Monday, April 10, 2006

சரத் விலகல், ராடன் மற்றும் சன் டிவி

ஊடகங்களால் கிசுகிசுக்கப்பட்டபடி இன்று திமுகவிலிருந்து விலகி விட்டார் சரத்குமார்.நானும் என் மனைவியும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என்று காரசாரமான கடிதத்தை கலைஞருக்கு அனுப்பியிருக்கிறார். சரத் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே திமுகவில் இணக்கமாக இல்லை. அவருடைய ரசிகர்களுக்கெனெ ஒரு கொடியை திடீரென அறிமுகம் செய்தார். சங்கராச்சாரியாரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். இத்தகைய செயல்கள் திமுகவில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.

சரத்தின் விலகல் அரசியல் ரீதியாக பெறும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், சரத்தின் மனைவி ராதிகாவும் அவருடைய முடிவுக்கு உடன்படும் பட்சத்தில், சன் டிவிக்கும், ராடான் நிறுவனத்திற்குமான தற்போதைய உறவின் பின் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்ற கேள்வியே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.ராடன் நிறுவனத்திற்கான முக்கியத்துவம் சன் டிவியில் மிக அதிகம்.தகதக தங்கவேட்டை, செல்வி முதல் பல தொடர்களை ராடன் நிறுவனம் தயாரித்து சன் குழும தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பி வருகிறது. இத்தகைய சூழலில் ராதிகாவின் அரசியல் முடிவின் வியாபாரத் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதை ஊடகங்கள் கூர்ந்து கவனிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

வியாபார ஒப்பந்தங்களை பரஸ்பர ஒப்புதல்களுடன் முறித்துக் கொள்வார்களா? அல்லது அரசியல் வேறு, வியாபாரம் வேறு என தொடரப் போகிறார்களா? அல்லது அடித்துக் கொண்டு நீதிமன்றம் ஏறுவார்களா? என பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

சரத் அதிமுகவுடன் இணையும் பட்சத்தில், ஜெயா டிவியுடன் புதிய ஒப்பந்தங்களில் ராடன் ஈடுபடலாம். அது நிகழும் பட்சத்தில் ஜெயா டிவியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை உயரக் கூடும். சன் டிவி சில புதிய தயாரிப்பாளர்களை முன்னிறுத்தக் கூடும். முன்பு சன் டிவியில் பிரபலமாக இருந்த மின் பிம்பங்கள் நிறுவனம் மீண்டும் சன் டிவியுடன் கைகோர்க்கலாம்.

சன் டிவி ராடனை நம்பி இல்லை என்ற வாதமும் உண்டு. முன்பு மின்பிம்பங்கள் நிறுவனம் சன் டிவியை விட்டு விலகியபோது ,அதனால் சன் டிவி பாதிக்கப்படவில்லை.ஆனால் ராடன் நிறுவனம் மின் பிம்பங்களை காட்டிலும் மிக அதிக நிகழ்ச்சிகளை பல மொழிகளில் வெகு காலமாக வழங்கி வருகிறது. அதில் பல ப்ரைம் ஸ்லாட் நிகழ்ச்சிகள். எனவே ராடனின் விலகல் தற்காலிக பாதிப்புக்களையாவது ஏற்படுத்தாமல் இருக்காது.

என்ன நடக்கப் போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

6 comments:

ஜெ. ராம்கி said...

oru repeatttu comment! :-)

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ... இந்த சங்கு யாருக்குன்னுதான் தெரியலை!

Boston Bala said...

ராடன் டிவியின் பிரச்சினைகளை சன் டிவி சுமக்க விரும்பாததும் காரணமாக இருக்கலாம். 'தங்கவேட்டை'யில் வென்றவர்களுக்கு, நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பல நாளாகியும் இன்னும் தங்கம் சென்றடையவில்லை. ஸ்ரீப்ரியா போன்ற சிலர் ராதிகாவை பகைத்துக் கொண்டாலும் இன்னும் சன் டிவியில் முக்கிய நேரங்களில் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். ராடனை விட அதிக லாபம் ஈட்டிக் கொடுக்கக்கூடிய மற்ற சிலருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் நிர்வாகம் தவித்திருக்கலாம். சரத்குமார் வேறு பாதை, நான் வேறு பாதை என்று கூட ராதிகா அறிக்கை விட்டுவிட்டு 'உரிய சன்மானம்' கிடைத்தால், களத்தில் குதிக்கலாம்?

லக்கிலுக் said...

மின் பிம்பங்கள் விலகியதால் பாலச்சந்தர் தான் பாதிக்கப்பட்டார்... சன் டிவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.... அதுபோலவே சன்னுக்கும், ராடானுக்கும் பிரச்சினை வந்தால் பாதிக்கப்படப் போவது ராதிகா தான்... ராதிகாவின் நிகழ்ச்சிகளால் தான் சன் நெ.1 நிலையில் இருக்கிறது என்றால் அதை விட அபத்தம் வேறில்லை.... சன்னில் இருப்பதால் தான் ராதிகா ஷைன் ஆகி இருக்கிறார்....

ப்ரியன் said...

கண்டிப்பாக ராதிகா சன் தொலைக்காட்சியை விட்டு விலகமாட்டார் அப்படி விலகினால் சிலத் தொடர்களை சட்டென முடிக்கவோ / அல்லது நிறுத்தவோ நேரும் காரணம் சன் தொலைக்காட்சியின் ஒப்பந்தப் படி சன் தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி தாயாரிப்பவர் வேறு தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி தயாரித்தல் கூடாது ஜெயா தொலைக்காட்சிக்கு ராதிகா தாவினால் அவரது நிறுவனத்துக்கே பொருள் இழப்பு ஏற்படும் சன் நிறுவனத்திற்கும் சிறிது அடிதான் ஆனால் அவர்களாள் தாங்க இயலும் ராடனால் இயலுமா என்பது கேள்வி

தயா said...

ஏற்கனவே "Housefull" ஆக இருக்கும் "Jackpot", "தங்கவேட்டை"க்கு இடமளிக்குமா?

பிரச்சினை இனி ராதிகாவுக்கு தான். ராடன் மின் பிம்பங்கள் மாதிரி இனி செயல்படலாம். இது அவருக்கு கட்சி முத்திரையை விலக்க பயன்படலாம்.

விஜய்யில் ஐக்கியமாவதற்கும் வாய்ப்புகள் அதிகம். வசூல் ராணியோடு சேரந்தால் செல்வியும் ஜெயிப்பார். பார்க்கலாம்.

சரத்குமாரின் அரசியல் செயல்பாடுகள் ராடனை பாதிக்காதவண்ணம் செலுத்த ஜெயாவை விட விஜய் சரியான சாய்ஸ் ஆக இருக்கும்.

சன் டிவி இந்த விலகலை எதிர்பார்த்தோ என்னவோ பாக்யராஜை வளைத்திருக்கும் எனத் தோன்றுகிறது.

அதிமுக அனுதாபியான பாக்யராஜ் ஜெயாவில் தான் தொடர்கள் வழங்கி வந்தார். அவருடைய மகள் நடிக்கும் சொந்த திரைப்படமான பாரிஜாதம் இன்னும் வெளிவரவில்லை.

கூட்டி கழித்துப் பார்த்தால் பாக்யராஜின் தொடர்கள் ப்ரைம் டைமில் எதிர்பார்க்கலாம். சன், பாக்யராஜ் என இருவருக்குமே இது சாதகமான முடிவு.

ராதிகாவை நம்பி கண்டிப்பாக சன் இல்லை. ஆனால் இதனாலேயே ராதிகாவால் வெளி சானல்களுக்கு தயாரிக்க முடியாமல் இருந்திருக்கும். இனி அந்த தடை நீங்கிய நிலையில் ராதிகா புது அவதாரமெடுக்கலாம். என்ன ஒரு உத்தரவாதம் இல்லாமல் சானல்களின் ஆதரவு பிண்னணியல்லாமல் மற்ற தயாரிப்பாளர்களோடு கடும் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும்.

Unknown said...

hey iam OM RAJENDRA SIMHA REDDY
iam from andhra pradesh and iam a die hard fan of super star RAJINIKANTH
PLZone request to all users and to every one please we doesnt know tamil please write it down in english fonts also then we can know what happng abt our THALAIVAR and we will b happy