Saturday, October 23, 2004

டெண்டுல்கர் பராக் பராக்..
கடைசியாக டெண்டுல்கர் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவார் என அறிவித்து விட்டார்கள். முப்பது நிமிடம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டதில் தலைவர் எந்த சிரமும் இல்லாமல் ஆடியிருக்கிறார். டெண்டுல்கர் எவ்வித நிர்பந்தமுமில்லாமல் அவருடைய உடல்நலனை உணர்ந்தே இம்முடிவை எடுத்திருப்பார் என நம்புகிறேன். அவ்வாறில்லாத பட்சத்தில் இது விபரீதமான முடிவாகத்தான் இருக்கும்.


இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான அங்கமாக டெண்டுல்கர் மாறிவிட்டது யாரும் மறுக்க இயலாத உண்மை. டெண்டுல்கரையே நம்பியிருக்கும் நிலை மாறத்தான் என்னைப் போன்ற சிலர் விரும்புகிறோமே தவிர, டெண்டுல்கர் அற்ற இந்திய கிரிக்கெட் அணியை அல்ல. கையொடிந்த குர்சரன்சிங்கை அடுத்த முனையில் வைத்துக் கொண்டு இரானிக் கோப்பையில் அடித்த சதம் இந்த இளம் புயலை இந்திய அணிக்கு கொண்டு வந்தது. அதன் பின்பு இவரைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், இவருடைய சாதனையும் கூடிக் கொண்டே போனதே ஒழிய குறையவில்லை.


இளம் வயதிலே ஆட வந்து விட்டதால் இவரைப் பற்றிய ஒரே பயம், விரைவிலேயே ஓய்வு பெற்றுவிடுவாரா என்பதே. அதைப் போலவே டென்னிஸ் எல்போ என்றெல்லாம் பயமுறுத்தி விட்டார்கள். பத்ரி வேறு இன்னும் நிறைய நாட்களுக்கு டெண்டுல்கர் ஆடமாட்டார் என கூறியிருந்தார்.


இப்போது அணியில் சேர்த்திருக்கிறார்கள். யாரை அணியிலிருந்து தூக்கப் போகிறார்கள்? அனேகமாக யுவராஜ் என நினைக்கிறேன். படேல் துவக்க ஆட்டக்காரராக வருவார். டெண்டுல்கர் மட்டையத்தவிர பந்து வீச்சையும் நான் மலை போல நம்புகிறேன். கடி கில்லஸ்பி ( உபயம்: பத்ரி) போன்ற ஆட்களை ஆசை காட்டி மோசம் செய்ய டெண்டுல்கரால் முடியும். டெண்டுல்கர் பந்து போடும் நிலையிலிருக்கிறாரா என்பது தெரியவில்லை.


வாருங்கள் டெண்டுல்கர். இன்னும் ஓராண்டுக்குள் கவாஸ்கரின் 32 டெஸ்ட் சத ரெக்கார்டை காலி செய்யுங்கள்.


நீங்கள் நன்றாக ஆடும் பட்சத்தில் வெற்றி தானாக வரும்

No comments: