Friday, June 11, 2004

ஞாபகம் வருதே..

நான் தவழும் பருவத்திலிருந்தே கைக்கு எட்டக் கூடியவையாக புத்தகங்கள் இருந்திருக்கின்றன. அப்பா, அம்மா, தாத்தா,பாட்டி என்று ஒரு குடும்பத்தில் எவ்வாறு பல அங்கத்தினர்கள் இருப்பார்களோ அதைப் போல அனைவரின் வீட்டிலும்புத்தகங்கள் இருக்கும் என்று சிறுவயதில் நினைத்ததுண்டு.சிந்து பைரவி படத்தில் பாலச்சந்தர் ஒரு வாரம் நகர்வதை கிழமைக்கு ஒன்றாக போடப்படும் பத்திரிக்கைகள் மூலமாக சிம்பாலிக்க்காக காண்பித்திருப்பார். எங்கள் வீட்டில் அதே போல் அனைத்து பத்திரிக்கைகளும் வாங்கப் பட்டன. இதைத் தவிர மாத சஞ்சிகைகள் ராணிமுத்து, அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் மற்றும் பல.திணமணி கதிர் முன்பு வாரப் பத்திரிக்கையாக வந்தது சிலருக்கு நினைவிருக்க்கலாம். 77ம் வருடம்ஜிம்மி கார்ட்டர் படம் அட்டையில் தாங்கி வந்த கதிர் இதழ் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

கற்பனை திறனை வளர்ப்பதில் புத்தகங்களுக்கு இணையான ஊடகம் வேறு எதுவும் இல்லை. சிறுவதிலேயே புத்தகம்படிக்கும் வழக்கம்/பழக்கம் உருவாகா விட்டால் பின்பு பழகுவது மிகவும் கடினம். இன்றைய சூழலின் தொலைக்காட்சி, கணணி என்ற பல ஊடக தாக்குதல் நடுவே, புத்தகம் படிப்பது சவாலான செயலாகத்தான் மாறி விட்டது.

இந்தப் பகுதியில் நான் கிளற விரும்புவது மாத நாவல்களை பற்றி. 70 களிலும் 80 களிலும் ராணி முத்துவும், மாலைமதியும்என்க்குத் தெரிந்த மாத நாவல்கள். இதைத் தவிர நவரத்னம் என்ற மாத நாவல் ஒன்று வரும், பெரும்பான்மையாக புஷ்பா தங்கத்துரையின் "சிங்" கதைகளை தாங்கி. சிங் இந்திய லெவெல் ஜேம்ஸ்பாண்ட். துப்பறிவதில் மட்டுமல்ல. பார்க்கும் பெண்களுடன் படுக்கைக்கு போவதிலும் கூட. இவருடைய கதைகளைப் பற்றி தனியாக பேசுவோம்.

இன்று ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படும் பல நாவல்கள் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட மாலைமதியிலும்,ராணிமுத்துவிலும் வந்தவை என்பது ஆச்சரியத்திற்கு உரிய விசயமாக இருக்கும். பீக்ஷ்மர் சுஜாதாவின் நைலான்கயிறு சுருக்கப் பட்டு ராணி முத்துவில் வந்தது. ஆனால் நான் படித்தது அதற்கு முன் யாரோ வெளியிட்ட சித்திரக் கதை வடிவத்தில். லக்ஷ்மி, ரா.கி.ரா, புனிதன்,சுஜாதா,ராஜேந்திரக்குமார்,விமலாரமணி,சிவசங்கரி, வாஸந்தி, பேய்கதை கிருக்ஷ்ணக்குமார் என்று எழுதுவதற்கு பலர் இருக்க, நாவல் படிப்பது மிகவும் சுவையான அனுபவமாக இருந்தது.சுஜாதாவின் " விபரீத கோட்பாடுகள்"," மேகத்தை துரத்தினவன்" மாலைமதியிலும், " என்றாவது ஒருநாள்" மற்றும் சமீபத்தில்திரைபடமாக்கப்பட்ட "நிலா"ராணிமுத்துவிலும் மாத நாவலாக வந்தது. ரஜினியின் "புவனா ஒரு கேள்விக்குறி" படமும் , "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படமும் மகரிக்ஷ¢யினால் மாலைமதியில் எழுதப்பட்ட மாத நாவல்கள்.இன்னும் பல இருக்கலாம். என் நினைவுகளில் இருப்பவை இவை மட்டுமே.

இதன் பின்னால்குங்குமம்பத்திரிக்கைக்காரர்கள் "மோனா" என்று ஒரு மாத நாவலை ஆரம்பித்தார்கள். 80களின் மத்தியில்திடீரென பத்திரிக்கைகளும், மாத நாவல்களும் பெருகி விட்டன. மாத நாவல்களும் மாதத்திற்கு இருமுறையாக வரத்துவங்கின. புதிய எழுத்தாளர்கள் வந்ததில் தரம் குறையத் துவங்கியது. ஹேமா ஆனந்த தீர்த்தனும், கோவிமணிசேகரனும் ( இவர் சமூகக் கதை எழுதி) மிகவும் தொல்லை கொடுத்து வந்தார்கள்.அவ்வப்போது விமலாரமணி அழகான காதல் கதைகள் எழுதி வந்தார்.பின்பு அசோகனால் வந்ததய்யா பாக்கெட் நாவல் புரட்சி. ஒன்னு ரெண்டு கொன்னுடு, ஹலோ டெட் மார்னிங் என்று ராஜேக்ஷ்குமாரை வைத்து தூள் பரத்த ஆரம்பித்தார். சுபா ஒரு பாக்கெட் நாவலில் எழுதி கொண்டிருந்தார். சுபாவின் நாவலின் அட்டைப்பட புகைப்படங்கள் அருமையாக இருக்கும். உள்ளே படம் எப்படி, எந்த கேமராவை வைத்து எடுக்கப்பட்டது என்ற டெக்னிக்கல் விளக்கங்களும் இருக்கும். அதை எடுத்த புகைப்படக்காரர்தான் தற்பொழுது பிரபலமாய் இருக்கும் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் ( முதல்வன் மற்றும் சமீபத்தில் வந்த "காக்கி") என்று சொன்னால் பலர் ஆச்சரியப் படலாம்.

பாக்கெட் புத்தகங்கள் பல்கிப் பெருகியதில், பழைய சுவையும் தரமும் காணாமல் போனது. இதைப் பற்றிய கோபத்தை சுஜாதா வெளிப்படுத்தி அசோகனின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொண்டார்.இன்றும் மாலைமதியும், ராணிமுத்துவும் வருகிறது என நினைக்கிறேன். கடைகளில் பிரதானமாக தொங்குவதில்லை. மதுரையிலிருந்து காரைகுடிக்கு போகும் பஸ்ஸில் அஞ்சு ரூபாய்க்கு மூன்று என நாவல்கள் கிடைக்கின்றன.பெரும்பாலான நாவல்கள் இழுக்கப்பட்ட சிறுகதைகள்.

கொஞ்ச காலம் முன்பு சுஜாதாவின் விபரீத கோட்பாடு ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது. உடனே வாங்கி விட்டேன். பழைய மாத நாவல்களைப் பார்த்தால் உடனே வாங்குவதாக உத்தேசம். பழைய நினைவுகளில் பயணிப்பதற்காக.

No comments: