Saturday, June 05, 2004

பரணலிருந்து மற்றுமொன்று

வேண்டுகோள்

இந்த இடத்தில்
முன்பு நதிகள் ஓடின..
வண்டல் மண் சேர்ந்து
தென்னை வளர்ந்தன.
கவிதைகளும் கதைகளுமாக
பூங்கா ஒன்றிருந்தது
வானத்து முழுநிலவாய்
காதல் ஒன்றிருந்தது.
எங்கே தொலைத்தேன்
என் பிரபஞ்சத்தை?
என்னை விடுத்து அதை மட்டும்
யார் எடுத்துக் கொண்டது?
புகையும் புழுதியும்
வாகனமும் நிறைந்த
தெருக்களில்
விள்க்குகளின் நிறங்களிடம்
அனுமதி கேட்டு சாலை கடக்க..
மனிதனின் நிறங்கள்
மாறித்தான் போனது.
ஓட்டை பையில் சேர்த்த
சில்லறைக் காசுகளா
என் பழைய சந்தோக்ஷம்?
மழை பெய்து
மாமாங்கம் ஆகியும்
உடல் இன்னும் ஈரமாயுள்ளது.
இது பழைய மழையின்
காயாத ஈரமா?
புதிய வெயிலில்
சுரந்த வியர்வையா?
சுமக்க சுமக்க
ஞாபகமும் சிலுவையாகும்.
அடிக்க அடிக்க
பாறைகளும் சிதறிப்போகும்.
இறைவனே!
அஸ்திவாரக் கற்களில்
கல்லறை கட்டாதே.
உயிருடன் மரிப்பதை
எனக்கிங்கே உணர்த்தாதே.
கண்டுபிடித்து தா.
நதிகளை, தென்னையை,
பூங்காவை,
முழுநிலவாய்
என் காதலை..

No comments: