Friday, April 28, 2006

தேவைப்படும் தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய நடைமுறைகளை செயல்படுத்தி, வீட்டுச் சுவர்களையும், விடிய விடிய அலறும் ஒலி பெருக்கிகளிடம் இருந்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.மாறி வரும் சூழலில் தேர்த்ல் ஆணையம் கீழ்கண்ட சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தம்

தேர்தல் அறிக்கைகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அறிவிக்கப்படும் திட்டங்களைப் பார்த்தால் அண்ணாமலை படத்தில் ரஜினி- சரத்பாபு பங்கு பெறும் ஏலம் நினைவுக்கு வருகிறது.தேர்தல் அறிக்கை வந்த பின்னாலும் புதிதாக வாக்குறுதிகளை அரசியல்வாதிகளின் விருப்பப்படி அவிழ்த்து விடுகிறார்கள்.

பொருட்களை விளம்பரப்படுத்தும் போது, அதன் பயன்களாக இல்லாததையும், பொல்லாததையும் விளம்பரப் படுத்தக் கூடாது என்ற வரையரை உண்டு.அதைப் போல ,முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வெற்றி பெற நிறைவேற்ற இயலா வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளித் தருவதை கட்டுப்படுத்த வாக்குறுதி கட்டுப்பாட்டு சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

இதன் படி தரப்படும் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதையும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.அதன் சாத்தியங்களை கட்சி சார்புள்ள/சார்பற்ற பொருளியல் வல்லுநர் இருவர் உறுதி செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்பந்தப் புள்ளிகலைப் போல ( டெண்டர்) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் அறிக்கைகளையும் வெளியிடும். இதன் பின்பு வாக்குறுதிகளை கூட்டுவதோ, குறைப்பதோ கூடாது.

கூட்டணித் தாவல் தடைச் சட்டம்

கர்நாடகாவில் நடந்த அரசியல் கூத்துகளுக்கு பின்னால் இச்சீர்திருத்தம் மிகவும் அவசியமாகிறது. தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து ஓட்டுக் கேட்டவர்கள், தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்க இன்னொரு கூட்டணிக்கு தாவக் கூடாது. அவ்வாரு தாவும் பட்சத்தில் அவர்களை தகுதி இழக்கச் செய்ய வேண்டும். ஒரு கூட்டணியிலிருந்து வாக்கு கேட்டு விட்டு, இன்னொரு கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதை கூட அனுமதிக்கக் கூடாது. ஆளும் பிரதானக் கட்சி அநியாயம் செய்தால் , அதை மற்ற கூட்டணி கட்சிகள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? என்று கேட்கலாம். கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள வேண்டாம். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்க்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு கண்டிப்பாக உண்டு. ஆனால் இன்னொரு தேர்தலை தவிர்க்கிறோம் என்று பொது நலனுக்காக மெனக்கெடுவதைப் போல் காட்டிக் கொண்டு, மாற்று அரசு அமைக்க பேரம் பேசும் அரசியல்வாதிகளின் கொட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இதற்கு பீகாரில் நடந்ததைப் போல மற்றொரு உடனடித் தேர்தல் எவ்வளவோ மேல். தாவி பலன்பெறும் வாய்ப்புக்கள் குறைந்தாலே, சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் நாளடைவில் குறைந்து விடும்.

பட்டாசு வெடிப்புத் தடை

இந்த தேர்தல் பிரச்சாரத்தை பார்த்த பின் தோன்றிய சிந்தனை இது. போஸ்டர்களை ஒட்டக் கட்டுப்படுத்தியதால், ஊரெங்கும் வேட்பாள்ர் வரும் போது வாண வேடிக்கை காட்டி அல்லோகலப் படுத்திகிறார்கள். இதற்கான செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறதா? ஏனென்றால் வெடிக்கப்படும் வாணவேடிக்கைகளின் மதிப்பு லட்சங்களை தாண்டும்.சுற்றுப் புறமும் மிகுதியாக பாதிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்திய செலவுக் கட்டுப்பாடு

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் , ஆட்சி அமைத்த பின் ஆடும் ஆட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலின் போது தப்பிய சுவர்கள், தேர்தலுக்கு பின்னால் வெற்றி பெற்ற வேட்பாளரின் முகங்களையும், அரசியல்வாதிகளின் முகங்களையும் சுமந்து கொண்டு பரிதாபமாக நிற்கின்றன. இதைத் தொடர்ந்து நன்றி அறிவிப்புக் கூட்டம் என்ற பெயரில் ஆடம்பரமான பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான செலவுகள் ,கட்சிகாரர்களால் வியாபாரிகளிடமிருந்தும் , பொதுமக்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது.

தேர்தலுக்கு பின்னாலும் சுவர்களையும், நன்கொடை வசூலிக்கும் தொ (கு) ண்டர்களிடமிருந்து பொதுமக்களையும் காப்பாற்ற மேற்கூறிய சீர்திருத்தம் அவசியமாகிறது.

என்றாவது ஒரு நாள் இவை சாத்தியப்படலாம்.

6 comments:

Radha N said...

தேர்தலில் போட்டியிட அதிகபட்ச வயது வரம்பி னையும் நிர்ணயம் செய்யவேண்டும். இரண்டு முறை தொடர்ச்சியாக தோல்வியடைந்தால், ம ଡ଼'அ3ண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது. தேர்தலி ல் வெற்றிபெற்றபின், சிலபல கா ரணங்களுக்காக சட்டமன்றத்துக்கே போகாமல் இருப்பவர்களும் எந்தவித படிகளும் வழங்கக்கூடாது. (பதிவேடுகளில் மட்டும் கையொ ப்பம் போட்டுவிட்டு செல்பவர்களைத்தான் சொல்கி ன்றேன்.) இரண்டாம் ஆண்டிலேய இவர்களின் பதவிபறி க்கப்பட்டு, தேர்தலுக்கு, செலவிடப்பட்ட அரசுபணத்தி னை இவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து, அரசுகணக்குக்கு வரவு வைக்கப்படவேண்டும். அதற்கு பிறகு இவர்களை நி ரந்தரமாக தேர்தலில் நிற்க தடைவிதி க்கப்படவேண்டும். இவர்கள் எந்த ஒரு கட்சிக்கும் தலைமைவகிக்க அனுமதிவழங்கக்கூடாது.

Bala said...

இங்கே நான் என் வலைப்பதிவில் எழுதிய சீர்திருத்தங்களையும் நினைவு கூற விரும்புகிறேன்.

http://balablooms.blogspot.com/2006/04/1.html

Mey said...

Good set of articles.

ஜெ. ராம்கி said...

//தொ (கு) ண்டர்களிடமிருந்து

:-)

பாரதிய நவீன இளவரசன் said...

ஸார்....அப்படியே பாலாவின் blogற்கு நான் இட்ட பின்னூட்டத்தையும் காணவும்.
http://balablooms.blogspot.com/2006/04/1.html

இப்போதிருக்கும் விதிமுறைகளும், சட்டங்களுமே போதும். அமுல்படுத்தப்படும் முறையில்தான் துணிச்சல் தேவைப்படுகிறது. புதிய சட்டம் என்று ஒன்று வந்து வெறும் ஏட்டில் மட்டும் இருந்தால் போதுமா...?

எனினும், உங்கள் நியாயமான கோரிக்கையும் சமுக அக்கறையும் பாராட்டுக்குறியது.

சில சமயம், மத்தியத்தர வர்க்கம் (middle class) எண்ணிக்கையில் பெருகிவருவதால்தான் இது போன்ற கருத்தெல்லாம் வருகிறதோ என்று கூடத் தோன்றும்.

1989 தேர்தல் பிரசார கூட்டத்திற்காக எங்களூரில், கலைஞர் வருகைக்காக இரவு 1-2:00 மணி (காலை?) வரை காத்திருந்த அனுபவம் இனிமையான ஒன்றாகக் கருதுகிறேன் (இந்தனைக்கும் நான் திமுகக்காரன் அல்ல!).

மேலும் என் உறவினர் ஒருவர் கூறுவார், பண்டித நேரு, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) வழியாக போவத்தைக் காண்பதற்காகக் கூட்டத்தோடு அவரும் ஒருவராக, இரவு முழுவதும் காத்திருந்ததை அருமையாக நினைவுகூறுவார்.

வானளாவிய கட்-அவுட்கள், விதவிதமான பேனர்கள். சுவற்றை ஆக்கிரமிக்கும் வண்ண வண்ண போஸ்டர்கள், அலறும் மைக், ஸ்பீக்கர்...இதெல்லாம் ஜனநாயகத்தின் அடையாளங்களாகத் தெரியவில்லையா?
இதையெல்லாம்கூட நான் மிஸ் பண்ணுவதாகவே உணர்கிறேன்...

தேர்தல் என்பது ஒருவகையில் திருவிழா இல்லையா...? வன்முறையில்லாத தேர்தலே வேண்டும், மற்றபடி, கொஞ்சம் `கலர் ஃபூல்' ஆக இருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. என்ன சொல்றீங்க...?

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.

Muthu said...

//அண்ணாமலை படத்தில் ரஜினி- சரத்பாபு பங்கு பெறும் ஏலம் நினைவுக்கு வருகிறது//

:)))

மற்றபடி செலவு எல்லாம் அரசாங்கமே செய்து விடலாம்.என்ன வேட்பாளர் பெயர்,சின்னம்,கொள்கை ஆகியவை மக்களுக்கு போய்சேரவேண்டும்..அவ்வளவுதான்..

வாக்குறுதி எல்லாம் ஒழிப்பது சுலபம்..அடுத்த மறை ஓட்டு போடாதீங்க..