Thursday, October 07, 2004

சபாஷ் கும்ப்ளே..

நம்பிக்கை, நாணயம், கைராசிக்கு பாலு ஜுவல்லர்ஸ் என்று முன்பு ஒரு விளம்பரம் வரும். அதே தொனியில் சொன்னால் திட்டமிடுதல், உழைப்பு, முயற்சி, வெற்றிக்கு அனில் கும்ப்ளே. 400 விக்கெட்டுக்களை எடுத்த பின்பும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர். ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் உலகிலும், விமர்சகர்கள் உலகிலும் இவரின் பெருமைகளை சிலாகித்துப் பேசுபவர்கள் குறைவு. "கும்ப்ளே மிதவேக பந்து வீச்சாளர்தான்", "பந்தை சுழற்ற தெரியாது" வெளிநாட்டுக் களங்களில் சோபிக்க முடியாது" என பல்வேறு விமர்சனங்களை, கிரிக்கெட் மட்டையை தொட்டுப்பார்க்காத ரசிகர்கள் பலர் பேசும் போது வேதனையாய் இருக்கும்.

இவ்வகையான விமர்சனங்கள் தன்னை சிதைத்து விடாமல் காத்துக் கொண்டதில்தான் இருக்கிறது கும்ப்ளேயின் சூட்சமம். தன்னுடைய வெற்றிக்கான காரணம் எது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். விமர்சர்களின் வாயை அடைக்க விபரீதமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடவில்லை. 1990 ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெக்ஸ்கோ டிராபி போட்டியில், முதல் மேட்சில் அவரது பந்து வீச்சிற்காக "மேன் ஆப் தி மேட்ச்" பரிசு பெற்றார். இத்தனைக்கும் அவர் எடுத்தது டேவிட் கோவரின் ஒரே விக்கெட். கும்ப்ளேயின் சிக்கனமான பந்து வீச்சைக் கணக்கில் கொண்டு இப்பரிசு வழங்கப் பட்டது ( அட்ஜுடிகேட்டர்-பாய்க்காட் என நினைக்கிறேன்).

இதற்கு பின்பு 1992 ம் ஆண்டு ஆஸ்திரேலியா டூருக்கு கும்ப்ளே அழைத்துச் செல்லப் படவில்லை. ஆஸ்திரேலியாவின் எழும்பும் மைதானங்களில் கும்ப்ளே பிரகாசித்திருக்க முடியும் என்பது அப்பொழுது என் கருத்தாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் 4-0 என்றும், உலகக் கோப்பையில் மிகப் பரிதாபமாகவும் மண்ணைக் கவ்விய பின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்காக தயாரானது இந்திய அணி. அப்பொழுது இந்திய வந்திருந்த இயான் சாப்பல், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணிக்கு ஒரு லெக்ஸ்பின்னர் தேவை என பேட்டி அளித்தார். சாப்பல் சொன்னதற்கேற்ப அப்பொழுது நடந்துகொண்டிருந்த இரானிக் கோப்பை மேட்சில் கும்ப்ளே அதிக விக்கட்டுக்களை கைப்பற்ற, இந்திய அணியில் இடம் பெற்று விட்டார்.

தென்னாப்பிரிக்காவில் ஒரு இன்னிங்க்ஸில் ஆறு விக்கட் எடுத்து தன் மறுபிரவேசத்தை வலுப்படுத்தினார். கும்ப்ளேயின் வரவு அப்போது இந்திய அணியின் மேனேஜரான அஜித் வடேகருக்கு வரப்பிரசாதமாக அமைய, அதன் பின்பு இந்தியாவில் நிகழ்ந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுழற்பந்திற்கு உதவும் ஆடு களங்களாக அமைத்து இங்கிலாந்தை 3-0 என வெற்றி கொண்டது இந்திய அணி.

ஒரு நாள் போட்டிகளில் சிக்கனமாக பந்து வீசி இந்தியாவின் பல வெற்றிக்கு உதவினார் கும்ப்ளே. மற்ற லெக்ஸ்பின்னர்களிடம் இல்லாத இவரது சிறப்பம்சம்- Accuracy -கச்சிதமாக பந்து வீசும் திறன். அதிகமாக "லாங்ஹாப்" எல்லாம் வீசமாட்டார். டைட்டன் கோப்பை பந்தயத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மொஹாலியில் நடந்த பரபரப்பான பந்தயத்தில், பனியில் நனைந்த பந்தைக் கொண்டு வீசிய இறுதி ஓவர்களும், எடுத்த விக்கட்டுகளும், ஈட்டிக் கொடுத்த வெற்றியும் மறக்க முடியாதவை.

என் நினைவில் இருக்கும் இவரது மறக்க முடியா விக்கெட்டுக்கள்

  1. 1996 ம் ஆண்டு, உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில், அதிரடி ஆட்டம் அடிய அரவிந்த டி சில்வாவை, கூக்ளி மூலம் போல்ட் செய்தது.
  2. 1999 ம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில், பின்ச் ஹிட்டராக வந்த மார்க் பவுச்சரை "ராங் ஒன்" மூலம் போல்ட் செய்தது. கவரில் பீல்டரை எடுத்து விட்டு பந்து வீசினார். ஆசையுடன் கவரில் பவுச்சர் விளாசப் போக, குச்சி காலி.
  3. 1998 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னை டெஸ்டில் ஸ்டீவ் வா க்ளீன் போல்ட். பந்தை வாவ் வெல் லெப்ட் செய்தார். ஸ்டம்ப் தகர்ந்தது.

1999-2000 வருடத்தில் தான் மோசமாக விளையாடிய ஆஸ்திரேலிய தொடருக்கு பதிலளிக்கும் விதமாக, 2003-2004 ல் பிரமாதமாக பந்து வீசி அசத்தினார் கும்ப்ளே. விளையாட்டில் சோபித்தால் படிப்பில் கோட்டை விடுவார்கள் என்பதற்கு இவர் விதி விலக்கு. விளையாட்டு காரணமாக பல தேர்வுகளை இஞ்சினியரிங் படிக்கும் போது தவற விட்டாலும் கூட, அனைத்து தேர்வுகளையும் ஒன்றாக எழுதி 'டிஸ்டிங்ஸனில்" தேர்ச்சி பெற்றார் இவர்.

இந்திய குழந்தைகளுக்கான நல்ல "ரோல் மாடல்". சமீப காலமாக கங்குலி இவரை சரியாக கையாளவில்லை என்றே தோன்றுகிறது. இவருடைய கிரிக்கெட் அறிவும், கணிதத் திறமையும் கேட்பன்களுக்கு வரப்பிரசாதம். சென்னையில் நடந்த, இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு தலைமை ஏற்று வெற்றியும் ஈட்டித் தந்தார்.

கிரிக்கெட் தெரியாத பலருக்கும் சச்சினின் சாகசங்கள் தெரிந்து விடுகிறது. கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கும் சிலசமயம் கும்ப்ளேயின் சாதனை புரியாததுதான் வேதனை. எப்படியிருந்தாலும் சரி.

முயற்சி தம் மெய்வருத்த கூலி தரும்.

வாழ்த்துக்கள் கும்ப்ளே

No comments: