Thursday, March 30, 2006

மாறும் தொழில்நுட்பம்,மாறாத அரசியல்

தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படும் புகைப்படங்களைத்தான் இதுவரை செய்தித்தாளில் பர்த்திருக்கிறேன். ஆனால் அறிக்கைகளை புத்தக வடிவில் பார்த்தது கிடையாது. தற்போது அனைத்து கட்சிகளும் இணையத்தளங்கள் வைத்துள்ளன. எனவே தேர்தல் அறிக்கைகளை சுடச்சுட பிடிஎப் கோப்புகளாக தரவிறக்கம் செய்ய முடிந்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கை 34 பக்கங்கள் கொண்டது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை 119 பக்கங்கள் கொண்டது. அதிமுக இயக்க வரலாற்றை அவர்களது தேர்தல் அறிக்கை முழுவதும் தெளித்து விட்டிருக்கிறார்கள். எம்ஜிஆரை பற்றி ஒரு பத்திக்கு மேல் எழுதாததில் எவ்வித ஆச்சரியமுமில்லை.அதிமுக அறிக்கையில் அனைத்து எழுத்துக்களும் பச்சை நிறத்தில் அமைந்துள்ளன.

இரு கட்சிகளுமே கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையர் நலம் என துறை ரீதியாக தங்களது முந்தைய ஆட்சியின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் குறிப்பிட்டுள்ளார்கள்.சென்ற தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? என்பதை குறித்த தகவல் அதிமுக அறிக்கையில் இல்லை. யார் அதைப்பற்றி கவலை படப்போகிறார்கள். அடுத்த ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை முன்னேற்றம் தமிழ்நாட்டில் அரசாங்கத்தின் முயற்சி எதுவுமில்லாமல் ஏற்ப்பட்ட ஒன்று.ஆந்திராவை போல முதல்வரின் முயற்சியால் நிகழ்ந்ததல்ல.தொண்ணூறுகளின் இறுதியில் இருந்த திமுக அரசும் சற்று காலம் கழிந்துதான் விழித்துக் கொண்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ,தொழில் பெருக்கத்தை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் உருவாக்காமல் தமிழகம் முழுவதும் பரவலாக ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை வாக்குறுதியாக தந்திருந்தால் வரவேற்றிருக்கலாம். அதை விடுத்து இயல்பான நிகழ்வுகளை சாதனைகளாக காட்டுவது ஏற்கக் கூடியதல்ல.

ஈ-கவர்னஸ் திட்டங்களும் சென்ற அதிமுக ஆட்சியில் குறிப்பிடத்தக்க அளவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. தகவல் தொழில்நுட்ப தாக்கததை கிராம அளவில் ஏற்படுத்த, ஈ-கவர்னன்ஸ் திட்டங்கள் அவசியம். இதற்கான சட்டமாறுதல்களை ,துறை மறுசீரமைப்பினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றியும் தேர்தல் அறிக்கைகள் மேம்போக்காகவே அணுகியுள்ளன.

விவசாயைகளுக்கான பிரச்சனைகளை உற்பத்தி திறனை பெருக்கும் நோக்குடன் அணுகாமல், இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி என சலுகைகள் சார்ந்ததாக அணுகுவது நம் அரசியல் கட்சிகளின் சாபக் கேடு. இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்துள்ளன.

திமுகவின் இரண்டு ரூபாய் அரிசி, இலவச டிவி திட்டங்கள் சாமான்யர்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் உள்ளன. கலைஞரின் பாசக் கிளிகள் திரைப்பட வசனம் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தாமல் போனதோ அதைப் போலத்தான் இவ்வறிவிப்புகளும் தாக்கம் ஏற்படுத்தாமல் போகும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற பதட்டத்தை இவ்வறிவுப்புகள் காட்டுகின்றன.இதற்கான நிதிஆதாரங்களை புரட்ட கலைஞரிடம் விசேட திட்டம் இருக்கிறதா என்பது அறிக்கையில் இல்லை.

நிதிநிலைமையை சீர்செய்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அதிமுக அரசு, தற்போதைய நிதிநிலையை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதன் பின்னால் வாக்குறுதிகளை வைத்திருந்தால் வரவேற்றிருக்கலாம். அதிமுக வெற்றி பெற்று வந்தால், மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்தி விட்டது என குறை கூறி திட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை.

திமுக வெற்றி பெற்றாலோ, கலைஞர் நிதிநிலை மோசம்,அதற்கு அதிமுக அரசுதான் காரணம் என ஒரு வெள்ளை அறிக்கை தந்து திட்டங்களை நிறைவேற்ற மாட்டார்.

யார் வந்தாலும் சொன்னதை நிறைவேற்ற மாட்டார்கள். அதுவரை சர்க்கரை என வெள்ளைத் தாளில் அழகாக எழுதித் தந்திருக்கிறார்கள். முடிந்தால் இனிக்கிறதா என சுவைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

4 comments:

Badri Seshadri said...

Can you point out the URL locations of these elections manifestos? I am interested in downloading them, but unfortunately a little short of time to search on the net.

பினாத்தல் சுரேஷ் said...

//சர்க்கரை என வெள்ளைத் தாளில் அழகாக எழுதித் தந்திருக்கிறார்கள்//

சூப்பர்!

இதையெல்லாம் படிக்கறதுக்குக்கூட சிலர் இருப்பாங்கன்றதே அவங்களுக்கு அதிர்ச்சி தந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.

Radha N said...

கலர் பொட்டி வாங்கி கொடுக்க எங்கிட்டு இருந்து பணம் வரும்முன்னு தெரியலையே சாமி!

ராஜா said...

//
திமுகவின் இரண்டு ரூபாய் அரிசி, இலவச டிவி திட்டங்கள் சாமான்யர்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் உள்ளன
//

இவர்களின் எண்ணம் தான் என்ன, மக்கள் மாறவில்லை என்றா அல்லது மாறக்கூடாது என்றா ??