Saturday, June 05, 2004

பரணிலிருந்து சில

"அப்பா" பற்றிய இரண்டு அருமையான கவிதைகளை வலைப் பதிந்திருந்தார் நண்பர் சுந்தர்ராஜன். நண்பர் பாலா திருச்சி அய்யப்பன் கோவிலில் பார்த்ததாக வலை பதிந்திருந்த அப்பாவைப் பற்றிய வாசகங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.நான்என் தந்தையை இழந்து பதினேழு வருடங்கள் ஆகி விட்டன.ஆனால் இன்னும் அவருக்கு கால் பிடித்து விட்ட ஸ்பரிச உணர்வுகள் விரல்களில் தேங்கி நிற்கிறது.கடமையை முழுவதும் செய்யாமல் மரித்துப் போகிறாமே என்ற தகப்பனின்சோகம் ஒரு ஆணுக்கு நிகழக் கூடிய உச்ச பட்ச கொடுமை. அவ்வாறான சோகத்தோடு அவர் மரித்த போது எனக்கு 17 வயது, நான் +1 படித்துக் கொண்டிருந்தேன்.

நான் எழுதிக் குவித்ததைக் காட்டிலும் , எழுதித் தொலைத்தவை அதிகம் என்று வலம்புரி ஜான் அடிக்கடி எழுதுவார்.எனக்கும் இது பொருந்தும் ( அதற்காக அவரைப் போல் திறமையானவன் நான் என்று சொல்லவில்லை). பள்ளிப் பருவத்தில்எழுதிய கவிதைகள் பல நான் சேகரித்து வைக்கவில்லை. என் அப்பா மரித்த சமயத்தில் நான் எழுதிய கவிதை ஒன்று, என்
அம்மாவால் பத்திரப்படுத்தப் பட்டு தற்போது எனக்கு கிடைத்தது. என் அப்பாவின் பச்சை மை பேனாவால் எழுதிய கவிதை.சிதிலமடைந்த தாளில் எப்போது வேண்டுமானாலும் அழிந்து விடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. என் ஆத்ம திருப்திக்காக அதை இங்கு பதிவு செய்கிறேன். இது 1987ம் ஆண்டு எழுதிய கவிதை.பதினோராம் வகுப்பு மாணவனுக்கே உரிய அறியாமையுடனும், ஆதங்கத்துடனும், பயத்துடனும் இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது என நான் நினைக்கிறேன்.

கவிதையின் படிவமும், தொனியும் கூட பழமையானதே.


எங்கே நீ?

எங்கள் கூட்டின்
தலைமைப் பறவையே!
எங்கே நீ?
. . .
எங்கள் விடியல்கள்
சூரியனை தொலைத்துவிட்டு
அழுகின்றன.
பகலுக்கு பதில் சொல்ல முடியாமல்
இருட்டினிலே புகல் தேடுகின்றன.
. . .
நோயுடன் நீ நடத்திய
சாத்வீகப் போரில்
நோய்க்கு பதில்
உனக்கு ஏன் விடுதலை
கிடைத்தது?
. . .
எங்கள் நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை ஆதரவு பெற்ற
மசோதாக்கள் மட்டுமே
நிறைவேறும் போது
அந்த
இறைவனின் மன்றத்தில்
ஆதரவே பெறாத
உன் மரண மசோதா மட்டும்
எப்படி சட்டமாகியது?
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான ஆட்சியாளன்..
. . .
ஆணிவேர் இழந்த
ஆலமரங்கள்
எதிகால பூகம்பங்களை
எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?
. . .
எங்கள் நீதி மன்ற்ங்களில்
விசாரணைகள் முடிந்தும்
தீர்ப்பெழுத நாளாகும் போது
இறைவனின் மன்றத்தில்
மட்டும் உன்னை விசாரிக்காமலே
தீர்ப்பளித்து விட்டார்கள்.
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான நீதிபதி..
. . .
மரணமே!
மண்ணும் அக்கினியும்
உன் குழந்தைகளா?
அவர்களுக்காக நீ
மனித இரை தேடுகிறாயா?
உன் குழந்தைகளுக்காக
பாடுபடும் நீ
உனக்கு பலியாகுபவர்களின்
குழந்தைகளைப் பற்றி
நினைத்துப் பார்த்தாயா?
. . .
மனிதர்களின் கதைகளில்
முடிவுகள் வேறுபடும் போது
ஆண்டவன் எழுதும்
கதைகளில் மட்டும்
ஏன் ஒரே அழுகை முடிவு?
. . .
ஆண்டவனே!
நீ ஒரு
மோசமான கதாசிரியனும் கூட..

-ராஜ்குமார்


No comments: