Monday, November 22, 2004

சங்கர சதுரங்கம்

ஊரே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என நினைத்தேன். கிட்டத்தட்ட ஒருவாரம் கழிந்து விட்ட நிலையில், ஆடு புலி ஆட்டமாக துவங்கிய நிகழ்வு, சதுரங்கமாய் மாறிவிட்ட தருணத்தில் மெளனத்தை தொடர முடியவில்லை. ஜெயேந்திரரின் எதிர்ப்பாளர்கள் கை முற்றிலும் ஓங்கியிருந்த நிலை மாறி தற்பொழுது ஆதரவு வாதங்களை சிலர் முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.

'இது மடத்தின் பதவியிலிருந்தவர் செய்த தவறு. இதற்கு மடத்தை குறை கூற முடியாது''என விளித்து ஒரு சாரார் மடத்தின் பெருமை காக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். கல்கியும் இதே ரீதியில் தலையங்கம் எழுதியிருக்கிறது. ஆனால் ஊடகத்தில் கசிந்திருக்கும் பல்வேறு செய்திகளில் ஓரளவே உண்மை என எடுத்துக் கொண்டாலும் மடத்தின் நிர்வாகம் புரையோடிப்போயிருப்பதையும், அதிகாரப் போட்டிகள் நிலவி வந்திருப்பதையும் உணர முடிகிறது. அனைத்து நிர்வாக அமைப்புக்களிலும் அரசியல் என்பது தவிர்க்க முடியாத அம்சம் என்பதை கருத்தில் கொண்டாலும், அது நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கோ, நிர்வாகத்தின் குறிக்கோளை சிதைப்பதற்கோ காரணமாக அமையும் போது ஆபத்தான அம்சமாக மாறிவிடுகிறது. இந்து மதத்தின் பெருமையின் அடையாளமாக சங்கரமடத்தை குறிப்பிடுவோர்கள், இந்து மதத்தின் மேல் உண்மையாக மதிப்பிருக்கும் பட்சத்தில் மட அரசியல் நிர்வாகத்தை சிதைப்பதை ஆட்சேபணை இன்றி அனுமதித்தது ஏன் என்று தெரியவில்லை. மதத்தைக் காட்டிலும் மடங்கள் பிரதானப்படுத்தப்பட்டதன் விளைவு இது. இன்று பிரச்சனைகள் சிக்கலான பின் குறைகள் கூறிப் பயனில்லை

ஜெயேந்திரருக்கான ஆதரவு வாதங்களை மூன்றுவகையாகப் பிரிக்கலாம்

முதல் வகை-கைது செய்த விதம், சிறையிலடைக்கப் பட்ட விதம் முதலிய நடவடிக்கைகளை குறை கூறி, சாமான்ய மனிதனைப் போல சங்கரரையும் நடத்துகிறார்களே என்ற ஆதங்கத்தில் உதிர்க்கப்பட்ட வாதங்கள். குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிற பெரிய மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லையே என்ற வேதனை ( கல்கியின் தலையங்கமும் இதே தொனியில் எழுதப்பட்டது

இரண்டாவது வகை- பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து சார்பு அமைப்புக்களின் நிலைப்பாடு. இது தர்க்கவியலைப் புறக்கணித்த உணர்வுரீதியான வாதங்கள் - காங்கிரஸின் சதி, ராஜசேகர் ரெட்டியின் சதி, வெளிநாட்டு சதி என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கைதுக்கு காரணகர்த்தாவான ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்து ஒரு குரல் கூட எழுப்பவில்லை

மூன்றாவது வகை- மற்ற மதத்தலைவர்களை நடத்தும் முறையுடன் ஒப்பிட்டு , ஒரு இந்துமதத் தலைவரை இவ்வாறு நடத்துகிறார்களே என வெளியிடப்பட்ட ஆதங்கம்.

ஆனாலும் அனைத்துத்தரப்பினராலும், சங்கராச்சாரியார் இதைச்செய்திருக்கமாட்டார் என தைரியமாக வாதாட இயலவில்லை. இது நெருப்பில்லாமல் புகையாது என்ற சந்தேகத்தை சாதாரண மக்களிடம் வலுப்படுத்திவிட்டது.

என்னுடைய பார்வையில் கைது செய்த அரசாங்க நிர்வாகத்தை எடுத்து போரிடுவதைக் காட்டிலும், இவ்வாறான சம்பங்களுக்கு காரணமான மட நிர்வாகப் பிரச்சனைகளுக்கு எதிராக போரிடுவதே இந்து மதப் பெருமையைக் காப்பாற்ற விரும்புவர்கள் உண்மையாக செய்ய வேண்டிய செயல். ஜயேந்திரர் கொலைக்குற்றவாளியா ? இல்லையா? என்பது தற்பொழுது முன்னிலைப்படுத்தப் பட்டுள்ள பிரச்சனை என்றாலும், இவ்வகையான சிக்கலுக்கு ஆதாரமாக அமைந்த காரணம் என்ற கேள்வியும், மட நிர்வாகம் புரையோடியிருப்பதும், அதிகாரப் போட்டி நிலவுவது உண்மையா என்ற கேள்விக்கும் விடை காணப்பட வேண்டிய அவசியம் மடத்தின் பக்தர்களுக்கு இருக்கிறது.

பிள்ளைப்பேறு வேண்டிக்கொண்டும், செய்வினையும் நீக்கிக் கொள்வதற்கும் சாமன்யர்கள் அணுகுகின்ற சாமியார்களின் மடங்களில் அதிகாரப் போட்டிகள் என்றால் மன்னித்து விடலாம். அங்கே செல்பவர்களும் ஏமாந்த சோணகிரி மக்களே. ஆனால் சங்கர மட பக்தர்கள் பட்டியலில் அறிவு ஜீவிகள் பலர் இடம் பெறுகிறார்கள். இத்தகைய அறிவி ஜீவிக் கும்பலில் மடத்தின் நிர்வாகத்தை சிதையாமல் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை கொண்டவர் யாருமே இல்லையா?

இன்று மீடியாவில் உலவி வரும் யூகங்கள் நேற்று புதிதாக உதித்தவை அல்ல. இவற்றை முன்பு மீடியாக்கள் சட்டை செய்யவில்லை. கைதுக்கு பின் அதை பெரிதாக ஊதிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி மடப்பூசலைப் பற்றி சங்கரமடத்தின் சாமான்ய பக்தனும் அறிந்திருப்பதாகத்தான் படுகிறது. அவ்வாறிருக்கும் பட்சத்தில் மடத்தை இந்துமத பெருமையின் அடையாளமாக கொண்டாடுவோர் மவுனம் சாதித்தது ஏன்?

அரசியல்வாதி சிக்கலில் மாட்டுவதற்கும், மடாதிபதி சிக்கலில் மாட்டுவதற்கும் இடையேயான நடைமுறை வித்தியாசங்களை இந்த வழக்கின் மூலம் உணர முடிகிறது.அரசியல் தலைவர் சிக்கலில் மாட்டும் போது அதை எதிர்கொள்ள கட்சி நிர்வாகம் சட்ட ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் தயார் நிலையில் எப்பொழுதும் உள்ளது. அழகிரியின் கைதின் போது திமுக கையாண்ட அரசியல் உத்திகளும், சட்ட உத்திகளும் இதை உலகிற்கு எடுத்துக்காட்டின.சங்கராச்சாரியாருக்கு சிக்கல் வந்தபோது அதை எதிர்கொள்ள மட நிர்வாகம் தயார் நிலையில் இல்லை.

மக்களும் அரசியல் தலைவர் மீதான குற்றத்தையும், மதத்தலைவர் மீதான குற்றத்தையும் இருவேறு விதமாக பார்க்கிறார்கள். அரசியல் தலைவர்கள் குற்றத்தை ஒரு தேர்தலில் எதிர்த்து ஓட்டுப்போடுவதுடன் மறந்து போகும் மக்கள், மதத் தலைவருக்கு அதே விதமான மன்னிப்பை வழங்க தயாராக இல்லை. இதனால்தான் அரசியல்வாதிக்கு ஒரு நியாயம், மதத்தலைவருக்கு ஒரு நியாயமா? என்ற வாதம் செல்லுபடியாகாமல் போனது.

சங்கராச்சாரியாரை சிக்கலில் மாட்டியதற்கு இரண்டு முக்கிய பிரச்சனைகளை தவிர வேறு காரணம் இருக்கப் போவதில்லை என்பது என் கருத்து.

முதலாவது காரணம்,மடத்தின் உள்விவகார நிர்வாகப் பிரச்சனைகள். இதன் மூலமாக பின்னப்பட்ட வலையில் ஜெயேந்திரர் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜெயேந்திரரைத் தவிர குற்றத்தில் சம்பந்தப் பட்டிருக்கும் சிலர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டியவுள்ளது. அவர்களை விடுத்து ஜெயேந்திரரை மட்டும் கைது செய்தது ஏன்? இப்பிரச்சனையை ஏன் யாரும் எழுப்ப மறுக்கிறார்கள்? ஜெயேந்திரரை பற்றி தலையங்கம் எழுதும் இந்து ராம், விஜயேந்திரரை வரவேற்க ஆந்திரா செல்வது ஏன்? கொலைவழக்கைப் பற்றி விரிவாக எழுதும் ஹிந்து மட அரசியலைப் பற்றி எழுத மறுப்பதேன்?இக்கேள்விகளுக்கு விடையில்லாததால் இச்சிக்கலின் ஆதாரப் பிரச்சனைகளை அலச அறிவு ஜீவி பக்தர்கள் யாரும் தயாராயில்லை என்ற முடிவுக்குத்தான் நம்மால் வர முடிகிறது. மேற்கொண்டு "மடத்தின் தலைமை என்பது வேறு, மடம் என்பது வேறு" என தத்துவம் பேசுகிறார்கள். நிர்வாக குழப்படியில் ஒருவொருக்கொருவர் குழி பறித்து, திராவிடக் கட்சிகள் கிண்டலடிக்கும் நிலையில் மடத்தைக் கொண்டுவந்து விட்டு விட்டார்கள்.இந்த நிலைமைக்கு காரணமானவர்களை பொறுத்துப் போவது எவ்விதமான இந்து அபிமானம்? இதைப் பற்றி ஏன் பாரதீய ஜனதாவும், மற்ற இந்து அமைப்புக்களும் கேள்வி எழுப்பவில்லை?

இரண்டாவது காரணம், முதல்வருக்கும், ஜெயேந்திரருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள். இதுவும் உண்மையாயிருக்கும் பட்சத்தில் இதை எதிர்கொள்வதற்கு வலிமை மிகவும் அவசியம். அது இந்து மதத்தின் காவலராக முதல்வரை சிலகாலம் முன்பு வரை போற்றி வந்த இந்துசார்பு அமைப்புகளுக்கு கிடையாது. இவர்கள் இன்னமும் கலைஞரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாயையே மெல்லும் அவருக்கு அவல் போட்டால் சும்மா விடுவாரா? அதைத்தான் கலைஞர் செய்கிறார்.
இப்பிரச்சனையில் அனைத்து வழிகளிலும் பயன்பெறுபவராக இருப்பவர் முதல்வர் மட்டுமே. இவரை எதிர்கொள்ள வேண்டுமானால் பல உண்மைகளை பேசுவதற்கு இந்து மதக் காவலர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது இயலாத நிலை.2002 ல் நடந்த ராதகிருஷ்ணன் மீதான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டாண்டு காலம் கண்டுபிடிக்காதது ஏன்? காவல் துறையின் திறமையின்மைதான் காரணமா? இல்லையென்றால் இப்போது ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபின், அந்த வழக்கு தூசி தட்டப்படுவதற்கு, ஜாமீன் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறைதான் காரணமா? இரண்டாண்டுகளாக குற்றவாளி கண்டுபிடிக்கப்படாததற்கு, முதல்வர் தார்மீக பொறுப்பேற்பாரா? நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, இவ்வழக்கைப் பற்றி விலாவாரியாக விளக்கி சட்டமன்றத்தில் பேசுவது உரிமை மீறல் இல்லையா? இதே மாதிரி அழகிரியின் வழக்கைப் பற்றி சட்டமன்றத்தில் பேசியிருந்தால் திமுக சும்மாயிருக்குமா? இப்போது மட்டும் அவர்களும் சேர்ந்து மண்டையாட்டுவது ஏன்?

ஒரு ஸ்தாபனம் சோதனையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நியாய பலம், தொண்டர் பலம், அரசியல் பலம் என மூன்று பலம் வேண்டும்.

தொண்டர் பலம் சிறிய மனித சங்கலி அமைக்கும் அளவிலும், ஈ- மெயில் அனுப்புமள்விலும்,லெட்டர்ஸ் டு எடிட்டர் எழுதும் அளவில்தான் இருக்கிறது. சென்னையில் நடக்கும் பிரச்சனைக்கு டெல்லியில் வெற்றிகரமாக (??) உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அரசியல் பலம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. எதிரணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை இரண்டும் இல்லாவிட்டாலும் கூட நியாயபலம் இருந்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இவ்வழக்கில் ஜெயேந்திரருக்கும், கொலைக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முடிந்தாலும் கூட, மடத்திற்கும், இக்கொலைக்கும் சம்பந்தமில்லை என நீருபிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு நியாய பலம் அவசியமில்லை. ஒரு மதஸ்தாபனத்திற்கு இது மிகவும் அவசியமாகிறது.

நியாயத்தின் பலம்தான் சங்கரமடத்திற்கு வந்திருக்கும் சோதனை.

எப்படி நீக்கமுடியும் இந்த களங்கத்தை?

Tuesday, November 16, 2004

..திருக்கலாம்

கவனித்திருக்கலாம்
எல்லோருக்கும் புது ஆடைகள்
வாங்கித் தந்த அப்பா
தனக்கு மட்டும் நாலுமுழ வேட்டியுடன்
நிறுத்திக் கொண்டதை.

தந்திருக்கலாம்
பக்கத்து வீட்டு
கிறிஸ்தவ சிறுவனின்
பட்டாசு ஆர்வத்தை உணர்ந்து
வெடிப்பதற்கு
ஒரு வெடியை.

கேட்டிருக்கலாம்
பள்ளியில்
தீபாவளி அடுத்த தினம்
அனைவரும் வண்ண உடை அணிந்திருக்க
சிலர் மட்டும் அணியாமல் வந்த காரணத்தை.

அறிந்திருக்கலாம்
பக்கத்து வீட்டு
சுப்பு
கையில் வைத்து வெடித்த
சீனிசரம் எல்லாம் என் அக்காவை
கவரத்தான் என்பதை.

உணர்ந்திருக்கலாம் கடவுளை
என்னிடம் வெடிக்காத வெடி
குப்பை பொறுக்கிப் போன
குப்பத்து சிறுவனுக்கு
வெடித்துத் தந்த
மகிழ்ச்சியில்..

(தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த என் கவிதை)

Saturday, November 13, 2004

சினிமா குவிஸ்

படிக்கிற காலத்திலிருந்தே பொது அறிவு குவிஸ்ஸ¤க்கும் எனக்கும் ரொம்ப தூரம். ஆனாலும் குவிஸ் மாஸ்டராகனும்னு ஆசை மட்டுன் இருந்துச்சு. கடைசில காலேஜ் படிக்கும் போது அந்த ஆசையை நிறைவேத்தி வச்சது சினிமா குவிஸ் தானுங்க.

“பல்லவியும் சரணமும்” என்று ஒரு பதிவு போட்டு பாலா கலக்குறாரு. பாட்டை சரியா கண்டு பிடிச்சு “ குடிகாரனின் உளறல்கள்” என்ற பெயருடைய மற்றொருவர் கலக்குறாரு. என்னால முடிஞ்ச ஒரு போட்டிய நடத்தலாம்னு உத்தேசம்.

சரியான விடைகள் சொல்றவருக்கு , உலகத்தின் எந்த மூலையா இருந்தாலும் ராமகிருஷ்ணனின் “ துணையெழுத்து” புத்தகம் அனுப்புறேங்கோ.

1. ரஜினிகாந்த் நடித்து பாலச்சந்தர் துவக்கி கைவிட்ட ஒரு படத்தின் பெயர் என்ன?

2. நினைத்தாலே இனிக்கும் படத்தின் கதை யாருடையது?

3. “ஒரு வாரிசு உருவாகிறது” படத்தின் ஒளிப்பதிவாளர் யார்?

4. கமலஹாசன் கெளரவ நடிகராக கழுதைமேல் ஏறி நடித்த படம்?

5. சங்கர்லால் ( கமல் படம்) படத்தின் இசையமைப்பாளர் யார்?

6. கல்லுக்குள் ஈரம் படத்தின் இயக்குநர் யார்?

7. ஒரு தலை ராகம் படத்தின் இயக்குநர் யார் என்பதில் சிக்கல் வந்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர் யார்?

8. ஒரு தலைராகம் படத்தின் இசையமைப்பாளராக இன்னொருவரை குறிப்பிட்டார்கள். அவரது பெயர் தெரியுமா?

9. “காலையில் தொடங்கி மாலையில் முடியும் படம்” என விளம்பரப்படுத்தி ராபர்ட் ராஜசேகர் எடுத்த படம் என்ன?

10. நடிகை நிரோசாவிற்கு இன்னோரு திரைப்பெயர் இருந்தது? தெரியுமா?

விடைகளை அனுப்புங்கள்- அதிக விடைகள் சரியாக கண்டுபிடிப்பருக்கு பரிசு.

Tuesday, November 02, 2004

கட்டுரை கதையின் பரிணாம வளர்ச்சியா ?

பி. கே. சிவக்குமாருக்கான பா.ராகவனின் பதிலைப் படித்ததும் சில விடயங்கள் மனதில் நெருடிக் கொண்டிருந்தது. நான் ஒரு தமிழ் சிறுகதை ரசிகன். தமிழ்படுத்தப் பட்ட மற்ற மொழி சிறுகதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சத்யஜித்ரேயின் சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.

சிறுகதை எழுதாததற்கான காரணங்களாக ராகவன் முன் வைத்த காரணங்களில் நான் புரிந்து கொண்டதை பட்டியலிடுகிறேன்.

1) சமகால அரசியல் நிகழ்வுகளை தோலுரித்துக்காட்டும் முயற்சிகளில் சிறுகதை எழுத்தாளர்கள் இறங்கவில்லை.

2) கதைக்களம் அகன்றதாக இல்லை. மீண்டும் மீண்டும் நடுத்தர வர்க்கத்தின்
பிரச்சனைகளைப் பற்றியே எழுதுகிறார்கள்.

3) சிறு பத்திரிக்கைகளில் கதை எழுதுபவர்கள் பாலியல் கதைகளை எழுதுவதே பெரிய சாதனை என நினைக்கிறார்கள். மற்றபடி பெரிதாக அவற்றுள் ஒன்றும் இல்லை.

4) கனமான சாரத்தை சிறுகதை வடிவில் வழங்கினால், அதை படிக்க வெகுஜன வாசகர்கள் விரும்புவதில்லை .கனமான விடயங்களை கட்டுரை வடிவில் வழங்கினால் வாசகர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.

சிற்றிதழ் எழுத்தாளர்களைப் பற்றிய கருத்தை தவிர மற்ற கருத்துக்கள் எனக்கு கவலையளிப்பதாக உள்ளது. ஒரு படைப்பாளியாக சிறுகதைகளைப் பற்றிய அவரது தரநிர்ணயமும், அந்த அளவுகோலில் தேறுபவர்கள் பற்றியுமான அவருடைய கருத்து வேறுவிதமாக இருக்கலாம். ஆனால் ஒரு வாசகனாய் ராகவனார் குறிப்பிட்டுள்ளதைக்காட்டிலும் அதிகமாகவே சாமான்யர்களை பாதித்த சிறுகதைகளும் நாவல்களும் வந்துள்ளன என்பதுதான் என்னுடைய அபிப்ராயம்.

அடக்குமுறைக் காலக்கட்டத்தில்தான் சிறந்த இலக்கியங்கள் வருமோ என்ற சந்தேகமும் ( சுஜாதாவின் கூற்று) நியாயமானதே. இலக்கியவாதி அற்ற சாமான்யனுக்கும் சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியின் கவிதைகளை அறிந்திருந்ததற்கும், இன்றும் பெரும்பாலானவர்களுக்கு பாரதியின் தேசப்பக்திப் பாடல்கள் நினைவில் நிற்பதற்கும் அக்கால அரசியல் சூழ்நிலையை ஒட்டி பாரதியின் பாடல்கள் எழுதப்பட்டது காரணமாய் இருக்கலாம்.

மற்றுமொரு உதாரணமாக சமீபகாலமாக இணையத்தில் படிக்க நேரிடும் ஈழப்பாடல்களை கூறலாம். நரம்பை முறுக்கேற்றும் மரபுக் கவிதைகள் இன்று தமிழ் நாட்டில் காணக்கிடைக்காது. ஏனெனில் இங்கே வெளிப்படையான போராட்டங்கள் இல்லை. ஆனால் தனிமனிதனின் போராட்டங்கள் பல்வேறு பரிமாணங்களில் இங்கேதொடர்கிறது. இதை கூர்ந்து கவனித்து எழுத இலக்கியவாதிகளுக்கு மனமோ, அவகாசமோ அல்லது இரண்டுமோ இல்லை. நடுத்தர வர்க்கத்தைப் பற்றியே எழுதுகிறார்கள் என்று ராகவன் கூறியிருக்கிறார். இப்பிரச்சனைகளை கதைகள் அலசக் கூடாதா? இவற்றை அலசும் கதைகள் இலக்கியமாக கருதப்படாதா?

இந்தியா போன்ற நாடுகளிலே ஓங்கி நிற்பவர், ஒடுக்கப்படுபவர் என்ற இருவேறு நிலைகளிலே நாம் மனிதர்களைப் பொருத்திப் பார்க்கிறோம். இலக்கியவாதிகளுக்கும் கதாப்பாத்திரங்களை இந்நிலைகளில் பொருத்தி கதை எழுதுவதே வசதியாய் இருக்கிறது. இந்தியாவிற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த கருத்துப்படிவம்- திரிசங்கு. ரெண்டுங்கெட்டான் நிலையில் மாட்டிக் கொண்டு வாழ்க்கையில் உழலும் சிக்கல் அதற்கான போராட்டம்- இதுதான் இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும், நிகழப் போகும் இந்த நூற்றாண்டுக்கான போராட்டம். இதன் வேதனைப் பரிமாணங்களை இலக்கியவாதிகள் முழுவதுமாக கவனிப்பதில்லை. கவனித்தால் பல்லாயிரக் கணக்கான சிறுகதைகள் வரும் சாத்தியம் உள்ளது. வெகுஜன மக்களும் படிப்பார்கள். இதை விடுத்து கதை எழுத மாட்டேன் , கட்டுரைகள் போதும் என ராகவன் கூறுவது எனைப் போன்ற கதை ஆர்வலர்களுக்கு நட்டத்தைத்தான் ஏற்படுத்தும்.

மத்திய வர்க்க வாழ்க்கை மனித நேயத்தை சிதைத்து வருகிறது. மனிதர்கள் தனித்தீவுகளாக பிரிந்திருக்கிறார்கள், பிரச்சனை வரும்வரை பிரிந்திருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒன்றுபடுவதை விரும்பாத / ஒன்றுபடுவது தேவையில்லை என்ற மனநிலையை வளர்க்கும் சமுதாயம் இருக்கும் போது எங்கே போராட்டம் வெடிப்பதும் அதனால் இலக்கியம் வளர்வதும் நிகழப்போகிறது?

அரசியல்வாதிகளுக்கு மத்தியவர்க்கத்தின் இம்மனநிலை வரப்பிரசாதமாகி விட்டது. "வாய் கிழிய விமர்சித்துவிட்டு ஓட்டுச்சாவடிக்கு வரமாட்டார்கள் இவர்கள்" என்பதில் அரசியல்வாதிகளுக்கு அசைக்க முடியா நம்பிக்கை. அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு, மத்தியவர்க்கத்தாரின் பங்களிப்பும், மத்தியவர்க்கத்தாரின் வாழ்க்கை தொடர்ச்சிக்கு அரசியலின் பங்களிப்பும் தேவையில்லாத சூழ்நிலை உருவாகி விட்டது.

இதற்கு ஆங்கிலத்தில் "Finding Private Solutions for Public Problems" என்ற சொற்றொடர் உண்டு.குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் தண்ணீர் லாரி வாங்கி தொட்டியில் நிரப்பி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வரும் நீரை பல பாத்திரங்களில் சேமித்து வைத்துக் கொள்கிறோம். ரயில் நிலையத்தில் குழாய் நீரை நம்பாமல் மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்கிறோம். வசதி குறைந்தவர்களுக்கு வாட்டர் பாக்கெட். காலப்போக்கில் ஆள்பவர்கள் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்பதே எதிர்கட்சிகளால் மட்டுமே நினைவூட்டப்படுகிறதே தவிர பொதுமக்கள் மறக்கத் தொடங்கி விட்டார்கள். இதற்காக போராட தயாராக இல்லை.

இந்த மனப்பான்மை வரவேற்கத் தக்கதா? இதன் மூலமாக ஏற்படும் இழப்புகள் என்ன? இதன் பாதிப்புக்கள் குறித்து இலக்கியவாதிகள் படைக்க வேண்டிய அவசியம் இல்லையா? இல்லையென்றால் இப்பிரச்சனைகளைப் பற்றி கட்டுரை எழுதினால் மட்டுமே போதுமா? இல்லையென்றால் கட்டுரைகளுக்கும் கதைகளுக்குமிடையேயான ஒரு புது இலக்கிய வடிவம் அவசியமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும்.

என்னை பொறுத்தவரை கட்டுரைகளால் மட்டுமே ஒரு இலக்கியவாதி தனக்கான இலக்கிய அல்லது சமூகப் பங்களிப்பை முழுமையாக செய்துவிட முடியாது. கட்டுரையும் கதையும் கலந்த ஒரு புது இலக்கிய வடிவத்தை அமைப்பதே பரிணாம வளர்ச்சியாய் இருக்க முடியுமே தவிர, கதையும் கட்டுரையும் ஏற்கனவே இருக்கும் வடிவங்களே.

என்னுடைய பார்வையில் ராமகிருக்ஷ்ணனின் "துணையெழுத்து " கதையும் கட்டுரையும் கலந்த புதிய வடிவமாக படுகிறது. கதைகளுக்கான களத்தின் அகலத்தை விஸ்தரித்து, அதே சமயத்தில் கட்டுரைக்கான வெளிப்படை உண்மைகளை கலந்து எழுதிய இவரது படைப்புகள் வாசகர்களால் விரும்பப்பட்டது என்பதை ராகவன் மறுக்கமாட்டார் என நம்புகிறேன். இப்படைப்புக்களின் சாராம்சத்தில் கனமிருந்தது, மனித நேயமின்மையின் பாதிப்புக்கள் வெளிப்பட்டன. இவ்வகையான படைப்புக்களை இலக்கியவாதிகள் படைக்கமுடியாதா? படைத்தால் வாசகர்கள் படிக்கமாட்டார்களா?

சமீபத்தில் தனது வலைப்பூவில் எஸ். ராமகிருக்ஷ்ணன் வருமானவரி அலுவலர்கள் சார்பாக நடத்தப்பட்ட எழுத்தாளர்கள் மாநாட்டில் "உலகமயமாக்கல் பற்றிய இந்திய இலக்கியங்கள்' குறித்து நடந்த கருத்தரங்கைப் பற்றி எழுதியிருந்தார். அவர் அதில் குறிப்பிட்டிருந்த உண்மை "தமிழில் உலகமயமாக்கலைப் பற்றிய இலக்கியங்கள் இல்லை. தெலுங்கில் அதிகம் இருக்கிறது" என்பது.

ஏனிந்த நிலை? தமிழ் இலக்கியவாதிகள் உலகமயமாக்கலைப் பற்றி சார்புநிலை கொண்டவர்களா? அல்லது அதன் தாக்கத்தை கவனிக்க மறுப்பவர்களா? அல்லது உலகமயமாக்கல் என்பது தமிழர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா?

வெகுஜனப்பதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வை மட்டும் கவனிப்பேன் என ஒரு மேலாளனோ அல்லது அரசியல்வாதியோ கூறலாம். இலக்கியவாதி அவ்வாறு கூற முடியாது. தனிமனித இழப்பையும் சுட்டிக்காட்டி இலக்கியம் படைக்கும் உரிமை அவனிடம் உண்டு.

தேயிலை வர்த்தக விதிகள் தளர்த்தப்பட்டதால், இலங்கை தேயிலையுடன் போட்டி போட இயலாது,ஊட்டி தேயிலை தொழிலாளர்கள் படும் பாட்டை எந்த இலக்கியவாதியாவது கண்டு கொள்கிறாரா? கதை/கட்டுரை எந்த வடிவிலாவது இருக்கட்டும். யாராவது எழுதியிருக்கிறார்களா?

அமெரிக்காவில் "Human leasing " குற்றமாக கருதப்படும் செயல். அதாவது உங்கள் அலுவலகத்தில் அக்கவுண்டட் ஆக வேலை பார்த்து வந்தவரை திடீரென பணிநீக்கம் செய்து , இன்னொரு அவுட்சோர்சிங் கம்பெனியின் எம்ப்ளாயியாக சேர்த்துவிட்டு , பழைய கம்பெனியிலேயே பணியாற்றுமாறு சொல்ல முடியாது. எளிமையாகச் சொல்லப் போனால், "செய்யும் வேலையும் பணியாற்றும் இடமும் அதேதான். ஆனால் சம்பளம் தரும் கம்பெனி வேறு". கம்பெனியின் பணியாளர்கள் எண்ணிக்கை செயற்கையாக குறைக்கப்பட்டு, பணியாளர்கள் ஈட்டும் லாபசதவிகிதம் (Profit per employee) அதிகமாக காட்டப்படும். இதை அமெரிக்காவில் தடை செய்துவிட்டார்கள்.

நம்நாட்டில் இவ்வாறான வேலைநீக்கங்கள் நிறைய நடக்கின்றன.15 வருடம் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவன், அதே நிறுவனத்தில் ஆனால் அந்த நிறுவனத்தின் ஊழியன் என்ற அடையாளம் இல்லாமல் வாழ்கிறான்.

என் நண்பனின் தந்தையார் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அவர் தூத்துக்குடியில் சந்தித்த ஒரு உப்பு வியாபாரியின் ஆதங்கத்தை கூறினார். லீவர் சோப்பு தயாரிக்கிறது சரி. சிறு வியாபாரி விக்கிற உப்பு கூடவா? என்று. இக்கேள்விக்கு பின்னால் மறைந்திருக்கக் கூடிய உலகமயமாக்கலின் தாக்கம் அதிகம்.

இலக்கியவாதிகள் இக்கேள்விகளை கவனிக்க வேண்டுமா? கூடாதா? கதை எழுத விடயங்களுக்கு பஞ்சமில்லை. ராகவன் அவர்களது கட்டுரைகளுக்கு கிடைத்த வரவேற்புக்கு காரணம், வாசகனின் மனதிலிருந்த அவ்வகையான படைப்புகளுக்கான தேவையே தவிர, சிறுகதைகளுக்கான தேவையின்மை அல்ல.

அமெரிக்கா , ஆப்கானிஸ்தான் என வரலாற்றையும், அயல்நாட்டுப் பிரச்சனைகளையும் எழுதியது சுவையூட்டியதே தவிர, இலங்கைப் பிரச்சனை, தாரளமயமாக்கல் என இந்தியாவின் ஆதாரப் பிரச்சனைகளை எழுதினால் பிரசுரிப்பதிலும் சரி, படிப்பதிலும் சரி பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இலக்கியத்தின் கதை வடிவால் சொல்ல முடியாத ஆதாரப் பிரச்சினைகள் கட்டுரை வடிவில் சொல்ல முடிகிறது என்றால் படைப்பாளிகள் கட்டுரை எழுதுவதை மட்டுமே செய்வதை வரவேற்கலாம். அவ்வாறில்லாத பட்சத்தில் இலக்கியவாதிகள் கதைகளாக படைக்க வேண்டியவை நிறைய தமிழகத்தில் உள்ளது.


ராகவன் போன்ற பிரபலமான, சிறந்த இலக்கியவாதிகள் கட்டுரை மட்டுமே எழுதுவது வளர்ச்சியாக படவில்லை. இலக்கிய இழப்புதான் ஏற்படும்