Thursday, December 29, 2005

தலை தூக்கிய தீவிரவாதமும் தூங்கும் நிர்வாகமும்

புலி வருகிறது! புலி வருகிறது! என்று அலறிக் கொண்டேயிருந்தார்கள். கடைசியில் புலி வந்து அடித்துப் போட்டு , தப்பித்தும் போய் விட்டது. பெங்களூரில் யாரும் எதிர்பாராவிதமாக IISc வளாகத்தில் யாரோ சிலர் சராமாரியாக சுட்டு, ஒரு விஞ்ஞானியையும் கொன்று விட்டார்கள். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் மென்பொருள் வணிக மையமான பெங்களூரில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கூட்டணி அரசின் கேவலமான வேதனைகளை கர்நாடக அரசாங்கம் அனுபவித்து வருகிறது. நான் வைதததே சட்டம் என காங்கிரஸ் ஒருபுறமும், தேவகவுடா மறுபுறமும் இழுத்துக் கொண்டிருக்க சீர்குலைந்தது கிடக்கிறது நிர்வாகம். பிராந்திய முக்கியத்துவம் என்ற பெயரில் குறுகிய மனப்பான்மையை தூண்டி குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். இத்தகைய குழப்படிகள் நிர்வாகத்திலும் சுலபமாக நுழைந்துவிடும். போலிஸ் துறையும் இத்தகைய குழப்படியில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பெங்களூரில் கடந்த சில மாதங்களாகவே குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறதா என்பது சந்தேகமே. ஹெல்வர்ட் பாக்கர்ட் நிறுவனத்தின் பெண் ஊழியர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், ஊழியருக்கு பாதுகாப்பு தருவது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடமை என்று போலிஸ் விளக்கமளிக்கிறது.இதைத் தவிர கொலை செய்யப்பட்ட ஊழியர் அணிந்திருந்த ஆடைகள்தான் கொலையாளியை தூண்டின என சில மின்னஞ்சல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மின்னஞ்சல்களின் மூலம் கண்டிப்பாக நடந்திருக்கும் கொலையை நியாயப்படுத்த முடியாது. வழிப்பறிகள் பெங்களூரில் வெகுவாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இதைக் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பமுடியாது. கேள்வி எழுப்பினால் கன்னடர்கள் 20 சதவீதம் கூட இல்லாத பெங்களூரை ஏன் பரமாரிக்க வேண்டும் என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

இத்தகைய குழப்படியான நிர்வாகம் தீவிரவாதிகளுக்கு ஏதுவாக இருக்கும். கையில காசு, வாயில தோசை மனோபாவம் அவர்களுக்கு பலவகையில் உதவும். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது தெருவுக்கு தெரு தொப்பை போலீசாரை நிற்க வைப்பது அல்ல. உளவு பார்த்து எதிராளியின் திட்டமறிந்து எதிர்கொள்வது. தமிழகத்தில் இதே போன்ற புலி வருது நிலை கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு முன்னே இருந்தது. அங்கிருந்த மக்கள் அனைவருமே ஒரு விபரீதத்தை எதிர்நோக்கி இருந்தன. அரசாங்கம் அதை கண்டுகொள்ள மறுத்தது. குண்டு வெடிப்புச் சம்பவத்தால் கோயம்புத்தூரின் பிராந்திய முன்னேற்றம வெகுவாக பாதிக்கப்பட்டது. இல்லாவிடில் மென்பொருள் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கோயம்புத்தூர் பெற்றிருக்கக் கூடும்.

பெங்களூரிலும் இன்று இதே நிலைதான். கடந்த சில மாதங்களாக நிலவிய அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. அவர்கள் தப்பியும் சென்றுள்ளது நிர்வாக இயலாமையை சுட்டிக் காட்டுகிறது. இச்சம்பத்திற்கான வேர்கள் எந்த ஆழம் வரை ஊடுருவியுள்ளன என்பது தெரியவில்லை. இதனை கையாள தற்போதுள்ள அராஜக கூட்டணி அரசால் இயலுமா என்பதும் தெரியவில்லை.

தீவிராவதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ள பட்சத்தில் ,இப்பிரச்சனையை மைய அரசு நேரடியாக கையாள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிடில் மிகப் பெரிய விபரீதங்களை அனைவருமே சந்திக்க நேரிடலாம்.

2 comments:

Narain said...

ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள்.

G.Ragavan said...

உண்மைதான். பெங்களூரே உறைந்து போயிருக்கின்றது. லஷ்கர் ஏ தோய்பா இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸ் அறிவுப்பு செய்துள்ளது. மற்ற மென்பொருள் கம்பெனிகளையும் குறி வைத்திருப்பதாகவும் சொல்கின்றார்கள். தீவிரவாதிகள் ஒழிக. தீவிரவாதம் ஒழிக. அவர்கள் காரணமும் ஒழிக.