Friday, October 29, 2004
ரொம்ப நாள் கழித்து சென்னையில் மழை. ஆனாலும் மக்கள் அதிகம் கவலைப்படாது சந்தோசமாகவே இருக்கிறார்கள். ரோடுகளில் நீர் தேங்கி சர்க்கஸ் செய்து ஆபிஸ் போக வேண்டியதிருந்தாலும், மழை நிற்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. இவ்வாறான மழை பொழிந்த ஒரு மாலைப் பொழுதில், “சாதகப் பறவைகள்” மெல்லிசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சியை தமிழகமெல்லாம் "கோலங்கள்" தொடர் பார்க்கும் நேரத்தில் ஒளிபரப்பினார்கள்.
" எண்ணத்தில் ஏதோ சில்லென்றது' என "கல்லுக்குள் ஈரம்" படப் பாடலை கேட்டவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடிக்கடி வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ கேட்கக் கூடிய பாடல் அல்ல அது. சிறந்த இளையராஜா ரசிகர்கள் மட்டுமே மறக்காத பாடல் அது. பாடியவரும் சிறப்பாக பாடினார். அதனை தொடர்ந்து " ஆராதனை" படத்திலிருந்து மற்றோரு இளையராஜாவின் பாடல். பின்பு "பயணங்கள் முடிவதில்லை" யிலிருந்து "சாலையோரம்" என அரைமணி நேரம் இன்னிசை மழையில் ஆழ்த்தி விட்டார்கள்.
தொலைக்காட்சிகளின் பாதிப்பில்லாத எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளிலும் "மியூசிக் பார்ட்டி" என அழைக்கப்படும் மெல்லிசை நிகழ்ச்சிகள் அனைவரும் ஆர்வத்துடன் ரசித்த நிகழ்ச்சி. பெரும்பாலும் அம்மன் கோவில் திருவிழாக்களிலோ, தெருவில் நடத்தப் படும் பொங்கல் விழாக்களிலோ, சித்திரை திருவிழாவின் போதோ இம்மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறான நிகழ்வுகளை தவிர, திருமண வரவேற்புகளின் போதும் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இன்று வரை திருமண வரவேற்புகளில், அனைவரும் உரத்த குரலில் புரணி பேசிக்கொண்டிருக்க, யாராவது ஒரு பாடகர் " நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்" என வாழ்த்திப் பாடிக் கொண்டிருக்கிறார்.
மதுரையில் வசித்த போது, இளம் பிராயத்தில் நான் பார்த்த மெல்லிசை நிகழ்ச்சிகள் பல இன்னும் பசுமையாக நினைவில் நிற்கின்றன.பெத்தானியாபுரம் பைபாஸ் ரோட்டின் அருகே எங்கள் வீடு இருந்தது. மதுரையை அறிந்தவர்களுக்கு இந்த இடத்தைப் பற்றி தெரியும். அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமும் இங்கே நடத்தப்படும். இப்பகுதியை சுற்றி பல கோவிகளிலும், தெருக்களின் பொங்கல் விழாக்களிலும் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மெல்லிசை நிகழ்ச்சிகளில் அக்காலத்தில் மிகவும் ஈர்க்கும் வாத்தியங்களாக இருந்தது டிரம்மும், டிரம்பட்டும்தான். தைரியம் என்ற பெயருடைய டிரம் வாசிக்கும் நபர் அப்போது எங்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார். மிகவும் நீண்ட தலைமுடி வைத்துக் கொண்டு டிரம் அடித்து முடியை ஒரு சுழற்று சுழற்றுவார். நாங்கள் வாய் மூடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். அக்காலத்தில் அனைத்து மெல்லிசை நிகழ்ச்சியிலும் " சித்தாடைக் கட்டிகிட்டு" பாடல் கண்டிப்பாக பாடுவார்கள். விசிலும் ஆட்டமும் தூள் பறக்கும். இன்னொரு முக்கியமான பாடல் " ரகுபதி ராகவன் ராஜாராம்"படத்திலிருந்து "தங்கத் தேரோடும் வீதியிலே" என்ற பாடல்.
இந்திப்பாடல்களின் ஆதிக்கத்தை மெல்லிசை நிகழ்ச்சிகளிலிருந்து அகற்ற இளையராஜாவின் பாடல்கள் உதவின. பிரியாவின் " டார்லிங் டார்லிங்" பாட்டுக்கு டிரம்பட் ஊதுபவர் எவ்வாறு ஊதப் போகிறார் என்பதை ஆர்வத்துடன் கவனித்திருப்போம்.
குர்பானியும் சங்கராபரணமும் மீண்டும் மற்ற மொழிப் பாடல்களை மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாட வைத்தது. குர்பானியின் " லேலா மெ லேலா" பாட்டுக்கு எவ்வாறு டிரம் அடிக்க போகிறார் என்பதை வைத்தே டிரம்மரின் திறமை முடிவு செய்யப்படும். இதைப் போலவே கித்தார் வாசிப்பவருக்கு சவால் விடும் மற்றுமொரு நோட்ஸ் - " இளைய நிலா பொழிகிறது" பாடலின் இறுதியில் வரும் கித்தார் இசை. நிறைய நிகழ்ச்சிகளில் இதை சொதப்பி விடுவார்கள்.
மதுரையில் "புளூ பேர்ட்ஸ்", "ரெட் ரோஸ்" மற்றும் அவர்களிடமிருந்து பிரிந்து வந்த " ஒய்ட் ரோஸ்" என பல மெல்லிசை குழுக்கள் பிரபலமாக இருந்தன. சின்ன சீட்டில் என்ன பாடல் வேண்டும் என எழுதி நேயர் விருப்பம் தெரிவிக்கப் படும். எண்பதுகளில் சுந்தர் ஜெகன் என்ற இன்னிசைக் குழு மிகவும் பிரபலமாக இருந்தது. பொதுவாக இன்னிசைக் குழுக்களில் அக்காலத்தில் சிறந்த பெண்பாடகிகள் கிடையாது. பொது மேடைகளில் பாட பெண்கள் முன்வராத காலம். சுந்தர் ஜெகன் குழுவில் அனிதா என்ற சிறந்த பெண்பாடகி இருந்தார். இவர் பாடக் கேட்ட "பாட வந்ததோ கானம் " ( படம்: இளமைக்காலம்) பாடல் இன்றும் நினைவில் இருக்கிறது.
இதன் பின்பு கல்லூரி படிக்கும் காலத்தில் கலை விழாக்களில் முக்கியமான போட்டியே மெல்லிசைப் போட்டிதான். அழகப்பா பொறியியற் கல்லூரியில் " Acculfes" என்ற கலைவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தோம்.இதில் மூகாம்பிகைக் கல்லூரியில் படித்த " சிகாமணி" என்ற பாடகரும், முகம்மது சதக் கல்லூரியில் படித்த " உமா மகேஸ்வரன்" என்ற பாடகரும் மறக்க முடியாத கலைஞர்கள்.
கல்லூரி விழாக்களில் நான் கேட்ட மறக்க முடியாத இன்னிசை நிகழ்ச்சி அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த "லிபோனிக்ஸ்-91" விழாவில் கும்பகோணம் இசைக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி. இரவு 10 மணிக்கு தொடங்கி பாடிக் கொண்டேயருந்தார்கள். நாங்கள் காரைக்குடிக்கு ரயில் பிடிக்க இரவு ஒன்றரை மணிக்கு ரயில் நிலையம் வந்து விட்டோம்.
இதன் பின்பு "அங்கிங்கு " இசைக்குழு ( சன் டிவி "பாட்டுக்கு பாட்டு" புகழ்) கலக்கி கொண்டிருந்தார்கள் /இருக்கிறார்கள். "லக்ஷ்மண் சுருதி" பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.
இன்றும் ஆசையாக இருக்கிறது. ஊருக்குப் போய் கோவில் திருவிழாக்களில் மியூசிக் பார்ட்டி கேட்க. "மன்மத ராசா" பாடி கடுப்பேத்துவார்களோ என்பதுதான் ஒரே பயம்.
Monday, October 25, 2004
கங்குலியின் வயிற்றில் பிட்சில் புல் வைத்து புளியை கரைத்து விட்டார்கள். இந்தியப் புலிகள்தான் பசித்தாலும் புல் தின்னாதே. டாஸ் ஜெயித்தாலும் உணவு இடைவேளைக்குள் நான்கு விக்கெட்டுக்கள் காலியாகி விட்டால் முதல் நாளிலே டெஸ்டை தாரைவார்த்து கொடுத்து விட வேண்டியதுதான்.
சொந்த நாட்டில் ஆடும்போது அந்த அணிக்கு சாதகமான ஆடுகளங்களை தயாரிப்பதைப் பற்றிய விவாதங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. இதில் இந்தியாவை மட்டும் அதிக அளவில் குற்றம் சாட்டி இந்திய விமர்சகர்களே எழுதி வருகிறார்கள். முதல் நாளிலேயே முட்டிக்கு மேல் எழும்பாத, புழுதி பறக்கும் களங்களை உருவாக்குவது பாவச்செயல் என பேசி வருகிறார்கள். ஆனால் அனைத்து நாடுகளும் ( ஓரளவில் இங்கிலாந்து தவிர்த்து) இச்செயலைத்தான் செய்கின்றன. யார் இதை ஆரம்பித்தது என்பது தெரியவில்லை.
1997 ம் ஆண்டு நம் அணி தென்னாப்பிரிக்க சென்ற போது கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டிக்கான களத்தில் பந்துகள் எகிறின. இந்தியாவில் முட்டிக்கு மேல் பந்து எழும்பாதது அழுகுணித்தனம் என்றால், முகரையை பேக்கும் அளவு பந்து எழும் களம் அமைப்பதும் அழுகுணித்தனம்தான்.
கங்குலியின் பயத்தில் நியாயம் உண்டு. பந்து ஸ்விங் ஆனால் நம்மை காலி செய்ய ஒரு காஸ்பிரோவிச் போதும். ஏ.எக்ஸ்.என் சானலில் போட்டி நடத்துகிறாரே விட்னி. அவர் செய்தார் பெர்த்தில் 1992ல் நம் அணியை "சட்னி". அதன் பின்பு ஆஸ்திரேலிய அணியில் காணமால் போய் டிவிக்கு போய்விட்டார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற பயத்தால்தான் மொஹாலியில் மேட்ச் நடத்தப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க, களத்தில் பசுமைப்புரட்சி நடத்துவதை எப்படி பொறுப்பார் கங்குலி.
கடைசியாக கிடைத்த தகவலின் படி,களத்தை சிரைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இன்றைய மொட்டை களத்திற்கு என்றாலும், நாளைய மொட்டை கங்குலிக்கு இல்லாதிருக்க இறைவனை பிரார்த்திப்போம்
சச்சினின் வரவு நம்பிக்கையை ஊட்டினாலும், "ரொம்ப நாள் கழிச்சு வராரு, சீக்கிரம் ஆட வைப்போம்" என்ற ரீதியில் முதல் மூன்று இந்திய ஆட்டக்காரர்கள் பெருந்தன்மையுடன் நடந்தால் நம் கதி அதோ கதிதான். டிராவிடும், லக்ச்மனனும் விளையாடுவதைப் பொறுத்தே நம் வெற்றி நிர்ணயிக்கப்படும். முதலாவதாக விளையாடும் பட்சத்தில் 500 ரன்களுக்கும் அதிகமான ரன்களை குவிப்பது அவசியம். அப்போதுதான் கும்ப்ளேயும், ஹர்பஜனும் ஏதாவது செய்ய இயலும்
பதான் இல்லாதது பெரிய பிரச்சனைதான். அதுவும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு உதவும் பட்சத்தில். ஜாகிர் சென்ற மேட்ச் சிறப்பாக பந்து போட்டார். இவர் நன்றாக ஆடினாலே எப்போது காலை பிடிக்கப் போகிறாரோ? என்று பயம் வருகிறது. பிரிஸ்பேனில் ஐந்து விக்கெட் எடுத்தார். அதன் பின்பு ஆடியது "உள்ளே வெளியே "ஆட்டம்தான். இதைக் காட்டிலும் மோசம் நெஹ்ரா. இவரது உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் எப்போதும் குறைந்த பட்சம் ஒரு சின்ன பேண்ட் எய்ட் ஆவது இருக்கும் என நினைக்கிறேன்
ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் இருக்கப் போவதில்லை. என்னை பொறுத்தவரை இந்தியக் களங்களில் காஸ்பிரோவிச் தனது ரிவர்ஸ்ஸிவிங் திறமையால் லீயைக் காட்டிலும் ஆபத்தானவராய் இருப்பார் என்றே நினைக்கிறேன்
நாக்பூரில் கண்டிப்பாக மழை வராது. அடிக்கடி டெஸ்ட் போட்டிகள் நடக்காத பிரதேசம்
உதைக்கிறோமா? உதை வாங்குறோமா?
பொறுத்திருந்து பார்ப்போம்
Saturday, October 23, 2004
இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான அங்கமாக டெண்டுல்கர் மாறிவிட்டது யாரும் மறுக்க இயலாத உண்மை. டெண்டுல்கரையே நம்பியிருக்கும் நிலை மாறத்தான் என்னைப் போன்ற சிலர் விரும்புகிறோமே தவிர, டெண்டுல்கர் அற்ற இந்திய கிரிக்கெட் அணியை அல்ல. கையொடிந்த குர்சரன்சிங்கை அடுத்த முனையில் வைத்துக் கொண்டு இரானிக் கோப்பையில் அடித்த சதம் இந்த இளம் புயலை இந்திய அணிக்கு கொண்டு வந்தது. அதன் பின்பு இவரைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், இவருடைய சாதனையும் கூடிக் கொண்டே போனதே ஒழிய குறையவில்லை.
இளம் வயதிலே ஆட வந்து விட்டதால் இவரைப் பற்றிய ஒரே பயம், விரைவிலேயே ஓய்வு பெற்றுவிடுவாரா என்பதே. அதைப் போலவே டென்னிஸ் எல்போ என்றெல்லாம் பயமுறுத்தி விட்டார்கள். பத்ரி வேறு இன்னும் நிறைய நாட்களுக்கு டெண்டுல்கர் ஆடமாட்டார் என கூறியிருந்தார்.
இப்போது அணியில் சேர்த்திருக்கிறார்கள். யாரை அணியிலிருந்து தூக்கப் போகிறார்கள்? அனேகமாக யுவராஜ் என நினைக்கிறேன். படேல் துவக்க ஆட்டக்காரராக வருவார். டெண்டுல்கர் மட்டையத்தவிர பந்து வீச்சையும் நான் மலை போல நம்புகிறேன். கடி கில்லஸ்பி ( உபயம்: பத்ரி) போன்ற ஆட்களை ஆசை காட்டி மோசம் செய்ய டெண்டுல்கரால் முடியும். டெண்டுல்கர் பந்து போடும் நிலையிலிருக்கிறாரா என்பது தெரியவில்லை.
வாருங்கள் டெண்டுல்கர். இன்னும் ஓராண்டுக்குள் கவாஸ்கரின் 32 டெஸ்ட் சத ரெக்கார்டை காலி செய்யுங்கள்.
நீங்கள் நன்றாக ஆடும் பட்சத்தில் வெற்றி தானாக வரும்
Thursday, October 07, 2004
நம்பிக்கை, நாணயம், கைராசிக்கு பாலு ஜுவல்லர்ஸ் என்று முன்பு ஒரு விளம்பரம் வரும். அதே தொனியில் சொன்னால் திட்டமிடுதல், உழைப்பு, முயற்சி, வெற்றிக்கு அனில் கும்ப்ளே. 400 விக்கெட்டுக்களை எடுத்த பின்பும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர். ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் உலகிலும், விமர்சகர்கள் உலகிலும் இவரின் பெருமைகளை சிலாகித்துப் பேசுபவர்கள் குறைவு. "கும்ப்ளே மிதவேக பந்து வீச்சாளர்தான்", "பந்தை சுழற்ற தெரியாது" வெளிநாட்டுக் களங்களில் சோபிக்க முடியாது" என பல்வேறு விமர்சனங்களை, கிரிக்கெட் மட்டையை தொட்டுப்பார்க்காத ரசிகர்கள் பலர் பேசும் போது வேதனையாய் இருக்கும்.
இவ்வகையான விமர்சனங்கள் தன்னை சிதைத்து விடாமல் காத்துக் கொண்டதில்தான் இருக்கிறது கும்ப்ளேயின் சூட்சமம். தன்னுடைய வெற்றிக்கான காரணம் எது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். விமர்சர்களின் வாயை அடைக்க விபரீதமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடவில்லை. 1990 ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெக்ஸ்கோ டிராபி போட்டியில், முதல் மேட்சில் அவரது பந்து வீச்சிற்காக "மேன் ஆப் தி மேட்ச்" பரிசு பெற்றார். இத்தனைக்கும் அவர் எடுத்தது டேவிட் கோவரின் ஒரே விக்கெட். கும்ப்ளேயின் சிக்கனமான பந்து வீச்சைக் கணக்கில் கொண்டு இப்பரிசு வழங்கப் பட்டது ( அட்ஜுடிகேட்டர்-பாய்க்காட் என நினைக்கிறேன்).
இதற்கு பின்பு 1992 ம் ஆண்டு ஆஸ்திரேலியா டூருக்கு கும்ப்ளே அழைத்துச் செல்லப் படவில்லை. ஆஸ்திரேலியாவின் எழும்பும் மைதானங்களில் கும்ப்ளே பிரகாசித்திருக்க முடியும் என்பது அப்பொழுது என் கருத்தாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் 4-0 என்றும், உலகக் கோப்பையில் மிகப் பரிதாபமாகவும் மண்ணைக் கவ்விய பின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்காக தயாரானது இந்திய அணி. அப்பொழுது இந்திய வந்திருந்த இயான் சாப்பல், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணிக்கு ஒரு லெக்ஸ்பின்னர் தேவை என பேட்டி அளித்தார். சாப்பல் சொன்னதற்கேற்ப அப்பொழுது நடந்துகொண்டிருந்த இரானிக் கோப்பை மேட்சில் கும்ப்ளே அதிக விக்கட்டுக்களை கைப்பற்ற, இந்திய அணியில் இடம் பெற்று விட்டார்.
தென்னாப்பிரிக்காவில் ஒரு இன்னிங்க்ஸில் ஆறு விக்கட் எடுத்து தன் மறுபிரவேசத்தை வலுப்படுத்தினார். கும்ப்ளேயின் வரவு அப்போது இந்திய அணியின் மேனேஜரான அஜித் வடேகருக்கு வரப்பிரசாதமாக அமைய, அதன் பின்பு இந்தியாவில் நிகழ்ந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுழற்பந்திற்கு உதவும் ஆடு களங்களாக அமைத்து இங்கிலாந்தை 3-0 என வெற்றி கொண்டது இந்திய அணி.
ஒரு நாள் போட்டிகளில் சிக்கனமாக பந்து வீசி இந்தியாவின் பல வெற்றிக்கு உதவினார் கும்ப்ளே. மற்ற லெக்ஸ்பின்னர்களிடம் இல்லாத இவரது சிறப்பம்சம்- Accuracy -கச்சிதமாக பந்து வீசும் திறன். அதிகமாக "லாங்ஹாப்" எல்லாம் வீசமாட்டார். டைட்டன் கோப்பை பந்தயத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மொஹாலியில் நடந்த பரபரப்பான பந்தயத்தில், பனியில் நனைந்த பந்தைக் கொண்டு வீசிய இறுதி ஓவர்களும், எடுத்த விக்கட்டுகளும், ஈட்டிக் கொடுத்த வெற்றியும் மறக்க முடியாதவை.
என் நினைவில் இருக்கும் இவரது மறக்க முடியா விக்கெட்டுக்கள்
- 1996 ம் ஆண்டு, உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில், அதிரடி ஆட்டம் அடிய அரவிந்த டி சில்வாவை, கூக்ளி மூலம் போல்ட் செய்தது.
- 1999 ம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில், பின்ச் ஹிட்டராக வந்த மார்க் பவுச்சரை "ராங் ஒன்" மூலம் போல்ட் செய்தது. கவரில் பீல்டரை எடுத்து விட்டு பந்து வீசினார். ஆசையுடன் கவரில் பவுச்சர் விளாசப் போக, குச்சி காலி.
- 1998 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னை டெஸ்டில் ஸ்டீவ் வா க்ளீன் போல்ட். பந்தை வாவ் வெல் லெப்ட் செய்தார். ஸ்டம்ப் தகர்ந்தது.
1999-2000 வருடத்தில் தான் மோசமாக விளையாடிய ஆஸ்திரேலிய தொடருக்கு பதிலளிக்கும் விதமாக, 2003-2004 ல் பிரமாதமாக பந்து வீசி அசத்தினார் கும்ப்ளே. விளையாட்டில் சோபித்தால் படிப்பில் கோட்டை விடுவார்கள் என்பதற்கு இவர் விதி விலக்கு. விளையாட்டு காரணமாக பல தேர்வுகளை இஞ்சினியரிங் படிக்கும் போது தவற விட்டாலும் கூட, அனைத்து தேர்வுகளையும் ஒன்றாக எழுதி 'டிஸ்டிங்ஸனில்" தேர்ச்சி பெற்றார் இவர்.
இந்திய குழந்தைகளுக்கான நல்ல "ரோல் மாடல்". சமீப காலமாக கங்குலி இவரை சரியாக கையாளவில்லை என்றே தோன்றுகிறது. இவருடைய கிரிக்கெட் அறிவும், கணிதத் திறமையும் கேட்பன்களுக்கு வரப்பிரசாதம். சென்னையில் நடந்த, இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு தலைமை ஏற்று வெற்றியும் ஈட்டித் தந்தார்.
கிரிக்கெட் தெரியாத பலருக்கும் சச்சினின் சாகசங்கள் தெரிந்து விடுகிறது. கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கும் சிலசமயம் கும்ப்ளேயின் சாதனை புரியாததுதான் வேதனை. எப்படியிருந்தாலும் சரி.
முயற்சி தம் மெய்வருத்த கூலி தரும்.
வாழ்த்துக்கள் கும்ப்ளே
Monday, October 04, 2004
சருகுகளில் நடக்காதீர்
இந்த சமுத்திரங்களில்
சமாதியான
எரி நட்சத்திரங்களில்..
அது மட்டும்
உறைந்து .
பாறையானது
நான் தொலைத்த
கவிதைகளில்
அது மட்டும்
காற்றுடன் சேர்ந்து
பாடலானது.
சரணாலயத்தை விட்டு
அப்பறவை வெளியேறிய
கணம் முதல்
என் கடிகாரங்கள்
நின்று போயின
எட்டாத மரங்களின்
கனிகளைப் பார்த்து
நரிகள் புளிக்கும் எனலாம்.
கவிதையோ
கண்ணீர் விட்டது.
விலாசங்களை
விசாரித்து வைக்காத
ரயில் ஸ்னேகம் போல்..
ஜனநாயகத்தை கொன்று
கலைக்கப்பட்ட சட்டசபை போல்.
என் காதல்.
காகிதத்தில்
அநதப் பூ
சிதற விட்ட
மகரந்தங்களை
சேமித்து வைத்திருக்கிறேன்.
அதே வேளையில்
மணத்தை சுவாசிக்கக் கூடாது
என்று நாசிகளை
மூடி வைத்திருக்கிறேன்.
அந்தப் பறவை
பறந்து போக
இம்மரம்
இலையுதிர்த்து
வருத்தப்பட..
தயவு செய்து
சருகுகளில் நடக்காதீர்.
அதில்
மறைத்து வைத்த
என் கதை வரும்.
மறக்க நினைக்கும்
அவள் நினைவும் வரும்
எழுதிய ஆண்டு : 1992.
நன்றி : தன் கையெழுத்தில் 1992ம் ஆண்டு நகலெடுத்துக் கொடுத்த நண்பன் மூக்கன் சுந்தர்ராஜனுக்கு. என்னிடம் நகல் பத்திரமாக இருக்கிறது
Friday, October 01, 2004
எதிர் வீட்டாருடன்
மனஸ்தாபம்.
உடனடியாக அறுந்தன
உறவுச்சங்கலிகள்..
அவர்களிடம்
ஓசி வாங்கிப் படிக்கும்
"எக்கனாமிக்ஸ் டைம்ஸ்".
அந்த வீட்டு தாத்தாவிற்கு
என்னுடைய
நர்ஸ் அக்கா செய்து வந்த
இலவச ரத்த அழுத்த மதிப்பீடு.
அப்பாவிற்கு
தேனாம்பேட்டை வரை
பக்கத்து வீட்டு மாமா
தந்த பைக் டிராப்.
எங்கள் நாய்க்கு
அவர்கள்
தினம் தரும் பிஸ்கட்.
அனைத்தையும் நிறுத்தி
எழுப்பினோம் விரோதச்சுவர்களை.
சுவர்களால் தடுக்க இயலவில்லை
பிஸ்கட் கிடைக்காவிடினும்
அவர்களை
பார்த்துவாலாட்டும்
எங்கள் நாயின் ஸ்னேகத்தை
மட்டும்.
உயர்திணை 2
மொட்டை மாடியில்
காய்ந்தன துணிகள்.
உரிமையாளர்களின்
மனஸ்தாபத்தை
புறக்கணித்து
உறவாடிருந்தன...
என்னுடைய சட்டையும்
சண்டைபோட்ட
பக்கத்து வீட்டுக்காரன் சட்டையும்.