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்கவத்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல், துவள வைக்கக் கூடிய சோதனைகளை கடந்து, பிரமிக்கும் வெற்றிகளை பெற்று வரும் ரஜினிகாந்தை, எனக்கு பிடிக்கும் என்பதால் பாராட்டுகிறேன்.

மணிச்சித்திரதாழ் என்ற மலையாளப் படத்தை சந்திரமுகி என மாற்றுகிறார்கள் என்று அறிந்தபோது, "இது ஒரு விபரீத முயற்சி" என்று என்னுடைய பழைய பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் என்னுடைய பயத்தை தவிடுபொடியாக்கிவிட்டது ரஜினி-வாசுவின் வெற்றிக் கூட்டணி. சந்திரமுகியை மட்டும் பார்த்துவிட்டு "குழப்பமான திரைக்கதை", திரைக்கதையில் இவ்வாறு மாற்றங்கள் செய்யலாம் என பலர் கருத்துக் கூறினார்கள். ஆனால் திரைப்படம் போன்ற வெகுஜன ஊடகத்தில் மக்களின் அபிமானத்தை வெல்லுமளவு ஒரு திரைக்கதை தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அதை குழப்பமான திரைக்கதை என்று முத்திரையிடுவது நியாயமான செயல் அல்ல. தவறுகளே இல்லாத திரைக்கதை அமைக்கிறேன் என்று மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டு திரைக்கதை அமைப்பவர்களை என்னால் பாராட்ட முடியாது.

Image hosted by Photobucket.com

பி.வாசு என்ற இயக்குநருக்கு சந்திரமுகி ஒரு திருப்புமுனை படம்தான்.வாசு கடந்த சில வருடங்களாக மலையாள படங்களை தமிழில் எடுப்பதன் மூலம் மீண்டும் வெற்றி பெற முயற்சி எடுத்தார். கார்த்திக் நடித்து வெளியான சீனு என்ற படமும் மலையாளப்பட தழுவல்தான். ஆனால் சந்திரமுகியில்தான் அவருக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. ரஜினிக்கேற்ற கதையாக மணிச்சித்திரதாழுவை மாற்றியதன் பிண்ணனியில் உள்ள வாசுவின் சாமர்த்தியம் தமிழ் சினிமா கலைஞர்களுக்கு கண்டிப்பாக புரியும். மலையாள மூலத்தில் நாகவல்லியால் கொல்லப்படும் "சங்கரன் நம்பி பாத்திரத்தில் சுரேஷ்கோபி ( நம்ம ஊர்ல பிரபு) நடித்திருப்பார். இங்கே சந்திரமுகியால் கொல்லப்படும் வேட்டையராஜாவாக ரஜினி. வாசு செய்த திரைக்கதை மாற்றத்தின் முக்கியமான துருப்புச்சீட்டு இது. இல்லாவிடில் ஒரு "லக்க லக்க லக்க" நமக்கு கிடைத்திருக்காது. இந்த மாற்றத்தை எவ்வாறு முடிவு செய்தார்கள் என்பதை வாசுவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் படத்தில் வரும் வேட்டையராஜாவின் ஓவியமும் பிரபுவை மாதிரியாக வைத்து வரைந்ததைப் போலத்தான் இருக்கிறது.

ரஜினி என்ற நடிகனின் அரசியல் முகங்களுக்கு அப்பாற்பட்டு அவருடைய நடிப்பில் வசீகரிக்கப்பட்ட பல ரசிகர்கள் உலகளவில் உள்ளார்கள்.அவர்களுக்கு ரஜினி ராம்தாஸை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்பதை பற்றி அதீத அக்கறை கிடையாது. ஆனால் திரையில் ரஜினி தருகின்ற பொழுதுபோக்கு அனுபவத்தின் மேல் அதீத ஆர்வம் உண்டு.எம்.ஜி.ஆரைப் போல ரஜினி ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்து அரசியல் மூலமாக அறியப்பட்டவர் அல்ல. லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களைப் போல அரசியல் சார்பு நிலை உடையவர்கள் அல்ல.ரஜினி என்னும் தனிமனிதன் எடுக்கக்கூடிய அரசியல் நிலைப்பாடு, ரஜினி ரசிகர்களுக்கு அவர் மேலுள்ள அபிமானத்தை பாதிக்காது. அதற்கான விமர்சனங்கள் முன்வைத்தாலும் கூட புறக்கணிப்புகள் இருக்காது.

