Saturday, July 31, 2004

பொறிகலங்கி போன பொறியியல் கல்வி

ஐஐடி யை பற்றிய விரிவான அலசல்களையும், சண்டைகளையும் பற்றி இணையத்தில் படித்தேன். இந்த மேல்தட்டு கல்வி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, மிக அதிக அளவு பொறியியல் வல்லுனர்களை உருவாக்கும் இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளை குறித்த பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உலக அளவில் கோலோச்சி நிற்கும் இந்திய பொறியியல் வல்லுநர்களில் பெரும்பான்மையானவர்கள் இரண்டாம் நிலை பொறியியற் கல்லூரிகளில் படித்திருப்பார்கள் என்பது என் கருத்து. இதற்கான புள்ளி விவரங்கள் என்னிடம் இல்லை.தனியார் துறைக்கு அரசாங்கம் அனுமதி அளித்த பின்பு , தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகின. இதனால் நன்மையா? தீமையா ? என்ற விவாதம் தொடர்ந்து நடந்தது. காலப் போக்கில் தனியார் கல்லூரிகளால் பல்வேறு நன்மைகள் நிகழ்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது.மெப்கோ, வேலூர் இஞ்சினியரிங், கிரசென்ட் என்று பல பொறியியற் கல்லூரிகள் தரம்மிக்க வல்லுனர்களை உருவாக்கி உள்ளன. சில தனியார் கல்லூரிகள் இக்கல்வியை வியாபார சந்தையாகவும் மாற்றின. இருந்தாலும் நன்றாக படிக்க கூடிய மாணவனுக்கு தரமான பொறியியற் கல்வி பெறுவது மிகவும் சாத்தியமான விசயமாக இருந்தது.

என் நண்பன் ரவிசங்கரின் தம்பிக்கு 'அருணை இஞ்சினியரிங் கல்லூரியில் 93 ம் வருடம் கல்லூரி ஆரம்பித்த பல நாட்கள் கழித்து இடம் கிடைத்தது. நான் அழகப்பா இஞ்சினியரிங் கல்லூரியில் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்த காலம் அது. இக் கல்லூரியை பற்றி நானும் என் நண்பனும் கேள்விப்பட்டதே இல்லை.இன்று இக் கல்லூரி மிகவும் புகழ் வாய்ந்த கல்லூரி. இதில் படித்த என் நண்பனின் தம்பி IT வல்லுனனாய் ஏதோ ஒரு ஐரோப்பிய தேசத்தில் இருக்கிறார்.என் நண்பனின் தம்பியைப் போல, பலர் பல தேசத்தில் பணியாற்ற தனியார் கல்லூரிகள் உதவி இருக்கின்றன.

ஆனால்,இன்று கட்டுப் படுத்த இயலாத வியாபார சந்தையாக மாறியிருக்கிறது பொறியியற் கல்வி. நான் அழகப்பா பொறியற் கல்லூரியில் சேர்ந்த நாள் சூலை 30, 1988. இந்த சூலை 30 ல் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கே தொடங்கவில்லை. பல பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.நீதி மன்ற வழக்குகளில் சிக்கி பொறி கலங்கிப் போயிருக்கிறது பொறியியற் கல்வி.

உலக அளவில் இந்திய பொறியியல் வல்லுனர்களுக்கு இருக்கும் மதிப்பை சிதைக்கும் வண்ணம் , கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட சில முடிவுகள் உள்ளன.

ஒன்று: பொறியியற் கல்லூரிகளில் சேர்வதற்கு +2 தேர்ச்சி போதுமானது. 60% சதவீத மதிப்பெண் அவசியமில்லை என்ற முடிவு.

இரண்டு: +2 பரிட்சை முதல் முறையிலே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயத்தை தளர்த்திய முடிவு.

தரமான அறிவியற் கல்லூரியில் இயற்பியல் படிக்கவே குறைந்தது 80% சதவீத மதிப்பெண்கள்தேவைப்படுகிறது.வெறும் 35%மதிப்பெண் பெற்ற மாணவன் ,பொறியியல் படித்து தேறுவான் என்பது எப்படிப்பட்ட நம்பிக்கை?கல்லூரிகள் மந்திரம் செய்து இந்த மாணவர்களை வல்லுனராக மாற்றப் போகிறதா? Integral calculas ப்ளஸ் 2 வில் படிக்க முடியாதவன் எப்படி Fourier
Transform படிப்பான்? அதிகப்படியாக உருவாக்கப் பட்ட இடங்களை நிரப்புவதற்கா இந்த நடவடிக்கை? கேட்டால் உலக அளவில் பொறியியற் வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது என கதை விடுகிறார்கள். 35% மதிப்பெண் பெற்று, Paper chase செய்து தேர்ச்சி பெற்று , என்ன சாதிக்கப் போகிறார்கள் இவர்கள். உலக அளவில் இந்திய பொறியியல் தரத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க விதைகள் விதைக்கப் படுவதாகவே நான் கருதுகிறேன்.

இன்னொரு அபயகராமான விசயம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் என்ற பல துறைகள் இருந்தாலும், படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளை மனதில் இலக்காக வைத்து படிப்பது. தான் படிக்கும் applied Mechanism ம், Circiut Design ம் பாஸ் பண்ணா போதும், Java, dot net படிப்போம் என்ற மாணவர்களின் மனப்போக்கும், அதற்கான சூழலும் ஆரோக்கியமானதா என்பது தெரியவில்லை.ஒரு சிவில் இஞ்சினியரிங் மாணவனுக்கு கூட, Infosys dream destination னாக இருப்பதும், அதற்காக அவன் முயற்சி செய்வதும் வரவேற்கத் தகுந்ததா? குழப்பம் நீடிக்கிறது."நாலு வருட படிப்புக்கான
அத்தாட்சி மட்டும் தான் பொறியியல் கல்வி, படிக்கும் துறை பற்றி கவலை இல்லை" என்ற நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. மற்ற துறைகளில் குறைந்து வரும் வேலை வாய்ப்புகள் ஒரு காரணம் என்றாலும் கூட இந் நிலைமை மாற்றப் பட வேண்டும்.

கணினி மற்றும் மிண்ணனுவியலின் ஆதிக்கம்தான் எல்லாத் துறைகளிலும் பரவுகிறது என்றால் இரு துறைகள் இணைக்கப் பட்ட Mechotronics போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப் படுத்த வேண்டும். இன்று கணிணி வல்லமையை பொறியியல் வல்லமையாக பெரும்பான்மையோர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.பொறியியலில் சாதிக்க நாம் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை நம் அரசாங்கமும், பொறியியல் சார்ந்த கல்வி நிறுவனங்களும்.

இதைப் பற்றி பெரிதாக கவலையும் இல்லை என்னை மாதிரி பொறியியல் படித்த சக தோழர்களுக்கும்.

Monday, July 26, 2004

ஆழ்துளை கிணறுகள்

கிணற்றடி கதைகள் பேச 
கிணறுகள் இல்லை இங்கே.
பூமித்தாயின் முலைப்பாலாம்
கிணற்று நீர் வற்ற
ஆழ்துளைகள் மார்பில் தோண்டி
இதயக் குருதி எடுத்து
தாகம் தணிக்கும் மக்கள்.
எத்தனை நாளைக்குத்தான்
துடிக்கப் போகிறது...
அவள் இதயம்.
அனுதினமும்
ஏதாவது ஒரு தெருவில்
ஏதாவது ஒரு வீட்டில்
பூமியின் மார்பை துளைக்கிறது
ஆழ் கிணறு தோண்டும் இயந்திரம்
இன்னும் சில காலத்தில்
இச் சத்தம்
இல்லாவிடில்
தூங்க மறுக்கும் குழந்தைகள்.
ஆயிரங்கள் செலவழித்து
முருகனுக்கு நேர்ந்து கொண்டு
ஆழ்துளை இட்டு
நீருக்கு காத்திருந்தால்
தன் வீட்டு
நீரளவு குறையாதிருக்க
அம்மனை வேண்டும்
பக்கத்து வீட்டுக்காரன்.
ஜெயிப்பது முருகனா? அம்மனா?
எந்த தெய்வம் வேண்டுமானாலும்
ஜெயிக்கலாம்.
தோற்றுக் கொண்டிருக்கிறது
நாளைய சந்ததிக்கு
பாலைவனத்தை
பரிசாகத் தரத் தயாராகும்
மானுடம்.
 

Saturday, July 24, 2004

நான் பார்த்த மோசமான படங்கள்

எல்லா வலைப்பூக்களிலும் தான் பார்த்த சிறந்த படங்களைப் பற்றி எழுதி அனைவரும் தூள் கிளப்புகிறார்கள். நானும் அதையே எழுதி பிரயோசனமில்லை. அப்படி எழுதினாலும் பல நல்ல படங்கள் அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்கும். மோசமான படங்களை பற்றி எழுதுவது பிற்காலத்தில் தப்பி தவறி கூட நீங்கள் பார்த்து விடக் கூடாது அல்லது பார்த்து "நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நல்லெண்ணத்தில்தான்.

1.நினைக்கத் தெரிந்த மனமே:

ரஜினி ரசிகனாய் இருந்து முன்பும் சரி, தற்பொழுதும் சரி நான் பட்ட/படுகின்ற சிரமங்கள் சொல்லி மாளாது. மனிதன் படத்தில் ரஜினிக்கு ஜோடியா ரூபினி நடிச்சா என்ன? ரூபினி எப்படி இருக்கான்னு பார்க்க இந்த படத்துக்கா போனும். "மனிதன்"க்கு முன்பாக வந்த,மணியன் கதையில் உருவான படம். முதல் நாள், முதல் காட்சி. காரைக்குடி சிவம் தியேட்டரில் கூட்டமே இல்லை. அப்பாதெல்லாம் இது போன்ற உருப்படியில்லாத படங்களுக்கு சிறப்பாக இசையமைக்க வேண்டும் என்பதை இளையராஜா கொள்கையாய் வச்சிருந்தார்." எங்கெங்கு நீ சென்ற போதும்" மற்றும் " கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்" போன்ற இனிமையான பாடல்கள். மற்றபடி நாடகத்தை காட்டிலும் கேவலம். அடுத்த வாரம் கல்கி விமர்சனத்தில் 'ஆடியோ காசட் வாங்குவதோடு திருப்தி பட்டு கொள்ளுங்கள்"என்று எழுதியிருந்தார்கள். என் தலைவிதி. முதல் நாளே பார்த்து விட்டேன்.

2. இன்ஸ்பெக்டர் ரஜினி

ரஜினியால் பட்ட இன்னொரு வேதனை. 1977/78 ல் தலைவர் சூப்பர் ஸ்டார் ஆன உடனே,அவர் நடிச்ச கன்னடம் & தெலுங்கு படங்களை டப் செய்து வெளியிட்டார்கள். இப்படி வந்த ஒரு படத்தை 82 ல ஹவுஸ்புல்லா சனிக்கிழமை, அருணாச்சலா தியேட்டரில் பார்த்தேன். ரஜினி படத்துல செகண்ட் ஹீரோ, விஸ்ணுவர்தனும், கவிதாவும் நடித்த கன்னடப் பட டப்பிங். ரஜினிக்கு யாரோ டப்பிங்.அப்பப்ப செந்தமிழ் வசனம். அருணாச்சலா தியேட்டர் மூட்டை பூச்சி கடித்தது இப்பவும் வலிக்கிறது. படம் அதை விட..

3. நாட்டுக்கொரு நல்லவன்
 
ரஜினி வாழ்கையில் பண்ண பெரிய பாவம் எந்த படத்துக்கும் தரமா இந்த படத்துக்கு 75 நாள் தொடர்ச்சியா கால்க்ஷ£ட் கொடுத்து நடிச்சது. நான் பண்ண பெரிய பாவம் காலேஜ் கட் அடிச்சு இந்த படத்துக்கு போனது. வழக்கம் போல முதல் காட்சி , ரவிச்சந்திரன் எடுத்த கதாகாலச்சேபம். ரஜினி வசனம் பேசாம பாட்டா பாடுறாரு ( படுத்துனாரு). தளபதிக்கு அடுத்து இப்படி ஒரு சொதப்பல் படம். கொஞ்ச நாளைக்கு கமல் ரசிகர்கள் முன்னாடி தலை காட்ட முடியலே. அப்புறம் அவர்களே அனுதாபப்பட்டு பாவம்டா .உன்னை ஒன்னும்
பண்ணல னு உட்டாங்க. அப்புறம் " மன்னன்" வந்து என்னை காப்பத்துச்சு. இப்பவும் விஜய் டிவில அடிக்கடி போட்டு தொல்லை பண்றாங்க.
 
4. அந்த ஒரு நிமிடம்

அப்பப்ப தன்னால மசாலப் படமும் நடிக்க முடியும்னு தேவையில்லாம முயற்சி பண்ணுவார் கமல். மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் செய்ததுதான் வினை. படம் சூப்பர் பிளாப். முன்னாடி சொன்ன மாதிரி இளையராஜா சிறப்பாக இசையமைத்த இன்னொரு உருப்படி இல்லாத படம். "இனிய பறவை சிறகை விரிக்க" இப்போதும் விரும்பி கேட்கும் இனிமையான பாடல். பெரிய டிராகனுடன் கமல் ஆடும் " பச்சோந்தியே கேளடா"  வும் "இனிய பறவை" பாட்டில் கமல் நடக்கும் ராஜ நடையும் காமெடியான விசயம்.

5. தர்மராஜா

சின்ன வயசுல பார்த்த சிவாஜி தாத்தா படம். இந்த படத்தை எடுத்த சின்ன அண்ணாமலை அவர்கள் தனது அறுபதாவது கல்யாண விழாவில் தண்ணீர் ஊற்றும் போது இறந்து போய்விட்டார்.கதையைப் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். மகமாயி சிலையை வில்லன் பாலாஜி ஜப்பானுக்கு கடத்தி விட , சிவாஜி கே. ஆர் .விஜயாவுடன் ஜப்பான் சென்று, கராத்தே வீரர்களுடன் சண்டையிட்டு, குறிப்பாக இந்திய ஜப்பான் கராத்தே மேட்சில் வென்று இந்தியாவிற்கு பதக்கம் வாங்கி..., 50 வயசு சிவாஜி இப்படி நடிச்சா
எப்படி இருக்கும். தேசிய அளவில் அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவைப் படமாக இது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும். அனுப்பாமல் விட்டு விட்டார்கள். சிவாஜியின் கராத்தே சண்டை, பாராசூட்டில் பறந்து கொண்டு சிவாஜியும் பாலாஜியும் தொந்திகள் மோதி போடும் சண்டை என பல நகைச்சுவைக் காட்சிகள். மற்ற படங்களை போலன்றி இந்த படத்தை டிவியில் போட்டால் பாருங்கள். 100% நகைச்சுவைக்கு நான் உறுதி.

6.அன்புள்ள அப்பா

இந்த படத்தையும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். வேற வேலை வெட்டி இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. காரைக்குடி பற்றி தெரிந்தவர்களுக்கு இது ஆச்சரியமான விசயமல்ல.சுலபமாக டிக்கெட் கிடைக்கும். ஏவியெம் தயாரிப்பில், ரொம்ப காலம் கழித்து திருலோகச்ச்ந்தர் இயக்கத்தில் வந்த சிவாஜி படம். படம் செண்டிமெண்டோ செண்டிமெண்ட். சிவாஜியும், நதியாவும் அழுது கொண்டேயிருந்தார்கள். படம் முடிந்த பின்பும் நான் அழுது கொண்டேயிருந்தேன்.ஏன் டா போனோமென்று?

இன்னும் லிஸ்டில் இருக்கிறது. இப்போதைக்கு போதும்.

Wednesday, July 21, 2004

பல்லிடை அவல்

கடன் கேட்ட குசேலனுக்கு
கண்ணனாய் இல்லாமல்
இல்லை என்று
சொல்லிவிட்டேன். 
பல்லிடை அவலாய்
உறுத்துகிறது.
"இப்பதான்முதன்முறையாய் பார்க்கிறேன்"
என்று சொல்லி
என் மகன் கையில்
அவன்
திணித்த ஐம்பது ரூபாய்.

Saturday, July 17, 2004

கருகிய மலர்கள் உருகிய இதயம்
கும்பகோணம் தீ விபத்தை பற்றிய என்னுடைய முந்தைய பதிவு, விபத்து குறித்த செய்தி கிடைத்தவுடன், டிவியை பார்க்காமல் எழுதியது.இத்தனை கோரமான விபத்தின் பிம்பங்களை இது வரை நான் பார்த்ததில்லை.போபால் விக்ஷவாயு விபத்தில் இதைப் போன்ற ஒரு புகைப்படத்தை பத்திரிக்கைகளில் பிரசுரத்திருக்கிறார்கள். தொலைக்காட்சியின் தாக்கம் அதிகம் இல்லாத 1984ல் கோரமான படங்களை பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

கோரமான படங்களைக் காட்டிலும் ஆத்திரமூட்டிய விக்ஷயம்-பள்ளி அமைந்த இடம். கடைகளோடு கடையாய், கல்யாண மண்டபத்தின் பக்கத்தில் பல மாடிகளுக்கும் சேர்த்து ஒரே வாசலுடன் ஒரு பள்ளி.  கீழ்பகுதியில் சமையலறை.சமையலறை ஸ்டவ் வாக மாறி குழந்தைகளை எரித்திருக்கிறது. இதைப் போன்ற பாதுகாப்பும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாத பல பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளது.ஆங்கில மீடிய மோகத்தை பயன்படுத்தி கல்வி வியாபாரிகள் பெருகி விட்டார்கள்.கல்யாண மண்டபங்களை பள்ளிகளாக மாற்றுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தகுந்த முடிவு என்றாலும் இது மட்டும் போதாது.தமிழகப் பள்ளிகளின் பாதுகாப்பு வசதிகளைக் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை கல்வித்துறை வெளியிட வேண்டும்.மேலும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

தொழில் ரீதியாக பல்வேறு அரசாங்கப் பள்ளிகளை பார்த்தவன் என்ற முறையில் எழுதுகிறேன்.அரசாங்கப் பள்ளிகள் விசாலமாய் இருக்கின்றன.விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. அரசு உதவிப் பள்ளிகளிலும், சில தனியார் பள்ளிகளிலும் போதிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவதிலை.மாணவைகளிடம் இருந்து கட்டணம் வசூலித்த பின்பும் செய்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

இந்த கோரத்தை தொலைக்காட்சியில் காட்டியதில் ,குறிப்பாக சன் செய்திகளில் எனக்கு உடன்பாடில்லை. குழந்தைகளும் பார்க்கக் கூடிய தொலை தொடர்பு சாதனத்தில் இந்த கோரக் காட்சிகள் ஏற்படுத்தும் மனோரீதியான பாதிப்பை பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. கிடைத்தது செய்தி என்ற ஆர்வத்தில் மக்களை பயமுறுத்த கிளம்பி விட்டார்கள். சமூகப் பொறுப்புடன் மீடியாக்கள் செயல்படுவதில்லை. அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி இருந்தால், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை, மருத்துவமனைகளை பத்திரிக்கைகளில் அடையாளங் காட்டட்டும்.உங்கள் ஊரில் சிறந்த பள்ளி எது என்று fraud survey நடத்துவதை விட்டு விட்டு, மோசமான பள்ளிகளைப் பற்றி மக்களுக்கு சொல்லட்டும். NDTV யை பார்த்து நிருபருடன் நேரடியாக உரையாடும் முறையை சன் செய்திகளிலும் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். இது சரியான காமெடியாக இருக்கிறது. நேற்று கும்பகோணம் நிருபர் சாவு எண்ணிக்கையை , கிரிக்கெட் ஸ்கோர் போல நாற்பதா ஐம்பதா? என்று விசாரித்தது வேதனையான விசயம்.NDTV யில் பேசிய நிருபர் அழாத குறையாக பேசினார். அவரது தாயுள்ளம் அவரையும் மீறி வெளிப்பட்டு விட்டது.

தீப்பிடித்த பின்பும் சில ஆசிரியர்கள் மாணவர்களை வெளியே போகக்கூடாது என கண்டித்திருக்கிறார்கள்.இத்தகைய மூடத்தனமான கீழ்படிதலை மாணவர்களிடம் எதிர்பார்க்கிறது  ஆசிரியர் குழாம். மனிதர்கள் மாற வேண்டும். முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து குடந்தை போய்விட்டார். டாக்டர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையிலிருந்து காரில் இரவு கிளம்புகிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யக்கூடாதா? தேவாரம் தேனீ அருகே விபத்தில் காயப்பட்டபோது, அந்த நெடுஞ்சாலையில் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டு மதுரைக்கு கொண்டுவரப்பட்டார். சாமான்யர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?

பாதுகாப்பு வசதிகள் பள்ளிகளில் மட்டுமன்றி அனைத்து பொது இடங்களுக்கும் செய்ய வேண்டிய ஒன்று. இதை செய்துதரும் பட்சத்தில், இதற்காக கூடுதல் வரி விதித்தால் கூட அதை செலுத்துவதிற்கு நான் தயாராக இருக்கிறேன்.இருக்கும் மயானங்கள் போதும்.புதிதாக பொது இடங்களில் மயானங்கள் வேண்டாம்.

பெற்ற பிள்ளை மேல் பாசம் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்தாலும் சரி, அரசு பள்ளிகளில் படித்தாலும் சரி. பாதுகாப்பு வசதிகள் எப்படி என்பதை ஒரு முறை நேரடியாக பார்த்து வரலாம். முந்தைய பதிவில் கூறியதைப் போல பாதுகாப்பு என்பது fire extinguisher ஐ சுவற்றில் தொங்க விடுவதில் இல்லை.

Friday, July 16, 2004

தீ....
தமிழ் நாட்டிற்கும் அக்கினி பகவானுக்கும் உறவு முறை சரியில்லை. ஸ்ரீரங்கத்தில் மணவீட்டினை பிண வீடாக மாற்றிய பின், மகாமகப் புகழ் கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் 100 மாணவிகளின் உயிரை அழித்திருக்கிறது தீ..

ஆபத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு , கவலைப் படாமல் வாழ்கை நடத்துவதே இயல்பு  என்று இந்தியர்களுக்கு பழகி விட்டது. கடந்த வாரத்திலேயே அப்போலோ ஆஸ்பத்திரி, ஸ்பென்சர் பிளாசா ஆகிய இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு, பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.மகாமகம் பிரச்சனை இல்லாமல் முடிந்தது என்று நினைத்திருந்த போது நடந்திருக்கிறது இந்த அசம்பாவிதம்.

இணையத்தில் இந்த செய்தி கிடைத்தவுடம் இந்த பதிவை எழுதுகிறேன். வீட்டில் போய் டிவி பார்ப்பதற்கோ, இன்னும் சில வாரங்கள் பத்திரிக்கைகள் படிப்பதற்கோ பயமாக இருக்கிறது. கோரமான படங்கள், கண்ணீர் கதைகள். இவ்வாறான அச்ம்பாவிதங்கள் நடக்காதிருக்கலாம். ரிப்போட்டரும், ஜுனியர் விகடனும் விஜயகாந்தை பற்றியே அலுக்கும் வரை எழுதிக் கொண்டிருந்திருக்கலாம். சோதனை..சோதனை.

இந்தியாவில் தீ விபத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பது என்பது பயர் எக்ஸ்டிங்கியூசரை சுவற்றில் தொங்க விடும் அளவில்தான் இருக்கிறது. இது பற்றாது. தனி மனிதனுக்கு crisis management பயிற்சி மிகவும் அவசியம். என் ஆபிஸில் ஒரு டியூப் லைட் பற்றிக் கொண்டது. fire extinguisherஐ உபயோகப் படுத்த, முதலில் சுவற்றில் இருந்து கழற்ற யாராலும் இயலவில்லை. யாருக்கும் உபயோகிப்பதில் முன் அனுபவம் இல்லை. கழற்றி manual பார்த்து உபயோகிப்பதற்குள், தீக்கு போரடித்து அணைந்து விட்டது.இதே போல் இரக்க மனப்பான்மையுடன் தீ எப்போது இருக்காது.குழந்தைகள் பலியானது தாங்க முடியாத வேதனையை தருகிறது. தனியார் பள்ளியில் நடந்திருப்பது கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம். அதிக கல்விக் கட்டணத்தை செலுத்தி விட்டு பாதுகாப்பற்ற சூழலில்தான் பெரும்பான்மையான குழ்ந்தைகள் படிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான அசம்பாவிதங்களிலிருந்து இந்தியாவிற்கு விடுதலையை யார் பெற்றுத் தருவது?

Thursday, July 01, 2004

மற்றுமொரு நிஜம்

ஏசிக்காக மூடப்பட்ட
ஜன்னல்கள்.
கொசுவலை தடுப்புக்கள்.
வழி தவறி கூட வீட்டினுள்
நுழைய முடியவில்லை
வண்ணத்துப் பூச்சியால்.
அபார்ட்மெண்ட் சிறுமிக்கு
வண்ணத்துப் பூச்சியின்
அறிமுகம்
கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சேவர் மூலமே