Thursday, June 23, 2005

நட்சத்திரப் பாடல்கள் #2

கதையோட்டத்திற்கு பாடல்கள் வலுச்சேர்க்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் நான் இங்கே குறிப்பிடப் போகும் பாடல்.தேவையான இடங்களில் பாடல்களை வைத்து, சிறப்பாக படமாக்கி கதைக்கு அழுத்தம் சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க இயக்குநர் கே. பாலச்சந்தர்.கே.பி.யின் படப் பாடல்களை இசை மற்றும் பாடல் வரிகளையும் தாண்டி,அவர் காட்டியிருக்கும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் உள்வாங்கி ரசிக்க முடியும்.சில தருணங்களில் அக்கதாபாத்திரங்களாய் நம்மை கற்பனை செய்து கொண்டும் பாடமுடியும். நீர்குமிழியின்"ஆடிஅடங்கும்வாழ்க்கையடா"விலிருந்து,சிந்து பைரவியின்" பூ மாலை வாங்கி வந்தேன்" வரை பல உதாரணங்களை கூற முடியும்.

இங்கே நான் குறிப்பிடும் பாடல்

பாடல்:இப்படி ஓர் தாலாட்டு பாடவா
படம்: அவர்கள்
பாடகர்: எஸ். ஜானகி
இயக்குநர்: கே. பாலச்சந்தர்
இயற்றியவர்: கண்ணதாசன்


புல்லாங்குழல் வாசிக்கும் கதாநாயகன், அவனை காதலித்த அனு, சந்தர்ப்ப வசத்தால் ஏற்பட்ட பிரிவு, சதியினால் நிகழாத கல்யாணம்( பரணியுடன்) மற்றும் நிகழ்ந்த கல்யாணம் ( ராமநாதனுடன்). ராமநாதனை பிரிந்து சென்னை வரும் அனு மீண்டும் பரணியை பார்க்க நேரிடுகிறது. இருவரும் பழைய நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம். துயரங்கள் மேலிட்டாலும், அழாமலே இரு கதாபாத்திரங்களும் தன்னுடய இடைக்கால நிகழ்வுகளை உணர்ச்சி வசப்படாமல் பகிர்ந்து கொள்கின்றன. பரணி தன் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு தன் புல்லாங்குழல் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டு செல்கிறான். அனு தன் கதையை குழந்தையின் தாலாட்டாகச் சொல்ல, பரணியின் புல்லாங்குழல் இசை அவளுடன் இணைந்து கொள்கிறது.


இப்பாடலை கேட்கும்போதெல்லாம் மெட்டுக்கு பாட்டெழுதினார்களா அல்லது பாட்டுக்கு மெட்டெழுதினார்களா என கேள்வி எழுவதுண்டு. மெட்டுக்கு பாட்டெழுதிய பட்சத்தில், சூழ்நிலையை உள்வாங்கி, அதனை எளிமையான வார்த்தைகளில் அனலாய் சுடும் விதத்தில் தெறிக்கவிட்டிருக்கும் கண்ணதாசனின் திறமை தெய்வீகமானது.

அன்றொருநாள் மீராவும் கண்ணனை நினைத்தாள்
ஆனால் அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்.
அதுவரைதான் தன் கதையை என்னிடம் சொன்னாள்
நான் அதிலிருந்த என்கதையை உன்னிடம் சொன்னேன்.


அனு என்ற கதாபாத்திரத்தின் ஆற்றாமையை, அவள் வாழ்வின் நிகழ்வுகளி இவ்வளவு சுருக்கமாக எடுத்துரைக்க கண்ணதாசனால் இயன்றிருக்கிறது. பாடல் வரிகளால் ஒரு பாடலை ரசனைக்குரியதாக்க முடியும் என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம். இப்பாடலின் இன்னொரு சிறப்பம்சம்- இப்பாடலின் இறுதியில் வரும் புல்லாங்குழல் இசையின் தனிஆவர்த்தனம். விஸ்வநாதன் இப்படத்தில் பாடல்களிலும் சரி, உறுத்தாத பிண்ணனி இசையிலும் சரி- பிரமாதமாக பரிமளித்திருப்பார்.

இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம்- டூயட் பாடல்கள் கிடையாது. ஆண்குரலில் இரு தனிப்பாடல்கள், பெண்குரலில் இரு தனிப்பாடல்கள். இப்படத்திலிருந்து இன்னொரு நட்சத்திரப் பாடல் கண்டிப்பாக உண்டு.

பாடல் வரிகளில் பிழையிருந்தால் பொறுத்தருள்க.

சில கவிதைகள்

கடைசி வரிகள்

ஒன்றரை வருடங்களுக்கு
முன்
நீ எழுதிய
கடைசிக் கடிதத்தின்
கடைசி வரிகள்..
"இனிமேல் இத்தகைய
இடைவெளி இருக்காது
அடிக்கடி கடிதம் எழுதுவேன்."

காலி

கூட்ட மிகுதியிலும்
காலியாயிருந்தது
அரவாணியின்
பக்கத்து சீட்.

புறக்கணிப்பு

அழுக்குச் சட்டைக்காரனை
புறக்கணித்து
அடுத்தச்சீட்டில்
அமர்ந்தேன்.
என்னை தாண்டி
முன்சீட்டில் அமர்ந்தவன்
எந்தக் குறையை
கண்டான் என்னிடம்?

Friday, June 17, 2005

நட்சத்திரப் பாடல்கள்-1

நான் ஒரு இசை ரசிகன். குறிப்பாக திரை இசை ரசிகன். ஆனால் ராகம்,தாளம் அலசி,நுணுக்கமாக விமர்சனம் எழுதுவதெல்லாம் என்னால் இயலாது. ரசனைக்கான உணர்வுரீதியான காரணங்களைத் தர இயலுமே தவிர, அறிவியல் ரீதியான அலசல்களை செய்ய இயலாது. ஆனால் இந்த இயலாமை இசையை ரசிப்பதற்கு இடைஞ்சலாக இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது.

திரைப்படத்தில் பாடல்களே தேவையில்லை என்ற நிலைப்பாட்டுடன் சிலர் இருக்க, அவற்றுடன் ஒத்துப் போகாதவன் நான். பாடல்களை திரைப்படத்தில் தேவையான இடத்தில், சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் பார்வையாளர்களிடம் கதையின் தாக்கத்தை அதிகப்படுத்தலாம் என்ற கண்ணோட்டம் உடையவன் நான். இதைக் குறித்து மியூசிக் பார்ட்டி பற்றிய என்னுடைய பழைய பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில பாடல்களை நட்சத்திரப் பாடல்களாய் கவுரவித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நட்சத்திரப் பாடல் #1

பாடல்: உறவுகள் தொடர்கதை
பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்
படம்: அவள் அப்படித்தான்
இசை: இளையராஜா
இயக்குநர்: ருத்ரய்யா

இலங்கை வானொலியில் முதன் முதலாய் இப்பாடலை கேட்டேன். காரைக்குடியில் நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த சொற்ப வீடுகள் ஒன்றில் நாங்கள் குடியிருந்தோம். அப்போது இலங்கை வானொலியில் மாலை 5.30 முதல் 5.58 வரை நீங்கள் கேட்டவை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அழகப்பா கல்லூரியின் மாணவர் விடுதியில் சத்தமாக வைக்கப்படும் வானொலி காற்றில் மிதந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் காதுகளை வந்தடையும். அவ்வாறான ஒரு சமயத்தில் கேட்ட பாடல். பிற்காலத்தில் இத்திரைப்படத்தை பார்த்த பின் நெஞ்சில் பசை போட்டு ஒட்டிக் கொண்ட பாடல்.

மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்ட பாடல். பாடல் காட்சியில் நடித்தவர்கள் சிவச்சந்திரன் மற்றும் ஸ்ரீபிரியா. கொஞ்சம் அதிரஷ்டம் இருந்திருந்தால் ஸ்ரீப்பிரியாவிற்கு இப்படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கும். இவருள் இத்தைகைய நடிப்பாற்றலா என்று படம் பார்த்தவர் அனைவரையும் வியக்கவைத்த நடிப்பு.
அனைத்திற்கும் மேலாக கங்கை அமரனின் அற்புதமான வரிகள்.

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்ணிலே ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம், வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே, புது அழகிலே நாமும் இணையலாம்.

நொந்து போயிருக்கும் ஸ்ரீபிரியாவை, ஆறுதல் சொல்லி தேற்றுவதைப் போன்ற சூழ்நிலை. இதற்கு இதைக்காட்டிலும் எளிமையாக அதே சமயத்தில் மனதை தொடும் வகையில் , குறிப்பாக வார்த்தை விளையாட்டுக்கள் ஏதுமின்றி பாடல் எழுத கங்கை அமரனால் மட்டுமே இயலும்.

பாடல் வரிகளில் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்தருள்க. இளையராஜா இசை மகாராஜாவாக முடிசூட்டிக் கொண்ட காலத்தில் வெளியான படம். இப்படத்தின் மூன்று பாடல்களுமே முத்தான பாடல்கள். குறிப்பாக பெண்குரலில் வரும் "வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை" பாடலை கேசட்டுக்களிலும், நல்ல மற்றும் பிளாட்பார ஓர திருட்டு குறுந்தகடுகளிலும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்காவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

Thursday, June 16, 2005

தொடர்கதைகள் தந்த வாசிப்பனுபவம்

சமீபத்தில் சுஜாதா அவர்களை பார்த்து உரையாடிய போது "நல்லதொடர்கதைகள் தற்போது எங்கே வருகிறது? " என்று தன் ஆதங்கத்தைவெளிப்படுத்தினார்(கல்கியில் சுஜாதா ஒரு தொடர்கதை எழுதிகொண்டிருக்கிறார்). தொடர்கதைகளை வெளியிடுவதை வாரப்பத்திரிக்கைகள் கணிசமாக குறைத்துக் கொண்டு விட்டன. இதற்கான வியாபரகாரணங்களோ அல்லது வாசகர்களின் ரசனை குறித்த காரணங்களோ குறிப்பாகஏதும் உள்ளனவா என்பது தெரியவில்லை.இதற்கான காரணங்கள் குறித்து இதழியல்ஆய்வுகள் ஏதும் நடத்தப்பட்டனவா? அல்லது எழுத்தாளர்கள் தாமாகவே இவ்வகையான முயற்சிகளை குறைத்து கொண்டுவிட்டார்களா? இதைப் போன்ற பல கேள்விகள்மனதில் எழுகின்றன. பத்திரிக்கை உலக அனுபவம் மிக்க நண்பர்கள் இதைப்பற்றிய கருத்துக்களை எழுதினால் நன்றாக இருக்கும்.

கதை வடிவிலே சிறுகதை,தொடர்கதை -இவற்றுள் எது கடினம்? என்றகேள்வியை முன்பு யாரோ சுஜாதாவிடம் கேட்ட போது அவர் சிறுகதை என்று பதில் சொன்னதாக நினைவு.இதை மறுக்க முடியாது என்றாலும் நல்ல தொடர்கதைகள் அளித்த வாசிப்பனுபவமும் அலாதியானதுதான்.முப்பது வாரம் ஒரு தொடர்கதை வரும் பொழுது அந்த கதாபாத்திரங்களும் நம் வாழ்க்கையின் ஒரு பங்குதாரர்களாக மாறிப்போனதை நான் அனுபவித்திருக்கிறேன்.இவ்வாரம்என்ன நிகழும் என்ற ஆர்வத்தில் அதிகாலை எழுந்து பேப்பர்காரர் ஆனந்தவிகடன் தருவிப்பதற்காக காத்திருந்த அனுபவங்கள் எனக்கு உண்டு. இதைத் தவிர யார் புத்தகத்தை முதலில் படிப்பது என்று சகோதரர்களுடம் சண்டைபோட்டதும் உண்டு.( அனுபவங்களை எழுதுறாங்கப்பா- பிரசன்னா பல்லை கடிக்கிறார். எஸ்கேப்)

தொடர்கதை எழுதுவதற்கு ஒரு தனியான திட்டமிடல் வேண்டும். ஒருதொடர்கதையின் வெற்றியே இரு அத்தியாயங்களுக்கு இடையே இருக்கும் வார இடைவெளியில் வாசகனின் ஆர்வத்தை எவ்வளவு உயிரோட்டமாக வைத்திருக்கிறாம் என்பதில்தான் உள்ளது.சமீபத்தில் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய "சில நேரங்களில் சில மனிதர்கள்" மற்றும் சுஜாதாவின் " கனவுத்தொழிற்சாலை" ஆகிய இரு நாவல்களை படிக்க நேரிட்டது. சிலநேரங்களில்.. தொடர்கதையாக வந்த போது எந்த அளவு வாசகர் மத்தியில் ஒவ்வொரு வாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இவ்வாறான ஒரு கதையை தொடர்கதையாக படிக்கும் வாசிப்பனுபவத்தின் இழப்பை உணரமுடிகிறது. இவ்வாறாகத்தான் போகும் என யூகிக்க முடியாத கதை. மேலும் அத்தியாயங்களுக்கு இடையான வார இடைவெளி கதையின் கணபரிமாணங்களை கிரகித்து, பலமுறை ரசித்து படிக்கும் வாய்ப்பையும் தரும். இதே போல்தான் கனவுத் தொழிற்சாலை கதையும்,தொடர்கதையாக வரும்பொழுது படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது ( ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆனந்தவிகடனில் படம் பார்த்து , எழுத்துக் கூட்டி ஜோக் படிப்பதுடன் சரி).

தொடர்கதையாக எழுதும் போது வாசகர்களின் வரவேற்பும்,கருத்துக்களும் எழுத்தாளரின் கதைக்கலன்அமைப்பதற்கும்,சில கதாப்பாத்திரஙகளின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கோ/குறைப்பதற்கோ உதவி செய்யும் என நினைக்கிறேன்.இது எந்த அளவு உண்மை என்பதை எழுத்தாளர்களிடம்தான் கேட்கவேண்டும்.சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் -இரண்டாம் பாகம் தொடர்கதையாக வந்த போது மதுமிதாவை சாகடிக்காதீர்கள் என பல கடிதங்கள் வந்ததாக சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.சில நேரங்களில் சில மனிதர்களுக்கும் நிரம்ப வாசகர் கடிதங்கள் வந்ததாக ஜெயகாந்தன் முன்னுரையில்குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது மெகாசீரியலில் பின்பற்றப்படும் இழுவை உத்திகளை பயன்படுத்தி முன்பும் பல தொடர்கதைகள் எழுதப்பட்டன.சாண்டில்யனின் சரித்திரக் கதைகள் அனைத்திலும் சில அத்தியாயங்கள் கண்டிப்பாக குறைக்கப்பட்டிருக்கலாம். நண்பர் சுரேஸ் கண்ணன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களே ஒவ்வொரு வாரமும் சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் செயற்கையாக ஒரு சஸ்பென்ஸை உருவாக்கினார்கள் ( உதாரணம் --ஆ) என்ற குற்றச்சாட்டை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது ஓரளவு உண்மைதான்.

இவை அனைத்தையும் மீறி தொடர்கதைக்கான திட்டமிடலும், அதை நிறைவேற்றலும் தனிக்கலை என நினைக்கிறேன்.அதற்கான சிரமங்களை மேற்கொள்வதில் பயன்கள் பெரிதாக இல்லை என தற்போதைய எழுத்தாளர்கள் நினைத்திருக்கலாம். அல்லது எழுதப்படும் கதைகள் டீவி சீரியலாக மாற்றப்படும் சாத்தியங்களை மனதில் கொண்டு செயற்கையான திருப்பங்களை நிறைய வைத்து கதை எழுதிய தேவிபாலா போன்றவர்கள் வாசகர்களின் தொடர்கதை ஆர்வத்தை குறைத்துவிட்டார்கள் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

மணியன் அக்காலத்திலேயே தன்னுடைய தொடர்கதைகளுக்கு வித்தியாசமான "பில்டப்" கொடுத்தவர். "இதயம் பேசுகிறது" பத்திரிக்கையில் ஒரு தொடர்கதைக்கு கமல்-ஸ்ரீப்பிரியாவை மாடலாக வைத்து புகைப்படங்கள்வாரவாரம் வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து அடுத்த தொடர்கதைக்கு ரஜினி-ஸ்ரீதேவி. ரஜினி மாடலாக இருந்த கதை தலைப்பு நினைவில் இருக்கிறது -"என்றும் உன்னுடைய."

எனக்கு பிடித்த சில தொடர்கதைகளை இங்கே தருகிறேன்.

அது ஒரு நிலாக்காலம்- ஸ்டெல்லா புரூஸ் ( ஆ.வி)
என் இனிய இயந்திரா- சுஜாதா ( ஆ.வி)
வாய்மையே சில சமயம் வெல்லும்-சுஜாதா(ஆ.வி)
நிழல் யுத்தம்- பாலகுமாரன் ( கல்கி)
கருணைக் கொலை- சிவசங்கரி ( ஆ.வி)
ஒரு மனிதனின் கதை ( ஆ.வி)
துளசிதளம்-எண்டமூரி வீரேந்திரநாத் ( சாவி)
தொட்டால் தொடரும்- பட்டுக்கோட்டை பிராபகர்( ஆ.வி)
பிரியங்களுடன் நானே-பட்டுக்கோட்டை பிராபகர்(சாவி)
வேர்கள்- கிருஸ்ணமணி ( ஆ.வி)
காதலெனும் ஏணியிலே-பிரபஞ்சன்( ஆ.வி)
இன்னொரு பட்டாம்பூச்சி- மொழிபெயர்ப்பு நாவல்- ரா.கி ரங்கராஜன் (குமுதம்)
பம்பாய்க்கு பத்தாவது மைலில்- ராஜேஸ்குமார்( கல்கண்டு)
47 நாட்கள் -சிவசங்கரி ( இதயம் பேசுகிறது)
நிலா நிழல்- சுஜாதா- திணமணிக்கதிர்

இதைத் தவிர பல தொடர்கதைகளை பிற்காலத்தில் முழுநாவல் வடிவத்தில்படித்தேன்.

குறிப்பிடத்தக்கவை

உடல் பொருள் ஆனந்தி- ஜாவெர் சீதாராமன் - குமுதம்
கொலையுதிர்காலம்- சுஜாதா- குமுதம்.

நல்ல தொடர்கதைகளை படிப்பதற்கு இன்னும் ஆசை இருக்கிறது. யாராவதுஎழுதுங்கள் ப்ளீஸ்.


பின் குறிப்பு:கல்கியின் நாவல்களை பற்றி சொல்லவில்லை.ஏனெனில் அவைவிவாதத்திற்கப்பாற்பட்ட சாகாவரம் பெற்றவை.கல்கி பத்திரிக்கை ஒவ்வொருமுறை சர்குலேசன் ஏற்றவும் பொன்னியின் செல்வனையும், சிவகாமியின் சபதத்தையும் மீண்டும் தொடர்கதையாக வெளியிட்டது அனைவரும் அறிந்ததே

Wednesday, June 15, 2005

நூலகப் பஞ்சம்

நல்ல படைப்பாளனாக மாறுவதற்கு சுஜாதா முதல், சமீபத்தில் மரத்தடியில் ” ராமகிருஷ்ணன்” வரை அனைவரும் கூறும் அறிவுரை நிறைய படியுங்கள், நல்ல புத்தகங்களைப் படியுங்கள்’ என்பது. படிப்பது முக்கியம், அதுவும் வேறு கவலைகள் இல்லாத இளமையிலே படிப்பது மிகவும் முக்கியம்.நல்ல புத்தகங்களை படிக்கச் சொல்லும் அதே சமயத்தில், இவ்வாறான புத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளாதா? என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும். இளம் வயதில் வீட்டில் “ஸ்போர்ட் ஸ்டார்” தொடர்ச்சியாக வாங்கிக் கொடுக்க இயலாத சூழ்நிலையில் அரசாங்க நூலகத்தில் ஸ்போர்ட் ஸ்டார் இருக்கும் என்ற நம்பிக்கையில் மதுரை ஞான ஒளிவுபுரத்தில் உள்ள நூலகத்திற்கு என் அண்ணனுடன் போனேன்.

இரண்டாவது முறையாக நான் தனியாக சென்றபோது, சிறுவன் என அலட்சியப்படுத்தி விரட்டி விட்டார் நூலகர். சிறுவயதில் ஏற்ப்பட்ட தாங்க முடியாத அவமானம் இது. இதன் பின்பு சிறிது காலம் நூலகம் செல்ல முயற்சிக்கவில்லை. மதுரையில் என் அண்ணன்கள் படித்த தூய பிரித்தோ பள்ளியில் நல்ல நூலகமும், நூலகம் செல்வதற்காக தனியாக பாட வகுப்பும் வைத்திருந்தார்கள். வீட்டிற்கு புத்தகங்கள் எடுத்து செல்ல அனுமதிப்பார்கள்.

அவ்வாறாக என் அண்ணன்கள் எடுத்து வரும் புத்தகங்கள்தான், வாரப் பத்திரிக்கைகளுக்கு அப்பாற்பட்டு படித்த புத்தகங்கள். அப்போதுதான் வாண்டு மாமாவின் “மூன்று வீரர்கள்’ கதையை முதல்முறை படித்தேன். பிற்காலத்தில் பேச்சுப்போட்டிக்கு பரிசாக இப்புத்தகம் எனக்கு கிடைத்தது.காரைக்குடி அழகப்பா பள்ளியிலும் நூலகம் உண்டு. ஆனால் அது திறக்காமல் மூடியே இருக்கும்.வருடத்திற்கு ஒரு முறை வருடாந்திர தணிக்கைக்கு முன்பு, நூலகத்தை சுத்தம் செய்வார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே இம் மகத்தான பணி செய்ய தகுதி பெறுவார்கள். பணியின் இறுதியில் சில பழைய புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பார்கள். மகாத்மாவின் “சத்திய சோதனை” சுருக்கப் படாத பதிப்பு ஒன்று நூலகத்தில் இருந்து எனக்கு கிடைத்தது.

நூலகங்களை மூடிவைத்ததற்கான காரணம் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய அநீதி.பின்பு அரசாங்க நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். ஆனால் இங்கே நல்ல புத்தகங்கள் கிடைப்பது சென்னையில் தண்ணீர் தேடுவது போல் இருந்தது. உறுப்பினரானவுடன் நேராக பொன்னியின் செல்வன் எடுத்து படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போய் அவர்களது வீட்டில் உரிமையுடன் வைத்துக் கொண்டார்கள். நான் நூலகம் போகும் நாளை நிறுத்தும் வரை திருப்பித் தரவில்லை.

இந்நூலகத்திலும் பாலகுமாரனின் சில கதைகள், ந,பா வின் நீலவல்லி, தமிழ்வாணனின் சில கதைகள், கிரிக்கெட் விளையாடுவது எப்படி? போன்ற புத்தகங்களைப் படித்தேன்.இருந்தாலும் படிக்க விரும்பிய அனைத்துப் புத்தகங்களையும் படிக்க இயலவில்லை. நிறைய நல்ல புத்தகங்கள் அந்நூலகத்தில் இருந்ததும், யாரோ எடுத்துப் போய்விட்டிருக்க, புத்தகங்களை மீட்க எவ்வித முயற்சியும் எடுக்கப்படாததும் சோகமான விசயம்.

என்னுடைய படிப்பார்வத்திற்கு தீனிபோடுவதாய் அமைந்தது காரைக்குடியில் 92ல் தொடங்கிய கலைமகள் தனியார் நூலகம். ஜெயகாந்தன், தி. ஜா, கிருஸ்ணமனி,சுஜாதா என பல்வேறு எழுத்தாளர்களையும் படித்து மகிழ்ந்தேன், வேலை கிடைக்காத காலக்கட்டம் வேறு. இந் நூலகத்தில் படித்ததுதான் மாலனின் ‘மாறுதல் வரும்”, கல்லிற்கும் கீழே பூக்கள்’ ஆகிய நாவல்கள்.

பின்பு திருவல்லிக்கேணியில் “மேன்சன்” வாசத்தின் போது “பிக் ஸ்டீர்ட்” ல் ஒரு நூலகத்தில் உறுப்பினரானேன். இங்கே இந்திரஜால் காமிக்ஸ் முதல் மவுனி வரை அனைவரது புத்தகங்களும் கிடைத்தன. 150 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் நிறைய புத்தகங்களை கொடுத்து, இழந்து, மீட்டு உருப்படியாக நூலகம் நடத்தும் இக்கடை நிர்வாகிகளிடம் அரசாங்க நூலகங்கள் பாடம் கற்க வேண்டும்.

சென்னையின் சிறந்த ஆங்கில நூலகம் ‘ எல்லூர்”. அனைத்து ஆங்கிலப் புத்தகங்களும் துறைவாரியாக அடுக்கப்பட்டு, மிகவும் அழகாக இருக்கும். இதைப் போன்ற நூலகம் தமிழ் புத்தகங்களுக்கு யாராவது ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆவல்.

தமிழ் நூல்களின் விலையைப் பார்க்கும் போது அனைத்துப் புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்குவது இயலாத காரியம். நல்ல நூலகம் அமைத்தால் காசு கொடுத்து படிக்க மக்கள் கண்டிப்பாக வருவார்கள் என்பது எனது நம்பிக்கை.இலங்கைப் பிரச்சனையில் யாழ் நூலகம் எரிந்ததை வலைப் பூவில் படித்தேன். மிகவும் வேதனை தந்த நிகழ்வு.

நூலகங்களை பள்ளிகளில் வலுப்படுத்த , அரசாங்கத்தை வலியுறுத்தி இயக்கம் நடத்த வேண்டியது மிகவும் அவசியம். நூலகம் செல்வதற்காக ஒரு பாடப்பிரிவை பள்ளிகளில் கண்டிப்பாக ஒதுக்குவதும் அவசியம்.தமிழ் எனும் செம்மொழி சிறக்க நூலகங்கள் கண்டிப்பாக உதவும்.
பின் குறிப்பு:இப்பதிவு வலைப்பூவில் ஆசிரியராக பணியாற்றிய போது எழுதியதின் மறு பிரசுரம்

Thursday, June 09, 2005

புத்தக ஆட்டம்- எனது பங்களிப்பு

அழைப்புக்கு நன்றி இகாரஸ்.

புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படிக்க இயலா காலக்கட்டத்தில்தான் படிப்பதற்கான ஆர்வமும் நேரமும் அதிகம் இருந்தது.அக்காலக்கட்டத்தில் உதவி செய்தது காரைக்குடியில் இருந்த கலைமகள் பதிப்பகம்தான். பொறியியல் படிப்பு முடித்து வேலையில்லாமல் இருந்த காலக்கட்டத்தில்தான் ஒரு நாளைக்கு ஐந்து புத்தகங்கள் என்ற கணக்கில் நிறைய படித்து கிழித்தேன்.


என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை

150 முதல் 200 வரை

சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்
ரஜினி சப்தமா? சகாப்தமா?
ஜே.ஜே. சில குறிப்புகள்
எங்கெங்கு காணினும்
ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்-ஆங்கிலம்
பைவ் பாய்ண்ட் சம் ஒன் -ஆங்கிலம்
மேன்சன் கவிதைகள் - பவுத்த அய்யனார்

சமீபத்தில் படித்தவை

கனவுத் தொழிற்சாலை- சுஜாதா ( மறு வாசிப்பு)
பைவ் பாய்ண்ட் சம் ஒன்- சேட்டன் பகத்
டிஜிட்டல் போர்ட்டர்ஸ்- டான் பிரவுன்
சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
நிர்வாண நகரம் ( மறு.. மறு வாசிப்பு)

என்னை பாதித்த புத்தகங்கள்

தரையில் இறங்கும் விமானங்கள் - நாவல்-இந்துமதி

கல்லிற்கும் கீழே பூக்கள்- சிறுகதை தொகுப்பு- மாலன்

கண்ணீர் பூக்கள்- கவிதை-மு.மேத்தா

வேர்கள்- நாவல்-கிருஸ்ணமனி

பிரிவோம் சந்திப்போம் ( முதல் பாகம்) - நாவல்- சுஜாதா

இந்தப் பூக்கள் விறபனைக்கல்ல- கவிதைகள்- வைரமுத்து

அது வேறு மழைக்காலம்- நாவல்- ஸ்டெல்லா புரூஸ்

விடுதலைப் போரின் இறுதி நாட்கள்- கட்டுரை- தாராக்கியா

மெர்குரிப் பூக்கள்- நாவல்- பாலகுமாரன்

துணையெழுத்து- எஸ்.ராமகிருஸ்ணன்.

படித்த சொற்ப ஆங்கிலப் புத்தகங்களில் பிடித்தது

லவ் ஸ்டோரி- நாவல் -எரிக் சேகால்

நாட் எ பென்னி மோர்...-நாவல்- ஜெப்ரி ஆர்ச்சர்

ட்ரீம்ஸ் டை பர்ஸ்ட்- நாவல்-ஹெரால்ட் ராபின்ஸ்

எம்.ஜி.ஆர்- மேன் அண்ட் த மித்- அனுவங்கள்-மோகன் தாஸ்.

இன்ஸைட் அன் எலுசிவ் மைண்ட்- வாழ்கை வரலாறு-நாராயணன்

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்- ஆங்கில மொழிபெயர்ப்பு


இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள நான் அழைப்பது

அனாமிகா மெய்யப்பன்
சுரேஸ் கண்ணன்
வந்தியத் தேவன்
வீரமணி இளங்கோ
அருண்

Thursday, June 02, 2005

ஈழப் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும்

வலைகளில் விவாதிப்பதற்கு அனைவரும் தயங்கக் கூடிய பிரச்சனை ஈழப்பிரச்சனையே. தர்க்க ரீதியில் இப்பிரச்சனை எழுப்பும் தாக்கத்தை விட, உணர்வு ரீதியில் எழுப்பும் தாக்கம் மிக அதிகம். உணர்வு ரீதியான விவாதங்களுக்கு நியாயம் அநியாயம் என்று தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரு பக்கங்கள் இல்லை. அவரவர் வலி அவர்களுக்கு.

ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரை தமிழக மக்களின் புரிதல், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டைப் பொறுத்தே அமைந்து வந்துள்ளது. 1983ம் ஆண்டிலே நிகழ்ந்த இனக்கலவரங்கள் விளைவித்த அவலங்களே இலங்கைப் பிரச்சனையைக் குறித்த பரவலான அறிதலை மக்களிடையே ஏற்படுத்தின. குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் படுகொலை மற்றும் இனக்கலவரங்கள் குறித்து திராவிடர் கழகம் பல்வேறு ஊர்களில் நடத்திய கண்காட்சிகள் மற்றும் இந்திய ஊடகங்கள் ஆகியவை தமிழக மக்களிடையே ஏற்படுத்திய சிங்கள் வெறுப்புணர்வும், இந்திய அரசாங்கம் இப் படுகொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மக்களின் ஏகோபித்த கருத்து , பல தொடர் போராட்டங்களில் எதிரொலித்தது.

ஆனால் இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனையை வைத்து பின்னப்பட்ட சர்வதேச அரசியல் இழைகளும், யார் இலங்கை தமிழர்களுக்கான உண்மையான பாதுகாவலன் என்பது குறித்து பிராந்திய ரீதியில் திராவிடக் கட்சிகள் பின்னிய அரசியல் இழைகளும் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகி விட்டன. இதைக் குறித்து முடிவற்று விவாதிக்குமளவு பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் கூட அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய அம்சம்- இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கும், போராளிக் குழுக்களுக்கும் உதவி அளிக்க ஒப்புக் கொண்டதில் தமிழர்களின் நலவிருப்பத்தை தவிர, பிராந்திய மேலாதிக்கத்தை நிலைப்படுத்த முயலும் அரசியல் நோக்கங்களும் காரணம் என்பது. ஆனாலும் அக்காலத்தில் கூட தமிழ்நாட்டு தமிழன் இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்தியா முயற்சி செய்து கொண்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருந்தான்.அதனால்தான் போராளிகளுக்கான உதவி என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைக் கூட மக்கள் பொறுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

ஈழப்பிரச்சனையில் தவறான வெளியுறவுக் கொள்கையால் இந்தியா இலங்கை அரசாங்கம் மற்றும் போராளிகள் ஆகிய இருவேறு எதிரிகளை தேடிக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக ராஜிவ் காந்தியின் படுகொலை ஈழப் பிரச்சனையைக் குறித்த இந்திய மக்களின் மனோபாவத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது. இப் படுகொலையின் தொடர்ச்சியாக எழுந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி, வெளியுறவுக் கொள்கையில் செய்த சொதப்பல்களை இந்திய அரசாங்கம் மறைத்துக் கொண்டது. இதே வெறுப்புணர்வை பயன்படுத்தி, ஈழப்பிரச்சினை குறித்த இந்தியர்களின் அனுதாபத்தை குறைத்து, மக்கள் மனதிலிருந்து ஈழப் பிரச்சனையை அந்நியப்படுத்தி விட்டார்கள். இதில் இந்திய அரசாங்கத்திற்கு நல்ல வெற்றி என்று கூட சொல்லலாம். போராளிகளுக்கும் அப்பாற்பட்டு ஈழப்பிரச்சனையை அலச மாட்டேன் என்பதில் இந்திய அரசாங்கமும், போராளிகளை தவிர்த்த ஈழ விடுதலை சாத்தியப்படாது என்பதில் ஈழத் தமிழர்களும் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க, ஈழத் தமிழர்களுக்கான நலனில் இந்தியத் தமிழர்களின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் போனது. தேவைக்கதிகமாக முன்பு இப்பிரச்சனையில் இந்தியா எவ்வளவு ஈடுபடுத்திக் கொண்டதோ , அதன் பின்பு தேவையான அளவு கூட அக்கறை காட்டாமல் விலகி நின்றது இந்தியா.

ராஜிவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட இந்தியத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்குமான பிளவும் ,நம்பிக்கையின்மையும் ஈழப் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியதா? ஒன்றும் இல்லை என்று மறுப்பார்கள் ஈழ நண்பர்கள். ஆனால் ஈழப் பிரச்சனை குறித்த வேறுவகையான முன்னேற்றங்கள் சாத்தியப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.

இலங்கைப் பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்க முடியாத சட்ட சூழலையும், அடக்குமுறைகளையும் பயன்படுத்தி என்ன பயன்? போராளிகளின் இந்திய நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் , இயக்கங்களை பலமிழக்க செய்யலாம் என்று நினைத்திருந்தால் அந்த நோக்கமும் நிறைவேறவில்லை. சமீப காலமாக போராளிகளின் படைபலம் குறித்த செய்திகள் கவலை தருவதாகவே உள்ளது.

விடுதலைப் புலிகளின் கடற்படை பலத்தைப் பற்றி கட்டுரைகள் வருகின்றன. வான்படை பலத்தை பற்றி இந்து பத்திரிக்கை கவலை தெரிவிக்கிறது. கொச்சின் விமான நிலையம் புலிகளால் தாக்கப்படப் போகிறது என செய்திகள் வருகின்றன. ஒருநாள் தமிழகத்தில் பெண்வெடிகுண்டு உலவுகிறது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. மறுநாள் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இல்லை என்று கூறுகிறார் சிவராஜ் படேல்.

தமிழகத்தில் எல்லைப் பகுதியில் ராணுவ ரீதியான பதட்டம் உருவாகக் கூடிய சூழ்நிலை வெளிவரும் செய்திகளிலிருந்து கணிக்க முடிகிறது. இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறது இந்தியா? இதற்கான இந்திய நிலைப்பாட்டை உருவாக்க என்ன பங்களிக்க போகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். இலைமறைவு காய்மறைவாக இப்பிரச்சனையை பேசி என்ன முன்னேற்றம் காணமுடியும்? ராஜிவ் காந்தி கொலை என்ற செயலுக்கு அப்பாற்பட்டு இலங்கைப் பிரச்சனையை அணுகி எல்லைப்புற பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் முன்வருமா? அல்லது போராளிகள் எதிர்ப்பு என்ற பெயரில் நிலைப்பாட்டை எடுத்து, ராணுவ ரீதியாக மட்டுமே அணுகுமா?

மற்றுமோரு எல்லைப்புற சிக்கலை ராணுவரீதியாக ஏற்படுத்திக் கொள்வது இந்தியாவிற்கு உதவாது. எல்லைப் புற சிக்கல் நிறைந்த மாநிலமாய் மாறுவதை தமிழகமும் விரும்பாது. என்னுடைய இந்த சிக்கலைப் பற்றிய கற்பனைகள் அபரீதமாக படுகிறதா? அப்படியென்றால் எதனால் அபரீதமாக படுகிறது என்ற வாதங்களை முன்வையுங்கள். எல்லா சிக்கல்களும் சிறியதாக இருந்தபோதே கட்டுப்படுத்தாமல் விட்டவைதான்.

இந்தியாவை பொறுத்தவரை ஈழ சுயாட்சியில் விடுதலைப் புலிகளை தவிர பிற அமைப்புக்களும் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல தோன்றுகிறது. அவ்வாறான பிற அமைப்புக்களுக்கு மக்கள் செல்வாக்கு ரீதியான சாத்தியம் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். மக்கள் அபிமானம் இல்லாமல், பேருக்கு பிற அமைப்புகளை உருவாக்கி அதிகாரப் பகிர்வளிப்பது எவ்விதத்திலும் உதவாது.

எல்லைப் புற பதட்டம் தணிக்க சகநாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை வளர வேண்டும் . இலங்கையை பொறுத்தவரை, ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை போராளிகளுக்கிருக்கும் முக்கியத்துவத்தை இந்தியா அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் தற்போது உருவாகிவிட்டது. அதைப் போல தொடர்ச்சியான இந்திய எதிர்ப்பு ஈழ சுயாட்சிக்கு உதவப் போவதில்லை.

பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து ,அமைதிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பணியாற்ற வேண்டிய தருணமாக இதைக் கருதுகிறேன். இதை ஒரு சாமான்யனாக சொல்கிறேன். ஏனெனில் இலங்கைப் பிரச்சனைக்கான புரிதல்கள் திராவிடக் கட்சிகளின் நிலைப்பாட்டை குறித்தே அமைந்துள்ளது என்று தொடக்கத்தில் எழுதியிருந்தேன். அவற்றிலிருந்து விலகி வந்து இப்பிரச்சனையை அலச செய்த முயற்சியே இது.

மீண்டும் ஒரு இந்திய அமைதிப்படை- ராஜிவ் காந்தி மரணம் குறித்த விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் யாருக்கும் பிரயோசனம் இல்லை.