ரஜினி என்ற நடிகனின் வளர்ச்சி முழுக்க முழுக்க நடிப்பு வசீகரத்தால் கிடைத்த வளர்ச்சி. திரைக்கென போலி சுய ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி , மக்களின் காவலனாக அடையாளம் காட்டிக் கொள்ளும் முயற்சிகளை ஆரம்ப காலங்களில் ரஜினிசெய்ததில்லை. பலம் பலவீனங்கள் கொண்ட சாதாரண மனிதனாகத்தான் ரஜினிபல கதாப்பாத்திரங்களில் பரிமளித்து வந்தார்.மற்றவர்களிடமிருந்தௌ வித்தியாசப்பட்டு நிற்கவேண்டும் என்ற உத்வேகமே பல ஸ்டைல்களை அவருக்கு கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக "சிவாஜியைப் போல, கமலைப் போல பெரிய நடிப்புத்திறன் தனக்கு இல்லை" என்ற சுயபுரிதலும் கூட அவருடைய தனித்தன்மைக்கான தேடலை தூண்டி விட்டது. ஒரு துறையில் வெற்றி பெற தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஒருவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ரஜினி புரிந்து கொண்டிருந்தார். மக்கள் தன்னிடமிருந்து எதை விரும்புகிறார்கள் என்பதை அவதானித்து படங்கள் கொடுத்தார். மக்கள் தன்னுடைய படங்களை நிராகரித்த போது, உணர்ச்சிவசப்படாமல் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டு படங்கள் கொடுத்தார்.

ரஜினி எவ்வாறு அணுகுமுறையை மாற்றினார்? எல்லாம் ஒரே குப்பைதானே என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு சந்திரமுகியே ஒரு தெளிவான பதில். அரசியலை வைத்து , வசனங்கள் பேசி பணம் சம்பாதிக்கிறார் என குற்றச்சாட்டுக்கள் ஒரு சாராரால் கடந்த சில ஆண்டுகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் இல்லாவிட்டால் படம் ஊத்திக் கொள்ளும் என்றெல்லாம் கூட சொன்னார்கள். ஆனால் அரசியல் துளியும் இல்லாத சந்திரமுகியின் வெற்றி ரசிகர்களுக்கு ரஜினி தரும் பொழுதுபோக்கு அனுபவத்தின் வெற்றியை எடுத்துக் காட்டியுள்ளது.

வெறும் கோபாக்கார இளைஞனின் கதாப்பாத்திரத்திலிருந்து, நகைச்சுவை கலந்த இளைஞனாக மாறிய அணுகுமுறை மாற்றம் "வேலைக்காரன்" படத்திலிருந்து தொடர்ந்தது. இதற்கு சிலவருடங்கள் முன்பாகவே "தம்பிக்கு எந்த ஊரு?" படத்தில் இப்பரிமாணத்தை இயக்குநர் ராஜசேகர் முன்னிலைப்படுத்தினார். இருந்தாலும் ரஜினி இதை தொடர்ச்சியாக செய்தது வேலைக்காரனிலிருந்துதான்."அதிசயப்பிறவி" படத்தின் தோல்விக்கு பின்னால் எடுத்துக் கொண்டிருந்த " காலம் மாறிப் போச்சு" என்ற படத்தை கைவிட்டு, "தர்மதுரை" திரைப்படத்தை தந்தார் ரஜினி.எந்தப்படம் தந்தாலும் மக்கள் பார்ப்பார்கள் என்ற அகம்பாவம் ரஜினிக்கு இல்லை. இருந்திருந்தால் ஜக்குபாயை நிறுத்தியிருக்க மாட்டார். மக்கள் ரசனையின் முக்கியத்துவத்தை ரஜினி அறிந்திருந்தார். தன்னை நம்பி படமெடுப்பவர்கள் நக்ஷ்டப்படக்கூடாது என்ற நல்லெண்ணம், குறித்த நேரத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதி, அதற்கான உழைப்பு இவையெல்லாம்தான் ரஜினிக்கு வெற்றிகளை தேடிதந்தது.திரைப்பட வணிகத்தில் ரஜினியின் நிலை யாரும் அடையாத உச்சத்தை அடைந்தது.

நல்ல படங்களை தருவதை குறித்து ரஜினிக்கு அக்கறை இல்லை என்று சிலர் வாதங்களை முன்வைக்கிறார்கள். முள்ளும் மலரும் படத்திற்கு பின்னால் ரஜினி ஒரு நல்ல படமும் தராததைப் போல கருத்து தெரிவிக்கிறார்கள். இது உண்மையல்ல. 81ம் ஆண்டு ஜெமினி சினிமா என்ற பத்திரிக்கையில் "எங்கேயோ கேட்ட குரல் " படத்தில் நடிப்பதை பற்றியும், அதைப்பற்றிய தன்னுடைய எதிர்ப்பார்ப்புக்களையும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். ஆனால் வணிக ரீதியாக "எங்கேயோ கேட்ட குரல்" படத்தை வீழ்த்தியது "சகலகலா வல்லவன்". அதன் பின்னாலும் மகேந்திரன், பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா என்று பல "நல்லபட இயக்குநர்களுக்கும்" கால்க்ஷ£ட் தந்தார். கடைசியில் நடந்ததென்ன? "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என கவிதைமயமாக தலைப்பு வைத்து ஒரு குப்பையை கொடுத்தார் பாலுமகேந்திரா. ரஜினியை வைத்து லாபம் சம்பாதித்தேன் என்று ஒப்புக் கொண்டதோடு ரஜினியை வைத்து ராகவேந்தர் படமா எடுக்க முடியும் என்று மேதாவித்தனமாக கேள்வி எழுப்பினார் பாரதிராஜா. இவ்வியக்குநர்களையெல்லாம் குறை சொல்லாமல் ரஜினியை தாக்குவது என்ன நியாயம் என்பது புரியவில்லை.

26 ஆண்டுகளாக ரஜினி பெற்ற திரைவெற்றிகளை பார்த்த பின்பும், ரஜினி சப்தமா? சகாப்தமா? என கேள்விகளை மட்டும் எழுப்ப என்னால் முடியாது. ரஜினி திரைவணிகத்தில் ஒரு சகாப்தம் என ஆணித்தரமாக என்னால் கூற இயலும்.

15 comments:

கோபி(Gopi) said...

ஒரு திரைப்படத்தை ரசிகர்களால் மட்டுமே 100 நாட்கள் கடந்து ஓட்ட முடியாது. பொது மக்களும் என்று சொல்லக் கூடிய சாதாரன மக்களும் தான் இந்த வெற்றிக்கு முழு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை

Kannan said...
This comment has been removed by a blog administrator.
Kannan said...

//எல்லாவற்றிற்கும் மேலாக "சிவாஜியைப் போல, கமலைப் போல பெரிய நடிப்புத்திறன் தனக்கு இல்லை" என்ற சுயபுரிதலும் கூட அவருடைய தனித்தன்மைக்கான தேடலை தூண்டி விட்டது. ஒரு துறையில் வெற்றி பெற தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஒருவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ரஜினி புரிந்து கொண்டிருந்தார். //

உண்மை!

இருந்தாலும் ரஜினி அநியாயமாக வீணடிக்கப்பட்ட ஒரு நடிகர் என்றும் ஒரு உறுத்தல் இருக்கிறது. பாலுமகேந்திராவும், பாரதிராஜாவும்(கொடிபறக்குது) ரஜினியை ஒரு jump board ஆகத் தான் பயன்படுத்திக் கொள்ள நினைத்தனர். மகேந்திரன் போல இன்னும் சிலர் இருந்திருக்கலாம்...

donotspam said...

//ரஜினி என்ற நடிகனின் வளர்ச்சி முழுக்க முழுக்க நடிப்பு வசீகரத்தால் கிடைத்த வளர்ச்சி. திரைக்கென போலி சுய ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி , மக்களின் காவலனாக அடையாளம் காட்டிக் கொள்ளும் முயற்சிகளை ஆரம்ப காலங்களில் ரஜினிசெய்ததில்லை.//

முற்றிலும் உண்மை

//வெறும் கோபாக்கார இளைஞனின் கதாப்பாத்திரத்திலிருந்து, நகைச்சுவை கலந்த இளைஞனாக மாறிய அணுகுமுறை மாற்றம் "வேலைக்காரன்" படத்திலிருந்து தொடர்ந்தது.//

பலர் தவற விடுவது

//அவர்களுக்கு ரஜினி ராம்தாஸை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்பதை பற்றி அதீத அக்கறை கிடையாது.//

அந்த மாதிரி ரசிகர்கள்தான் இன்னும் பணக்காரன் , வேலைகாரன் படங்களை எத்தனை முறை சன் ஓளிபரப்பினாலும் தவறாமல் பார்கிறார்கள்.

ஆனால் யாரும் குறிப்பிடாத ஒன்று அமிதாப் மேலும் அவரின் படங்கள் மிதும் ரஜினி கொண்டுள்ள மரியாதை ( pun intended )

ராம்கி said...

