Tuesday, August 24, 2004

வீடியோகான் கோப்பை- அர்த்தமற்ற முத்தரப்புப் போட்டிகள்

ஹாலந்தில் கிரிக்கெட் போட்டி நடத்தவில்லை என்று யர் அழுதார்கள். உலகத்தின் எந்த மூலையிலும் கிரிக்கெட் நடத்தட்டும். ஆனால் உருப்படியாக வெயில் அடிக்கும் தேசத்தில் நடத்தலாமே. அதைவிடுத்து 100 ஓவர்கள் சாத்தியப்படாத மழைப்பிரதேசத்தில் போட்டிகளை நடத்தி இந்தியாவையும் மூட்டை கட்டி அனுப்பி விட்டார்கள்.

தொன்றுதொட்டே ஓவர்கள் குறைக்கப்பட்ட மேட்சுகளில் நாம் தோல்வியுற்றே வந்திருக்கிறோம். இந்தவகையான மேட்சுகளை வெல்வதற்கு உதவும் அதிரடி ஆட்டம் ஆடும் சக்தி நம் வீரர்களுக்கு இருந்ததில்லை.அடுத்த பேட்ஸ்மேன் அவுட்டா, இப்போதுதான் களமிறங்குகிறோமா? என்பதைப் பற்றியெல்லாம் கவலையின்றி விளாச வேண்டும். குறிப்பாக லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்கு விளாச வேண்டும். இந்திய அணியின் பாரம்பரிய பலமே (???) முன்வரிசை ஆட்டக்காரர்கள்தான். 10ம் இடத்தில் குளுஸ்னரைப் போல , வாசிம் அக்ரத்தைப் போல திறமையுள்ளவர்கள் எப்போதுமே இருந்ததில்லை. ஆறு விக்கட்டுக்களை இழந்தபின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் மட்டும் அடித்து வெற்றி பெறுவது பெரும்பாலும் நடக்காத விசயம். இதனால்தான் ஸ்ரீநாத்தும், கும்ப்ளேயும் இணைந்து ஆடி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெங்களூரில் ஈட்டித் தந்த வெற்றியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறாம்.

பாகிஸ்தானுக்கெதிரான போட்டியிலும் சுலபமாக தோற்றுவிட்டோம். இத்தனைக்கும் நல்ல துவக்கம் கிடைத்தது. அப்துல் ரஜாக்கை தூக்கி அடித்து பாகிஸ்தானின் வெற்றியைத் துவக்கி வைத்தார் கங்குலி. அவருக்கு புல் சாட் கைவராத கலை. மிட் விக்கெட் திசையில் ஆளில்லாத போது மணிக்கட்டை ரோல் செய்து தரையில் பந்தை அனுப்பி இருந்தாலே நான்கு கிடைத்திருக்கும். வானளாவ அடித்து யோஹானாவிற்கு அற்புதமான காட்ச் கிடைக்க வகை செய்து விட்டார். கங்குலி இதைப்போல அவுட்டாவது முதல்முறை அல்ல. அதே சமயம் இதுவே கடைசிமுறையுமல்ல. இனிவரும் மேட்ச்களிலும் புல் அடித்து அவ்வப்போது அவுட்டாவார்.

சிறப்பான சுழற்பந்தை எதிர்கொள்ள கயி·ப்பும், யுவராஜும் சிரமப்படுகிறார்கள் என்பது என் கருத்து. இதில் யுவராஜ் அதிரடி ஆட்டம் மூலம் சமன் கட்ட முயற்சிக்கிறார். கயிஃப்பிற்கு அதுவும் கைவரவில்லை. நமது உள்நாட்டுப் போட்டிகளின் தரத்தினை பலர் பல்வேறு விதமாக விமர்சித்து வருகிறார்கள். இதன் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் , இதில் ஆடுவதால் கிடைக்கும் சுழற்பந்தை எதிர்கொள்ளும் திறமையும், நம்பிக்கையும்.அதிக உள்ளூர் போட்டிகளில் ஆடாதது மேற்கூறிய இருவருக்கும் சுழற்பந்தை எதிர்கொள்ளும் திறமையை குறைத்து விட்டது என நான் நினைக்கிறேன். இவர்களைக் காட்டிலும் ரோஹன் பந்து வீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்.யார் கவனித்தார்கள் அதை. ஹாலந்திலிருந்து இந்தியா திரும்பி விடுவார் அவர். ICC cup அணியில் அவர் இடம்பெறவில்லை.

பாக்கிஸ்தானுடன் இரு மேட்சுகளில் உதை வாங்கி விட்டோம். இது கவலை அளிக்கிறது. பாக்கிஸ்தானுடன் தோற்க ஆரம்பித்தால் அது மெகா சீரியல் போல நீளும். ஜாவேத் மியாண்டாட்டை அவுட்டாக்கின பின்பும், மன்சூர் இலாஹியின் விளாசலில் தோற்ற சார்ஜா மேட்சுகள் நினைவிலிருந்து பயமுறுத்துகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாதிரியான முத்தரப்புப் போட்டிகளில் விளையாடுவதால் கிடைக்கும் பயன் என்ன? அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டு மேட்ச் பிட்னஸ் இல்லாமல் ஆகாய விமானத்தை ஆம்புலன்சாக்கி திரும்புகிறார்கள். அடித்து ஆடுவதைக் காட்டிலும் அடி பட்டுக் கொள்வதே என் விளையாட்டு என்று மார்தட்டுகிறார் அஜித் அகர்கர். கவுண்டியில் கொஞ்சம் சுமாரா பந்து போட்டாரே என வியந்தால் ஒரே மேட்சில் மீண்டும் காயம்.

வரலாறு காணாவிதமாக ஆசியக் கோப்பைக்கு முன் பல ஆயத்த முகாம்கள். ஒரு முகாம் உடல் திட அதகரிப்பிற்காக மட்டும் நடத்தப்பட்டது. பலன் அதிகரித்த காயங்களைத் தவிர வேறு எதுவுமில்லை.

அணி வீரர்கள் பலமற்றிருக்கும் நிலையில் இவ்வளவு டோர்னமெண்டுகளில் ஏன் பங்கு பெற வேண்டும்? அதை நாம் ஏன் பார்த்து தொலைக்க வேண்டும்?

No comments: