Thursday, December 29, 2005

தலை தூக்கிய தீவிரவாதமும் தூங்கும் நிர்வாகமும்

புலி வருகிறது! புலி வருகிறது! என்று அலறிக் கொண்டேயிருந்தார்கள். கடைசியில் புலி வந்து அடித்துப் போட்டு , தப்பித்தும் போய் விட்டது. பெங்களூரில் யாரும் எதிர்பாராவிதமாக IISc வளாகத்தில் யாரோ சிலர் சராமாரியாக சுட்டு, ஒரு விஞ்ஞானியையும் கொன்று விட்டார்கள். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் மென்பொருள் வணிக மையமான பெங்களூரில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கூட்டணி அரசின் கேவலமான வேதனைகளை கர்நாடக அரசாங்கம் அனுபவித்து வருகிறது. நான் வைதததே சட்டம் என காங்கிரஸ் ஒருபுறமும், தேவகவுடா மறுபுறமும் இழுத்துக் கொண்டிருக்க சீர்குலைந்தது கிடக்கிறது நிர்வாகம். பிராந்திய முக்கியத்துவம் என்ற பெயரில் குறுகிய மனப்பான்மையை தூண்டி குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். இத்தகைய குழப்படிகள் நிர்வாகத்திலும் சுலபமாக நுழைந்துவிடும். போலிஸ் துறையும் இத்தகைய குழப்படியில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பெங்களூரில் கடந்த சில மாதங்களாகவே குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறதா என்பது சந்தேகமே. ஹெல்வர்ட் பாக்கர்ட் நிறுவனத்தின் பெண் ஊழியர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், ஊழியருக்கு பாதுகாப்பு தருவது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடமை என்று போலிஸ் விளக்கமளிக்கிறது.இதைத் தவிர கொலை செய்யப்பட்ட ஊழியர் அணிந்திருந்த ஆடைகள்தான் கொலையாளியை தூண்டின என சில மின்னஞ்சல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மின்னஞ்சல்களின் மூலம் கண்டிப்பாக நடந்திருக்கும் கொலையை நியாயப்படுத்த முடியாது. வழிப்பறிகள் பெங்களூரில் வெகுவாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இதைக் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பமுடியாது. கேள்வி எழுப்பினால் கன்னடர்கள் 20 சதவீதம் கூட இல்லாத பெங்களூரை ஏன் பரமாரிக்க வேண்டும் என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

இத்தகைய குழப்படியான நிர்வாகம் தீவிரவாதிகளுக்கு ஏதுவாக இருக்கும். கையில காசு, வாயில தோசை மனோபாவம் அவர்களுக்கு பலவகையில் உதவும். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது தெருவுக்கு தெரு தொப்பை போலீசாரை நிற்க வைப்பது அல்ல. உளவு பார்த்து எதிராளியின் திட்டமறிந்து எதிர்கொள்வது. தமிழகத்தில் இதே போன்ற புலி வருது நிலை கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு முன்னே இருந்தது. அங்கிருந்த மக்கள் அனைவருமே ஒரு விபரீதத்தை எதிர்நோக்கி இருந்தன. அரசாங்கம் அதை கண்டுகொள்ள மறுத்தது. குண்டு வெடிப்புச் சம்பவத்தால் கோயம்புத்தூரின் பிராந்திய முன்னேற்றம வெகுவாக பாதிக்கப்பட்டது. இல்லாவிடில் மென்பொருள் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கோயம்புத்தூர் பெற்றிருக்கக் கூடும்.

பெங்களூரிலும் இன்று இதே நிலைதான். கடந்த சில மாதங்களாக நிலவிய அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. அவர்கள் தப்பியும் சென்றுள்ளது நிர்வாக இயலாமையை சுட்டிக் காட்டுகிறது. இச்சம்பத்திற்கான வேர்கள் எந்த ஆழம் வரை ஊடுருவியுள்ளன என்பது தெரியவில்லை. இதனை கையாள தற்போதுள்ள அராஜக கூட்டணி அரசால் இயலுமா என்பதும் தெரியவில்லை.

தீவிராவதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ள பட்சத்தில் ,இப்பிரச்சனையை மைய அரசு நேரடியாக கையாள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிடில் மிகப் பெரிய விபரீதங்களை அனைவருமே சந்திக்க நேரிடலாம்.

Friday, December 23, 2005

அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 2

தவச்சான்றோனின் தன்னிகரற்ற வரலாறு

அருள்மிகு அன்னபாபா! அன்றாடம் வெண்பா

தரமாய் தழைத்துவர, சந்தம்- உரமாய்த்

திகழ்ந்திட உன்மேல் திளைத்தே படைக்க

அகங்குளிர ஆசிகளைத் தா.

மாவரைக்கும் கல் (சாய்சரிதம் பக்கம் 2-3)

கர்மம் எனஉணர்த்திக் காட்டுவதே கீழ்க்கல்!

பெருகிடும் பக்தியைப் பேணும்-ஒருநிலையே

மேற்கல்லாம்! பாபா விரல்பிடித்த கைப்பிடியோ

ஊற்றுநிகர் ஞானம்! உணர்.

பாபாவின் அற்புத சக்தி ( மாவரைத்த கல்லில் அரைத்த கோதுமை)

கோதுமை மாவையோ கொண்டுபோய் எல்லையிலே

ஈகையுடன் கொட்டுங்கள் என்றவுடன் - வேகமாகப்

பெண்மணிகள் கொட்டிவந்தார்! பேரழிவுக் காலராநோய்

எங்கோ மறைந்ததே! இங்கு.

சாய்பாபா வருகை ( பக்கம் 22)

சீர்டி காட்சி

கோபர்காங் ஏந்துகின்ற கோதா வரியாற்றை

தோதாய் கடந்தவுடன் தூயநகர்- வேதநகர்

சீர்டி வழிதன்னில் நிம்காங்வ் வருகிறது!

சீர்டி தெரிகிறது சேர்ந்து.

கவியாக்கம்: மதுரை பாபா

Thursday, December 22, 2005

அற்புதத் தரு சீரடி சாய்பாபா -பகுதி 1

இறை வணக்கம்

சீரடித் தென்றல் சாய்பாபா!
சிறப்பின் அற்புதம் சாய்பாபா!
தாரணி போற்றும் சாய்பாபா!
சங்கத் தமிழே சாய்பாபா!

நேர்மையின் உருவம் சாய்பாபா!
நெஞ்சம் வணங்கும் சாய்பாபா!
தாய்மையின் உள்ளம் சாய்பாபா!
தன்னிக ரில்லா சாய்பாபா!

பக்தரைக் காப்பார் சாய்பாபா!
பக்தியின் ஒளியே சாய்பாபா!
முக்தியைத் தருபவர் சாய்பாபா!
முற்றும் உணர்ந்தவர் சாய்பாபா!

அற்புதத் தருவே சாய்பாபா!
அகத்தில் நிறைந்தவர் சாய்பாபா!
பொற்பதம் சரணம் சாய்பாபா!
புவியின் வாழ்வே சாய்பாபா!

அவரை வணங்கி வாழ்ந்திடுவோம்!
அன்பும் அருளும் நாம் பெறுவோம்!
தவழும் குழந்தையைக் காப்பதுபோல்
தாயாய் நம்மைக் காத்திடட்டும்

கவியாக்கம்: கவிஞர் மதுரை பாபா