ரஜினிக்காக கதை தயார் செய்யாமல் ரஜினியை கதைக்குள் திணித்தவர்களெல்லாம் இதுவரை கவிழ்ந்து போயிருக்கிறார்கள். எங்கேயோ கேட்ட குரல், நான் அடிமை இல்லை, விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால் இதெல்லாம் சில உதாரணங்கள். சந்திரமுகி, இதுவொரு தப்புக்கணக்கு என்பதை நிரூபித்திருக்கிறது, அதுதான் பெரிய ஆச்சரியம்.

Vetri Thirumalai said...

அவர் ஒரு வீணடிக்கப்பட்ட ஒரு நடிகர் என்பதை நான் மறுக்கிறேன். கீழ்கண்ட திரைப்படங்கள் எல்லாமே அவரின் சிறப்பான தனித்தன்மையான நடிப்பை வெளிப்படித்தியவை. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கவும். அவரின் நடிப்பின்படி பிரித்து கொடுத்திருக்கிறேன்.

குணசித்திர நடிப்பு
Apoorvaraagangal
Bhuvana Oru Kelvikkuri
Aayiram Janmangal
Ilamai Oonjaladukirathu
Aval Appadithan
Ninaithale Inikkum
Naan Vazhavaippen
Anbulla Rajnikant
Peddarayudu

வில்லன் நடிப்பு
Moondru Mudichu
16 Vayadhiniley
Aadu Puli Attam
Mangudi Minor

குணசித்திர ஹிரோ
Mullum Malarum
Aarilirunthu Arubathu Varai
Jonny
Nettrikkan
Thanikattu Raja
Pudukavithai
Enkeyo Ketta Kural
Kai Kodukkum Kai
Nallavanuku Nallavan
Raghavendrar
Padikkadavan
Dharmathin Thalaivan(first half)
Dharmadorai
Dalapathi
Annamalai

காமெடி ஹிரோ
Thillu Mullu
VelaiKaran

ஆக்ஷன் ஹிரோ
Bairavi
Billa
Pollathavan
Thee
Moondru Mugam
Baasha

சுரேஷ் கண்ணன் said...

ராஜ்குமார்,

உங்களிடமிருந்து இன்னும் நல்ல பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன். (கட்டுரையா அல்லது கதையா என்பது குறித்து எழுதிய பதிவைப் போல).

விடாதுகருப்பு said...

அருமையான ஒரு அலசல். ரஜினி அவர்களின் அரசியல்முகம் சற்று அடிவாங்கியது உண்மை. அவர் மூப்பனார் இருந்தபோது அனைத்தையும் இணைத்து கூட்டணி அமைத்தார்களே? அப்போதே அரசியலில் நுழைந்து இருந்தால் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் முதல்வர் ஆகி இருக்கலாம். சரியான வாய்ப்பை தவறவிட்டார்.

Raja Ramadass said...

படையப்பா படம் எல்லாம் ஸ்டைல் தான் என்று நினக்கிறார்கள். நடிப்பு என்பது கஷ்டப்படுவது/முகத்தை மாற்றுவது என்று மட்டும் சொன்னால் ரஜினி நடிப்பு சுமார் தான்.

ஆனால் இயல்பாக ரஜினியால் மட்டும் தான் நடிக்க முடியும். படையப்பா எவ்வளவு இயலபான, ஸ்டைலான் நடிப்பு.

அல்வாசிட்டி.விஜய் said...

ரசினியை imdb காரனுங்கோ என்ன சொல்றாங்க

http://www.imdb.com/name/nm0707425/

பயனுள்ளது.

rajkumar said...

Thanks vijay

Krishna Kumar said...

100% right, his on-screen achievements are unrivalled and unchallenged , unparalleled by any body else.

KALATHAL ALIYATHA KAVIYA NAYAKAN.

He doesn't posses anything other than simplicity. While he is on screen for fans like us won't see anything else.

Anonymous said...

hi

Super Article About SUper Star.
Very good Analysis. Sure Rajini Oru Sagaptham

Anonymous said...

After so long i have read very professional article about Rajini. Very clear and good. I have printed out for my reference.

To me,i am still expecting Rajini to act like Mullum Malarum. I can't believe how can Rajini like that in 70's and i can see this type of acting from other actors now! Just so natural. The way he express, he see and also the dance for the song "Raaman Aandalum". I feel that Mahendran left him alone to do whatever Rajini want by giving just the basic idea of the concept!

S said...

Long Live Our Super Star Rajini